Friday, February 14, 2014

என் பக்தர்களை இரவு பகலாக பாப்பாற்றுகிறேன்

         என் பெயர் கலாவதி. ஜூலை 1991 ல் திருமணமானது. எனக்கு பாபா அன்பான கணவராக நாதன் அவர்களையும், அருமைக் குழந்தையாக சாய் சுதர்சனையும் தந்தருளினார். சென்னை தாம்பரத்திற்கு அருகிலுள்ள ராஜ கீழ் பாக்கம் என்ற இடத்தில் வசித்து வருகிறோம்.
     என் வாழ்வில் பாபா நிகழ்த்திய அற்புதங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். 1993 ல் நாக்பூரில் வசித்தபோது ஆஜ்னி என்ற இடத்தில் உள்ள பாபா ஆலயத்திற்கு அடிக்கடி செல்வோம். வியாழன் தோறும் தவறாமல் சென்று விடுவோம்.
     பாபாவின் போட்டோவை வாங்கி வந்து அதை நேர்த்தியாக வேலைப்பாடுகளுடன் அலங்கரித்து கோயில் அர்ச்சகரிடம் கொடுத்தோம். அதன் பிறகு ஐதராபாத் குடிபெயர்ந்தோம். பாபாவிடம் உள்ள தொடர்பு எப்படியோ துண்டித்துப் போனது. நாங்கள் வேறு குருவைத் தேடிக்கொண்டிருந்தோம்.
     திருமணமாகி பத்தாண்டுகள் ஆனது, குழந்தைப் பேறு இல்லை. இரண்டு முறை கருத்தரித்து கருச்சிதைவு ஏற்பட்டது. கருப்பையில் இரண்டு முறை பெரிய அளவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
     கருப்பை சரியில்லாததால் என்னால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என மருத்துவர்கள் கை விரித்துவிட்டனர். போகாத இடமே இல்லை, வேண்டாத தெய்வமில்லை என்பது போல, எல்லா இடங்களுக்கும் அலைந்து குழந்தைப் பேற்றுக்காக தவமிருந்தோம்.
     இறுதியாக ஐதராபாத்தில் ஒருவர், நீங்கள் சுதர்சன ஹோமம் செய்தால் உங்களுக்குக் குழந்தைப் பேறு வாய்க்கும் என்றார். அவரது வாக்கை கடவுள் வாக்காக ஏற்று சுதர்சன ஹோமம் செய்தபிறகு, உடனடியாக நான் கருத்தரித்து, பிரச்சினையில்லாமல் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தேன். சுதர்சன ஹோமத்தால் பிறந்ததால் அவனுக்கு சுதர்சன் என்று பெயரிட்டிருக்கிறோம்.
     தற்போது ஏழாம் வகுப்பு படித்து வருகிறான். எங்கள் குடும்பத்தில் ஒன்று மாற்றி இன்னொன்று என பிரச்சினைகள் வந்துகொண்டு இருந்தன. நாங்கள் மகிழ்ச்சி என்றால் என்ன என்பதையே அறியாதவர்கள் போல வாழ்ந்து கொண்டிருந்தோம்.
     இரண்டு ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்து வந்த நாங்கள், சென்னைக்குக் குடிபெயர்ந்து, தியாகராய நகரில் வாழ ஆரம்பித்தோம். நங்கநல்லூரில் சொந்தமாக ஒருபிளாட் வாங்கி அதில் வசிக்க ஆரம்பித்த காலத்திலெல்லாம், குடும்பத்தில் பிரச்சினைகள் உச்சக்கட்டத்தில் இருந்தன. என் கணவருடன் ஏற்பட்ட பிணக்கு, குழந்தைப் பராமரிப்பதில் உள்ள சிக்கல், மற்றும் கருப்பையில் ஏற்பட்ட பிரச்சினை ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நான், மன நிம்மதியை இழந்து விட்டிருந்தேன். இரவு பகலாக என் வீட்டில் சண்டையும் சச்சரவும் கேட்டுக் கொண்டிருக்கும். பூனாவில் வசித்து வரும் என் கணவரின் நண்பர் ஆனந்த் சுக்லா என்பவர் தீவிரமான சாயி பக்தர்.
