Wednesday, June 5, 2013

உங்கள் காரியம் கைகூடும் என்று அறிவீர்களாக!




சத்சரித்திரம் மிக அழகாகக் கூறுகிறது்:  ஸாயி தரிசனம் விதியால் விளைக்கப்பட்ட ஆபத்துகளையும், நிவாரணமே இல்லாத மனோ வியாதிகளையும் கூட நிர்மூலமாக்கிவிடுகிறது என்று.
நமக்குத் தெரியவேண்டியது் எல்லாம் விதிப்படித்தான் நடக்கிறது என்ற உண்மை மட்டுமே..
இந்த உண்மையைத் தெரிந்து கொண்டுவிட வேண்டும் என எதற்காக வலியுறுத்தப்படுகிறது என்றால், இது தெரிந்துவிட்டால் இன்பம் வந்தாலும் துன்பம் வந்தாலும் கலங்கமாட்டோம், எதையும் இயற்கையான நிகழ்வு என எடுத்துக் கொள்வோம். ஏமாற்றத்தின் போது இடிந்துபோக மாட்டோம்.  சோதனையின்போது கலங்கமாட்டோம். தோல்வியின் போது துவளமாட்டோம்.
விதியால் விதிக்கப்பட்ட ஆபத்துக்கள் என எதைக்கூறுவோம்? எவையெல்லாம் நமக்கு இன்பத்தைத் தவிர பிறவற்றைத் தருகின்றனவோ, அவையெல்லாமே விதியால் விளைவிக்கப்பட்ட ஆபத்துகளே. இவற்றை நாம் கிரக தோஷங்கள் என்று கூறுகிறோம். ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒவ்வொரு கிரகத்தையும், அது பிறிதொரு கிரகத்தோடு சேர்வதன் காரணத்தால் வருகிறது என்றும் கூறுகிறோம்.  இதற்கு அடிப்படையாக நாம் பிறந்த நாள், நட்சத்திரம், திதி போன்றவற்றைச் சொல்லுகிறோம். இவையெல்லாம் என்ன?
இவைதான் விதி எனப்படுகிறது.
இயற்கையின் கூறுகளை மனிதன் பிரித்து வைத்து அதனோடு நேரம் காலத்தைப்பொருத்தி வைத்துப் பார்ப்பதன் விளைவு. இவை அனைத்தின் காரணமாகவும் நமக்கு ஆபத்துக்களும், சோதனைகளும் வரலாம் என்றாலும், சாயி பாபாவின் தரிசனத்தை மட்டும் பெற்றுவிட்டால் போதும்- எத்தகைய கிரகக் கோளாறாக இருந்தாலும் சரியாகிவிடும்.
மனோவியாதிகள்!
மனோவியாதிகள் என்பவை இயற்கையால் தரப்படுபவை அல்ல என்கிறார் ஹேமாட்பந்த். நாம் நமது கர்மங்கள் (செயல்பாடுகள்) காரணமாக ஏற்படுத்திக் கொள்கிற நிலை அது. மனதினால் ஏற்படும் தொல்லை. இந்தத் தொல்லையை மட்டும் சரிப்படுத்திவிட்டால்போதும்! மனநலப் பிரச்சினை முற்றிலுமாக சரியாகிவிடும் என்கிறது சத்சரித்திரம்.
எப்படி என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
இந்த மனநலப் பிரச்சினையால் ஆண்களை விடபெண்களே அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். அதிலும் மாதவிலக்குத் தொடங்கி, மாதவிலக்கு நிற்கப் போகிற நிலையில் உள்ளவர்கள்தான் அதிகமாக பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.
பூப்படைந்த பெண்ணுக்கு ஏற்படுகிற புதிய மாற்றங்கள் ஒரு அச்சத்தை, தயக்கத்தை, மிரட்சியைக் கொடுத்துவிடும்போது அவள் வீட்டுக்குள் முடங்கிப் போக நினைப்பாள். அதிகமாக யாருடனும் பேச மாட்டாள். சில வேளைகளில் பித்தேறியவளைப் போலவோ, பேய் பிடித்தவளைப்போலவோ நடந்து கொள்வாள்.
திருமணமாகி வீட்டுக்குப் போகிற மருமகள் மாமியார் குடும்பத்தைப் பார்த்து மிரளுவாள். உள்ளுக்குள் பயம் தோன்றும்.. இது மன உளைச்சலாகி ஹிஸ்டீரியா என்ற நிலையைத் தோற்றுவிக்கும். இந்த நிலையை அடைந்தவர்கள் சும்மாவாகவே தனக்கு நோய் வந்துவிட்டதைப் போன்றும், பேய் அல்லது வீட்டுக் கடவுள் பிடித்து ஆடுவதைப்போலவும் நடந்துகொள்வார்கள்.
மாதவிலக்கு நிற்கிற நிலையிலுள்ள பெண்களுக்கு மன நல பிரச்சினைகள் அதிகமாக வரும். மற்ற நிலைகளைப் போல இல்லாமல், பாதுகாப்பற்ற உணர்வை உண்டாக்கும். எல்லோரும் தன்னை ஏமாற்றுவதைப் போலவும், யாருமே நன்றியில்லாதவர்கள் என்ற நினைப்பையும் உண்டாக்கும். அச்சம், பயம், பதற்றம், சிடுசிடுப்பு, எரிச்சல் என அனைத்தும் தோன்றும். உடலில் சக்திக்குறைந்தது போன்ற உணர்வு தோன்றும். யாரோ தனக்கு சூனியம் வைத்து விட்டார்கள் என்று புலம்புவார்கள். இதெல்லாம் மாதவிலக்கு நிற்கிற சமயத்தில் தோன்றுகிற மனநிலை பாதிப்புகள்.
இதற்குக் காரணம் உடலில் இயற்கையாக சுரக்க வேண்டிய ஹார்மோன்களின் அளவு குறைந்து கூடுவதும், நின்று விடுவதுமாகத்தான் இருக்கும். இதுவும் உடல்நல பாதிப்பின் தொடர்ச்சிதான்.  இவற்றோடு மற்றவர்களின் தொல்லையும் அச்சுறுத்தலும் சேரும்போது பெண் மன உளைச்சலின் உச்சக்கட்டத்தில் இருப்பாள்.
இத்தகைய சிக்கல்களும் எப்போது தீர்வு பெறும் என்றால், சாயி பாபாவின் தரிசனத்தைப் பெற்ற மாத்திரத்தில் சரியாகும் என்கிறது சத்சரித்திரம். (அத் 34 - 27)
ஆகவே, உடல் நலப்பிரச்சினையோ, மன நலப்பிரச்சினையோ, வேறு விதமான சிக்கல்களோ தீர்வுகளைத் தேடி அங்கும் இங்கும் ஓடாதீர்கள். இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி ஓடுவானேன்! பாபாவின் பாதங்களைப் பிடித்துக்கொள்ளுங்கள்... நிச்சயம் நிவாரணம் கிடைக்கும்.
அதன் பிறகு நீங்கள் எந்தக் காரியம் செய்தாலும் அது கைகூடும் என்பதை அறிவீர்களாக.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...