Monday, June 17, 2013

நாளும் கோளும் உன் போன்ற நல்லவர்களுக்கு கெடுதல் செய்வது இல்லை





சாயி பக்தர்களுக்கு எனது அறிவுரை என்னவெனில், பாபா ஜோதிடத்திற்கு எதிரானவர் இல்லை. அவரது பக்தர்களுள் பலர் ஜாதகம் கணிப்பவர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்களை ஆசீர்வதித்து அவர்களது தொழில் மேம்பாடு அடைய பாபா உதவி செய்திருக்கிறார்.
அதே சமயம், அவரது பக்தன் ஒருவன், இத்தகைய ஜாதகக்கோளாறால்அவதிப்படும் போது, அதற்கு எதிரான தீர்ப்புகளையே அவர் வழங்கி தனது பக்தனை ஆசீர்வதித்திருக்கிறார். இதற்கான ஆதாரங்கள் நிறைய சத்சரித்திரத்தில் சொல்லப்பட்டுள்ளன.
நல்லதோ கெட்டதோ எதுவும் விதிப்படி நடக்கிறது என நினைக்காமல், அவரது அருளின் படி நடக்கிறது என நினைத்து செயல்பட்டால், நாம் தோற்பதே கிடையாது.
இன்றைய காலக்கட்டத்தில் பூரண ஜாதகம் என எதுவும் கிடையாது. எத்தனையோ பூரண ஜாதகம் உள்ளவர்கள் விபத்திலும், மன உளைச்சலிலும் மரணத்தைத் தழுவியிருக்கிறார்கள். எத்தனையோ ஜாதகப்பொருத்தமுள்ள திருமணங்கள் கோர்ட் படிகளில் விவாகரத்துக்கேட்டு நின்றுகொண்டு இருக்கின்றன.
முஸ்லிம் மற்றும் கிறித்தவப்பெருமக்கள் எந்த ஜாதகப் பொருத்தத்தையும் பார்க்காமலேயே திருமணம் செய்து கொண்டு சிறப்பாகத்தான் வாழ்ந்து வருகிறார்கள். பழங்குடிகள், மேல் நாட்டு மக்கள் மட்டுமில்லை, எந்த விலங்கும் இந்த மாதிரி எல்லாவற்றுக்கும் ஜாதகத்தை நம்பி வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கவில்லை.
அப்பர் பெருமான், திருஞானசம்பந்தரிடம், சமணர்களிடம் வாதுக்குச் செல்ல இது நேரமல்ல, கிரகங்கள் எதிராக இருக்கின்றன என்று கூறிய போது, கோளறு பதிகம் பாடி, சமணர்களை வாதில் வென்று கழுவேற்றிய நிகழ்ச்சி இங்குதானே நடந்திருக்கிறது?
இறைவனிடம் பூரண சரணாகதி அடைந்த ஒருவன் இத்தகைய கிரகங்களால் பாதிக்கப்படுவது கிடையாது.  பாதிக்கப்பட்டாலும் அதனால் பெரிதாக வருத்தப்படுவதும் கிடையாது என்பதே இவை கூறும் செய்திகள்.
அஷ்டமி, நவமி திதிகளை விலக்குகிறோம். அதில் தான் பகவான் கிருஷ்ணரும்,  ராமரும் அவதாரம் செய்தார்கள். மூலத்தைக் கண்டு பயப்படுகிறோம், அதில் தான் மிகப்பெரும் யோகியும் பக்தருமான அனுமன் அவதாரம் செய்தார். மூலநட்சத்திரம் காரணமாக பலருக்குத் திருமணமாகாமல் போய் விடுகிறது. நீ சாயி பக்தனாக இருந்தால், இது தேவையற்ற ஒன்று என்பதே எனது வாதம்.
ஒவ்வொரு நட்சத்திரத்திலும் பிறந்த மூதாதையரை நினைவு கூர்ந்து பாருங்கள். அவர்களது பண்புகள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் பொருந்தி வரும்.
மூல நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகள் அனுமனைப் போல எதிலும் தீவிர முயற்சி உள்ளவர்களாகவும், பொறுமைசாலிகளாகவும், தாய் மீது அதிக பாசம் உள்ளவர்களாகவும் இருப்பதை நடைமுறையில் பார்க்கலாம்.
பரணியில் பிறந்தவர்கள் சுறுசுறுப்பாக இருந்து எதையும் தம் வசப்படுத்துகிறவர்களாக இருப்பதைக்காணலாம்.
ரோகிணியில் பிறந்தவர்கள் பகவான் கிருஷ்ணரைப் போல கம்பீரமானவர்களாக, தோற்றாலும் கவலைப்படாமல் எழுந்து நடப்பவர்களாக இருப்பதை அறியலாம்.
சுவாதியில் பிறப்பவர்கள் எதையும் விரைந்து பெறும் தன்மை கொண்டவர்களாக இருப்பதை அறியலாம்.
விசாகத்தில் பிறப்பவர்கள் சுயமாக சம்பாதிக்கத் திட்டமிடுபவர்களாக இருப்பதை அறியலாம்.
சதயத்தில் பிறந்தவர் சாதிக்கிறவராக இருப்பார்.
