நேற்றைய தொடர்ச்சி
கவனி
நீங்கள் எவ்வளவோ பேசுகிறீர்கள்.. நான் அதற்கு குரல் கொடுத்து பதில் கூறுகிறேனா? மவுனமாக
கவனித்து, தேவைக்கேற்பவே பதில் கூறுகிறேன்.
பல நேரங்களில் நான் பேசுவதில்லை, கவனிக்கிறேன்.
காரணம் என்ன? உன் வார்த்தையால் நீ சிக்கிக்கொள்ள மாட்டாயா?
அதை வைத்து உன்னை பிடித்துக்கொள்ளலாமா
என்று யோசிக்கிற கிரகங்கள் என்னிடம் வேண்டிக் கொள்வதுதான்.
பதிலுக்குப் பேசாமல் மவுனமாக அனைத்தையும் காதில்
வாங்கிக்கொண்டிருந்தால், எதிராளி
அதிகமாகப் பேசமாட்டார். அதனால் உனக்கு நன்மையே நடக்கும். ஒருவர் பேசும்போது அவர்
வாயை மட்டும் பார்க்காதே.. கண்களைப் பார்.. அவரது உடம்பைப் பார்.. ஏனெனில்
உடம்பும் பேசும்.
உடம்பு பேசுமா?
உடம்பும் பேசும்.
ஒருவர் பேசும்போது அல்லது அவரது உடம்பு பேசும்போது நாம்
கவனித்தால் அதிலிருந்து நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம். ஒருவர் நிற்கிற
தோரணை, நடக்கிற தோரணை, பார்க்கிற தோரணை போன்ற பல நிலைகளை வைத்து அவர்
என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதை கணிக்கலாம்.
ஒருவன் நிற்கிற தோரணை அவன் எப்படிப்பட்டவன் என்பதைக்
காட்டும், நிமிர்ந்து நிற்பவன் அஞ்சாநெஞ்சன்,
குனிந்து நிற்பவன் கோழை, பின் கை கட்டுபவன் எச்சரிக்கையானவன், கும்பிடு போடுகிறவன் காரியவாதி, நேரே நின்று பேசுபவன் நிஜமாக உரையாடுகிறவன்,
திரும்பிக் கொண்டு பேசுகிறவன்
புறக்கணிக்கிறவன் என அறியலாம்.
கடுத்தது காட்டும் முகம், அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். மனநிலையை
முகமும், கண்களும்
வெளிப்படுத்தும். இப்படித்தான் கால்கள், கைகள் வெளிப்படுத்தும். பயத்தால் உடல் நடுங்கும்.. கோபத்தால் உடல் குலுங்கும்..
இரத்தம் சூடேறும்.. இவை மன நிலையை காட்டும் விஷயங்கள். பேசும்போது தலை தாழ்ந்தால்
அவர் கூச்சப்படுகிறார், வேறு
பக்கம் பார்த்தால் அவர் உங்களது பேச்சை விரும்பவில்லை.. பேசும்போது உறங்குகிறார்,
அல்லது கொட்டாவி விடுகிறார் என்றால்
சீக்கிரம் பேச்சை முடித்துக்கொள் என்று அர்த்தம். முக பாவணைகளை வைத்தும் அவரது
மனநிலையைப் படிக்கலாம்.
உங்களைப் பார்த்ததும் கண்கள் துடித்தாலோ, அதிலிருந்து கண்ணீர் திரண்டு வந்தாலோ அவர் மிகவும்
அன்பாக இருக்கிறார்.. அனல் மூச்சை வெளியிட்டால், மூக்கு துடித்தால் கோபத்தோடு இருக்கிறார் என்பதை நாம்
தெரிந்துகொள்ளலாம்.
நம் எதிரில் இருப்பவர் பேசுவதைப் பார்த்தே நமது கண்கள் நம்மை
95 சதவிகிதம் பதில்
பேசத்தூண்டுகிறது. மற்றபடி கேட்டல் உணர்தல், நுகர்தல் மூலம் பேசுவது வெறும் ஐந்து சதவிகிதம் மட்டுமே
நம்மிடம் உள்ளது. உண்மையில், நாம்
நிறைய விஷயங்களைத் தவறவிடுகிறோம்.
ஒருவர் நிற்றல், நடத்தல், கவனித்தல், சைகை செய்தல்,
முகபாவனை போன்றவற்றின் மூலம்தான் மிக
அதிகமாக பிறருடன் தொடர்பு கொள்கிறார். அதன் அளவு 55 சதம். வார்த்தைகளின் ஏற்ற இறக்கத்தால் பிறருடன் அவர்
பகிர்ந்து கொள்வதும், வெறும்
வார்த்தைகளை அவர் பேசுவதும் இதை விடக் குறைவுதான்.
மனிதர் ஆடைகளால் பேசுகிறார்கள். பகட்டான ஆடைகள் ஒருவரது
டாம்பீகத்தை, செல்வத்தை, நாகரீகத்தை, இன்ன பிறவற்றைப் பேசுகின்றன. இதனால்தான் ஆள் பாதி ஆடை
பாதி என்றார்கள்.
மென்மையாகத் தொடுவதும், வன்மையாகத் தொடுவதும் மனநிலையை வெளிப்படுத்துவது. இப்படி
நிறைய விஷயங்கள் இருக்கின்றன. இவற்றை கூர்ந்து நோக்கக் கற்றுக்கொள். இந்தக் கவனிப்புகள்
எல்லாம் சாதாரண கவனிப்பு மட்டுமே. ஒருவர் உன்னோடு பேச வருகிறார் என்றால் அவரது
நோக்கம் என்ன என்பதை முதலில் தெரிந்துகொள். அதற்கேற்பப் பேசப் பழகு.
என்னதான் நெருங்கிய நண்பராக இருந்தாலும், எதிர்பால் நண்பராக இருந்தால் எப்போதும் ஒரு
அடி தள்ளியே இரு. வயதானவராக இருந்தாலும், இளைய வயதுள்ளவராக இருந்தாலும்கூட அப்படியே செய்.. அது உன்னை எல்லா
நிலைகளில் இருந்தும் காப்பாற்றிக்கொள்ளும். இல்லாவிட்டால் உன்னை தர்ம சங்கடத்தில்
தள்ளி, மனநிம்மதியைக் கொடுத்து வருத்தப்பட
வைத்துவிடும்.
உனக்கு எனது அருள் இருக்கிறது என்பதற்காக அதை வெளியே
காட்டிக்கொள்ளவோ, அல்லது பிறரை
அருளை நாடவோ கூட தனியாகச் செல்வது நல்லதல்ல. கூட்டத்தோடு சென்றாலும் அவர்கள் கவனம்
உன் மேல் படாதபடி பார்த்துக்கொள்..சில தாந்தீரிகவாதிகள் மீது மரியாதைக்
காட்டிப்பேசினால்கூட, நள்ளிரவு
நேரத்தில் போன் செய்து, உன்னிடம்
தவறான முறையில் பேசுவார்கள். அவர்களிடம் கேட்டால், நானல்ல, என்னை
இயக்குகிற யட்சிணிகள் அவ்வாறு பேசச் சொல்கின்றன என்பார்கள். இத்தகைய துணிகரமான
பாவிகளிடமிருந்து உன்னை எப்போதும் காத்துக்கொள்ள, நீ அவர்கள் நோக்கத்தை கவனிக்க வேண்டியது அவசியம்.
இப்படித்தான் மகளே! ஒவ்வொன்றையும் எச்சரிக்கையாக கவனித்து நடந்துகொள்.
இதன் தொடர்ச்சி நாளை
No comments:
Post a Comment