Sunday, February 23, 2014

என்னை விட்டுப் போகாதே

‘‘என் அன்புக் குழந்தையே! நீ என்னிடம் என்ன குறை கண்டாய், என்னை விட்டு விலகிப் போவதற்கு?  உன்னை ஜன்ம ஜன்மமாய் சிநேகித்து, உன்னோடு உறவு பாராட்டி, பிறவிகள் தோறும் உன்னைத் தொடர்ந்து வருகிற இந்த சத்குரு இப்போது உனக்கு சத்துரு மாதிரி தெரிகிறேனா, குழந்தாய்?
     கஷ்ட காலங்களில் நான் உன்னோடு நடந்தேன், உன்னை விட்டு நீங்காமலும் இருந்தேன். நீ தவறு இழைத்த போதெல்லாம் பிழை பொறுத்தேன், நடு நிலைமை தவறி நீ நடந்த காலங்களில் நான் தலை குனிந்தாலும் உன்னை விட்டு விலகவும் இல்லை உன்னைக் கைவிடவும் இல்லை.
     துரியோதனன் வீட்டுச் சமையலைச் சாப்பிட்ட துரோணரைப் போல, உன் கையால் சாப்பிட்ட நன்றிக்காக உன்னைச் சுற்றிச் சுற்றி வந்துகொண்டு இருக்கிறேன்.. இன்னமும் உனக்காக நான்தான் யுத்த களத்தில் நிற்கிறேன். நீ என்னைப் புரிந்துகொள்ளவில்லை.. உன் துயரம் அதிகமாகிவிட்டதால் தடுமாற்றத்தில் இருக்கிறாய். நிதானத்திற்கும் உனக்கும் எவ்வளவு தூரம் இருக்கிறது தெரியுமா?
     நிம்மதிக்கும் உனக்கும் உள்ள தூரத்திற்கு இணையான தூரம். உன்னுடைய எல்லா சக்திகளையும் பிரயோகம் செய்து என்னை காப்பாற்றக் கூடாதா? உன்னை பரப்பிரம்மம் என்கிறார்கள், பரமாத்மா என்கிறார்கள், சர்வ சக்தி உள்ளவர் என்கிறார்கள்.
     என்னைக் காப்பாற்ற முடியாத சக்தி எப்படி சர்வ சக்தியாக இருக்கும்? என மனதில் நினைக்கிறாய்? எனக்கு எப்படி சர்வ சக்தியுள்ளதோ அப்படியே உனக்கு சர்வ தோக்ஷங்களும் உள்ளன. நான் உன்னை காப்பாற்ற நினைத்தாலும் அவை தடுத்து, உன் புத்தியில் கோணலான சிந்தனைகளை உண்டாக்கி நீ பெற வேண்டிய நன்மைகளைப்பெறவிடாமல் செய்து விடுகின்றன.
     பூர்வ கர்மச் சிந்தனைகள் உன் புத்தியில் பதிவாகியிருக்கிறது. ஆகவே நீ புதிது புதிதாக யோசித்தாலும் சுயநலத்திற்காகவே யோசிப்பாய்.. எத்தனை நன்மைகளை நான் உனக்குச் செய்திருந்தாலும் சடுதியில் நன்றி மறந்துவிடுவாய். இவையெல்லாம் உனது பாவத்திற்குக் காரணமாகி, பலன்களைத் தடுக்கிறதே தவிர, நான் காரணமல்ல.
     இந்தப் பக்கீர் பரம தயாளன். அணுகியவர்களுக்கு அனுகூலன். அப்படிப்பட்ட நானா உன் கஷ்டத்திற்கு காரணமாக இருப்பேன். சற்று யோசித்துப் பார் குழந்தாய்”, இப்படி நான் எனது மற்ற மகள்களிடம் சொல்வேன்.
