பாபாவிடம் வேண்டிக்கொள்ளுகிறோம், நமக்குப்பரிகாரம் கிடைக்க அவர் அருள் செய்கிறார். எவ்வளவு ஆர்வமாக
வேண்டிக்கொள்ளுகிறோமோ, அந்தளவுக்குப்பலன்
கிடைக்கிறது. பலன் கிடைத்தபிறகு, நாம்
நமது பகவானை மறந்துவிடுகிறோம். அவரது நேர்த்திக் கடனை தள்ளி வைத்துவிடுகிறோம்.
இதை நன்றி மறந்த நிலை என்பதா?
நேரமில்லை என்பதா?வேறு ஏதேனும் சொல்லிக்கொள்ளலாமா? இந்த மாதிரி ஒரு நிலை ஒரு பக்தனுக்கு ஏற்பட்டது.
வேண்டுதல் வைத்தான், நிறைவேறிவிட்டது. நாளைக்கு நாளைக்கு எனத்
தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தான். ஏன்? நேரமில்லை என்றா? நன்றி
மறந்தானா? இல்லை.. அவனுக்கு
பகவானைத் தரிசிக்கச் செல்லும அளவுக்குப் பண வசதியில்லை. இந்தப்
பணத்தைச்சேமித்துக்கொண்டு பகவானைத் தரிசிக்கச் செல்வேன் என அவன் முடிவு செய்து,
பணத்தைச் சேமிக்க ஆரம்பித்தான்.
யாத்திரை செல்லும் பக்தர்கள்
ஆபத்து மிக்க உச்சி மலைக்கோட்டையைக் கூட கடந்துவிடலாம். ஆனால் குடும்பத்தில்
ஈடுபட்டிருப்பவன் தனது தலை வாயிலை கடந்து போவது மிகவும் கடினம் என்கிறது நமது
சத்சரித்திரம்.
நிறைய பக்தர்கள் ஒரு விக்ஷயத்தை
தவறாகப் புரிந்துகொண்டிருப்பார்கள். அதாவது ‘சோல்கர் மாதிரி’ கோரிக்கை நிறைவேறும் வரை காபியில் சர்க்கரை சேர்க்கமாட்டேன்,
விரும்பிய பொருளைத் தொட மாட்டேன் என்று சொல்வார்கள்.பாபாவிடம்
வேண்டிக்கொள்ளும்போது சோல்கர் அப்படி ஒரு வேண்டுதலை வைக்கவே இல்லை.
சத்சரித்திரத்தை நன்றாக கூர்ந்து கவனித்துப் படியுங்கள்.
‘‘உம்முடைய கிருபையால் பரீட்சையில்
நான் வெற்றி பெற்றுவிட்டுவிட்டால், உமது
பாதங்களை தரிசனம் செய்வதற்கு சீரடிக்கு வந்து உம்முடைய நாமத்தை சொல்லிக் கற்கண்டு
விநியோகம் செய்கிறேன். இது என்னடைய நிர்த்தாரணமான தீர்மானம்’’ என்றுதான் வேண்டிக்கொண்டார்.
‘‘நீங்கள் எங்கிருந்தாலும் சரி, என் முன்னர் மன்றாடி, கெஞ்சி,
பக்தியுடனும், விசுவாசத்துடனும் கைநீட்டினால்,
நான் உங்களுடைய பக்திக்கும் விசுவாசத்திற்கும்
ஏற்றவாறு இரவு பகலாக உங்கள் பின்னால் திடமாக நிற்கிறேன்..’’
பிறகு, தேநீரில் சர்க்கரை கலக்காமல் நேர்ந்து கொண்டது எப்போது? தனது வேண்டுதல் நிறைவேறிவிட்டது. ஆனால் நேர்த்திக்கடனை
நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்தக் குற்றத்திற்குப் பரிகாரமாகத்தான் அவர்
சர்க்கரையை சேர்த்துக்கொள்வதில்லை என்று முடிவு செய்தார்.
நீங்கள் துவக்கத்திலேயே
சர்க்கரை சேர்க்காமல் விலக்கி வைத்து, அல்லது விரும்பி உணவைத்தவிர்த்து பாபாவிடம் வேண்டிக்கொள்கிறீர்கள். இது நல்லதுதான்.
அதே சமயம், வேண்டுதல்
நிறைவேறிவிட்டால், அவருக்குச்
செய்த நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதும் முக்கியம்.
