நீ என்னோடு லயமானால் நான் உன் எல்லாப் பொறுப்புகளையும் பொறுப்பெடுத்துக்
கொள்கிறேன் என்று பாபா சொல்கிறாரே, நான்
எவ்வளவோ அவரை கும்பிடுகிறேன்.. பக்தியோடு இருக்கிறேன். ஆனால், அவர்பால் லயமாகி, எல்லாப் பொறுப்புகளையும் ஒப்படைப்பது எப்படி எனக்
கேட்கிறார்களே, அது எப்படி என்று
விளக்கமுடியுமா எனக் கேட்கிறார்கள்.
எல்லா விஷயத்திலும் நம்மை
கடவுளாக நினைத்துப்பார்ப்பதுதான் அவர் பால் லயமாவது என்பதற்கான பொருள். இது ரொம்ப
அதிகமாகத் தெரியவில்லையா? எனக்
கேட்கலாம். நிச்சயமாக அதிகமில்லை. நமது சாஸ்திரங்கள், வேதங்கள் என அனைத்தும் கூறுகிற உண்மை இதுதான். உபநிஷத்துக்களின்
சாராம்சமே தத்வமஸி என்பதுதானே அதற்கு நீயே அது என்றல்லவா பொருள்? நீ அதுவாக
மாறவேண்டும் என்பது லயமாவது என்று பொருள்.
நான் எப்படி அவரில் லயமாகிறேன் என்பதை
சொல்கிறேன், ஏற்புடையதாக
இருந்தால் பின்பற்றிப் பாருங்கள், இல்லாவிட்டால்
விட்டு விடுங்கள். என் வீட்டிற்கு யார் வந்தாலும் அவர் பசியோடு இருப்பார் என
நினைத்து சாப்பாடு கொடு, காபி
கொடு என என் மனைவியிடம் கூறுவேன். சில சமயம் நானே அதைச்செய்வேன். இது எனது சொந்த
இயல்பு என பல காலம் நினைத்துக் கொண்டு இருந்தேன்.
இப்போது இது யாருடைய இயல்பு என நினைத்துப்
பார்க்கும் போது, இது பாபாவின் இயல்பு.
அவர்தான் தன்னிடம் யார் வந்தாலும்,
ஏழை, பணக்காரன், நோயாளி, அந்நியன் என யாராக இருந்தாலும் அவரை சமநோக்கோடு பார்த்து
உணவளித்து திருப்தி செய்து அனுப்புவார்.
சில சமயம், என்னை மறந்து சுற்றிக்கொண்டும், திரிந்துகொண்டும், கண்டதை சாப்பிட்டுவிட்டு, கண்டவர் சகவாசத்திலும் இருப்பேன். ஆடைகளை சரியாக
உடுத்தாமல் கூடத் திரிவேன். அப்போதெல்லாம் என் மனைவி, “மானம் போகிறது”
எனக் கத்துவாள்..
எனக்கெங்கே மானம் இருக்கிறது
என்று சொல்லிவிட்டுப் போவேன். போகும்போது, இப்படி செய்கிறேனே இது யாருடைய இயல்பு
என நினைத்துப் பார்ப்பேன். இது பாபாவின் அவதூத இயல்பு. அதாவது
தத்தாத்ரேயரின் இயல்பு.
சில நேரங்களில் என்னிடம்
கேட்பவருக்கு இல்லை எனாது கொடுத்து அவர்கள் துயரத்தைத் துடைக்க முன்வருவேன். துன்ப
நேரத்தில் ஆறுதல் கூறி தேற்றுவேன். எறும்புகளுக்கும், பறவைகளுக்கும், நாய்களுக்கும், பசுக்களுக்கும்
உணவிடுவேன்.
இது யாருடைய இயல்பு என மனம்
கேட்கும். இது பாபாவின் காக்கும் குணம். அதாவது பாபாவின் விசேசத் தன்மை. சில நேரம்
முட்டைகளை வாங்கிவந்து சாப்பிடுவதற்கு பதில், அடைகாக்க வைத்து குஞ்சுகளை உருவாக்குவேன்.. அல்லது ஏதேனும்
வேலை செய்வேன். பாபா இப்படி செய்கிறேனே.. இது யாருடைய குணம் என மனம் கேட்கும்?
இது பாபாவின் படைக்கும் குணம். அதாவது பிரம்ம
குணம்.
இரவில் படுத்துக்
கொண்டிருப்பேன். கொசு கடித்தால், உடம்பில்
ஐந்து லிட்டர் ரத்தம் இருக்கிறது,
ஒரு சொட்டுக்கும் குறைவாகத்தானே கொசு குடிக்கப் போகிறது, குடித்துவிட்டுப் போகட்டுமே என நினைக்காமல், உடனே அதை அடித்து விடுவேன்.. அதோடு நிற்காமல்
மற்ற கொசுக்களையும் தேடிப்பிடித்துக் கொல்வேன்.
