என் செல்லப்பிள்ளையே!
எதற்காக இந்தப் புலம்பல்? ஏன் இந்தத் தள்ளாட்டமும், சோர்வும்? உன் இறுதி நாள் வரையில் உனக்குத் துணை செய்வேன் என்று நான் ஒரு தரம் சொல்லிவிட்டு
மனம் மாறிப் போவதற்கு மனிதன் கிடையாது. உன்னைப் படைத்த பரப்பிரம்மம் என்று பலமுறை
எடுத்துச் சொல்லியும் எதற்காக இந்த அவநம்பிக்கை?
வாழ்க்கை என்பது மேடு பள்ளங்கள்
நிறைந்தது என்பது நீ அறியாததா? வாழ்க்கையில்
நீ நினைத்தது எல்லாம் நடந்துவிட்டால், பிறகு நான் எதற்கு? வாழ்க்கை
என்ற ஒன்று எதற்கு? அனைத்தும் அனுபவம்
தருவதற்காக உனக்குத் தரப்படுபவை என்று நான் விளக்கிக் கூறியும் எதற்காக இப்படி அறியாமையால்
அவதிப்படுகிறாய்?
உனக்குத் துயரத்தை தருவது
இப்போதைய உனது நிலையல்ல. உனது தன்னம்பிக்கைக்குறைந்த தன்மை, அதாவது அவநம்பிக்கை என்பதைத்
தெரிந்துகொள். உயிரே போனாலும் தானாகப் போகட்டும், அது உன் உடலில் இருக்கும் வரை தொடர்ந்து போராடு.
கோழையாக அழுது புலம்பாதே. தலைவலியாக இருந்தால் என்ன? தலை போகும் காரியமாக இருந்தால் என்ன? இந்த வாழ்க்கையில் இந்த ஒரு தரம் மட்டுமே நீ
கடினமான பாதையைக்கடந்து போகப் போகிறாய்.. இதோ நடுப்பகுதியைத் தாண்டிவிட்டாய்.
இன்னும் கொஞ்ச நேரம்.. கொஞ்ச தூரம்.. சுமையை இறக்கிவைக்கும் காலத்தை
எட்டிப்பிடிக்க இன்னும் சற்று அவகாசம்தான் இருக்கிறது..
அதற்குள் அவசரப்பட்டுவிடாதே சோதனையை
சகிக்கிறவன்தான் பாக்கியவான். ஏனெனில், சோதனைக் காலத்தில் அவனோடு நான் நீக்கமற நிறைந்திருக்கிறேன். பிரச்சினைகளை எதிர்கொண்டு
போராடத் தயாராகிறவன் பாக்கியவான், அவனோடு
கைகோர்த்து யுத்த களத்தில் அவன் சார்பாக நான் நிற்கிறேன்.. இழிவு
படுத்தப்படும்போது சகிக்கிற நீ பாக்கியசாலி.. உன் இழிவுகளை நான் புண்ணியங்களாக
மாற்றிக் கொடுத்துக்கொண்டு உன் துயரத்தில் பங்கெடுக்கிறேன்..
சொல்வதெல்லாம் என்னவோ நன்றாகத்தான்
இருக்கிறது, ஆனால் ஒன்றையும்
செய்யவில்லையே என்று நீ கேட்பாய்.. அந்தளவுக்கு உன்னை புத்திசாலியாக நினைத்துக்
கொண்டிருப்பாய்.. நான் செய்வது உனக்குத் தெரியும்போது, நீ என்னை முகம் முகமாகப் பார்க்க முடியாது, தலை கவிழ்ந்து கொண்டிருப்பாய்.
நீ விரும்புகிற வழிகளில் அல்ல,
நான் விரும்புகிற வழிகளில் உன்னை
நடத்திச் சென்று ஜெயிக்க வைப்பதுதான் எனது நோக்கம். அந்த நோக்கத்தில் நான்
உறுதியாக இருக்கிறேன், அவநம்பிக்கை
கொண்டு அதை நீதான் தளர்த்துகிறாய்.
நான் வளர்க்கிற சிறுத்தைக்
குட்டியாக நீ மாற வேண்டும். பசி பட்டினி பொறுத்தாலும் கம்பீரத்தை கைவிடக்கூடாது..
வாய்ப்பு கிடைக்கும்போது வெற்றியோ தோல்வியோ முயற்சித்துப் பார்த்துவிட வேண்டும்.
ஆழ்கடலாக இருந்தால் என்ன? ஆகாயவெளியாக
இருந்தால் என்ன? நான் உன்னோடு இருக்கும்
போது அவை அனைத்தும் உனக்கு அற்பமானவைதான் என்பதை மறந்துவிடாதே.
