Thursday, June 13, 2013

உன் குடும்பம் கரை சேரும்!




பாடுபடுவது ஆன்மீக லாபத்திற்காகவோ உலகியல் சுபீட்சத்திற்காகவோ எதற்காக இருப்பினும் சரி, எங்கு சத்குரு படகோட்டியாக இருக்கிறாரோ அங்கு அவரே படகை அக்கரை சேர்க்கிறார்.
                                         ( சத்சரித்திரம்: அத் 6 வசனம் 1)


நீ போகும் வழியில் எல்லாம் அவரை நினைத்துக் கொண்டு போ! நல்லதோ கெட்டதோ எதுவாக இருந்தாலும் அவரை துணைக்குக் கூப்பிடு! தெரிந்த விஷயமோ, தெரியாத விஷயமோ, ஒன்றைச்செய்யும் போது உனது ஆலோசனை வேண்டும் என்று கேள்! அப்போது அவர் உனக்கு வழி காட்டி, பதில் சொல்லுவார்.
ஏன் இப்படிச் செய்யவேண்டும்? ஏனென்றால் நீ சாயி பக்தன். அவர் உனக்கு குருவாக இருக்கிறவர், உனக்கு வழிகாட்டியாக இருக்கிறவர். வழித்துணைக்கு வருகிறவர்.
சத்சரித்திரம் கூறுகிறது் நீ ஆன்மீக விஷயமாகப் பாடுபட்டாலும் சரி, உலகில் முன்னேறுவதற்காகப்பாடுபட்டாலும் சரி, சத்குரு எங்கே வழிகாட்டியாக இருக்கிறரோ அங்கு அவரே நமது படகை வழிநடத்தி அக்கரை சேர்க்கிறார் என்று.
இந்த வாழ்க்கை ஓடத்தை நடத்துகிறவரை ஓடக்காரன் அல்லது படகோட்டி என்பார்கள். குடும்பம் என்னும் ஓடத்தை இயக்குகிற படகோட்டியாக யார் இருக்கிறார்களோ, அவர்களது திறமை, மனநிலை, செயல்முறை ஆகியவற்றின் படிதான் அந்தக் குடும்பத்தின் தலையெழுத்து இருக்கும்.
மனைவி குடும்பத்தை ஏற்று நடத்தினால் அவளது விருப்பப்படிதான் அந்தக் குடும்பம் நடக்கும், பிள்ளைகள் வளருவார்கள். மனைவி நல்ல குணவதியாக இருந்தால் குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் இருக்கும்- இல்லாமை இருக்காது. குடும்பம் தள்ளாடாமல் போகும்.
இல்லாள் இல்லாள் ஆயின் இருப்பது என்ன?
அதாவது குடும்பப் பெண்ணுக்கு நல்ல குணங்கள், கூர்த்த மதி, எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கிற அறிவு ஆகியவை இல்லாவிட்டால் எதுவும் அந்தக் குடும்பத்தில் இருக்காது என்பது பொருள்.
அந்தக் குடும்பத்தை கணவன் நடத்துகிறார் என்றால், அவருக்கு நல்ல குணங்களே இல்லை. உத்தியோகம் புருஷ லட்சணம் என்பார்களே, அப்படியொரு உத்தியோகம் இல்லை! குடிகாரராக, சோம்பேறியாக, ஊதாரியாக இருக்கிறார் என்றால், அந்தக் குடும்பத்தில் நல்லது எதுவுமே இருக்காது, நடக்காது.
நிம்மதி இருக்காது, லட்சுமி கடாட்சம் இருக்காது, ஆனால் பிரச்சினைக்குப் பஞ்சம் இருக்காது, எப்போதும் கஷ்டம் இருக்கும். நிம்மதி குறைவும், நித்திரைக் குறைவும், தரித்திரமும் அவர் நடத்திச்செல்கிற குடும்பத்தில் எப்போதும் இருக்கும். கடைசியில் பிரிவும், அழிவும் தப்பாமல் இருக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலை உருவாகக்கூடாது என்பதால்தான், ஒருவர் பேச்சை ஒருவர் கேட்டு, ஆலோசனை செய்து குடும்பத்தை நடத்துங்கள் என்று முன்னோர்கள் சொன்னார்கள். மனைவிக்கு குணமும், கணவனுக்குப் பொருள் தேடும் திறனும் இருக்கவேண்டும் என்றார்கள்.
இந்த இருவரும் நாலும் தெரிந்து நடந்து கொண்டால் எல்லாவற்றிலும் நன்றாக இருக்கலாம். அவர்கள் செலுத்துகிற வாழ்க்கை ஓடம் சு்கமாக செல்லும். அதில் பிள்ளைகள், சுற்றம் ஆகியோர் இனிமையாகப் பயணிக்கலாம். இருவரில் ஒருவர் தவறினாலும் பிரச்சினைகள் வந்து ஓடத்தையே சிதைத்துவிடும்.
