Tuesday, June 25, 2013

உதி செய்த அற்புதம்



உலகிற்கு எல்லாம் ஆன்மீகச் செல்வத்தை வாரி வழங்கிய நம் பாரத நாட்டில், வட இந்தியாவை விட தென்னிந்தியாவில் திருக்கோயில்கள் அதிகம். தென்னிந்தியாவிலும் தமிழ்நாட்டில் அதிகம்.
தொண்டை நாடு சான்றோர் உடைத்து என்னும் புகழ்பெற்றது. அந்தத் தொண்டை நாட்டில் தமிழகத் தலைநகரான சென்னையின் நுழைவாயிலாக அமைந்துள்ள புண்ணிய பூமி பெருங்களத்தூர். தொண்டனூர், பக்தபுரி என்னும் வேறு பெயர்களும் இப்பூமிக்கு உண்டு. பக்தர்களுக்கு பக்தியை ஊட்டித் தொண்டு செய்யும் சான்றோர்கள் நிரம்பிய இந்த ஊரின் கண், சாயி பாபாவின் திருத்தொண்டராக, பக்தராக, பக்தர்களுக்கு வழிகாட்டியாக விளங்குகிற சாயி வரதராஜன் அவர்களால் உருவாக்கப்பட்ட சீரடி சாயி பாபா பிரார்த்தனை மையத்தின் ஐந்தாவது ஆண்டு துவக்க விழா மற்றும் சீரடி சாயி பாபா திருவிக்ரஹ பிரதிஷ்டை நாள் விழா ஆகியவை 13-3-2013, மாசி மாதம் 29-ம் தேதி புதன் கிழமையன்று இனிதே நடைபெற்றது. அப்பொழுது ஷீரடி சாயி பாபாவின் உதியின் அற்புதங்கள் என்னும் தலைப்பில் புதுக்கோட்டை ஸ்ரீநிவாச சுந்தரராஜன் ஆற்றிய உரையினை ஸாயி அன்பர்களுக்கு மீண்டும் சமர்ப்பிக்கிறோம்.
மகாராஷ்டிர மாநிலத்தில் கோதாவரி நதி தீரத்தில் சீரடி என்கிற புண்ணியத் தலத்தில் பாபா நெடுங்காலம் மானுட உருவெடுத்து வாழ்ந்து சமாதியடைந்தார். அஷ்டோத்திரத்தில் ஓம் சர்வாதாராய நம,  ஓம் சம ஸர்வ மத சம்மதாய நம என்றொரு நாமம் சொல்லப் பட்டுள்ளது. சர்வத்திற்கும் ஆதாரமாகவும், சர்வ வழிபாடுகளையும் சம்மதித்து ஏற்பவராகவும் இருப்பவர் சாயி பாபா என்பது இதற்குப் பொருள்.
அனைத்து வழிபாட்டு முறைகளையும் ஏற்று, மக்களைக்காப்பவரான சாயி பாபா, ஒரு பாழடைந்த மசூதியில் வாழ்ந்தார். அங்கு துனி என்கிற நெருப்பு எரிந்துகொண்டே இருக்கும். இதிலிருந்து வந்த சாம்பலுக்கு உதி என்று பெயர்.
இதை தனது பக்தர்களுக்கு ஆசீர்வாதம் செய்து தருவார். நாள் தோறும் திரண்டு வருகிற பக்தர்களுக்குத் தாயாகவும், தந்தையாகவும், உறவினராகவும், தோழனாகவும் ஆகி, ஆசி தந்து அருளினார்.
எப்பொழுதும் ஸப்கா மாலிக் ஏக் ஹை என்றார். ஒருவனே தேவன் என்பதையேச்சொன்னார். கிறித்தவர் அவரை இயேசுவாகவே பார்த்தார்கள். முஸ்லிம்கள் அவரை அல்லா அனுப்பிய அவுலியா என்று போற்றினார்கள். இந்துக்களோ அவரை ஓம்காரப் பொருளாக உணர்ந்தார்கள். இப்படி அனைத்து மதத்தைச்சார்ந்தவர்களும் அவரை தத்தம் வழிபாட்டுக்குரிய தெய்வமாகக் கொண்டாடினார்கள். அனைவர் மீதும் அன்பையும் பாசத்தையும் நாளெல்லாம் பொழிந்தார் பாபா.
தம்மைக் காணவரும் பக்தர்களிடமிருந்து தட்சணைக் கேட்டுப் பெறுவார். அவற்றில் பெரும் பகுதியினை தர்மம் செய்வார். மீதி பணத்திற்கு விறகுக்கட்டைகளை வாங்கி சேமிப்பார். அவர் உண்டாக்கிய அணையாத நெருப்பு இன்றும் எரிந்து கொண்டிருக்கிறது. அந்த சாம்பலை எடுத்து, விடை பெறுவதற்காக வரும் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்குவார். தன் அபயக் கரத்தை பக்தர்கள் தலையில் வைத்து ஆசி கூறுவார். நம் எல்லோருக்கும் தலைவர் இறைவனே என்று இறைவன் புகழைப் போற்றுவார்.
பாபா, சிலநேரம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் போது உரத்தக் குரலில் வாருங்கள் வாருங்கள் என் மனதில் விளையாடும் இராமா வாருங்கள் ...உதி மூட்டைகளைக் கோணி கோணியாக கொண்டுவந்து தாரும் என்று பாடுவார்.
ஆவோஜி!  ஆவோஜி  ரமதே ராம் ஆவோஜி!
உதியாங்கி கோனியா லாவோஜி! லாவோஜி!
