Monday, February 10, 2014

சுயநலத்தை விடு! சுகப்படு!


பல சாயி பக்தர்களின் புலம்பல் என்ன தெரியுமா? பாபாவை முழு மனதோடுதான் கும்பிடுகிறேன்.  வழிபட ஆரம்பித்த பிறகு வேறு தெய்வங்களைக் கூட நினைப்பதில்லை.  அப்படியிருந்தபோதிலும் ஏன் பாபா என் கோரிக்கைகளை நினைத்துப் பார்ப்பதில்லை. எதற்காக என்னை இன்னும் சோதிக்கிறார்?  என்பதே.

கடவுள் யாரையும் சோதிப்பது கிடையாது.  ஒவ்வொருவரும் தனது ஆசைகளால் இழுக்கப்பட்டு அவஸ்தைப் படுவதே உண்மை. இந்த ஆசை என்பது பிள்ளையின் படிப்பு, வேலை, திருமணம், நமக்கு ஒரு வீடு, மகளின் வாழ்க்கை என எதுவாகவும் இருக்கலாம். அது நமது சொந்தப்பிரச்சினையாக இருக்கும்போது அதை நிவர்த்தி செய்துகொள்ள அலையும்போது பிரச்சினைகளில் சிக்குகிறோம் என்பதே உண்மை. இதற்கும் கடவுளுக்கும் தொடர்பு இல்லை.

பாபாவிடம் வைத்த கோரிக்கை நிறைவேறாதது ஏன்? என்று கேட்கிறவர்களும் இருக்கிறார்கள். பாபா சத்சரித்திரத்தில் கூறியுள்ள விஷயத்தை சற்று நினைவுபடுத்திப் பாருங்கள்:

நான் இல்லாமல் போய்விடுவேன் என்று ஒரு காலும் கவலைப்படாதீர்கள். நீங்கள் அக்கறை கொண்ட விஷயங்களைப் பற்றி என் எலும்புகள் பேசுவதைக் கேட்பீர்கள்.

நாம் எதில் அக்கறை கொண்டிருக்கிறோமோ அதைப் பற்றி அவரது எலும்புகள் பேசுகின்றன என்று கூறியிருக்கிறார்.  இங்கே எலும்பு என்பது பாபாவின் எலும்பல்ல,  அவரது ஆன்மா. அவரது ஆன்மா நம்மைப் பற்றியே சிந்திப்பதால், நமக்கு என்ன தேவையோ அதை நமக்குத் தருவதற்கு என்ன வழி? எப்படி இவரது கர்மாவை நீக்குவது?  எப்படி இவருக்கு நிறைவைத் தருவது? எப்படி இவரை உயர்த்துவது என நமக்காக பாபா சிந்தித்துக் கொண்டிருக்கிறார். அவற்றை நிறைவேற்ற அக்கறையோடு செயல்படுகிறார் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். நிறைய பேர் கவலைப்படுவது பாபாவுக்கு என் பிரச்சினை தெரியுமா?  தெரியாதா? தெரிந்தால் எதற்காக என்னை இப்படி அலையவிடுகிறார்?

பாபா மூன்று முழ உடலுக்குள் அடைபட்டுக்கிடந்தபோதே, கடந்த காலம், எதிர்காலம், நிகழ்காலம் என அனைத்தையும் அறிந்து தன்னை நாடி வந்த மக்களுக்கும், மனத்தால் தன்னை நாடியவர்களுக்கும் சொல்லியும், உணர்த்தியும் வந்தார். அவர்களை கஷ்டத்தின் பிடியிலிருந்தும், பிரச்சினைகளில் இருந்தும் விடுவித்து வந்தார்.

அப்படியிருக்கும்போது நாம் இப்படி கவலைப்படுவது எதனால்? பாபா உயிரோடு இருந்திருந்தால் நம் பிரச்சினை தீர்ந்திருக்கும்! இப்போது அவர் சமாதியாகிவிட்டார். அவரால் இது முடியுமோ முடியாதோ என்ற அவநம்பிக்கை நம் ஆழ்மனத்தின் ஓர் ஓரத்தில் இருப்பதே இக்கவலைக்குக் காரணம்.

