Sunday, February 9, 2014

ஓடுகிற கடிகாரமாக மாறு!


இரண்டு முட்களும் இல்லாத கடிகாரம் ஓடினால் என்ன. ஓடாவிட்டால் தான் என்ன என்பார்கள். சோம்பேறி எவ்வளவு முயன்றாலும் ஜெயிக்கவே முடியாது.

ஒருநாள் நான் ஒரு நிகழ்ச்சிக்குப் போகவேண்டி இருந்தது. பத்து மணிக்கு சரியாக வந்துவிடுவதாக கூறியிருந்தேன். வேலைகளை முடித்துவிட்டு, பாபாவின் பாதத்தின் அடியில் மாட்டி வைத்திருக்கிற சுவர் கடிகாரத்தில் மணி பார்த்தபோது எட்டரை மணி எனக்காட்டியது. ஒன்னரை மணி நேரம் இருக்கிறது, அதற்குள் வேறு வேலையை முடித்துக்கொண்டு விடலாம் என நினைத்து விட்டேன்.

நிகழ்ச்சி அமைப்பாளர் போன் செய்து, சாயி ராம், வருவதாகச் சொன்னீர்கள்..இன்னும் வரவில்லையே! என்றார்.

 “பத்து மணிக்குச் சரியாக வந்துவிடுவேன்என்று கூறினேன்.

இப்போது மணி பத்தரை என்றார் அவர். எதிர் சுவரில் மாட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்தபோது, பத்தரை மணியைக் காட்டியது. அவசர அவசரமாகப் புறப்பட்ட நான், தாமதமாக நிகழ்ச்சிக்குப் போய்ச் சேர்ந்தேன்.

இந்த கடிகாரத்தை நம்பி, ஒரு நாளையே வீணாக்கிவிட்டதாக உணர்ந்தேன். ஒரு கடிகாரம் என்றால் அது சரியாக மணியைக் காட்ட வேண்டும். அப்படி காட்டாவிட்டால், அதனால் பாதிப்பு ஏற்படும்.

இதைப்போலவே, ஒரு மனிதன் பாபாவின் பாதத்திலேயே இருப்பவனாக இருந்தாலும் சரியாக செயல்பட வேண்டும். சரியாகச் செயல்படாதவன் எதற்கும் லாயக்காக இருக்க மாட்டான் என்பதை பாபா எனக்குச் சொல்வது போல உணர்ந்தேன்.

இப்படிக்கூடவா கடவுள் சொல்வார் என கேள்வி எழுந்தபோது, ராம கிருஷ்ணர் பற்றிய சம்பவம் ஒன்று நினைவுக்கு வந்தது.

ஒருமுறை ராமகிருஷ்ணரிடம் அவரது பக்தர்கள் சிலர், உலகில் எப்படி வாழ்ந்தால் ஒருவர் இறையருளைப் பெற முடியும் எனக் கேட்டனர். உடனே பகவான் ராமகிருஷ்ணர் நெல் குற்றும் பெண்களை உதாரணமாகக் காட்டி இப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றார்.

அதாவது,  “உலக்கை விழும் இடத்தில் ஒருத்தி மிகவும் கவனமாக நெல்லை தள்ளிவிட்டுக் கொண்டு இருந்தாள். அதைப்பார்த்ததும், ஒருவர் அதுபோல் கவனமாக உலகில் வாழவேண்டும் என்று அன்னை எனக்கு போதிப்பதுபோல் உணர்ந்தேன். 

உலக்கை தன் கைமீது விழாமல் அவள் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்கிறாள். உலகக் கடமைகளைச் செய்கின்ற போதும் அவை தன்னைப் பிணைத்து விடாமல் இருக்கும் வகையில் ஒருவர் கவனமாகச்செய்பட வேண்டும். அந்தச்செயல்கள் எதுவும் உண்மையில் தன்னுடையவை அல்ல என்பதை உணர வேண்டும். அப்போதுதான் ஒருவர் சம்சார பந்தத்தில் அழியாமல் இருக்க முடியும். உரலின் வடிவம் தெரிந்ததுமே அன்னை இவ்வளவு விஷயங்களையும் எனக்கு உணர்த்திவிட்டாள் என்று கூறினார்.

என்னதான் சாயி பக்தராக இருந்தாலும் தவறான வழிகாட்டுதல் இருந்தால் அவர்கள் எல்லா விஷயத்திலும் தோல்வியைத் தான் தழுவவேண்டிவரும். ஆகவே, எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

எதையும் கண் மூடித்தனமாக நம்பக் கூடாது. பிறரை பார்த்து முடிவு செய்வதை விட, மனத்தைப் பார்த்து முடிவெடுக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

கவனித்துப் பார்த்தால் ஒவ்வொரு விஷயமும் நமக்குப் பாடங்களை போதிக்கின்றன. நாம்தான் அவற்றைப் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும்.


-  சாயி வரதராஜன்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...