Wednesday, June 12, 2013

முடியாது என சோர்ந்து விடாதே! முடியும் வரை உன்னுடனிருப்பேன்!-3





 இதன் முந்தைய பகுதியினை படிக்க

இதை ஏன் சொல்கிறேன் என்றால், எங்கள் இருவருக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. நான் எப்போதும் கடவுளை நம்பி அவரிடத்தில் ஒரு குழந்தை போல தரூ;சமடைந்திருக்கிறேன். அவர் கடவுள் மீது நம்பிக்கையிருந்தாலும், நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என சுய பலத்தைச் சார்ந்திருக்கிறார்..
அவர் பாபாவை கும்பிடுகிறார்.. ஆனால் உடனே பலன் வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு.. நான் அப்படியில்லை.. என்ன செய்தாலும் அது உன் செயல், என்ன நடந்தாலும் அது உனக்கானது..நான் வெறும் காட்சியாளன்தான்..என் கடன் நின் பணி செய்து கிடப்பது. நின் கடனோ என்னை தாங்குவது என இருக்கிறேன்..
நான் அடிக்கடி உங்களுக்கு வலியுறுத்துகிற விஷயம் ஒன்று் சாஸ்திரங்கள் என்ன வாக்குறுதியை உங்களுக்குத் தருகிறதோ அதை உங்களுடையது என கெட்டியாகப்  பிடித்துக்கொள்ளுங்கள்.. அப்போது நாம் காப்பாற்றப்படுவோம்.
பயப்படாதே நான் உன்னோடு இருக்கிறேன் என்று பாபா சொன்னதாக ஸ்டிக்கர் தெரிந்தால் அது பாபா உனக்குச் சொன்னது. உன் துக்கம் சந்தோஷமாகும் என்று கிறித்தவர் ஒருவர் உனக்கு நோட்டீஸ் தந்தால், கடவுள் உனக்குக் கூறுவது.. பயப்படாதே அல்லா உன்னைக் காப்பாற்றுவார் என ஒரு முஸ்லிம் நண்பர் சொன்னால், அவர் கடவுளால் ஏவப்பட்டுச் சொல்கிறார்.. இப்படி எடுத்துக் கொண்டால் நாம் ஜெயித்து விடலாம்.
வாழுகிறவர்களுக்குத்தான் கஷ்டம் வரும். செத்தவனுக்கும், இன்னும் பிறக்காதவனுக்கும் எந்தக் கஷ;டமும் இல்லை. வாழ்க்கை என்பதே கஷ்டத்தை எப்படி வெற்றி கொண்டு வெற்றி கரமாக வாழ்வது என்பதை தெரிந்து கொள்வதற்காகத்தான் தரப்படுகிறது.
இன்றைக்கு அவமானப்படுகிறீர்கள் என்றால், நேற்று கடன் வாங்கும்போது, அப்பாடா.. கேட்ட உடனே கிடைத்தது என்று சந்தோஷப்பட்டீர்களே! போட்ட பணத்திற்கு உரிய வேலையைச் செய்யாமல் வேறு எது எதற்கோ அதைப் பயன்படுத்தினீர்களே!
இப்படியெல்லாம் செய்தால் நாம் பின்னாளில் கெட்டுப் போவோம் என்று யோசித்தீர்களா?
இன்றைக்கு மனைவிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பலாமா? விவாகரத்து செய்யலாமா என்று எதற்காக கேள்வி கேட்கிறீர்கள்? நேற்று அதற்கான வாய்ப்புகளை நீங்கள்தானே ஏற்படுத்தினீர்கள். நீங்கள் தப்பே செய்யாமல் உங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதா?
ஏன் அதை அப்போதே சரிசெய்யவில்லை..?  எதற்காக பார்த்துக்கொள்ளலாம் என தள்ளிப்போட்டு வந்தீர்கள்? இப்போது பொறுமையை இழந்து தவித்து தவறான முடிவுக்கு ஏன் செல்கிறீர்கள்?
ஜாமீன் போடவேண்டாம்.. போட்டால் நாம் நட்டமும், கஷ்ட மும், அவமானமும் அடைய நேரிடும் என்பது உங்களுக்குத் தெரிந்ததுதானே அப்படியிருந்தும் எதற்காக அதைச் செய்தீர்கள்?
எல்லாம் ஒரு சுயநலம்தானே! பச்சாதாபம் தானே! அதற்கான பலனை அனுபவிக்கும்போது மட்டும் எதற்காகப் புலம்புகிறீர்கள்.