நீ ஞானியாக இருந்தால் நான்
உனக்கு வேறு மாதிரி உபதேசித்திருப்பேன். “இந்த தேகமானது கர்மாதீனமாக ஏற்பட்டது.
தன்னை உண்டு பண்ணிய கர்ம வேகம் எதுவரையில் இருக்குமோ, அந்தக் காலம்வரை, பிராணனுடன் இந்த தேகம் இருந்துகொண்டிருக்கும். அது கனவு
போன்றது. ஆத்ம சாட்சாத்காரம் பெற்ற ஞானியும், யோகத்தில் முன்னேறியவரும் நிலையற்ற இந்த தேகத்தை நினைத்துக்கூடப்
பார்க்கமாட்டார்கள். நீயும் அப்படியே இரு”“ என
போதித்திருப்பேன்.
ஆனால், நீயோ சம்சாரத்தில் இருக்கிறாய்.. உனக்குத் தேவையானது
இப்போது, பிரச்சினையில் இருந்து
விடுதலை.. மிகப் பெரிய அளவில் எரியும் அக்னியானது எப்படி விறகுக் கட்டைகளை எரித்து
சாம்பலாக்குகிறதோ, அப்படி,
என் மீது நீ கொண்ட நம்பிக்கையும்,
பக்தியும் பிரச்சினைகள் என்கிற கட்டைகளை,
பாவக் குவியல்களை
எரித்துச்சாம்பலாக்கிவிடும். யோகம், சாங்க்யம், தர்மத்தை அனுசரிப்பதால்
வரும் பலன்கள், வேதத்தை பாராயணம்
செய்வதால் கிடைக்கும் பலன், தவம், தியாகம் போன்றவை தரும் எல்லா
நன்மைகளைக்காட்டிலும் என் மீது பக்தி செய்வதால் உனக்கு கிடைக்கும் பலனின் அளவு
அதிகம்.
நீ பலனைக் கருதாமல் பக்தி செலுத்து. நான் உன் பலனை வைக்காமல்
எடுத்துத் தருவேன். உரியவரின் கூலியை கொடுக்காமல் வைத்துக்கொள்ள மாட்டேன் என்பதற்கு, நானே உதாரணமாக வாழ்ந்ததை நினைவு படுத்துகிறேன். எனக்கு ஒரு பக்தன் ஏணி எடுத்துப்
போட்டான், நான் அவனுக்கு இரண்டு ரூபாய்
கொடுத்தேன். எதற்கு இப்படி தருகிறீர்கள் என்று என் பக்தர்கள் கேட்டபோது, உழைத்தவனின் கூலியை வைத்துக் கொள்ளக்கூடாது
என்றேன். இந்த உதாரணம் உனக்கு நினைவு இருக்கும் என நினைக்கிறேன்.
இதை உணராமல், என் மீது வைக்கிற பக்தியில் ஏற்படுகிற சுனக்கம்
காரணமாகத்தான் தடுமாற்றங்கள் ஏற்படுகின்றன. உன்னை புடம் போடுகிறேன் என்று சொல்லிப்
பார்த்தேன்.. அழகு படுத்த இப்போது உன் அஸ்திவாரத்தை மாற்றிக் கொண்டிருக்கிறேன்
என்று கூறினேன். நீ எதையும் லட்சியம் செய்யாமல், புலம்பிக் கொண்டு இருக்கிறாய்.
எப்போதும் என் மீது பக்தி
கொண்டுள்ளவன் மாறாத தைரியம் உள்ளவனாக இருப்பான். அப்போது வியாதிகளுக்கும், கவலைகளுக்கும் வலிகளுக்கும் இன்னல்களுக்கும் எங்கு
இடம் இல்லையோ, யாரும் பசியாலும்
தாகத்தாலும் முதுமை பற்றிய பயத்தாலும் எங்கு வருத்தப்படுவது இல்லையோ, எவ்விடத்தில் மரண பயம் இல்லையோ, எவ்விடத்தில்
விதிக்கப்பட்டது, விதிக்கப்படாதது
என்னும் பேதத்திற்கு இடம் இல்லையோ,
எவ்விடத்தில் ஜீவன்கள் பயமின்றி உலவுகின்றனவோ அவ்விடம்தான் சொர்க்கம் என்பதை உணர்வீராக.
அவனுள் அறிவு ஆட்சி செய்யும்,
அதனால் அவன் எந்தப் பிரச்சினை வந்தாலும்
புலம்பமாட்டான். என் மீது பக்தி செய்வதாக சொல்லிக்கொண்டு, நடக்குமோ, நடக்காதோ, கிடைக்குமோ,
கிடைக்காதோ, ஆகுமோ ஆகாதோ என்று நினைப்பவன் என் பக்தனல்ல.
