Monday, February 3, 2014

உதவியா? இதோ வந்தாச்சும்மா!

 இன்று நேற்றல்ல. நாகசாயி மந்திரில்  இரண்டாம் முறையாக பாம்பு வந்த காலத்திலிருந்து நான் பாபாவின் தீவிர பக்தை. அப்போது நான் சிறுமி. பாபா ஆலயத்தில் ஜவ்வாது, மிளகு ஆகியவற்றைப் பிரசாதமாகத் தருவார்கள். இதைப் பெறுவதற்காக ஓடுவேன். அந்தக் காலத்திலிருந்து அறிந்திருந்தாலும் பாபாவின் அற்புதத்தை முழுமையாக அனுபவித்தது சமீபத்தில்தான்.
இன்றைக்கு நான் உயிரோடு இருப்பது பாபாவின் அருளால், இந்த பாபா அருள் எப்படி எனக்குக்கிடைத்தது?
கோவையில் பாப்பம்பட்டி பிரிவு, பாரதிபுரம் என்ற இடத்தில் வசிக்கிறேன். என் கணவர் ராமச்சந்திரன். பஞ்சு ஏஜெண்டாகப் பணியாற்றுகிறார். ஒரே மகள் ப்ரீத்தி திருமணமாகி சிங்கப்பூரில் வசிக்கிறாள். பாப்பம்பட்டியில் ஒரு தனியார் பள்ளியின் முதல்வராகப் பணியாற்று கிறேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன் பத்தாம் வகுப்பு மாணவர்கள் பதினெட்டு பேரை ஊட்டிக்கு சுற்றுலா அழைத்துச்சென்றேன். உதவிக்கு இரு ஆசிரியைகள், மற்றும் ஒரு ஆயா ஆகியோர் வந்திருந்தார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் இத்தகைய நிகழ்வுகள் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக நடக்கும். அந்த ஆண்டும் அப்படித்தான், பிரிந்து போகவுள்ள மாணவர்களுக்காக இதைச் செய்தோம்.  மாணவர்கள் வேனில் எழுந்து நின்று ஆடிப்பாடிக்கொண்டிருந்தார்கள். நாங்கள் வெளியே வேடிக்கை பார்த்தபடி வேனில் அமர்ந்திருந்தோம். நான் டிரைவர் பக்கத்தில் உட்கார்ந்திருந்தேன். திடீரென வேன் அலை மோத ஆரம்பித்தது.
டிரைவரிடம்,  “என்ன ஆனது? எனக் கேட்டேன்?
பிரேக் பிடிக்கவில்லை அம்மாஎன்றார்.
நடக்கப் போகிற விபரீதத்தை உணர்ந்த நான், என்ன செய்வது? என்று டிரைவரிடம் கேட்டபோது,
ஏதேனும் ஒரு மண் திட்டு மீதுமோதி வண்டியை நிறுத்த முயற்சிக்கிறேன் என்றார் டிரைவர்.
நடனமாடிக் கொண்டிருந்த மாணவர்களிடம் விஷயத்தைக் கூறி, அவர்கள்  அனைவரையும் கம்பியைப் பிடித்துக் கொண்டு உட்காருமாறு துரிதப்படுத்தி விட்டு, என் அருகிலிருந்த குழந்தையைப் பிடித்துக்கொண்டு உட்கார முற்பட்டேன்.
அதற்குள் வேன் எதன் மீதோ வேகமாக மோதி தலை கீழாக உருள ஆரம்பித்தது. நான் வேனின் பக்கவாட்டுக் கம்பியை பிடித்துக் கொண்டேன். வேன் உருண்டதில் நான் பிடித்துக்கொண்டு இருந்த கம்பி உடைந்ததோடு, என் கையில் இரண்டு விரல்களும் துண்டாகி விழுந்தன. அந்நேரத்திலும் குழந்தைகளுக்கு என்ன ஆனது எனப் பார்த்தேன்.
ஒரு குழந்தைக்குக் கூட அடிபடவில்லை. ஒரே ஒரு டீச்சருக்கு மட்டும் அடி பட்டிருந்தது, அடுத்து எனக்கு. துண்டான விரலில் இருந்து தண்ணீர் பீய்ச்சி அடிப்பது போல ரத்தம் கொட்டத் தொடங்கியது.
மேட்டுப்பாளையம் ரோட்டில் இந்த விபத்து நடந்தபோது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பெரும்பாலான வாகன ஓட்டிகள் எங்களை வேடிக்கை பார்த்தபடி சென்றார்களே தவிர உதவிக்கு வரவில்லை. சற்று நேரத்தில் காவலர்கள் வந்தார்கள்.
குன்னூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் எங்களுக்கு முதலுதவி செய்வதற்காக எங்களைத்தயார் படுத்திக் கொண்டிருந்தார்கள்.  ஏற்கனவே அதிக இரத்த இழப்பால் தளர்ந்து கொண்டிருந்த நான், எங்களை கோவையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்க உதவுமாறு அவர்களிடம் வேண்டினேன்.
முதலுதவி சார்ந்த பார்மாலிடியை குன்னு}ரில் முடிக்காமல் கோவை அனுப்ப முடியாது என்று போலீசார் கூறினார்கள். உயிர் முக்கியமா பார்மாலிட்டி முக்கியமா என அவர்களிடம் விவாதம் செய்தபோது, எங்கள் அருகே ஒரு கார் வந்து நிற்பதைப் பார்த்து, ஏம்ப்பா உங்களுக்கு மனசாட்சியே இருக்காதா?  உயிருக்குப் போராடுபவர்களுக்கு உதவி செய்ய மாட்டீர்களா? என்றேன்.