சதாசிவ பிரம்மேந்திரர் என்ற மகான் அவருடைய கீர்த்தனையிலும் கேலதி மம ஹ்ருதய ராம...  ராமன் என் மனதில் விளையாடுகிறான் என்றே பாடுகிறார்.
ஆண்டாள் நாச்சியார் இராமனை,  மனத்துக்கு இனியானை என்றே பாடுகிறார். இப்படி சீரடி சாயி பாபா இராமனைப் பார்த்து மகிழ்ச்சியோடு பாடி உதி மூட்டைகளைச் சேர்த்து அன்பர்களுக்கு வாரி வழங்குகிறார். பாபாவின் உதி அநேக அற்புதங்களை நிகழ்த்தியிருக்கின்றன. நிகழ்த்தி வருகின்றன. அதில் ஒரு சிலநிகழ்வுகளை இங்கே பார்ப்போம்.
தேள்கடிக்கு மருந்தான உதி்
நாசிக்கில் ஓர் சாயி பக்தர்இருந்தார். அவர் பெயர் நாராயண் மோதி ஜனி. அவர் தன் தாயாருடன் பாபாவை தரிசிக்க சீரடிக்கு வந்தார். ஜனியின் தாயாரிடம் பாபா, இனி உன் மகனுக்கு அடிமைவேலை இல்லை. சுய தொழில் செய்வான் என்று ஆசி தந்து உதியும் தந்தார். விரைவிலேயே ஆனந்தாஸ்ரம் என்ற தங்கும் விடுதியைத்துவக்கினார். தொழிலில் லாபம் பெருகி செல்வச் செழிப்பை அடைந்தார். ஸாயி பக்தரின் நண்பர் ஒருவருக்கு தேள் கொட்டிவிட்டது. வலியால் துடிதுடித்துப் போனார். ஸாயி பக்தர் வீடு எங்கும் பாபாவின் உதியைத் தேடினார், கிடைக்கவில்லை. பாபாவின் திருவுருவப் படம் முன் நின்றார். திருவிளக்கு ஏற்றினார். ஊதுபத்தி கொளுத்திவைத்தார்.
மனம் உருகி தன் நண்பருக்குத் தேள் கடி வலி நீங்க மன்றாடி வேண்டினார். ஊது பத்தி எரிந்த சாம்பலை சாயியின் உதியாக எடுத்து நண்பர்க்குத் தேள் கொட்டிய கடி வாயிலும் வலியுள்ள இடங்களிலும் பூசினார். அடுத்த வினாடியே தேள் கொட்டிய வலி நீங்கியது. ஸாயி பக்தரும் அவர் நண்பரும் மகிழ்வெய்தினார்கள்.
ஸாயி பாபாவின் உதி நோய் தீர்க்கும் மருந்து ஆகும்.
ஜாம் நேர் அற்புதம்
நானா சாகேப் சந்தோர்க்கர் என்ற பக்தர் ஜாம்நேர் என்ற ஊரில் வாழ்ந்துவந்தார். அவர் மகள் மீனா தாயி நிறைமாத கர்ப்பிணி. பத்தாம் மாதம் பிரசவ வலி எடுக்க ஆரம்பித்தது. நாள் கணக்கில் வலி நீடித்தது. நானா, பாபாவின் கருணையை வேண்டி பிரார்த்தனை செய்தார்.
சீரடியில் இருந்த பாபா, ராம்கீர் புவா என்பவரை நூறு மைல்களுக்கு அப்பால் இருந்த ஜாம்நேருக்கு அனுப்பி மீனாதாயிக்கு உதிவர் பாபா. உதியைத் தர ஏற்பாடு செய்தார். பாபா அனுப்பியதாகக் கூறி உதியை மீனாத்தாய்க்கு அளித்தார். மீனாத்தாய் சில நிமிடங்களிலேயே பிரசவித்தாள். பாபாவின் உதியின் மகிமையால் சுகப்பிரசவம் ஆனது.
போக்குவரத்துக்குப் போதிய வசதியில்லாத நேரத்திலும் ரயில் நிலையத்திலிருந்து நானாவின் குதிரை வண்டிக்காரனாக வந்து ராம்கீர்புவாவை நானாவின் வீட்டில் சேர்த்துவிட்டு மறைந்துவிட்டார். தாங்கள் அனுப்பிய குதிரை வண்டிக்காரன் எங்கே என்று நானா கேட்டபோது, தான் யாரையும் அனுப்பவில்லை என்றார் நானா. வந்தது பாபா என அனைவருக்கும் புரிந்துபோனது.
இப்படி பாபா நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளமானவை. அவரது உதி நிகழ்த்திய அற்புதங்களும் ஏராளம்.
பிறப்பு இறப்பு என்ற இருமையைக் கடந்தவர் பாபா. உதியை நெற்றியில் பூசி நீருடன் கலந்து பருகினால் உடற்பிணி நீங்கும். மனப்பிணி மாறும். பிறவிப் பிணி நீங்கும். ஸாயி நாமம் சொல்லி திருவடி பணிந்து உதி அணிந்து அனைவரும் வாழ்க வளமுடன்!
                        
                       சாயி தாசன் ஸ்ரீநிவாச சுந்தரராஜன், புதுக்கோட்டை

1 comment:

  1. எப்பொழுதும் ’ஸப்கா மாலிக் ஏக் ஹை’ என்றார். ஒருவனே தேவன் என்பதையேச்சொன்னார்.

    அருமையான பகிர்வுகள்.பாரட்டுக்கள்.

    ReplyDelete

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...