     இவர்தான் எனக்கும் என் கணவருக்கும் இடையிலுள்ள பிரச்சினையை சு்கமாகத் தீர்த்து வைத்து எங்களை ஒன்றிணைத்தார். அது டிசம்பர் 2011. எங்களை சீரடிக்கு அழைத்துச்சென்று தரிசனம் செய்யவைத்தார். பாபாவை மனம் உருக தரிசித்தோம்.
     நாங்கள் கோயிலின் உள்ளே சென்றபோது, நடையை சுத்தம் செய்வதால் இருபது நிமிடங்கள் பொறுத்திருக்குமாறு கூறினார்கள். அந்த நேரத்தில் பாபாவின் திருமுன்னர் நீண்ட நேரம் நிற்கிற பாக்கியம் கிடைத்தது. இந்த நேரத்தில் என் குடும்பத்தில் நிம்மதியைக் கொடுத்து, குழந்தைக்கு நல்ல பள்ளியில் இடம் கிடைக்கச் செய்ய அருள் புரியுமாறு பாபாவிடம் வேண்டினேன்.
     என கணவர் தாம்பரம் சென்றிருந்தபோது, சாயி தரிசனம் என்ற புத்தகத்தை வாங்கி வந்திருந்தார். அது 2012 பிப்ரவரி மாத இதழ். பிப்ரவரி 18 ம் தேதி அந்தப் புத்தகத்தை வாங்கி வந்திருந்தார். நான் டெல்லியில் படித்ததால் எனக்குத் தமிழ் படிக்க வராது. எப்படியோ அந்தப் புத்தகத்தைப் பிரித்து எழுத்துக் கூட்டிப் படிக்க ஆரம்பித்தேன்.
     சிரமத்தோடு படிக்க ஆரம்பித்த பிறகு, அதில் உள்ள விக்ஷயங்கள் எனக்குப் புரிய ஆரம்பித்தது. பாபா கவலைப்படாதே, அமைதியாக இரு என்று என்னோடு பேசுவது போன்ற உணர்வும், மனதில் ஆறுதலும் ஏற்பட்டது.
     என் கணவரிடம் எனக்காக அந்த அத்தியாயங்களைப் படிக்கச் சொன்னேன். கடவுளின் அருளால் என் பேச்சைக் கேட்ட அவர் எனக்காக புத்தகத்தைப் படித்துக்காட்ட ஆரம்பித்தார். இந்தப் புத்தகம் எங்கள் குடும்பப் பிரச்சினையைப் பற்றிப் பேசுவது போலவும், சாயி வரதராஜன் சுவாமி எங்களை அமைதியாக இருக்குமாறு அறிவுரை வழங்குவதாகவும் உணர்ந்தோம்.
     பாபா எங்கள் பிரார்த்தனையைக் கேட்டார், என் பிள்ளைக்கு மார்ச் 12 ல் நல்ல பள்ளியைக் கொடுத்தார். உற்சாகமூட்டுகிற பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் என அமைந்தது பாபாவின் அருளேயாகும். நாங்கள் ராஜ கீழ்ப்பாக்கத்திற்கு ஏப்ரல் 12 ல் குடி பெயர்ந்தோம்.
     சாயி வரதராஜன் சுவாமியை தரிசிக்க என்னை பெருங்களத்தூர் அழைத்துச் செல்லுமாறு என் கணவரிடம் பலமுறை கேட்டுக் கொண்டிருந்தேன்.
     ஐடி நிறுவனத்தில் அவருடைய பணிச் சுமை காரணமாக எனது வேண்டுதலை தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தார். நிறைய மனச்சுமைகளால் பாதிக்கப்பட்டிருக்கிற என்னை பெருங்களத்தூருக்கு அழைத்துச் செல்லுங்கள் பாபா என பலமுறை கண்ணீர் விட்டு அழுதிருக்கிறேன்.