இப்போது, மனம், “இது
யார் இயல்பு எனக் கேட்கும்? இது பாபாவின்
ருத்ர குணம் என்று எனக்குள் சொல்லிக்கொள்வேன். யாராவது என்னைப் பார்க்க வந்து,
கஷ்ட நஷ்டங்களைச் சொல்லும்போதும்,
பிரார்த்தனை செய்து அவர்களை
திடப்படுத்தும் போதும், எனக்குள்
ஒரு குரல் கேட்கும்? இது யார்
குணம்?
இது பாபாவின் குரு தத்துவ குணம். அதாவது பாபாவின் தட்சிணா்ர்த்தி இயல்பு.
பெரியவர்களோ, சிறியவர்களோ
எனக்குத் தெரியாத ஒன்றை சொல்லித் தரும் போது, இது யாருடைய இயல்பு எனக் கேட்டுக் கொள்வேன். இது
பாபாவின் சிஷ்ய பாவம் அதாவது சீடன், கற்றுக்கொள்பவன் என்கிற மனோபாவம். படித்துக்கொண்டிருப்பேன்..
எழுதிக் கொண்டு இருப்பேன். பாபா இது யார் குணம்? பாபாவின் வித்யை குணம். அதாவது சரஸ்வதி என்கிற குணம். இப்படி
ஒவ்வொன்றையும் ஒவ்வொன்றோடு இணைத்து ஒப்பிட்டுப் பார்த்தபிறகு, நான் எதையும் தனியாகச் செய்யவில்லை. அவரே
எனக்குள் இருந்து தன் ஒவ்வொரு தன்மையை வெளிப்படுத்துகிறார் என்பது புரியும்.
அப்போதும் பாபாவிடம் கேட்பேன்.
பாபா, எல்லாம் சரி, என் உண்மையான குணம்தான் என்ன? எவ்வளவுதான் எடுத்துச் சொன்னாலும் தெளிவு கொள்ளாமல்,
எதையும் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பதும்,
எல்லாவற்றையும் நானே செய்கிறேன், எல்லாவற்றுக்கும் நான்தான் காரணம், நான் இல்லாவிட்டால் எதுவும் நடக்காது என்றெல்லாம்
தப்புத் தப்பாக நினைக்கிறாயே அதுதான் உனது உண்மையான குணம்.
எனது இத்தனை அம்சங்கள் உன்னுள்
செயல்படும் நிலையில் இருக்கும் போது, மீதியையும் நான் பார்த்துக்கொள்வேன் என்று நினைக்காமல், நம்பிக்கை கொள்ளாமல் துவண்டு போகிறாயே அதுதான் உன்
உண்மையான இயல்பு என்று உள்ளிருந்து பாபா குரல் தருவார்.
எல்லாம் சரி பாபா, நான் ஒரு பிரச்சினையில் சிக்கிக் கொள்கிறேன்,
பிறர் என்னை துன்புறுத்துகிறார்கள்,
பிறரிடம் தோற்றுப்போகிறேன், கடனில் சிக்கிக்கொள்கிறேன்.. இப்படியெல்லாம் சிக்கிச் சீரழியும்போது
மட்டும் உன்னுடைய
இயல்பு எங்கே போகிறது?
அப்போது உனது எந்த இயல்பு வேலை செய்கிறது? எனக்கேட்பேன்.
நீ தோற்கும் நிலை வரும்போது, எதிரே அசுர இயல்பு வேலை செய்கிறது என்று பொருள். தீமை எப்போதும்
சுறுசுறுப்பாகத்தான் வேலை செய்யும். அப்போது, நான் அதை எதிர்க்க எனது தேவ
பலத்தை உருவாக்கிக்
கொள்கிறேன். அதை சமாளிக்கும் வழிகளைத் தேடி கண்டுபிடித்து, எதிர்த்துப் போராடும்போது எனது இந்திர
பலத்தைப்பிரயோகிக்கிறேன் என்பார் பாபா. பார்த்தீர்களா? சாயி
பந்துக்களே! என்ன செய்தாலும், எனக்கு என்ன நடந்தாலும் அதைச்செய்பவன் நான்
இல்லை. எல்லாம் சாயியே செய்கிறார் என்ற உண்மையை நான் அறிந்து கொண்டிருக்கிறேன்.
இதற்குப் பெயர்தான் அவரில்
லயமாதல். இந்த நிலை வரும்போது, என்ன நடந்தால்
என்ன? நடக்காமல் போனால்தான் என்ன என என் பாட்டுக்குப்
போவேன். இதை மற்றவர்கள் கடவுள் விட்ட வழி என பாமரத்தனமான பெயரில் சொல்லிவைத்தார்கள். இப்போது உங்களுக்கு
லயமாகிற விஷயம் புரியும் என நினைக்கிறேன்.
அன்புடன் சாயி வரதராஜன்
No comments:
Post a Comment