சில ஆண்டுகளுக்கு முன்பு நமது பிரார்த்தனை மையத்தில் அனுமன் விக்ரகத்தைப்
பிரதிஷ்டை செய்தபோதும், சனி தோக்ஷ
நிவர்த்தி யாகம் நடத்திய போதெல்லாம் நிறைய விமர்சனங்களை எதிர்கொள்ள நேர்ந்தது.
சாயி பாபாவை ஏற்றுக்கொண்ட ஒருவன் எப்படி மற்ற தெய்வங்களை வணங்கலாம்? இவன் அரை குறையானவன், இவனிடத்திற்குச் செல்ல வேண்டாம், இவனது பத்திரிகையை வாங்க வேண்டாம் என்றார்கள்.
ஆனால் பாபா அதன் பிறகுதான்
பத்திரிகை மற்றும் பிரார்த்தனை மையத்திற்கு ஒரு பெரிய எழுச்சியை உண்டாக்கினார்.
எனது பெயரை உலகம் முழுவதும் பரவச் செய்தார்.
சிட்லப்பாக்கம் விபூதி பாபா ஆலய
நிறுவனர் பூஜ்ய நாகராஜ பாபா அவர்கள் மட்டும்தான், ‘யார் என்ன சொன்னாலும் கவலைப்படாதே! நீ செய்வது
தான் சரி.. நான் கூட இங்கு வருகிற பக்தர்களிடம் சாயி பாபாவுடன் குல தெய்வத்தை வணங்கு,
விபூதி பாபாவை வணங்கு என சொல்லி அனுப்புவேன்.
குல தெய்வ வழிபாடு முக்கிய மானது!’ என்று கூறுவார்.
நான் அதை அப்போது ஏற்றுக்கொள்ள
முடியாமல் இருந்தேன். பாபாவே என் குலதெய்வம் என்பேன். பிறருக்காகப் பிரார்த்தனை செய்யும்போது,
அவரவர் குலதெய்வங்கள் என் மனக்கண் முன்
நிற்பதை கவனித்தேன்.
இது என்னுடைய யூகமாக இருக்கலாம்
என நினைத்துக் கேட்டால், அவர்கள்
அதை உறுதிப்படுத்துவார்கள்.
ஒரு சாயி பக்தைக்கு 18 ஆண்டுகளாக குழந்தைப் பேறு இல்லை. அவர்
என்னிடம் வந்தார். உதியைப் பிரார்த்தித்து அவரிடம் கொடுக்க என் கண்களை மூடியபோது
மிகப்பெரிய ஆலமரத்தையும், அதில் ஒரு
குழந்தை கிடப்பதையும் கவனித்தேன்.
என்னவாக இருக்கும் என நினைத்து,
அந்தப் பெண்மணியிடம் உங்கள் குலதெய்வம்
என்ன எனக் கேட்டேன். முனீஸ்வரன் என்றார்.
ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் உங்கள்
குலதெய்வம் ஸ்தாபிதம் செய்யப்பட்டுள்ளது என நினைக்கிறேன். அங்கு சென்று வழிபட்டு அங்கிருந்து
உதியை எடுத்துக்கொள்ளுங்கள், குழந்தைப்பேறு
வாய்க்கும் எனக் கூறினேன்.
எங்கள் வீட்டில் அதுபோல ஆலமரம்
இல்லை என்று அந்தப் பெண்மணி கூறினார். அப்போது உடனிருந்த அவரது கணவர், எங்கள் பூர்வீகத்தில் இப்படி உள்ளது. ஆனால் அங்கு
நான் சென்றது கிடையாது என்றார். போய்தான் வாருங்களேன் என்று கூறி அனுப்பி
விட்டேன்.
சில மாதங்களுக்குப் பிறகு
அந்தப் பெண்மணி மீண்டும் என்னைப் பார்க்க வந்தார். இந்த முறை அவர் சோகமாக
இருந்தார். என்னவாயிற்று அம்மா எனக் கேட்டபோது, நீங்கள் சொன்னதுபோல எனது பூர்வீகத் திற்குப் போய் குல
தெய்வ வழிபாடு செய்தேன். இவ்வளவு காலமாக இல்லாமல் நான் கருவுற்றேன்.
ஆனால் கரு, கருப்பையில் பதியமாகாமல் கருக்குழாயில் பதியமாகிவிட்டது.