     திடீரென ஒருநாள் என் கணவர் ஜூன் 12 ல் கும்பகோணத்திற்குப் பயணப்படுவதாகவும், கேபிஎன் டிராவல்சில் டிக்கெட் புக் செய்துள்ளதாகவும் கூறினார்.
     பயண நாளின் போது, டிராவல்சிலிருந்து போன் வந்தது. முந்தின நாள் விபத்து நேர்ந்துவிட்டதன் காரணமாக, நாங்கள் செல்லவிருந்த பேருந்து கேன்சல் செய்யப்பட்டுவிட்டதாக தெரிவித்தார்கள்.
     என் கணவர் ரதி மீனா டிராவல்சில் அன்று மாலை செல்வதற்காக புக் செய்தார். நான் சோர்வடைந்தேன். பேருந்தில் ஏறுவதற்கு முன்பு பெருங்களத்தூர் கோயிலுக்குப் போயாகவேண்டும் என்று அவரிடம் வற்புறுத்தினேன்.
     கால் டாக்சி புக் செய்தோம். ஒரு முஸ்லிம் சகோதரர் அந்த வண்டியை ஓட்டினார். தேடிக்கண்டுபிடித்து ஒருவழியாக கோயிலுக்குக் கொண்டு வந்து சேர்த்தார். நாங்கள் கோயிலின் உள்ளே கால் வைத்து பாபாவைப் பார்த்தவுடனே, அந்த சிலையில் இருந்து வருகிற தீட்சண்யத்தை உணர்ந்தோம்.
     பாபாவின் திருவடி முன்னர் அமர்ந்து பிரார்த்தனை செய்தோம். சாயி வரதராஜனைப்பார்க்கமுடியவில்லை. எனது கணவர் ஜூன் மாதத்திலிருந்து புத்தகங்களை வாங்கினார். பிறகு, கும்பகோணத்திற்குப் பயணப்பட்டோம். பதினைந்து நாட்கள் அங்கு தங்கி பல புனிதத் தலங்களை தரிசித்தோம்.
     சென்னை வந்தபிறகு ஒவ்வொரு நாளும் படுக்கப் போகும் முன்பு என் கணவர் ஒரு சாயி தரிசனத்தை எடுத்து எனக்காகப் படித்துக் காட்டுவார். இந்தப் புத்தகம் எங்களுக்காக எழுதப்பட்டது என்பதையும், படிக்கப்படிக்க நு}று விழுக்காடு தன்னம்பிக்கை எங்களுக்குள் உண்டாவதையும் உணர்ந்தோம். எங்கள் குடும்பத்திலிருந்து எல்லா பிரச்சினைகளும் குறைய ஆரம்பித்தன. என் உறவுகள் அனைத்தும் எனது கணவர் மற்றும் மகன் ஆகியோருடன் நெருங்கிய பாசம் காட்ட ஆரம்பித்தார்கள். மகன் பள்ளியை மிகவும் விரும்பி உற்சாகத்துடன் செல்ல ஆரம்பித்தான்.
     ஆகஸ்டு 12. சாயி வரதராஜனிடம் பேசினேன். வருமாறு கூறினார். அவரை சந்தித்து எங்கள் பிரச்சினைகளைப் பற்றி சொன்னபோது, கூட்டுப் பிரார்த்தனை செய்தார்.
     என் மகன் அவரிடம், எனக்கு நண்பர்களே இல்லை. பள்ளியில் எனக்கு நண்பர்கள் வேண்டும் எனக் கேட்டான். சுவாமி உதி கொடுத்து, எல்லாம் சரியாகிவிடும். உனக்கு நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள் என ஆசீர்வதித்தார்.
     அடுத்த நாளே என் மகன் பள்ளிக்குச் சென்ற போது, சாய் ஆகாஷ் என்ற மாணவன் என் மகனிடம் நெருங்கிப் பேசி நண்பனானான். கோயிலுக்கு அருகிலுள்ள வீட்டிலிருந்து வரும் ஊர்மி என்ற இன்னொரு நண்பனும் கிடைத்தான். அதன் பிறகு நிறைய நண்பர்கள் உருவானார்கள். குழந்தையின் வேண்டுதலையும் கேட்கும் இறைவனின் மனத்தை எண்ணி நாங்கள் ஆச்சரியமடைந்தோம்.