ரேவதி கடைசி நட்சத்திரமாக இருப்பதால் இவர்களுக்கு பக்தி அதிகம். அதே சமயம் அனைத்தும் தாமதமாக வரும் என்பதை உணரலாம்.
இந்த மாதிரி நலமானதை எடுத்துக்கொண்டு போகாமல், வாழ்க்கையை கெடுக்கிற விதங்களில் அதைப் பொருத்தி, எதற்காக வாழ்வை வீணாக்க வேண்டும்?  பாபா தருகிற வாழ்க்கையை வீணாக்கிக் கொள்ள வேண்டாம். அதேபோல சம்பளம் குறைவாக இருக்கிறது என நினைத்து உரிய காலத்தில் திருமணம் செய்து கொள்ளாமல் கடைசியில் பகவானைத் தேடி வந்து வேண்டிக்கொள்கிறார்கள்.
நான் பட்டமேற்படிப்பு முடித்து வேலைக்கு சேர்ந்த போது வெறும் ஆயிரம் ரூபாய் சம்பளம்.  பத்து நாளைக்குக்கூட போதாது. ஆனால், இரவு பகலாக உழைத்து, உயர்ந்துவந்தேன். பலர் உயர பின்னாலிருந்து உதவினேன். இப்படி நினைத்திருந்தால் சாத்தியமாகியிருக்குமா?
பகவான் கடமையைச் செய் என்றார். நீ கர்மாவை ஆற்றப் பிறந்திருக்கிறாய் என்றார். அதாவது வேலை செய்யப் பிறந்திருக்கிறாய். வேலையைச் செய்து கொண்டே இரு.. மனைவி வந்த நேரம் அல்லது கணவன் அமையும் நேரம் எல்லாம் தாமாக மாறிவிடும்..
சமீபத்தில் எனது நண்பர் டாக்டர் கிருபளானி அவர்களை சந்தித்து இதைப் பற்றி பேசும் போது சொன்னார்.  உங்களைப் போல கடவுளிடம் சரண் அடைந்துவிட்டவர்களுக்கும், அறியாமை உள்ளவர்களுக்கும், சந்தேகமில்லாதவர்களுக்கும் ஜோதிடம், ஜாதகம் போன்றவை தேவைப்படுவது இல்லை.  ஆனால், காலம் காலமாக இதை அன்றாட வாழ்க்கையின் ஓர் அம்சமாக வைத்திருக்கிற மக்கள்,  எந்த நிலையிலும் இதைத் தவிர்க்கமாட்டார்கள்.  நிறைய பரிகாரங்களைத் தேடி அலைந்து கொண்டு இருப்பார்கள். பரிகாரங்களைச் செய்த பிறகும் அவர்களுக்கு அதில் நிறைவு இருக்காது.
எதிலும் நம்பிக்கையில்லாமல் செய்கிற எந்தப் பரிகாரமும் பலன் அளிக்காது. என்னை எடுத்துக்கொள்ளுங்கள். எண் கணிதம், ரெய்கி, ஜோதிடம், வான சாஸ்திரம் போன்றவற்றில் அயல்நாடுகள் வரை புகழ்பெற்று இருக்கிறேன். பிறந்த தேதி, நேரம், பிறந்த இடம் இவற்றை வைத்தே ஒருவரின் வாழ்நாள் முழுவதைப் பற்றியும் கூறும் கலைகளை அறிந்து வைத்திருக்கிறேன். இவை தெரியாதவர்களுக்கு அவர்களின் கைரேகையை வைத்தே அனைத்தையும் கணிக்க என்னால் முடியும்.
என்னிடம் வந்தவர்கள் கடன்தொல்லை நீங்கி சுபீட்சமாக வாழ்கிறார்கள். திருமணத் தடை நீங்குகிறது.. இப்படி எதை வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் வருபவர்கள் மிகக்குறைவுதானே.. நானாவது இவ்வளவு கலைகளை வைத்துக்கொண்டு மக்கள் நலனை யோசிக்கிறேன். நீங்கள் பாபாவின் வெறும் உதியை வைத்து இத்தகைய பரிகாரங்களைச் செய்கிறீர்கள்.
எத்தகைய பிரச்சினையாக இருந்தாலும் தீர்வு உண்டு. கடை விரித்திருக்கிறோம், கொள்வார் கொள்ளட்டுமே என்றார்.
நீங்கள் சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.  பாபா மீது மட்டுமின்றி, ஜோதிடத்தின் மீதும், எண் கணிதம், ரெய்கி, பெண்டுலம், கற்கள் போன்றவற்றின் மீதும் நம்பிக்கை உண்டு என்கிறவர்கள்,  ஆர்வமுள்ளவர்கள் டாக்டர் கிருபளானியை சந்தித்துப் பேசலாம். அவரது தொலை பேசி எண்கள்:9840430653, 9840885498.
இப்படி ஆலோசனை கேட்டு வாழ்வை வளப்படுத்திக்கொள்வதை விட்டுவிட்டு, எதிலும் நம்பிக்கையில்லாமல் வாழ்க்கையை வீணடித்துக் கொள்ள வேண்டாம். சாயியை நம்பி களம் இறங்கி வாருங்கள், வாழ்க்கையை வாழுங்கள்.
                                                      - சாயி வரதராஜன்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...