இதனால், சாயி பாபாவுடன், பெருமாளுக்கும், முருகனுக்கும், அம்பாளுக்கும் ஒரு வேண்டுதலை வைப்போம். எந்தக் கடவுளாவது காப்பாற்ற மாட்டார்களா? என்ற நினைப்பில்!

முதலில் நாம் அறிய வேண்டிய விஷயம் என்னவெனில், பாபா, எப்போதும் நம்முடன் இருக்கிறார். அவர் நமக்கு முன்னாலும், பின்னாலும், பக்கவாட்டிலும்,  பாதத்திற்கு கீழேயும், தலைக்கு மேலேயும் நம்மைச் சூழ்ந்து காக்கிறார் என்ற உண்மையை தெரிந்துகொள்ள வேண்டும்.

அடுத்து, நாம் அக்கறை கொண்ட விஷயத்தைப்பற்றி அவரும் அக்கறை கொண்டிருக்கிறார் என்ற உண்மையை நாம் உணரவேண்டும். அவர் பக்தர் நலன் விரும்புகிற கடவுள். பக்தனுக்காக தன் உயிரைத் தியாகம் செய்து காட்டியவர். உனக்காக என் உயிரையும் தருவேன் என்று உறுதி சொன்னவர். அப்படிப்பட்ட கடவுளை நாம் நம்ப வேண்டும்.  இப்படித்தான் செய்கிறேன். அப்படியிருந்தும் என் பிரச்சினைகள் தீரவேயில்லையே!  என நினைப்போம். இதற்குக் காரணம், பாபா அடுத்துச் சொன்ன வார்த்தைகளை நாம் நம்பாமல் போவது.

அது என்ன வார்த்தை?

விசுவாசம் நிறைந்த இதயத்துடன் என்னை நினைத்தால் போதும். சுயநலம் கருதாது என்னை வழி படுங்கள். எல்லா மங்களங்களும் விளையும்.

பாபாவை நினைக்கிறோம். கும்பிடுகிறோம், விரதம் இருக்கிறோம்.. ஆனால் விசுவாசம் மட்டும் நம்மிடம் இருப்பதில்லை.  விசுவாசம் என்றால் அவரை நம்புவது, அவருக்கு உண்மையாக இருப்பது என நினைக்கிறார்கள். அது மட்டுமே விஷயமல்ல.

விசுவாசம் என்பது வேறு, நம்பிக்கை கொள்வது என்பது வேறு. நம்பிக்கை என்பது இன்றைக்கு சரியாகும், நாளைக்கு சரியாகும் என குறுகிய தினங்களுக்குள் நடக்கப் போகிற ஒன்றின் மீது வைக்கிற உறுதி.

ப்ளஸ் 2 படிக்கிற என் மகன் நிச்சயம் அதிக மதிப்பெண் பெற்று டாக்டர் சீட் பெற்றுவிடுவான் என உறுதியாக நினைப்பது நம்பிக்கை.  இப்போதுதான் எல்கேஜியில் சேர்க்கப்பட்ட பையன், நாளைக்கு ஒரு பெரிய டாக்டராகி இந்த ஊரைக் காப்பாற்றுவான் என நம்பி அப்போதே மருத்துவமனையைக் கட்டினால் அது விசுவாசம்.

அதாவது காணப்படாத ஒன்றின் மீது வைக்கிற நம்பிக்கைக்குப் பெயர்தான் விசுவாசம்.  சாயி வரதராஜனை நேரில் பார்க்கிறீர்கள்.  அவரிடம் போனால், ஆசி கூறுவார். அது நமக்கு அனுகூலம் தரும் என்று நம்புவது நம்பிக்கை. சாயிபாபாவை கண்களால் பார்க்காவிட்டாலும் அவர் என்னோடு இருக்கிறார், எனக்காக எல்லாவற்றையும் செய்கிறார். அவரை நினைத்தால் மட்டுமே போதும், எல்லா பிரச்சினைகளும் தீர்ந்து விடும் என நம்புவது விசுவாசம். இந்த விசுவாசம் இருந்தால் போதும், நாம் நிச்சயம் பாபாவால் காப்பாற்றப்படுவோம்.