இதனால் அதை மருத்துவர்கள் அகற்றி விட்டார்கள் என்றார். கவலையடைய வேண்டாம், குழந்தைப்பேறு எப்படி வாய்க்கும் என்ற உண்மை உங்களுக்குத்
தெரிந்தா யிற்று அல்லவா? மீண்டும்
அங்கேயே போய் வேண்டிக்கொள்ளுங்கள் என்றேன்.
இதுபோன்ற பல விக்ஷயங்களை
பரீட்சை செய்தேன். எனக்குள் ஒரு குழப்பம்! பரப்பிரம்மமே பாபாதான். கடவுள் பாபா
ஒருவரே அப்படியிருக்க, எதற்காக
இப்படிப்பட்ட விக்ஷயங்களை நான் அணுக வேண்டியிருக்கிறது? என்பதுதான் அந்தக் குழப்பம். ஒருவன்
பூரணமடைந்துவிட்டால் அவனுக்கு மற்ற எந்த வழிபாடுகளும் தேவைப்படாது. ஆனால், அரைகுறை ஆன்மீகத்தில் இருக்கிறவர்கள் நிச்சயம்
தாங்கள் எதை வழிபடுகிறார்களோ அதை மறக்காமல் வழிபட வேண்டும். இதனால்தான் நமது
முன்னோர் குல தெய்வம், இஷ்ட
தெய்வம் என வைத்தார்கள்.
எத்தனை பெயர்களில்
கும்பிட்டாலும் அவை பல கடவுளாகாது, ஒரே
கடவுளின் பல ரூபங்கள் என ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். இது விக்ஷயம் தெரிந்தவர்களுக்கு.
விக்ஷயம் தெரியாதவர்கள் அந்தப் பெயரிலேயே வணங்கலாம் என்பதும் ஏற்கக்கூடியதே!
இந்தக் கருத்து சரியானதுதானா என பிரார்த்தனை செய்துகொண்டிருந்தேன்.
அப்போதுதான் ஹேமத்பந்த்
சத்சரித்திரத்தின் முப்பத்தெட்டாவது அத்தியாயத்தில் 123 – வது வசனத்தில் ‘ஆராதனை செய்ய வேண்டிய தெய்வங்களை
அனாதரவாக விட்டுவிடுவதை அவரால் ஒரு கணமும் பொறுத்துக் கொள்ள இயலவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளதை என்னால் கவனிக்க முடிந்தது.
அது தொடர்பான சம்பவம் ஒன்றையும்
ஹேமட்பந்த் பதிவு செய்திருக்கிறார். (சாயி ராமாயணம் – அத் – 38 - 123 முதல் 146 வசனங்கள் வரை) அந்தப்
பகுதியை அப்படியே தருகிறேன்.
பாபா லெண்டியிலிருந்து திரும்பி
வந்து மசூதியில் அமர்ந்த போது பக்தர்கள் தரிசனத்திற்காக கூடினார்கள். பாபாவின்
உயர்ந்த பக்தரான நானா சாந்தோர்க்கர் தனது சகலபாடியான பினீவாலே என்பவருடன்
வந்திருந்தார். பாபாவுக்கு நமஸ்காரம் செலுத்திவிட்டு உட்கார்ந்தபோது, பாபா திடீரென கோபம் அடைந்து சாந்தோர்க்கரைப்
பார்த்து சத்தம் போட ஆரம்பித்தார்.
‘‘நானா, இதை எப்படி நீர் மறந்து போகலாம்? என்னுடன் இவ்வளவு நாட்கள் பழகி இதைத்தான்
கற்றுக்கொண்டீரா? எனது கூட்டுறவில்
இவ்வளவு காலம் கழித்தபிறகு இந்தக் கதியைத் தான் அடைந்தீரா? ஓ, உமது
மனம் எப்படி இவ்வாறு மயங்கலாம்? அனைத்தையும்
விவரமாக சொல்லும்’’
இதைக் கேட்ட நானா தலையை
குனிந்தார். பாபாவின் கோபத்திற்கான காரணம் தெரியாமல் தவித்தார். பாபா காரணமின்றி
யாரையும் புண் படுத்த மாட்டார் என்பதை அறிந்திருந்த அவர், அவரிடமே சினத்திற்கான காரணத்தைக் கூறுமாறு கெஞ்சினார்.