அறிவுடன் என்னை அசகுகிறவனை நான்
கடாட்சிக்கிறேன். ஏனெனில், அறிவிழந்தவனது
செயல்பாடுகளில் திட்டமிடும் சக்தி அழிந்து விடுவதால், பாதியிலேயே தன் பக்தியை அவன் முறித்துக்கொண்டு, சந்தேகப்பட ஆரம்பித்து விடுகிறான்.
கசப்பு மருந்தின் மீது இனிப்பைத்
தடவி உள்ளுக்குக்கொடுப்பதைப் போல, உன்
பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு தருவதற்கு இப்போது இந்த இக்கட்டான நிலை என்கிற
மருந்தை தந்திருக்கிறேன். அதன் மீது என் பக்தி என்ற இனிப்பைத் தடவி உள்கொள்ள
உனக்குக் கற்றுத்தருகிறேன். என் பேச்சைக்கேட்டு, அப்பா உன் விருப்பம் போல என்ன வேண்டுமானாலும் செய்து
கொள்ளுங்கள்..
என்னைக் கைவிட்டுவிடாதே என்று
சரணாகதி செய்து விட்டாயானால், உனக்கு
மிக விரைவில் மகிழ்ச்சியான நிலையைத் தந்து விடுகிறேன். நீ உண்மையிலேயே உனது
பிரச்சினைகளில் இருந்து மீள வேண்டும் என்றால், அந்தப்பிரச்சினைக்கான விஷயத்தை முதலில் உன் மனதில் இருந்து
எடுத்துப் போட்டுவிடு.
பிரச்சினை நேரத்தில் அதை
எதிர்கொண்டுவிட்டு, மற்ற நேரத்தில்,
என்னை இடைவிடாமல் தியானம் செய்..
பிரச்சினையை மறந்துவிடு..எல்லாம் என் முன் ஜென்ம வினை, என் தலையெழுத்து என நினைத்துக்கொள்.. அப்போது இந்தப்
பிரச்சினையை சுலபமாக எடுத்துக்கொள்வாய்.. அது உன்னை ஒன்றும் செய்யாமல்
படுத்துவிடும். மாறாக, அதைப்பார்த்து
பயந்தால் உன்னைப் படுத்திவிடும்.
நீ எப்படிப்பட்ட பிரச்சினையில்
இருந்தாலும் உன்னை நான் காப்பாற்றிவிடுகிறேன், உன்னை நிர்க்கதியாக ஒருபோதும் விடமாட்டேன். சில விஷயங்களை
எதிர்காலத்தில் நீ உணர்ந்து கொள்வதற்காகவே இப்போது தீவிரமாக பிரச்சினையை
தருகிறேன்.
எதிர்காலத்தில், நீ சுகமாக வாழும்போது, இதே போன்ற பிரச்சினையை பிறருக்கு ஏற்படுத்தக்கூடாது.
பிரச்சினையோடு இருப்பவருக்கு உன்னால் முடிந்தவரை உதவி செய்யவேண்டும். பாதிக்கப்பட்டவருக்கு
ஆறுதல் செய்து அவர்களை அரவணைக்க வேண்டும்.
உதாரணமாக, நீ இப்போது பணத் தேவைக்காக அலையாய் அலைந்து பிரச்சினையை
சந்திக்கிறாய் என வைத்துக்கொள். சம்பாதித்து நிறைய செல்வம் சேர்க்கும்போது வறியவனை
மனதில் வைத்து, உனக்கு உள்ளதில்
சிறிது கொடு. அது தர்மத்தை வளர்ப்பதோடு, உன்னையும் காப்பாற்றும். மாறாக, சம்பாதிப்பது, சம்பாதிப்பதை
வளர்ப்பது, அதை கட்டிக் காப்பது
என்பதில் மட்டுமே கவனத்தைச் செலுத்தினால் முயற்சி, பயம், கவலை, மயக்கம் போன்றவை
மனத்தை ஆக்கிரமித்துக் கொள்ளும். அமைதி யிருக்காது.
நிறைய செல்வத்தை நீ சேர்க்க
முயற்சிக்கும் போது, பொய் பேசுவது,
வெளி வேடம் தரித்தல், (ஏமாற்றுதல்), திருடுதல், பிறரை இம்சித்தல், அதிக ஆசை
கொள்ளுதல், அடிக்கடி கோபப்படுதல் போன்ற
அனர்த்தங்களை அடைவாய். செல்வம் வந்த பிறகு, கர்வம், அகங்காரம்,
பேதம், விரோதம்,
நம்பகமின்மை, போட்டி, Nதாட்டம், குடிப்பழக்கம், பெண்ணாசை போன்றவை தோன்றும்.