     ஆனால் என் அன்பு மகளே! ஒவ்வொரு அடியெடுத்து வைக்கும்போதும், வேதனையாலும், வலியாலும் கதறி என்னைப் பெருமாளே பெருமாளே என்று கூவியழைத்துப் பிதற்றுகிறவளே எல்லோருக்கும் அற்புதங்களைச் செய்கிறவரான என் கடவுளே, எனக்கு ஏன் இந்த நிலை? என அந்தரங்கத்தில் புலம்பி, எல்லாம் கர்மவினை என உனக்குள்ளேயே விடை கண்டுபிடித்து, வெளியில் எதையும் காட்டாமல் செல்லுகிற என் செல்லக்குழந்தையே! என் கண்மணியே! இதோ உனக்கு நறுமணத் தைலம் கொண்டு வருகிறேன்.
     அப்பா, இந்தத் தைலத்தைப் பூசிக்கொண்டால் எனது உடலின் மூட்டுக்களில் ஏற்பட்ட வலிகள் போய்விடுமா? சஞ்சலங்கள் தீர்ந்துவிடுமா? என உள்ளுக்குள் உள்ள என்னிடம் கேட்காதே. இதைப்பூசிக்கொண்டால் உன் மனம் இதமாகிவிடும்.
     சாஸ்திரங்களில் நாட்டமுள்ளவளே, சத்தியத்தில் ஈடுபாடு கொண்டவளே, சகலமும் என்னால் தரப்படுகின்றன என்பதை உணர்ந்தவளே, என் குழந்தாய்!
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை
என்று உங்கள் அறிஞர் ஒருவர் எழுதிய பாடலை உணர்ந்தவளே, என்னை முழுதும் கற்றவளே! இப்போது நீ சுமக்கிற நோயும், பிரச்சினைகளும் உன் பொருட்டல்ல, பிறர் பொருட்டாகவே உனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
     ஒரு நல்லவரின் பொருட்டு எப்படி எல்லோர்க்கும் அருள் கிடைக்கிறதோ, அப்படியே எல்லோரின் தீவினையின் பலனும் அந்த ஒரு நல்லவரின் மீதே சுமத்தப் படுகிறது என்பதைத் தெரிந்துகொள்.
     எல்லோரும் சுய நலத்தோடு, தன் நோய் போக வேண்டிக்கொள்கிறார்கள்,  தன் பிரச்சினை தீர வேண்டிக்கொள்கிறார்கள். அவை எங்கே போகும்? என்னிடம்தானே வந்து சேரும். அவற்றின் பங்குகள் என் பிள்ளைகளான உங்களிடத்தில் வந்து சேர்கிறது.
     உனக்குப் புரிகிற மாதிரி சொல்லவேண்டும் என்றால், பிறர் நோயைச் சுமக்கும் பக்குவம் உன் போன்ற நல்ல உள்ளங்களுக்கே உள்ளது. ஆகவே, பிறர் நன்மைக்காக, பிறர் சுமையை நான் சுமக்கிறேன்.
     நான் சுமப்பதால் என் பிள்ளையான உனக்கு அதில் பங்கு கிடைத்து நீயும் சுமக்கிறாய். அதாவது, பிறரது சுமைகளை நாம் சுமக்கிறோம். அப்பா, இதுஅநியாயமில்லையா? எனக் கேட்கத்தோன்றும்.
     அம்மா! எந்தத் தாவரத்தையும் பார். அவை மழை, வெயில், பனி என பலவித கால மாற்றத்தால் துன்பப்பட்டு நீரையும், சக்தியையும் சேர்த்தாலும் தமக்கென வாழாது, பிறருக்காகவே வாழ்கின்றன.
     அதுபோலவே, நல்லவர்கள் மட்டுமே பிறருக்கு என வாழத் தகுதி படைத்தவர்களாக உள்ளார்கள். உனக்கு அந்தத் தகுதி உள்ளது. அதனால்தான் உனக்கு இப்பிறவி வழங்கப்பட்டுள்ளது.
     அப்பா, இந்தத் தகுதியை எனக்கு எப்போது வைத்தாய்? ஏன் வைத்தாய்? என்று கேட்கலாம். பிறவிகள் தோறும் கர்மவினைகளால் அவதிப்படுகிற ஆன்மாவை ஈடேற்றுவதற்காக, வினைகளை களைவதற்காக பூர்வ வினைக்கேற்ற உயிராக, அது பிறக்கிற குலம், குடும்பம், இடம், காலம் என சேர்ப்பித்து வைக்கிறேன்.