இந்தத் தொல்லை நமக்கு எப்போதும் இருக்கக் கூடாது என்பதால்தான் சாயி பக்தராக இருப்பவர், தான் சார்ந்த எல்லா விஷயத்திற்கும் அவரை தலைவராக நியமித்துப் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்துவிட்டு, அவர் பின்னால் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்.
நான் சாயி பக்தரில்லை,  வள்ளலாரை குருவாக வைத்திருக்கிறேன், ரமணரை குருவாக வைத்து இருக்கிறேன், வெங்கையா சுவாமியை அல்லது விசிறி சுவாமியை குருவாக வைத்திருக்கிறேன், அய்யா வைகுண்டர்தான் என் குரு என்றாலும், யார் உனது குருவாக விளங்குகிறாரோ அவரை மானசீகமாகப் பிடித்துக் கொண்டு,உன்னை ஒப்படைத்துவிடு! அப்போது நீ எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சுலபமாக வாழ்க்கையை நடத்தலாம்.
கடவுள் சோதிப்பார், குருவோ சோதனையிலிருந்து தப்பிக்க வழிகாட்டுவார். நீ திறமைசாலியாக இல்லாவிட்டால் உனக்காக அவர் போராடி உன்னை சோதனையிலிருந்து மீட்பார். அக்கரை சேர்ப்பதில் அக்கறை கொண்டவர் நம் குரு.
எப்போதும் அவரைப் பிடித்துக்கொண்டிருக்கமுடியுமா? முடியாதே சுவாமி எனலாம். எப்போதும் பிடிக்கவேண்டாம். போகும் வழியில் மட்டும் அவரை நினைத்துக்கொள். போகும் வழி என்றால்...?
கடன் வாங்கப் போகும் முன்...
கடன் தரப்போகும் முன்..
ஒரு செயலை ஆரம்பிக்கும் முன்..
சாப்பிடும் முன்... உறங்கும் முன்...
அவரை நினைத்துக்கொள்.. அவர் உன்னை வழி நடத்துவார்.
சத்சரித்திரம் சத்குருவை நம் படகோட்டி என்று சொல்கிறது. இதைப் பற்றி தியானிப்போம்.
படகோட்டிக்கும் படகுக்கும் தரையில் வேலை எதுவும் கிடையாது. நமக்கோ எப்போதும் தண்ணீரில் வேலை கிடையாது. அவசியம் இருந்தால் மட்டுமே ஆற்றைக் கடப்போம். மற்றபடி அந்தப்பக்கம் கூட தலை வைத்துப் படுக்கமாட்டோம். அதற்குத்தேவையே கிடையாதே எனவே, தேவை ஏற்படும்போது மட்டும் நாம் அந்தக் கரையைக் கடக்க வேண்டிய நிலை வருகிறது. இந்த நிலையில் படகோட்டி இல்லாமல் நாம் அக்கரை செல்லவேண்டுமானால் பின் வரும் விஷயங்கள் நமக்குத் தேவை.
ஒன்று நாம் படகு வைத்திருக்கவேண்டும், அதை இயக்கவும், பாதுகாக்கவும் தெரிந்தவராக இருக்கவேண்டும்.
நீச்சல் தெரிந்திருக்க வேண்டும், நீந்தும் போது தண்ணீர் ஆழமில்லாமலும், அதில் முதலைகளோ, முள்களோ பள்ளங்களோ இல்லாமலும் இருக்க வேண்டும். சுழல் இருக்கக்கூடாது.. நாம் அக்கரைக்கு பத்திரமாகப் போகவேண்டும், நாம் எடுத்துச்செல்லும் பொருட்களும் பத்திரமாக வந்து சேர வேண்டும்.. ஈரம் படக்கூடாது.. நம்மோடு நம் குடும்பத்தையும் அழைத்துச் செல்லும் திறன் வேண்டும். ஆபத்து நேர்ந்துவிட்டால் தப்பிக்க வழி தெரிந்திருக்க வேண்டும்.
இப்படி நிறைய விஷயங்கள் இருந்தால்தான் நாம் தைரியமாக ஆற்றைக் கடக்க முடியும். இல்லாவிட்டால் ஆற்றங்கரையை வெறித்துப் பார்த்துவிட்டு வீடு திரும்பிவிட வேண்டியதுதான்.
இப்படி யாராவது நினைத்துக் கொண்டிருப்பது உண்டா? கிடையாது.. ஒரு ஐந்து ரூபாயோ, பத்து ரூபாயோ ஓடக்காரனிடம் கொடுத்துவிட்டால் அவன் பார்த்துக்கொள்ளப் போகிறான் என தைரியமாக எதைப் பற்றியும் சிந்திக்காமல் போகிறோம்.
ஓடக்காரன் எதற்கு?
இதன் தொடர்ச்சி நாளை

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...