நீங்கள் சொல்லலாம்.. சாயி ராம்.. இதையெல்லாம் நான் சரியாகத்தான் செய்கிறேன். அப்படியிருந்தும் என் பிரச்சினை சரியாகவில்லை.. இது ஏன்?
அந்த வசனத்தினுடைய கடைசி பகுதியைப்படித்துப் பாருங்கள்.. அந்த உண்மை விளங்கும்.

சுயநலம் கருதாது என்னை வழிபடுங்கள்.. எல்லா மங்களங்களும் விளையும்

சுயநலமில்லாமல் அவரை கும்பிட்டால் எல்லா நன்மைகளும் நமக்குக் கிடைக்கும் என்று பாபா சொல்லியிருக்கிறார்.; இதை முயற்சித்துப் பாருங்களேன்.

அது எப்படி சாயிராம் முடியும்? வேண்டுவதே சுயநலத்துக்காகத்தானே! என் பிரச்சினை தீர வேண்டும் என்பதற்காகத்தானே?  பிரச்சினை இல்லாமல் போனால் நான் எதற்காக பாபாவிடம் வரப்போகிறேன்? இங்கே நமக்காக பாபா கொஞசம் மாறிக்கொண்டால் வேண்டாம் என்கிறதா? என்று சொல்வோம்.

பாபா மாறத் தேவையில்லை.. நாம் மாறிக்கொள்ளமுடியும்? நம்முடைய சுயநலத்தை சிறிது பொதுநலமாக மாற்றிக்கொண்டாலே போதுமானது, அவர் நமக்கு மங்களத்தை அருளுவார்.

என்னுடன் சீரடிக்கு வந்த பக்தர் ஒருவர், ஐயா, உங்களுடன் நேரில் பக்தியுடனும், பவ்வியத்துடனும் பேசுகிற சிலர், முன்பு போல் இல்லை.. இப்போதெல்லாம் எல்லாம் கமர்சியலாக மாறிவிட்டது. சாயிராமிடம் இப்போது நிறைய பணம் சேர்ந்துவிட்டது. அவர் ஆளே மாறிவிட்டார் என உங்கள் தலைமறைவில் உங்களைப் பற்றி தவறாகப் பேசுகிறார்கள்.

அதைக் கேட்க வருத்தமாக இருக்கிறது.  வரும்போது குமுதம் ஆனந்த விகடனை வைத்துக் கொண்டு படித்து வந்தார்களே தவிர, சாயிதரிசனத்தைத் தொட்டுக் கூட பார்க்கவில்லை.. உங்களிடம் பேசும்போது, தங்களை பெரிய சாயி பக்தர்கள் என்றும், சாயி தரிசனம் புத்தகமே தனது மூச்சு என்றும் வேறு மாதிரியாகப் பேசுகிறார்கள். ஏன் இப்படி நடிக்கிறார்கள்?”.

அந்த பக்தருக்கு நான் சொன்ன பதில்:
ஐயா, நமக்குப் புண்ணியக் கணக்குத் தீர்ந்து விட்டதால் நாம் கஷ்டத்திற்கு ஆளாகிறோம். பிறகு நாம் உயர்வது எப்படி? புதிய புண்ணிய பலத்தின் காரணமாகவா?  இல்லை.. பாபாவின் அருளால், அவரது கருணையால், அவர் நம் மீது காட்டுகிற இரக்கத்தால் நாம் உயர்வடைகிறோம்.