     நான் விரும்புகிற ஆன்மா அனைத்தையும் பெண்ணாக சிருஷ்டித்து அங்கே அனுப்புகிறேன். இப்படித்தான், உனது ஆன்மா இந்த உடலுக்குள் சேரும் முன்னரே அந்தத் தகுதியை வைத்தேன்.
     ஏன் வைத்தேன் என்றால், நான் உனக்கு மறைபொருட்களை கற்பித்ததும், எல்லாம் மாயை என விளங்க வைத்ததும் நீ சுகப்பட அல்ல, பிறர் சுகப்பட நீ பயன்பட வேண்டும் என்பதற்காக. மகளே, முதுமை என்பது நோய்களின் தலைவாசல். அதை எல்லோரும் கடந்துபோக வேண்டும். நோய்கள் என்பவை கர்மப் பலன்களை ஈடு செய்பவை. இந்த உடலோ கேவலம் மண்ணுக்குச்சொந்தம். மண்ணாய் மண்ணில் கலக்கப் போகிற ஒன்றை மலை போல் நம்பித் திரிகிறவர்கள் மூடர்கள். நீயோ எனது அறிவு மதி.
     அப்பா, நீங்கள் போதிப்பதைப் பார்த்தால் என் நோயை குணமாக்க மாட்டீர்கள் போலிருக்கிறதே என நினைக்கிறாய்.
     என் மகளே! நீ விரும்பினால் நான் உன்னை முற்றிலும் அந்த நோயிலிருந்து குணமாக்குவேன். நீ அதை விரும்பமாட்டாயே! நான் என்ன விரும்புகிறேனோ, அது உன்னில் நடக்கட்டும் என்று தானே விரும்புவாய். ஆகவே, இந்த நோயை ஒரு பொருட்டாக நினைத்துக் கலங்காமல், என்னையே தியானம் செய். வலியின் மத்தியில் சுகமாய் நான் உனக்குத் தரிசனம் தருவேன்.
     என் குழந்தையே! உனக்குச் சில ரகசியங்களை சொல்கிறேன், கேள்! பெண் ஜென்மத்தைப் பாவப்பட்ட ஜென்மம் என்கிறார்கள். அப்படியென்றால் என்ன தெரியுமா? பாவம் ‘பட்ட அதாவது அற்றுப் போன ஜென்மம் என்பது பொருள். மரம் பட்டுவிட்டது என்றால், அது உயிரோடு இல்லை என்பதல்லவா உண்மை.
     அப்படியே பாவம் பட்டுவிட்டதென்றால், புனிதமான ஜென்மம் என்றல்லவா பொருள்? இதனால்தான் ஞானிகள் மங்கையராகப் பிறக்க மாதவம் செய்திடல் வேண்டும் என்றார்.
     பூர்வத்தில் என் மீது பக்தியுள்ளவர்களையும், நற்குணம் உள்ளவர்களையும் காப்பதற்காக நான், அவர்களை கடைசி ஜென்மத்தில் பெண்களாகப்படைப்பிக்கிறேன். அதாவது அந்த ஆன்மாக்களை பெண் உடலில் புகச் செய்கிறேன்.
     பெண் உடல் என்பது போகப் பொருளல்ல. பெறுதற்கு அரிய பொக்கிக்ஷம். அன்பின் தலைநகரம், தியாகத்தின் உறைவிடம். ஆணவங்களும், செருக்கும், உலகில் மண்டிக்கிடக்கும் மற்ற தீய குணங்களனைத்தும் புதைக்கப்படும் புதைவிடம். நல்ல பண்புகளுக்கு இலக்கணம். இத்தகைய உடலை உருவாக்கக் காரணம் என்ன வெனில், இதைக் கொண்டு மற்ற ஆன்மாக்களை ஈடேற்றுவதற்காகவே!
     ஓர் ஆணுக்குப் பசித்தால் பிறருக்கு இல்லாமல் போனாலும் தான் தின்றுவிடுவான். பெண் அப்படி செய்யமாட்டாள். ஆண் தனது கோபத்தையோ, மோகத்தையோ வெளிப்படுத்திவிடுவான். பெண் அப்படி செய்யமாட்டாள். ஆண் சகிக்க மாட்டான், பெண் சகிப்பாள். ஆண் தனது பண்புகளைக் காற்றில் பறக்கவிடுவான், பெண் அப்படி செய்ய மாட்டாள்.