உன் நெருங்கிய உறவுகள் உனக்குப்
பகையாக மாறிவிடுவார்கள். உன்னைக் கொல்லவும் துணிவார்கள். ஆகவே, பணம் சேர்க்க ஆரம்பிக்கும் போதே தான தர்மத்தைச்
செய்ய வேண்டும். நீ பணம் சேர்த்தால் அதில் யார் யாருக்கு பங்கு உண்டு என்பதைத்
தெரிந்துகொள்.. தேவர்கள், பித்ருக்கள்,
உற்றார், உறவினர், பிராணிகள் போன்றவர்களுக்கு
அதில் பங்கு உண்டு.
அவரவருக்கு உரிய பங்கைக்
கொடுத்து, அவர்கள் அனைவரையும்
திருப்தியாக வைத்துக்கொள். அப்படி செய்யாவிட்டால், நீ கஷ்டப்பட்டு சேர்த்த பணம் அனைத்தும் உன் கண் எதிரேயே
குறைந்துவிடும். வரி, தண்டம் என்ற
பெயரில் அரசாங்கம் உன் செல்வத்தை எடுத்துக் கொள்ளும். உறவினர்கள் ஏமாற்றிப் பிடுங்கிக்
கொள்வார்கள். திருடர்கள் களவாடுவார்கள். தெய்வ கோபத்தால் நோயும், இயற்கை சீற்றமும் ஏற்பட்டு விரையமாகும். பிறருக்குக்
கொடுத்த பொருளும், பதுக்கிய பொருளும்
தெய்வ கோபத்தால் உனக்குத் திரும்பக்கிடைக்காமல் போய்விடும். சிலர் உன் செல்வத்தை வலிய
அபகரிப்பார்கள்.
இத்தகைய நிலையில் எல்லாம்
இருந்தும் இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுவாய். ஐயோ, என்னுடைய தவறினால் அனைத்தையும் இழந்து விட்டேனே என்று
அவதிப்படுவாய். செல்வத்தைச் சேகரிக்கும் முயற்சியில் வீணாக இறங்கிக் காலத்தை கழித்துவிட்டேனே
என்று கவலைப் படுவாய்..
மாறாத துக்கம் உன் மனத்தை சதா
நேரமும் அரித்து உன்னை நோயாளியாக்கிவிடும். அப்படியெல்லாம் நடக்கக்கூடாது
என்பதற்காக, இப்போது உன்னை பணக் கஷ்டத்தில்
தள்ளாட வைக்கிறேன். எப்போதோ நடக்கவேண்டியதற்கு இப்போது எதற்கு கஷ்டப்படுத்துகிறாய்
என்று கேட்கிறாயா?
நல்லது மகனே! எப்போதோ மாம்பழம்
சாப்பிட வேண்டும் என்பதற்காக இப்போதே மாங்கன்று நடுவது இல்லையா? அப்படித்தான் இதுவும். பணக்கஷ்டத்திற்கு
மட்டுமல்ல, உனக்குத் தரப்படுகிற
அனைத்துப் பிரச்சினைக்கும் காரணம்,
இதைப் போன்ற பிரச்சினையுள்ளவர்களுக்கு நீ எப்போதும் உதவி செய்கிற சிந்தனை உள்ளவனாக
இருக்க வேண்டும் என்பதுதான்.
இந்த சிந்தனை எப்போது வரும் என்றால்,
என் மீது தீவிர பக்தி செலுத்தும்போது
வரும். இந்த பக்தி செலுத்த, உன்னை
தயார் படுத்த வேண்டும் என்பதற்காகவே, சிறிய அளவில் உனக்குப்பிரச்சினையைக் கொடுத்துப் பார்த்தேன். அதனால் நீ
கலக்கப்படாதே. விரைவில் தீர்வு தந்துவிடுவேன். குழந்தையை விளையாட்டுக்குத்
தூக்கிப் போடும் தந்தை,அது
தரையில் விழ விடுவானா? அப்படித்தான்
நானும்.. உன்னை விளையாட்டுக்குத் தூக்கிப்போட்டிருக்கிறேன்.. இதோ பிடித்துக்
கொள்கிறேன்...
என்னைத் தஞ்சமடைந்த உன்னை
எப்போதும் நிர்க்கதியாக இருக்கவிடமாட்டேன் என்பதையும், ஒருபோதும் கைவிட மாட்டேன் என்பதையும் உறுதியாக நம்பு.
உன் நம்பிக்கை வீண் போகாது. இன்னும் கொஞ்ச காலத்தில் உன் பிரச்சினைகள், நோய், கடன், கசப்பான உறவுகள்
அனைத்தும் மாறி அனைத்திலும் சுகமாக வாழ ஆரம்பிப்பாய்.
மற்றவர்கள் உன்னை உதாரணமாக
வைத்து என்னை நம்பிக்கையோடு வணங்குவார்கள்.
அன்புடன்
அப்பா சாயி பாபா
No comments:
Post a Comment