     இங்கேயே வைத்துவிட்டுபோன டாக்குமென்ட்டை ஆந்திராவில் பணமாக்கித் தந்த பாபாவின் லீலையைப் பற்றிய இன்னொரு அற்புதத்தையும் கூறிவிடுகிறேன்.
     என் கணவர் ஐதராபாத்தில் வசித்தபோது காட்கேசார் என்ற இடத்திலுள்ள சீரடி சாய் பாபா நகரில் 1990 ம் ஆண்டு நாலாயிரத்து ஐநூறு ரூபாய்க்கு ஒரு மனை வாங்கியிருந்தார். எங்களுக்கு ஜூலை 1991 ல் திருமணம் நடந்தது.
     என்னிடம் அவர் அந்த டாக்குமெண்ட்டைக் காட்டி, இந்த இடத்திற்கு நான் போனதேயில்லை என்று கூறினார். வெஸ்ட் மார்ரெட்பள்ளி என்ற இடத்தில் ஆறு ஆண்டுகளாக வசித்து வந்தோம். அங்கும் ஒரு ப்ளாட் வாங்கியிருந்தோம். அதன் பிறகு இந்தியாவின் பல பகுதிகளுக்கு வேலையின் காரணமாக குடிபெயர்ந்து வாழ்ந்துவந்தோம். இந்த நிலையில் அந்த இடம் எங்கிருக்கிறது என்றும் தெரியவில்லை. அதில் நமது பிளாட் எங்குள்ளது? இருக்கிறதா? யாரேனும் ஆக்கிரமித்து விட்டார்களா? என்றும் தெரியவில்லை. அந்தப் பணம் போய் விட்டது என்றார் என் கணவர்.
     வெளியூர்களில் வசித்த காரணத்தால், நீண்ட காலமாக எங்கள் பிளாட்டை பூட்டி வைத்திருந்தோம். அதிலிருந்து எந்த வாடகையும் வரவில்லை. டிசம்பர் 2112 ல் எங்கள் பிளாட்டை விற்பனை செய்வதற்காக என் கணவர் சென்றிருந்தார். நான் பாபாவிடம், எந்தப் பிரச்சினையும் இல்லாமல் எங்கள் மனையைக் கண்டுபிடித்து விற்பனை செய்து தர வேண்டும், குடியிருப்பையும் விற்றுத் தரவேண்டும் என பிரார்த்தனை செய்தேன். என் கணவரை வற்புறுத்தி இவற்றை விற்பனை செய்து வர அனுப்பி வைத்தேன்.
     ஐதராபாத் சென்றிருந்த என் கணவர், அங்கிருந்து போன் செய்தார். நான் போகும்போதே ஒரு சாயி பாபா வண்டி வந்தது. பாபா நம்மோடு இருக்கிறார் என்ற எண்ணத்துடன் வந்தேன். நமது பக்கத்து வீட்டுக்காரர் நம் ப்ளாட்டை வாங்க விரும்புவதாகத் தெரிவித்தார்!’’ என்றார்.
     அவரிடம், நமது மனையையும் கண்டுபிடித்து விற்பனை செய்யுங்கள் என்றேன். தயக்கத்துடன் ஒப்புக் கொண்ட அவர், அந்த இடத்தைத் தேடி செல்லும்போது, உப்பல் என்ற இடத்தில் மீண்டும் ஒரு சாயி பாபா வண்டி எதிரில் வந்திருக்கிறது.
     நமக்கு நல்லது நடக்கப் போகிறது என்ற எண்ணம் என் கணவருக்குத் தோன்றியது. ஆட்டோ டிரைவர்களிடம் விசாரித்தபோது அவர்களால் அதை சரியாகக் காட்ட முடியவில்லை.