                அதாவது ஆணுக்கு நேர் எதிர் குணம் கொண்டவளாக இருப்பாள். காரணம், ஆணாகப் படைக்கப்பட்ட ஆத்மாவையும் ஈடேற்றும் பொறுப்பை பெண்ணிடம் நான் தந்திருப்பதுதான். இதனால்தான் ஒரு பெண்ணிடம் நான் குடும்பம், குழந்தை, பொறுப்பு, கடமை என அனைத்தையும் ஒப்படைக்கிறேன். அவளை பூதேவியாக்குகிறேன். உன்னைத் தாயாக்குகிறேன்!
                நான் எனது பிரதிநிதியாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் எனக்குப் பிரியமான ஆன்மாவை அனுப்பி பேரருள் செய்கிறேன். நானே பெண்ணாக இருந்துப் பெரும் சுமைகளைச் சுமக்கிறேன். எனவே, என்னிலிருந்து உன்னை வேறுபடுத்திப் பார்க்காதே.
                நீ சுமப்பதெல்லாம் உனதல்ல, எனது. நீ என்பவள் நீயல்ல, நான். இதை உணர்ந்து கொண்டால், நீ இந்த நோயை என்ன, மரணத்தையும் பிறருக்காகச் சுமக்கத் தயாராகிவிடுவாய்.
                அப்பா, அப்படியானால் எல்லாப் பெண்களுக்கும் மறு ஜென்மம் கிடையாதா? எனக் கேட்கலாம்.
                மகளே, என் மீது பக்தி செய்து, இடையறாது என்னையே தியானிக்கிற எந்தப் பெண்ணுக்கும் மறு ஜென்மம் கிடையாது என்பதை தீர்மானமாக அறிந்து கொள். சதா உலக சுகத்திற்கு மயங்கி, அதைப்பிரதானமாக நினைத்து அதிலேயே தன்னை ஆழ்த்திக் கொள்ளும் எந்தப் பெண்ணும் எனது விருப்பத்திற்கு நேர்மாறானவள், எனது நோக்கத்தை உணராதவள். அவளுக்கு நிச்சயம் மறு பிறப்பும் உண்டு, மறக்கமுடியாத சிட்சைகளும் உண்டு.
                அப்படியன்றி, என்னையே புகலிடமாகக் கொண்டு பக்தி செய்கிறவர்களை பிறக்க நான் அனுமதிப்பதில்லை. அதனால்தான் கடைசி காலத்தில் அவர்களுக்கு நோய்களை, பிரச்சினை களை கொடுத்து உணரச் செய்துவிடுகிறேன். வலி பொறுப்பது என்பது கர்மாவை சுமப்பது. அதை கடைசி வரை நாம் தாங்க வேண்டும். வேதனை எல்லாம் உடம்புக்குத்தானே தவிர, ஆன்மாவுக்கு அல்ல என்பதை புரிய வைத்துவிடுகிறேன்.
                உலகத்தை உய்விக்க வேண்டும், அதையும் பெண்ணின் மூலமாகவே உய்விக்க வேண்டும் என்பதற்காகவே, நான் விரும்புகிற ஆன்மாவைப் பெண்ணாகப் படைத்திருக்க, பலர் என்னுடைய விருப்பத்தை உணர்வதில்லை. உலகத்தால் இழுக்கப்பட்டுப் போகிறார்கள்.
                பெண்களில் பலர் சுயநலம் உள்ளவர்களாக, மதி கெட்டவர்களாக, சகிப்புத் தன்னை இல்லாதவர்களாக, பண்பு குறைந்தவர்களாக, அடங்காதவர்களாக, எதையும் தானே தீர்மானிக்கும் அகம் பாவம் கொண்டவர்களாக, மனம் போன போக்கில் செல்பவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் பாவத்தை நோயாகச் சுமக்கிறார்கள். இவர்களுக்கு பிறவி உண்டு. ஆனால், நீயோ இவர்களுக்காக நோயைச்சுமக்கிறாய். உனக்குப் பிறவியில்லை.
