என் பெயர் வி.ராமச்சந்திரன். மனைவி வசந்தி, பிள்ளைகள் காவிய சந்தியா, பாலாஜீஸ்வரன். பல்லாவரத்தில் வசிக்கிறோம். எனக்கு
பாபாவை பதினான்கு ஆண்டுகளாக என் மனைவி மூலமாகத் தெரியும். மணமான புதிதில் வி.ஜீ.பி. கடற்கரைக்குச் சென்றபோது, நீலாங்கரையில் ஒரு முஸ்லிம் பெரியவர் கோயில்
உள்ளது என அறிந்து அங்கே சென்றுவந்தோம்.
நாளடைவில் எனக்கு ஏற்பட்ட
மதுப்பழக்கம், வீட்டில் தங்காமல்
இரவு வேலை என்று கூறிவிட்டு சினிமா செல்வது போன்றவற்றால் எனக்கும் என் மனைவிக்கும்
குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தலை தூக்க ஆரம்பித்தன. மனைவி பல முறை
தற்கொலைக்கு முயன்றாள். என்னைத் திருத்த எவ்வளவோ முயன்று பார்த்தாள். அவளால்
முடியவில்லை. பல முறை அவளை அடிப்பேன்.
வீட்டருகே இருப்பவர்கள்,
நீங்கள் மலையனு}ர் சென்றுவந்தால் பிரச்சினை தீரும் எனக் கூறினர். அதையும்
என் மனைவி நிறைவேற்றினாள். ஆனால் பலன்தான் கிடைக்கவில்லை. ஒருமுறை என் மனைவி,
மகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும்போது,
ஒரு காரின் பின்னால் கால் கால் போட்டு
ஒரு கையால் ஆசி வழங்கிக்கொண்டிருந்த, பாபாவின் படத்தைப் பார்த்து,
தன்னை அறியாமல் அதனருகே சென்று, அதைத்
தடவிக்கொண்டே அழுதபடி நின்றிருக்கிறாள்.
இதை கவனித்த ஒருபெரியவர்,
‘‘என்னம்மா, வீட்டில் பிரச்சினையா? எல்லாம் சரியாயிடும் போ, அழாதே!’’ என
ஆறுதல் கூறி அனுப்பியுள்ளார்.
வீடு வந்ததும், ‘‘ஒருமுறை ஈஞ்சம்பாக்கத்தில் ஒரு முஸ்லிம் பாபா
கோயிலுக்குப் போனோமே, அந்தப்
படத்தை இன்று ஒரு காரில் பார்த்தேன். அவரும் இந்து சாமிதானாம். அவர் படம் எங்காவது
விற்றால் வாங்கி வாருங்கள்’’ என்றாள்.
அவரது உருவப்படம் வரவில்லை என்றாலும்
இந்த நாள் முதல் அவர் எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டார். அன்று முதல் நான் வெளியே
சென்றால், பாபா படத்தைப்
பார்த்துவிட்டால் மனதிற்குள் ஒரு மகிழ்ச்சியும், தைரியமும் வருவதை உணர்ந்தேன்.
அதன் பிறகு மனதார பாபாவை வணங்க
ஆரம்பித்தோம். எங்கள் வாழ்க்கையில் லீலைகள் ஆரம்பம் ஆகத் தொடங்கின. வேலை செய்த
கம்பெனியில் பிரச்சினை ஏற்பட்டு விலகி வெளியே வந்தேன். பழைய கம்பெனியின் நண்பர்களை
சந்தித்து மது அருந்தும் பழக்கத்தை சிறிது சிறிதாக நிறுத்தினார் பாபா. படம் பார்க்கச்
செல்வதையும் தடுத்தார்.
இப்போது நான் படம் பார்த்து
எட்டு ஆண்டுகள் ஆகின்றன. மது அருந்தி ஏழு ஆண்டுகளாகிறது. பாக்கு ஆன்ஸ் பழக்கங்களை
விட்டு ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகிறது. என்னிடமிருந்த கெட்ட பழக்கங்கள் அனைத்தையும்
பாபா எடுத்தெறிந்தார்.
மைலாப்பூர் கோயிலுக்குச் சென்றோம்.
நேரம் ஆகிவிட்டதால் கருவறை கதவை மூடினார்கள். பாபா, உனது உருவத்தையாவது தரிசித்து விட்டுப் போகிறோம் எனப்
பார்க்க முயன்றால், கதவை சார்த்தி
விட்டார்களே என வருந்தினோம். என்ன காரணத்தாலோ, திரும்பவும் கதவைத் திறந்து சரியாக சார்த்தினார்கள்.