‘‘என்னுடைய சங்கத்தில்
வருடக்கணக்கான கழித்த பிறகும் உம்முடைய நடத்தை ஏன் இப்படி இருக்கிறது. உமது மூளைக்கு
என்ன ஆயிற்று? நீர் எப்பொழுது
கோபர்காங்வ் வந்தீர்? வழியில்
என்ன நடந்தது? எங்காவது வழியில்
இறங்கினீரா? நேராக இங்கு வந்தீரா?
சின்னதோ, பெரியதோ எதுவாக இருப்பினும் சொல்லும்’’ என பாபா கேட்டார்.
‘‘குதிரை வண்டி அமர்த்தியபோது
நேராக சீரடிக்கு செல்லவேண்டும் என்றே பேசினோம். ஆனால், அவ்வாறு செய்திருந்தால், கோதாவரி நதிக்கரையில் இருக்கும் தத்தாத்ரேயரை பினீவாலே
தரிசனம் செய்திருக்க முடியாது. தத்தாத்ரேய பக்தரான அவர் எங்களுடைய மார்க்கத்திலிருந்த
தத்தாத்ரேயர் கோயில் வழியாக வண்டி சென்றபோது, இறங்கி தரிசனம் செய்ய விரும்பினார். நான் இங்கு வரும் அவசரம்
காரணமாக, சீரடியில் இருந்து
திரும்பி வரும்போது தரிசனம் செய்துகொள்ளலாம் என்று சொல்லி அவரைத் தடுத்து
விட்டேன். சீரடி வந்து சேர்வதில் தாமதம் ஏற்படும் என்ற காரணத்தால் பொறுமையிழந்து,
தத்தர் தரிசனம் அப்பொழுது வேண்டாம் எனப்
புறக்கணித்துவிட்டேன். பிறகு, கோதவரி
நதியில் குளித்தபோது ஒரு பெரிய முள் என் பாதத்தில் குத்தி சதைக்குள் ஏறி விட்டது.
வழியில் மிக அவஸ்தைப்பட்டேன். கடைசியில் முயற்சி செய்து எப்படியோ முள்ளை பிடுங்கிப்போட்டேன்.’’
நானா இப்படி சொன்னதும், பாபா அவரை கண்டித்தார். ‘‘உமக்கு இந்த அவசரம்
உதவாது. தரிசனம் செய்வதைப் புறக்கணித்த குற்றத்திற்கு இம்முறை லேசான தண்டனையுடன் தப்பித்துக்
கொண்டீர். தொழுகைக்கு உரிய தேவரான தத்தர், நீர் எவ்வித பிரயாசையும் செய்யாமல் தரிசனம் தரக் காத்துக்
கொண்டிருக்கும்போது அவரைப் புறக்கணித்துவிட்டு நீர் இங்கு வந்தால், நான் மகிழ்ச்சியடைவேனா, என்ன?’’ எனக் கேட்டார்.
‘‘எல்லாமே நான் என உணர்ந்து கொண்டாய்
நானா! நீர் செய்தது சரி’’
என அவரை உற்சாகப் படுத்தாமல் பாபா
ஏன் கண்டித்தார்?
உலக வழக்கை மீறக்கூடாது.
முன்னோரின் நிலையை மாற்றக்கூடாது என்பதால் கண்டித்தார். கிருஷ்ண பரமாத்மா
பரப்பிரம்மம் என்றாலும், தானே பரம
குரு என்ற போதிலும், மனித அவதாரம்
செய்த காலத்தில் தானும் ஒரு குருவை சரணடைந்து அவருக்கு வேலை செய்து சிஷ்யராக
இருந்தார்.
முப்பதாவது அத்தியாயத்தில் ஹேமட்
பந்த் இன்னும் ஒரு தகவலை பதிவு செய்திருக்கிறார். பாபாவின் இன்னொரு தீவிர பக்தரான
சாமாவுக்கு பாபா உணர்த்திய விக்ஷயத்தைக் கேளுங்கள்.