     இதனால், திரும்பிவிட முடிவு செய்து ஒரு ஆட்டோவில் வந்துகொண்டிருந்தபோது, சாய் ரியல் எஸ்டேட்ஸ் என்று பலகை மாட்டப்பட்டிருந்த ஒரு அலுவலகத்தை ஆட்டோ டிரைவர் காட்டி, இங்கு போய் விசாரிக்கலாம் என்றிருக்கிறார்.
     என் கணவர் அங்கு போய் விசாரித்ததும், அந்த ரியல் எஸ்டேட் அதிபர் என் கணவருடன் வந்து, எங்கள் மனையைக் காட்டியிருக்கிறார். இங்கு புதிதாக பாலம் வரவிருப்பதால், எல்லா இடங்களையும் அரசு கையகப்படுத்திவிட்டது. நட்ட ஈடு தரும் அலுவலகத்தில் சென்று விண்ணப்பித்து உங்கள் நட்ட ஈட்டைப் பெற்றுக் கொள்ளலாம்.
     ஆனால், அங்கிருந்து அதைப் பெறுவது மிகவும் கடினம். உங்களிடம் தற்போது டாக்குமெண்டும் இல்லை என்றார் ரியல் எஸ்டேட் அதிபர். ஹூடா என்ற இடத்திலிருந்த அந்த அலுவலகத்திற்கு சென்று விசாரித்தபோது, இவரிடம் எந்த டாக்குமெண்டுகளையும் கேட்காமல், எந்த கெடுபிடியும் இல்லாமல் அங்கிருந்த அதிகாரிகள் உடனடியாக கோப்புகளை எடுத்து சரிபார்த்து, ஒரு விண்ணப்பப்படிவத்தை என் கணவரிடம் தந்து பூர்த்தி செய்து தந்துவிட்டுச் செல்லுங்கள் எனக் கூறினார்கள்.
     சில மாதங்களுக்குள் என் கணவர் மீண்டும் ஆந்திரா சென்று குடியிருப்பை விற்பனை செய்த பணத்தைப் பெற்றுக்கொண்டார். ஆகஸ்டு 5 ம் தேதி நட்ட ஈடு தரும் அலுவலகத்திலிருந்து ஒரு லட்சத்து தொண்ணு}ற்று எட்டாயிரம் ரூபாய்க்கான காசோலை எங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
     பெருங்களத்தூர் பிரார்த்தனை மையத்திற்குச் சென்று வேண்டிக்கொண்ட பிறகு நடந்த மிகப்பெரிய அற்புதம் இது. அந்த மாதம் ஏழாம் தேதி சாயி வரதராஜனுடன் சீரடிக்குச் செல்வதாக இருந்தோம். ஐந்தாம் தேதியே பணம் கைக்கு வந்துவிட்டது. மகிழ்ச்சியோடும்,  மனநிறைவோடும் சீரடிக்குச் சென்று வந்தோம்.
     என் வாழ்க்கை முற்றிலுமாக மாறியது. சாயி அருளால் இப்போது நாங்கள் அமைதியாகவும், நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்கிறோம். சாயி பந்துக்களுக்கு என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் என்னவெனில், ஒவ்வொருவரும் ஒருமுறையேனும் பெருங்களத்தூர் பிரார்த்தனை மையம் சென்று வாருங்கள்.
     சாயி தரிசனம் புத்தகத்தை தொடர்ச்சியாக வாங்கிப் படியுங்கள். அந்தப் புத்தகம் நமக்கு பாசிடிவ் ஆற்றலைத்தருவதோடு, நம்முடைய பிரச்சினைகள் அனைத்தை யும் நீக்கிவிடுகிறது. இந்தப் புத்தகத்தைப் படியுங்கள்.
     சாயி அருளால் உங்கள் வாழ்க்கை நு}று சதவிகிதம் மாறிவிடும் என்பதை என் அனுபவத்தை வைத்துக்கூறுகிறேன்.


ஜெய் சாய் ராம்.

கலாவதி நாதன்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...