அந்த இடைவெளியில், மேடையின் கீழ்
பாபா அமர்ந்திருப்பதைப் பார்த்து நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
சில நாட்கள் கழித்து பாபா படம்
வாங்கிச் சென்று வீட்டில் வழிபாட்டைத் துவங்கினோம். வியாழன் அன்று பாபாவுக்கு பூ
போடத் தோன்றியது. பூக்கடையில் பூ கேட்டேன். பிறகு மனம் மாறி மாலையை வாங்கிவந்து
பாபாவுக்கு சார்த்தினேன்.
மறுநாள்தான் தெரியும், நான் மாலை போட்ட அன்று பாபாவின் சமாதி நாள்
என்ற விவரம். ஒரு முறை எங்கள் கம்பெனி ஆயுத பூஜையின் போது லட்டு தந்தார்கள்.
சாப்பிட்ட பிறகுதான், பாபாவுக்கு
சமர்ப்பிக்காமலும், நினைக்காமலும்
சாப்பிட்டதை நினைத்து வருந்தினேன். லட்டை தந்த பேப்பரில் கையைத் துடைக்க
எடுத்தபோது, அதில் பாபா படம்
இருந்தது. அவரது வாயில் ஒரு துளி லட்டு ஒட்டியிருப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டேன்.
வண்டியில் பாபா ஸ்டிக்கர்
ஒட்டியிருப்பேன். என் தம்பி வண்டியிலும் பாபா ஸ்டிக்கர் ஒட்டினேன். அப்போது அவன்
என்னை கிண்டல் செய்தான்.
‘‘இவன் தெரியாமல் பேசுகிறான்,
இவனை மன்னித்து விடுங்கள். இவன்
போகும்போதும் வரும்போதும் நீங்கள் துணையாக இருங்கள்’’ என பாபாவிடம் பிரார்த்தனை செய்தேன். ஒரு மாதத்திற்குப்
பிறகு என் தம்பியைப் பார்க்க நேர்ந்தது. நான் ஒட்டிய படத்திற்கு பதில் வேறு படத்தை
ஒட்டியிருந்தான்.
நான் ஒட்டிய படம் எங்கே எனக்
கேட்டேன். ‘‘வேலையிலிருந்து வரும்போது ஒருநாள், ஒரு லாரி என் வண்டியை அப்படியே அணைத்துவிட்டுச்சென்றது.
நானும் வண்டியும் பள்ளித்தில் விழுந்து விட்டோம். வண்டிக்கும் எனக்கும் எந்த
சேதமும் படவில்லை. படம்தான் அப்படியே நொறுங்கி விட்டது. பாபாதான் காப்பாற்றினார்
என்பதை உணர்ந்து, முன்
பக்கமிருந்த பிளாஸ்டிக்கை மாற்றி,
புதியதாகப் பொருத்தி அதில் இந்தப் படத்தை ஒட்டியிருக்கிறேன் என்றான்.
என் மனைவி இரண்டாம் முறையாக
கருவுற்ற நேரத்தில், சுகப்பிரசவமாக
ஒன்பது வார விரதம் இருந்தேன். கே.கே.நகர் ஈஎஸ்ஐ மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு
அழைத்துச் சென்றிருந்தேன். மனைவி மருத்துவரைப் பார்க்க உள்ளே சென்ற சமயம், வயதான ஒரு பெரியவர் என் பக்கத்தில் வந்து
அமர்ந்து புகைப்பிடிக்க ஆரம்பித்தார்.
வயதாகியும் அறிவில்லையே! வெளியே
போய் பிடி எனக்கூறலாமா? என
நினைத்த அந்த நேரத்தில் அந்தப் பெரியவர் எழுந்து சென்றுவிட்டார். விரத காலத்தில்
கோபப்படாமலும், அவசரப்படாமலும் பொறுமை
காக்க பாபா இப்படி செய்தார் என்பதை உணர்ந்தேன்.
பேருந்து நிலையத்தில் பெரியவர்
இருந்தார். அவரிடம் சென்று மன்னிப்பு கேட்டதோடு, ஒரு பாக்கெட் சிகரெட்டும், தீப்பெட்டியும் வாங்கிக் கொடுத்துவிட்டு வந்தேன்.
என் மனைவிக்கு இரத்த சோகை
ஏற்பட்டிருந்தது. இப்படியிருந்தால் பிரசவ நேரத்தில் சிக்கலாகும். நல்ல பழ வகைகளை
சாப்பிடுங்கள், அதற்கு முன்பு பெரிய
டாக்டரை பாருங்கள் என்றார் ஒரு டாக்டர்.
என் மனைவியைப் பரிசோதித்து,
அட்மிட் ஆகி இரத்தம் ஏற்றிக்கொள்ளுமாறு
கூறினார்கள். ஒரு மகள் இருப்பதால், வீட்டிலேயே
பழ வகைகளை சாப்பிட்டு உடம்பை கவனித்துக் கொள்வதாகக் கூறிவிட்டு வந்து விட்டோம்.