                அன்பினாலும், தியாகத்தாலும், சகிப்பினாலும் இந்த உலகத்தை நெறிப்படுத்த வேண்டிய சில ஆன்மாக்கள், வாழ்க்கையில் விரக்தியடைந்து, குடும்பப் பிரச்சினையால் மனம் வெதும்பி, என்னை வழிபடுவதாக நினைத்து யோக நிலையை நாடி அலைகிறார்கள். நான் இந்த வாழ்க்கையைக் கொடுத்தது, அதுவும் உன்னை பெண்ணாகப் படைத்தது யோகத்தை நாடிப் போவதற்காக அல்ல, இந்த உலகத்திற்கு யோக சூட்சுமத்தை கொடுப்பதற்காக.
     மின்னலைப் போலத்தோன்றி மறையும் கணநேர மகிழ்ச்சியில் திளைத்து, மற்ற நேரங்களில் கஷ்ட நஷ்டங்களை சகித்து குடும்பத்திற்கு மீட்சியை உண்டாக்க வேண்டும், எதிர்காலத்தில் பாவமற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் நான் தேர்வு செய்த உத்தம ஆன்மாக்களே பெண்கள் என்பதைப் புரிந்துகொண்டிருப்பாய்.
     நான் பக்தியுள்ள பிரம்மத்தை அறிந்தவர்களான பெண்களின் கூட்டுறவில் கட்டுப்பட்டுக் கிடப்பதும் ஏன் தெரியுமா?  மாசற்ற அவர்கள் மனதிலிருந்து எழுந்து வரும் இனிய கானங்களையும், பஜனைப் பாடல்களையும் கேட்டு மெய் மறந்துவிடுவதால். தாய்மை உணர்விலிருந்து எழுந்து வரும் துதிகளைக் கேட்டு மெய் மறந்துவிடுவதால்தான். பக்தி செய்யும் பெண்களின் நினைவில் கிடக்கிறேன்.
     பக்தியற்றவர்களும், தங்களின் மேன்மையான படைப்பின் உயர்வை அறியாதவர்களுமான பெண்களின் பேச்சில் துயரடைந்து அவர்களை விட்டுத் தள்ளி நிற்கிறேன்.
     சரி, மகளே! நீ எதையோ கேட்கப் போய், நான் எதையோ சொல்லி வந்ததாக நினைக்காதே. உன் படைப்பின் இயல்பு நீ இந்த வேதனையை சுமக்க வேண்டும் என்பது. இதிலிருந்து உனக்கு விடுதலை வேண்டும் என்றால் நிச்சயமாக என் உதியை நம்பி உள்ளுக்குச் சாப்பிட்டு, உறுத்துகிற உடலின் மீது தடவு. நிச்சயமாக நிவாரணம் தருகிறேன்.
     அதே சமயம், உலகத்தில் மேன்மையுள்ள பிறவி உனக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது என்ற உண்மை நிலையை உணர்ந்து, உன்னிடமிருக்கிற துவேக்ஷம், பொறாமை, தீய எண்ணம், விரோத மனப்போக்கு, விவகாரம் செய்கிற குணம், பொய், அடுத்தவரை அற்பமாக நினைத்தல் போன்ற குணங்களை எல்லாம் விட்டுவிடு. நான் பூரணப் பிறவி என்கிற எண்ணம் உன் மனதில் வரட்டும். என்னால் இந்த உலகம் உயர்வு அடையப் போகிறது என்கிற பெருமை உனது மனதில் குடிகொள்ளட்டும். நான் அளப்பரிய சக்தி என்பதை அறிந்துகொள்.
     வலிமையான ஆன்மா உனக்குள் இருக்கும்போது, வலுவற்றதும், நிலையற்றதுமான உடலுக்காக எதையும் யாசித்தபடி நிற்காதே! அனைத்தும் உனக்கு மங்களமாகட்டும். நோயின்றி வாழ்வாயாக. அதை விடுத்து, என்னைவிட்டு வேறு எங்கும் போய் அலையாதே.

அன்புடன்

அப்பா சாயி பாபா

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...