சாமா பாபாவின் தீவிர பக்தர்,
பாபாவை ஒருமையில் அழைக்கும் அளவுக்கு
நெருங்கியவர். சாமாவின் தாயார் முப்பது ஆண்டுகளுக்கு முன் இரண்டு வேண்டுதல்களை
தனது குல தெய்வத்தின் பாதங்களில் சமர்ப்பித்தார். ஒன்று, சாமா உடல் நலம் பாதிக்கப்பட்டபோது, இந்தக் குழந்தையை உன் பொறுப்பில்
ஒப்படைக்கிறேன், குழந்தை சரியாகி விட்டால்
அவனை உன் பாதங்களில் கொண்டு வந்துபோடுகிறேன் என்பது ஒன்று. இன்னொன்று அந்தத்
தாயாரின் மார்பகங்களில் கட்டி வந்து வேதனைப் படுத்தியபோது, வெள்ளி ஸ்தனங்களை செய்து சமர்ப்பிப்பதாக வேண்டிக்
கொண்டார்.
இதை ஜோதிடர் மூலமாக நினைவூட்டப்
பெற்ற சாமா, இரண்டு ஸ்தனங்களை
செய்து வந்து, பாபாவின் பாதங்களில்
சமர்ப்பித்து, ‘‘என் நேர்த்திக் கடனை
ஏற்றுக் கொண்டு, என்னை விடுதலை செய்யுங்கள்’’ என வேண்டினார்.
சாமா பாபாவிடம் என்ன சொன்னார்
கேளுங்கள். ‘‘நீரே எனது சப்தசிருங்கி
(அம்மன்) நீரே எமது தேவி. தாயார் வாக்குக் கொடுத்த காணிக்கையை ஏற்றுக்கொண்டு சமாதானமடையுங்கள்!’’
சாமா உண்மையைத்தான் சொன்னார்.
ஆனால் அதை பாபா ஏற்றுக்கொள்ளவில்லை. ‘நீ சப்த சிருங்கியின் கோயிலுக்கே சென்று,
தேவிக்காக அழகாக வடிக்கப் பட்ட இந்த ஸ்தனங்களை
உன் கைகளாலேயே சமர்ப்பணம் செய்’’
என்று கூறி விட்டார். (அத்:30, 67-73)
நானா, சாமா ஆகிய பக்தர்களை விட நாம் பாபாவுக்கு நெருங்கிய
பக்தர்களாகிவிட முடியாது. அவர்களுக்கே, அவர்களது முதாதையர் பின்பற்றிய பிற வழக்கங்களைப் புறக்கணிக்க வேண்டாம் என
பாபா வலியுறுத்தினார்.
குல தெய்வத்தால் என்ன நன்மைகள்
நமக்குக் கிடைத்துவிடப் போகிறது என எண்ணிக் கொண்டு, பாபாவிடம் இதைப் பற்றி பிரார்த்தித்தேன். அன்றைய கனவில்,
குல தெய்வம் உனக்கு இருபத்தி இரண்டு விதமான
சமத்காரங்களை செய்கிறது என்றார் பாபா.
அது என்ன என்பதை கேட்கத்
தவறிவிட்டேன். என் பிள்ளை நல்ல பள்ளியில் படிக்க வேண்டும் என பள்ளிகளைத் தேடிச்
சென்று சேர்ப்பதைப் போல, என்னை
தகுதிபடுத்த பாபாவிடம் கொண்டு வந்து சேர்த்ததும் என் குல தெய்வம் என்பதைப் புரிந்துகொண்டேன்.
இந்த நிகழ்வுகளுக்கு பிறகுதான்
பத்துப் பைசா செலவில்லாமல், எந்த
முயற்சியும் செய்யாமல் குலதெய்வம் நமக்கு அருள்கிறது என்ற உண்மை தெரியவந்தது.
நீங்கள் அனைத்தையும் கடந்த சாயி
பக்தரானால் சாயியைத் தவிர வேறு எந்த ரூபத்தையும் மனதில் நிறுத்தாதீர்கள். எந்தக்
கோயிலுக்குச் சென்றாலும் அங்கிருப்பது நமது சாயியே என்பதை உணர்ந்து நமஸ்காரம்
செய்யுங்கள். முழுமை அடையாதவர், எந்தப்
பெயரில் தெய்வத்தை வழிபட்டாலும் அதற்குரிய மரியாதையை செலுத்தி வழிபடுங்கள். அது உங்களுக்கும்
உங்கள் சந்ததிக்கும் நல்லது..
No comments:
Post a Comment