பத்து நாட்கள் கழித்து மீண்டும்
பரிசோதித்த மருத்துவர், கண்டிப்பாக
அட்மிட் ஆகவேண்டும் என்றார். பத்து நாட்கள் மருத்துவமனையில் இருந்தாள். ஒன்பது
இரத்த ஊசி போட்டும், உடலில் இரத்தம்
இல்லை. ஊசி போட்டால் மட்டும் போதாது, நீயும் நன்றாக சாப்பிட வேண்டும், கவலைப்படக் கூடாது. பெரிய டாக்டரைப் பார்த்து இன்னும் பத்து ஊசி போடுவதற்கு
அனுமதி வாங்கிக் கொள்ளுங்கள் என்றார் டாக்டர்.
இதைக்கேட்டு அதிர்ச்சியாக
இருந்தது. இன்னும் பத்து நாட்கள் என்றால், குழந்தையை கவனிக்கவே முடியாத நிலை ஏற்படுமே என பயந்தோம். ஆனால் கண்டிப்பாக
பத்து நாட்கள் தங்கியாகவேண்டும் என டாக்டர் பிடிவாதமாகக் கூறிவிட்டார்.
பாபா பார்த்துக்கொள்வார் என்று
கூறிவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டேன். மீண்டும் பத்து ஊசி என்றால் என்னாவது என
நினைத்து பயந்து அழுது கொண்டு இரவு முழுவதும் உறங்காமல் இருந்ததால், விடியற்காலை ஐந்தரை மணியிருக்கும் நன்றாக உறங்கிவிட்டாள்.
அப்போது அவள் பெயரை ஒரு நர்ஸ் கூப்பிட்டு, உட்காரச் சொல்லி, பத்தாவது
ஊசி போட்டுக்கொள் என்று கூறி, ஊசி
போட்டுவிட்டுச்சென்றிருக்கிறார். அதன் பிறகு என் மனைவி உறங்கிவிட்டாள்.
மீண்டும் ஆறரை மணிக்கு நர்ஸ்
வந்து, ‘பத்தாவது ஊசியைப்
போட்டுக்கொள். ஒன்பது மணிக்கு பெரிய டாக்டரைப் போய் பார்’’ என்றார்.
‘இப்போதுதான் வந்து ஒரு நர்ஸ்
பத்தாவது ஊசியைப் போட்டார். மீ;ண்டும்
கூப்பிடுகிறீர்களே?’
என என் மனைவி சொன்னபோது, ‘மருந்தும் ஸ்டாக் இருந்திருக்காது, நானும் இப்போதுதான் வருகிறேன், போட்டாச்சு என்று சொல்கிறீர்களே!’ என்று அந்த நர்ஸ் கேட்டார்.
‘இப்போது படுக்கையில் வந்து
போட்டார்கள்’
என்று சொன்னதும், ‘சரி, போய் டாக்டரைப்பாருங்கள் என அனுப்பினார். டாக்டரைப் பார்த்தபோது, ‘என்னம்மா, நேற்று வரை இரத்தமில்லை என்று ரிப்போர்ட்
வந்திருக்கிறது, இன்றைக்கு
போதுமான இரத்தம் இருப்பது தெரிகிறதே. தைரியமாக வீட்டுக்குப் போகலாம்.
வலியெடுத்தால் வந்து அட்மிட் ஆகிக்கொள்’
என்று அனுப்பி வைத்தார்.
பிரசவத்திற்கு மருத்துவமனையில்
மனைவியைச்சேர்த்தேன். குழந்தை பெரிதாக வளர்ந்திருக்கிறது. பனிக்குட நீரின் அளவும்
குறைந்திருக்கிறது. அறுவை சிகிச்சைதான் செய்து குழந்தையை எடுக்கவேண்டும் என்றார்கள்.
பாபா கோயிலில் வேண்டிக்கொண்டு,என் மனைவியைப் பார்க்கவந்தேன். அழுது
முகமெல்லாம் வீங்கியிருந்தது. கவலைப்படாதே என்று ஆறுதல் சொன்னேன். பாபா கோயிலில்
இருந்து பிரசாதம் எடுத்து வந்து தந்தேன்.
என் மனைவி, டாக்டர் எதுவும் சாப்பிடக்கூடாது என்றார்கள்
எனக் கூறினாள். ‘ஒரு பருக்கையாவது வாயில் போட்டுக்கொள் என்று கூறி பிரசாதமும் உதியையும்’ கொடுத்து அனுப்பினேன். என் மனைவிக்கு அறுவை
சிகிச்சையில்லாமல் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்குத்தான் பாலாஜீஸ்வரன் என்று
பெயர் வைத்துள்ளோம்.
இதுபோன்று எண்ணற்ற அற்புதங்களை
எங்கள் வாழ்க்கையில் செய்து எங்களைக் காப்பாற்றி வருகிறார் பாபா.
No comments:
Post a Comment