என்னையே நம்பி என்பால் லயமாகிறவவனது தேவைகள் அனைத்தையும் நான் பொறுப்பெடுத்துக்கொண்டு செய்வேன் என்றும், சீரடித் தலத்தை எவன் மிதிக்கிறானோ அவனுடைய துன்பங்கள் ஒரு முடிவை அடைந்து சவுகரியத்தை அடைகிறான் என்றும், நீ என்னை அடைந்தால் நான் உன்னைக் காத்தருள்கிறேன் என்றும், நீ என் பேரில் உன் பளுவைச் சுமத்தினால் நான் நிச்சயமாக அதைத்தாங்குவேன் என்றும், நீ உபதேசத்திற்காகவும், உதவிக்காகவும் என்னை அடைந்தால் அவைகளை உடனே நான் உனக்குக் கொடுப்பேன் என்றும், என் பக்தனின் வீட்டில் ஒருபோதும் தேவை என்பதே இருக்காது என்றும் பாபா உறுதி மொழி கொடுத்து இருக்கிறாரே! அது பொய்யாகிவிடுமா?

சத்சரித்திரம் உண்மை என்பதையும், சாயி பாபா உண்மையானவர் என்பதையும் என் வாழ்க்கையே அவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும். அவர்களின் கூற்றைக் கேட்டு, குறை கூறுவதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. பாபாவை நம்பினால் நிச்சயம் இப்படிப்பட்ட முன்னேற்றம் உறுதி என நம்பிக்கை கொள்ள வேண்டும்.

களஞசியத்தில் தானியத்தை சேர்க்கும்போது தூசிகளும், பூச்சிகளும், கூளங்களும் இருக்கும். அவற்றால் தானியத்தின் மதிப்பு குறையும். இதை தூற்றிப் புடைத்து பாதுகாக்க வேண்டும். அதைச் செய்ய நமக்கு நேரமில்லை என்பதால், அவர்கள் அந்த வேலையைச் செய்து நம் களஞசியத்தைப் பொக்கிஷமாக மாற்றுகிறார்கள். அவர்கள் உயர்ந்தவர்கள், மூன்று உலகிலும் இப்படிப்பட்ட புனிதமான நபர்களைத் தேடினாலும் கிடைக்க மாட்டார்கள்.

யார் யார் எப்படியோ அப்படியே அவர்கள் பகவானிடமிருந்து பெறுகிற நன்மைகளும். நாம் நடிப்பதாக நினைப்போம். அவன் மகாநடிகன்.. நம்மைவிட அதிகம் நடித்து நம்மை ஏமாற்றிவிடுவான். நாம் பிறரை கெடுத்தால், அவன் நாம் கெட்டுப்போக விட்டு விடுவான்.. பிறர் மீது புழுதி வாரி இறைத்தால், நம் கையாலேயே நம் தலை மீது சாக்கடையை ஊற்றிக் கொள்ள வைப்பான். ஆகவே, பிறரைப் பற்றிய எண்ணமோ, மதிப்பீடோ நம்மிடம் இருக்கக்கூடாது.. அவற்றை நம் சத்குரு பார்த்துக் கொள்வார் என்றேன்.

எல்லோரைப் போலவும்தானே நீங்களும் பாபாவை கும்பிடுகிறீர்கள்? அவர் உங்களை மட்டும் எப்படி செல்வத்தில், செல்வாக்கில், புகழில், அருளில் உயர்த்துகிறார்?  எனக் கேட்கலாம்.

யதார்த்தமான பக்தி செலுத்துகிறேன். உடலாலும், மனதாலும், வாக்காலும், ஐந்து பிராணன்களையும், புத்தியையும் எனது குருவிடம் ஒப்படைத்து விட்டேன். பக்திமான் என வேடம் போடுவதில்லை.

அணுகுவதற்கு எளிமையாக என்னை மாற்றிக்கொள்கிறேனே தவிர, பயப்படும் அளவுக்கு காட்சி தருவதில்லை. பக்தி என்பது எனக்கும் அவருக்கும் இடையுள்ள பிரேமை கலந்த உறவு. இதை நான் வெளிப் படுத்தவேண்டியதில்லை என நம்புகிறேன்.