நேர்த்திக்கடன்
எடுத்துக்கொண்டபோது இருந்த உம்முடைய குழம்பிய மனம், நிறைவேற்றுவதில் ஏற்பட்ட மிகுந்த தாமதத்தால் மனம்
நொந்து பரிகாரமாக நீர் ஏற்றுக்கொண்ட விரதம், அனைத்தையும் நீர் ரகசியமாக வைத்திருப்பினும் நான்
அறிவேன்! என்று பாபா சோல்கரிடம் மட்டும் கூறவில்லை. உண்மையாகவே, தாமதத்தால் தவிப்பவராக நீங்கள் இருந்தால் உங்களிடமும்
கூறுகிறார். பாபா சோல்கரிடம் இன்னொரு
விக்ஷயத்தையும் கூறினார்.
‘‘நீங்கள் எங்கிருந்தாலும் சரி,
என் முன்னர் மன்றாடி, கெஞ்சி, பக்தியுடனும், விசுவாசத்துடனும் கை நீட்டினால், நான் உங்களுடைய பக்திக்கும் விசுவாசத்திற்கும் ஏற்றவாறு இரவு பகலாக உங்கள்
பின்னால் திடமாக நிற்கிறேன்..’’
வசனத்தை கூர்ந்து கவனித்தால்,
பாபா எவ்வளவு உள்ளர்த்தத்தோடு
கூறியிருக்கிறார் என்பது புரியும். நாம் அவர் முன்னர், அதாவது அவரை மனதில் நிறுத்தி அவரிடம் நமது வேண்டுதல்
பற்றி மன்றாடி, கெஞ்சி பக்தியோடு
கேட்டுக் கொள்ள வேண்டும்.
நமது வேண்டுதலை அவர் கேட்பார்
என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கையும், பாபா மீது அசைக்க முடியாத நம்பிக்கையும் வைக்க வேண்டும்.
ஒரு அடியார் சொன்னார்மூ ‘‘ நீங்கள்
பிரார்த்தனை செய்யும்போது இறைவன் உங்களுக்காக இறங்கி வருவதில்லை. நீங்கள்
பிரார்த்தனையால் அவனை நெருங்கி, அவனிடம்
ஏறிச் செல்கிறீர்கள்!’ என்று.
பாபா மிக அழகாகவும், நேர்த்தியாகவும் ‘‘நான் உங்களுடைய பக்திக்கும்
விசுவாசத்திற்கும் ஏற்றவாறு இரவு பகலாக உங்கள் பின்னால் திடமாக நிற்கிறேன்..’’ என்று கூறியிருக்கிறார்.
கடவுள் இறங்கிவரமாட்டார்,
நாம் ஏறிச் செல்ல வேண்டும் என்று
சொன்னேன் அல்லவா? கடவுளை இறங்கி
வரவும், இரங்கி வரவும் செய்யவேண்டும்? அது எப்படி சாத்தியமாகும்? பக்தியால்
சாத்தியமாகும். அவர் மீது வைக்கிற நம்பிக்கையால் சாத்தியமாகும்.
பண்டரிபுரத்துப் புண்டலீகர்
பற்றி படித்து இருப்பீர்கள். பகவான் அவனைப் பார்க்க வைகுந்தத்தில் இருந்து
வந்தார். வைராக்கியத்தோடு தவம் செய்கிற பக்தர்களைத் தேடி பகவான் வருகிறார்.
பக்தி என்பது பயத்தால்
வரக்கூடாது. அவர் மீது வைக்கிற அன்பால் வரவேண்டும். கடவுள் மீது வைக்கிற ஆழ்ந்த
அன்புதான் பக்தி. அந்த பக்தியால் அவர் மீது வைக்கிற அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறதே
அது தான் விசுவாசம்.
உங்கள் வேண்டுதல் நிறைவேற
வேண்டும் என்றால், மன்றாடி,
கெஞ்சி, அன்பால் விளைந்த பக்தியோடு அவரை நம்பிக் கேட்டுக்கொண்டே
இருந்தால் அது அவரை கட்டிப் போட்டு நமக்காக இரவு பகலாக நம் பின்னால்
நிற்கவைக்கும்.
நான் ஒருநாளும் விரதம் இருந்தது
கிடையாது, நாட்களை அனுசரித்தது
கிடையாது, ராகு காலம், எம கண்டம் பார்த்தது கிடையாது. நட்சத்திரங்களை
பார்த்தது கிடையாது, யார் இதைத்
தள்ள வேண்டும், தவிர்க்க வேண்டும்
என்றாலும் அதையும் செய்தது கிடையாது.
ஏன் எனில், இவையெல்லாம் எனக்கு முக்கியம் கிடையாது,
இறைவர்க்கும் அவசியமில்லை. அவர் என்னிடம்
எதிர்பார்ப்பது அவர் மீது ஆழ்ந்த அன்பு, நம்பிக்கை. இதை நான் சரியாகச் செய்கிறேன். அவர் எனக்காக, என்னோடு என் பின்னால் திடமாக நிற்கிறார் என்பதை
உணர்கிறேன்.
