Monday, June 10, 2013

முடியாது என சோர்ந்து விடாதே! முடியும் வரை உன்னுடனிருப்பேன்!




இது நமக்கே சொந்தமான துவாரகாமாயி!  இவளுடைய மடியில் நீர் அமரும்போது ஒரு குழந்தையைப் போல உம்மைப் பாதுகாக்கிறாள். பயத்திற்கு மனத்தில் இடமில்லை. இந்த மசூதி மாயி கிருபையே உருவானவள். எளியவர்களின் தாய். யார் எவ்வளவு பெரிய ஆபத்தில் மாட்டிக்கொண்டாலும் அங்கேயே அப்பொழுதே காப்பாற்றுவாள்.
இவளுடைய மடியில் ஒருமுறை அமர்ந்தவர் எல்லா சங்கடங்களில் இருந்தும் விடுபட்டு விடுகிறார். இவளுடைய நிழலில் வாழ்பவர் சுகத்தையும் சாந்தியையும் அளிக்கும் சிம்மானத்தில் உட்கார்ந்தவர் ஆவார்...
                            (சத் சரித்திரம்:  அத்-22 வசனம்: 48-50)

பாபா, உன்னை வணங்காத நாளில்லை.  போகாத கோயில் இல்லை.. பெருங்களத்தூர் பிரார்த்தனை மையத்திற்குச் சென்று சாயி வரதராஜனை சந்தித்து பிரார்த்தனை கூட செய்தேன்.. இன்னும் என் பிரச்சினை தீர்ந்தபாடில்லை. மாறாக, நாளுக்கு நாள் அதிகமாகி தற்கொலை செய்து கொள்ளலாமா என்ற முடிவுக்குக் கூட வந்து  விடுகிறேன்.. இன்றோ, நாளையோ நீங்கள் காப்பாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையில் என் முடிவை தினமும் தள்ளிப் போட்டுக்கொண்டே இருக்கிறேன்.. ஆனால் முடிவு தான் வந்தபாடில்லை..
இப்படி புலம்புகிறவர்தானே நீங்கள்?
கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.. மந்திரம், புண்ணிய தீர்த்தம், பிராமணர், தெய்வம்,  ஜோசியர், வைத்தியர், குருதேவர் ஆகியோரின் விஷயங்களில் நமக்கு எந்தளவுக்கு நம்பிக்கை இருக்கிறதோ அந்த அளவுக்கு மட்டும்தான் நமக்குக் கிடைக்கிற பலனும் இருக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இன்னும் நான் எப்படி கும்பிடுவது என்று நீங்கள் கேட்பதும், அதற்கு இதழ்தோறும் நான் பதில் சொல்வதும் வாடிக்கையான விஷயமாகிவிட்டது.
பைபிளில் இருந்து ஒரு சம்பவத்தைக் கூறுகிறேன் கேளுங்கள். யோபு என்ற கடவுளின் பக்தர் ஒருவர் இருந்தார். அவரைப் போல நீதியாக நடக்கிறவர் யாருமில்லை. அவருக்குக் கடவுள் எல்லாவிதமான ஆசீர்வாதங்களையும் கொடுத்து பெரிய அளவில் வைத்திருந்தார். இதனால் யோபு மிகப்பெரிய பேரரசனைப் போல வாழ்ந்து வந்தார்.
ஒருமுறை, சோதனை செய்கிற ஆவி, கடவுள் சபைக்குச் சென்றது. உலகமெல்லாம் சென்று வந்தாயோ என்று அதனிடம் கடவுள் கேட்டார்.
போனேன்! என்றது அது. என் பக்தன் யோபுவிடம் சென்றாயோ? என்று கேட்டார் கடவுள்.
அவனை மட்டும் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அந்தளவுக்கு நீங்கள் அவனுக்குப்பாதுகாப்பாக இருக்கிறீர்கள். உங்கள் பாதுகாப்பை மட்டும் சற்று விலக்கிக்கொண்டால் போதும், அவனை ஒரு வழி செய்துவிடுவேன் என்றது ஆவி.
நீ எப்படி சோதித்தாலும் அவன் தனது நீதியான நிலையிலிருந்து மாறமாட்டான். உயிரை எடுக்கும் அதிகாரம் மட்டும் உனக்குத் தரப்படவில்லை.. மற்ற எந்த சோதனையை வேண்டுமானாலும் செய்து கொள்.. என்று கடவுள் அனுமதி தந்தார்.
ஆவி அதாவது சைத்தான் யோபுவை சோதிக்க வந்தது. ஒரே நாளில் யோபுவின் ஏழு பிள்ளைகள் இறந்தார்கள். அவனது ஆடு மாடுகள் இறந்தன. சொத்துக்கள் அழிந்தன.. அவனுக்குத் தீராத வியாதி வந்தது. நமைச்சலைத் தாங்கமுடியாமல் சொறிந்து சொறிந்து உடலெல்லாம் புண்ணாக ஆனது.  நமைச்சலையும் எரிச்சலையும் போக்குவதற்கு ஆடைகளை களைந்துவிட்டு, சாம்பலில் வந்து உட்கார்ந்து, சாம்பலை உடல் முழுவதும் பூசிக் கொண்டு புலம்பினான் யோபு.
அப்போது அவனது நிலையைக் கேள்விப்பட்டு, அவனை சந்தித்து ஆறுதல் சொல்வதற்காக மூன்று நண்பர்கள் வந்தார்கள். மூன்று பேரும் நிறைய நீதி நியாயத்தை எடுத்துச் சொன்னார்கள். அதில் ஒருவன் சொன்னான், ‘உனக்கு கடவுள் என்ன செய்து விட்டார்? அவரை தூஷித்து உன் உயிரை விடுஎன்றுகூட எரிச்சலோடு கூறினான்.
நேற்று வரை நன்றாக வாழ்ந்தவனும் கிரக மாற்றத்தால் ஒரே நாளில் தெருவுக்கு வந்து விடுவது இயல்பான விஷயம். இதுதான் யோபுவுக்கு நடந்தது.
அப்போது யோபு சொன்னான். என் விதி, நான் செய்த பாவம் எனக்கும் கடவுளுக்கும் இடையே பிளவினை ஏற்படு;த்தி, நான் கூப்பிடுவதைக் கேட்க முடியாதபடி அவரைத் தடுத்துவிட்டது. நான் செய்த புண்ணிய பாவத்திற்கு ஏற்ப தண்டனையை அனுபவிக்கிறேன். எதற்காக கடவுளை தூஷிக்க வேண்டும்? நான் என் கஷ்டத்தை அனுபவித்துக் கொள்கிறேன்.. நீங்கள் என்னை விட்டு தூரம் செல்லுங்கள்... என்று கூறி அனுப்பினான்.
சைத்தான் யோபுவின் நீதியின் முன்பு தோல்வி அடைந்து திரும்பினான். கடவுளோ, யோபுவின் இந்த நீதி நேர்மையை மெச்சி, அவனை முன்பு விட அதிகமான செல்வந்தனாக்கினார். அவனுக்கு அதே எண்ணிக்கையில் பிள்ளைகள் பிறந்தார்கள், செல்வம் வந்தது, மாடு ஆடுகள் தோப்புத் துரவுகள் எல்லாம் உண்டாயின..
                                      இதன் தொடர்ச்சி நாளை........

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...