அடுத்து, எனக்குள்ள அனைத்திற்கும் அவரை பொறுப்பாளியாக வைத்திருக்கிறேன். இதற்கு நிறைய உறுதி வேண்டும்.. கரணம் தப்பினால் மரணம் என்ற நிலை வரும்.. அப்போதுகூட கவலைப்படக் கூடாது..

என் குருவின் பாதங்களை சரணடைந்த பிறகு, சம்சார பயம் நமக்கெதற்கு? என்னைப் பற்றிய கவலை எனக்கெதற்கு? என்னைப்பற்றிய கவலை சாயிநாதனுக்குத்தானே? என்று இருந்துவிடுகிறேன்.

பாபாவை அறியும் முன்பு என்னிடம் மாயையும் அஞ்ஞானமும் வாசம் செய்தன. பிள்ளைக் குட்டிகள் பற்றியும், மாடு கன்றுகள் பற்றியும், வசதி வாய்ப்புகள் பற்றியும் கவலைப்படுகிற சிந்தனை இரவு பகலாக ஓய்வின்றி இருந்தது. லவலேசமும் நல்ல விக்ஷயங்களைக்கூட சிந்திக்க முடியாமல் இருந்தேன்.

இப்போதும் அவை என்னுடன் உள்ளன. ஆனால் என்னில் இல்லை. அவை தம் போக்கில் போகின்றன, நான் என் போக்கில் போகிறேன். இதனால் பாபாவும் என் போக்கிலேயே வருகிறார். எங்கே அவர் இருக்கிறாரோ அங்கே துன்பம் என்பதே கிடையாதே..    இது என் வாழ்வில் பிரத்தியட்சமாக நான் பார்க்கிற உண்மை என்று சொன்னேன்.

என் பிள்ளைகள் விக்ஷயத்தில் நான் கவலைப்படவில்லை. மாதா மாதம் நட்டத்தில் வெளிவரும் சாயி தரிசனம் பற்றி கவலைப்படுவதில்லை. என் குடும்ப விக்ஷயங்களைப் பற்றி கவலைப்படுவது இல்லை. என்ன சாப்பிடலாம்? எப்படி இந்த உடம்பை பராமரிப்பது என கவனிப்பது இல்லை. எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. அவர் பார்த்துக்கொள்கிறார். நான் பிறருக்காகப் பிரார்த்தனை செய்கிறேன்.

சுயநலத்தை ஒழிக்க அவருக்கு இடம் கொடுத்தேன், பிறர் நலம் வாழ மனதால் நினைத்தேன்.. இதுதான் நான் செய்த விக்ஷயம்.

எனக்கு எல்லா மங்களங்களும் விளைகின்றன.  நான் பாலாயிருந்தேன் புளித்த மோராக்கினார், மத்தால் கடைந்து வெண்ணெயாக மாற்றினார். அதன் பின்னும் என்னை நெருப்பிலிட்டுக் கொதிக்க வைத்தார்.. என்னை நெய்யாக்கி கமழவைத்தார்.. எல்லாம் தாங்குவதிலும், ஏற்பதிலும் இருக்கிறது.  இதையே நீங்கள் செய்தால் உங்களுக்கும் விளையுமே.

எனவே,  என் அன்புக் குழந்தைகளே! பாபா அவனுக்கு என்ன செய்தார்? இவனுக்கு என்ன செய்யவில்லை? இவன் ஏன் வாழ்கிறான், இவன் ஏன் கெட்டான்? என எண்ணிக் கொண்டிருப்பதில் காலத்தை செலவழிக்காமல், இந்த உலகத்தில் நிம்மதியாக வாழ்வதற்கான வழியை சிந்தித்து, அந்த வழியில் எப்படியாவது என்னை அழைத்துச் செல் என்று பொறுப்பை அவரிடம் ஒப்படைத்துவிட்டு உட்கார்ந்துவிடுங்கள். அவர் உங்கள் கப்பலை கரை சேர்த்துவிடுவார்.





சாயி வரதராஜன்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...