எப்படி இவ்வளவு உறுதியாக
என்னால் சொல்ல முடிகிறது என்றால், நான்
கடந்து வந்த பாதைகள் அப்படிப்பட்டவை. காட்டாறு வெள்ளம்போன்றும், கரடு முரடான முட்கள் நிறைந்த பாதைகள் போன்றும்,
முட்டுச் சந்து போன்றும் விரக்தியை உண்டாக்கும்
வழிகளில் நடந்துவந்தேன். அவர் என்னை எப்படி வழி நடத்தி வந்திருக்கிறார் என்பதை அனுதினமும்
அமர்ந்து அசைபோடுவேன்.
நான் இப்போது ஏதேனும் மீறுதல்
செய்யும் போது ‘இறைவா! இன்றைய நிலையை நினைத்து என்னை வெறுக்காதே! அன்றைய நிலையை
நினைத்து என் மீது அனுதாபம் கொள்!’ நாம் தனித்து நடந்த நாட்களில் நமக்குள் நடந்த
பரிவர்த்தனைகளை எண்ணி என் மீது கருணை காட்டு.. கிடைத்தற்கு அரிய இந்த மனிதப்
பிறவியை மதிப்புள்ளதாக மாற்று என வேண்டிக் கொள்வேன்.
சில நேரம் சீரடிக்கு ஓடுவேன்..
சில நேரம் சீரடியை சுமந்துகொண்டு வேறு எங்கேனும் திரிவேன். கண்டதைத் தின்பேன்,
கிடைத்ததைப் பருகுவேன்.. அதற்கு முன்பு,
‘‘பாபா இது உனக்கு, இது எனக்கு!’’
என்பேன்.
ஏன் என்றால், அவர் சத்சரித்திரத்தில் சொல்லியிருக்கிறார், ‘நீங்கள் இந்த உலகத்தில் எங்கு வேண்டுமானாலும்
செல்லலாம். அங்கு நான் உங்களுடனே செல்கிறேன். உங்கள் இதயமே எனது வாசஸ்தலம். நான் உங்களுக்குள்ளே
உறைகிறேன்.’
என்னோடு இருக்கிற சாயிக்கு,
நான் உண்பதை தருகிறேன், குடிப்பதைத் தருகிறேன் என்பது இப்படித்தான். சில
சமயம், பலரை பாபா என அழைப்பேன். வேலூர்
பாபா, நாகராஜ பாபா, பாபா மாஸ்டர்.. இப்படி! இதனால் பலரது கண்டனத்திற்கும்
ஆளாகியுள்ளேன். அவர்கள் என்ன பாபாவா? என அவர்களை பிடிக்காதவர்கள்
கேட்பார்கள். அல்லது பாபா மீது பக்தியுள்ளவர்கள் கேட்பார்கள்.
நான் இது பற்றிக் கவலைப்படுவது
கிடையாது. ஏனெனில், வீட்டிலோ,
வெளியிலோ, அல்லது வழியிலோ, நீங்கள் எவரை எதிர்கொண்டாலும் அவர்கள் அனைவரும் எனது
ஆவிர்ப்பாவங்கள் என்கிற வெளிப்பாடுகளே என பாபா கூறியிருக்கிறார்.
ஆகவே, அவர்களை அப்படி அழைப்பதில் தப்பில்லை என நினைப்பேன். இப்படிப்பட்ட
நிலைக்கு அவர் என்னை ஏற்றிக் கொண்டு வந்துவிட்டதால் எனக்கென வேண்டுதல் களை வைப்பது
கிடையாது. எனக்கு எது தேவையோ, அவருக்கு
எது சம்மதமோ அதை அவர் எனக்குத் தருவார். தராமல் போனாலும் கவலையில்லை.. இதுவே
அதிகம்!’ என நினைப்பேன்.
ஆனால், உங்களுக்கு அப்படி சொல்லித் தர மாட்டேன். எனது நிலை
வேறு, உங்கள் நிலை வேறு. நீங்கள்
நிறைய சாதிக்க வேண்டும். சாதனை செய்து அவரை அறிந்துகொள்ள வேண்டும்.
அதற்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
தீவிரமாக வேண்டிக்கொள்ளுங்கள். உங்கள் திடமான நம்பிக்கையும், பக்தியும் உங்களது வேண்டுதலை நிறைவேற்றட்டும். நேர்த்தி
செய்யாதீர்கள். செய்தால் அதை தாமதமின்றி நிறைவேற்றுங்கள்.