பெண்ணுக்கு வயதாகிவிட்டது.. இன்னமும் திருமணம் நடக்க வில்லை என ஏன் இப்போது புலம்புகிறீர்கள். காலத்தே அதை முடித்திருக்கலாமே! அப்போது மகள் வேண்டாம் என்கிறாள்.. அவள் சம்பாதிக்கிறாள்.. எங்க ளோடு கொஞ்ச காலமாவது இருக் கட்டும் என்றெல்லாம் எந்தெந்த சாக்குகளை சொன்னீர்களே! இப்போது அதற்கான பலனை அனு பவிக்கும்போது எதற்கு வருத்தம்?
பாபாவிடம் வந்து பிரார்த்தனை செய்தவுடனே கிடைத்துவிட வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்?
பிள்ளையை டாக்டராக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அவனை எல்கேஜியில் சேர்த்து இருக்கிறீர்கள் என்றால், உடனடியாக கிளினிக்கை திறந்து, அவன் கையில் கத்தியையும் கழுத்தில் ஸ்டெத்தையும் தருவீர்களா?
மூட்டை மூட்டையாய் அறுவடை செய்ய வேண்டும் என்ற ஆசையில் விதை விதைத்து விட்டு மறுநாளே அறுவடைக்குப் போய் நிற்பீர்களா?
எல்லாவற்றுக்கும் காலம் உண்டு என தெரிந்து வைத்திருக்கிற நீங்கள், பிரார்த்தனைக்கும் காலம் உண்டு என்பதை ஏன் மறக்கிறீர்கள்?
எங்கள் கஷ்டம் தெரிந்தால் இப்படி பேச மாட்டீர்கள் எனக் கூறலாம்.. உண்மைதான்.. உங்கள் கஷ்டம் தொலையத்தான் பாபாவே வழிகாட்டியிருக்கிறாரே!
 அம்மா.. இதோ நான் அமர்ந்துள்ள இந்த மசூதியிருக்கிறதே மிகவும் சக்தி வாய்ந்தது. மனதில் பயத்தை வைக்காதே.. அவர் பார்த்துக்கொள்வார் என்று என் மீது பாரத்தைப் போட்டுவிட்டு எந்தச் சூழலையும் எதிர்த்து நில்.. நான் பார்த்துக்கொள்கிறேன்..
ஒரு குழந்தை தாயிடம் என்ன யோசித்து சேரும்? அது மாதிரி எதைப் பற்றியும் யோசனை செய்யாமல் என்னிடம் வந்து அமைதியாக அமர்ந்துகொள்..நடக்க வேண்டியதை நான் பார்த்துக்கொள்கிறேன்..
உன்னைப் போன்ற எளியவர்களுக்கு இந்த மசூதியானது தாய்.. நீ எவ்வளவு பெரிய ஆபத்தில் சிக்கிக் கொண்டாலும் பரவாயில்லை.. பயப்படாதே. அது உன்னைக் காப்பாற்றும் என்று பாபாவே உறுதி கூறியிருக்கிறாரே உனக்கு அவர் மீது உண்மையான நம்பிக்கை இருந்தால், பக்தியிருந்தால் இதைக் கேட்டு நீ தைரியம் அடைந்திருப்பாய்.. கஷ்டமா? வரட்டும் என அதை எதிர்கொள்ளத் துணிந்திருப்பாய்..
உயிர் போனால் கடனைத் தர முடியுமா?  பொறுங்கள்.. நேரம் வரும்போது தருகிறேன் என்று சொல்லியிருப்பாய். இப்படியே ஒவ்வொரு பிரச்சினைக்கும் அவரை நம்பி செயல்பட்டு இருப்பாய்..
இப்போது அந்தப் பொறுமை, நம்பிக்கை உனக்கு இல்லாமல் போனதால், நான் தற்கொலை செய்து கொள்ளலாமா? ஓடிப்போகலாமா? உயிரை விடலாமா என்றெல்லாம் யோசிக்கிறாய்..
செத்தபிறகு நீ எங்கே போகப்போகிறாய்?  யாருக்குத் தெரியும்?  இருக்கும்போது இதை எதிர்த்து நின்று ஜெயித்துக்காட்டு.. யார் திட்டினாலும் அவமானப்படுத்தினாலும் அது உன் பாவத்தை வேக வேகமாகக் கரைப்பதற்கே என்பதை புரிந்து கொள்.  அமைதி காத்திரு. பாபாவை நோக்கிக் கூப்பிடு.
நீ முதல் அடியை எடுத்து வைத்து விட்டால் போதும், அவர் முடிவு வரை உன்னோடு இருந்து உனக்குத் தேவையானது அனைத்தையும் முடித்துக்கொடுப்பார்.. வானமும் பூமியும் ஒழிந்துபோகும். ஆனால் பாபாவின் சத்திய வாக்குகள் என்றைக்கும் ஒழிந்து போவதில்லை..
அது நின்று பலன் தரும்.. அதைப் பெறுவதற்கு நீங்கள் தயாராகுங்கள்.
ஜெய் சாய் ராம்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...