அந்தக் கார் ஓட்டுநர் கதவைத் திறந்து, காரில் ஏறிக்கொள்ளுமாறு கூறினார். நானும், ஒரு ஆயாவும் ஒரு மாணவனும் அந்தக் காரில் ஏறினோம். இரண்டு ஆசிரியைகளும் ஆட்டோவில் ஏறிக்கொண்டார்கள். வேகமாகச் சென்ற கார், பிரதான சாலையை விட்டு வேறு வழியில் திரும்பி ஓடத் துவங்கியது.  டிரைவர் குறுக்கு வழியில் எங்களை அழைத்துச்செல்கிறார் போலும் என நினைத்தோம். போகப் போக இந்த நினைவு மாறி, பயம் வர ஆரம்பித்தது.
ஒற்றையடிப் பாதை போன்ற மிகக் குறுகலான பாதையில் கார் போய்க்கொண்டிருந்தது. தூரத்தில் கூட ஆள் நடமாட்டமோ, வெளிச்சமோ இல்லை.  நிச்சயமாக இப்படியொரு குறுக்கு வழி இருக்க முடியாது. எதிர் வண்டி வரவும் முடியாது, காரை திருப்பக்கூட முடியாது. ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என உள் மனம் சொல்ல ஆரம்பித்தது.
ஆயாவும்,  “அம்மா, நாம் அணிந்திருக்கும் நகைகளை அபகரிப்பதற்காகவே இந்த டிரைவர் இந்தப் பக்கமாக அழைத்து வருகிறான் போல் இருக்கிறது. இப்படிப்பட்ட பல நிகழ்வுகளைப் பற்றி நாம் கேள்விப் பட்டிருக்கிறோமே என்றார்.
திகைப்படைந்து போன நான்,  என்ன செய்வது எனத் தெரியாமல் ஆயா முகத்தைப் பார்த்தேன். கதவைத் திறந்து குதித்துவிடலாம் என்றாள்.
மாணவனிடம் தகவல் சொன்னால், அவன் குழப்பத்தில் சத்தம் போட்டுக் காரியத்தைக்கெடுத்துவிடுவான் என நினைத்து அவனிடம் சொல்லாமலே கதவைத் திறந்து நாங்கள் இருவரும் குதித்து எழுந்து தலை தெறிக்க ஓட ஆரம்பித்தோம்.
இதை சற்றும் எதிர்பாராத டிரைவர், வண்டியை நிறுத்திவிட்டு எங்களைத் துரத்த ஆரம்பித்தான்.
ஓடு ஓடு என்று ஆயா என்னை துரிதப்படுத்த நானும் ஓடினேன். வேகமாக ஓடியதால், மீண்டும் கையில் இருந்து ரத்தம் பீய்ச்சியடிக்க ஆரம்பித்தது.  என்னால் தொடர்ந்து ஓட முடியவில்லை. உடம்பு தள்ளாட ஆரம்பித்துவிட்டது. நான் இங்கேயே உயிரை விடப் போகிறேன் என முடிவு செய்து கொண்டேன்.
 ஆனால் அந்த ஆயா தைரியசாலி. அம்மா, இன்னும் கொஞச தூரம்தான் எனக் கூறியபடி என்னை இறுக அணைத்து இழுத்துக் கொண்டு ஓடினார். என்னால் முடியவில்லை. பாபா.. என கத்திக் கொண்டு கீழே விழுந்தேன்.
யாரம்மா அது? என்ன வேணும்? என்ற குரல் என் அருகில் கேட்டது. இந்தக் குரலைக்கேட்டதும் எங்களைத் துரத்திய டிரைவர் திரும்பிவிட்டான் போலிருக்கிறது.
நான் செத்துக் கொண்டிருக்கிறேன்.. என்னை விரைவாக மருத்துவமனையில் சேர்க்க ஒரு கார் வேண்டும் என்றேன்.
இதோ வந்தாச்சும்மா என்ற அந்தக் குரல் வந்த திசையைப் பார்த்தேன். என் கால்கள் அருகிலேயே வெளிர் மஞசள் நிற ஜpப்பா அணிந்திருந்த நடுத்தர வயதைத் தாண்டிய நபர் நின்றிருந்தார். அவர் கால்களில் அணிந்திருந்த ஆரஞசு நிற காலணி அந்த இருளிலும் பிரகாசமாக ஒளிவிட்டுக் கொண்டிருந்தது. அவரைப் பார்த்ததும் பாபா என்று உள்மனம் சொல்கிறது. ஆனால் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.
சற்று நேரத்தில் ஒரு ப்ளை மவுத் கார் வந்தது. அதன் கதவைத் திறந்துவிட்ட அவர், “பயப்படாமல் ஏறு.. போய் சிகிச்சை பெற்றுக் கொள்என்று கூறி எங்களை ஏற்றி அனுப்பிவைத்தார்.
குன்னூரிலுள்ள நன் கம் என்ற மருத்துவ மனையில் முதலுதவி செய்யப்பட்டது. அதன் பிறகு ஒரு மருத்துவருடன் ஆம்புலன்சில் வைத்து கோவைக்கு அனுப்பினார்கள். கோவையில் சிகிச்சை பெற்று நலமுடன் திரும்பி வந்தேன்.
என் மாணவனைப் பார்த்தேன்.. சொல்லாமல் குதித்துவிட்டதற்காக வருந்தினேன். நாங்கள் குதித்த பிறகு என்ன ஆனது? நீ எப்படி தப்பித்தாய்?என்று கேட்டேன்..
நீங்கள் கார் கதவைத் திறந்து குதித்ததும், ஏதோ விபரீதம் நடந்துவிட்டது என பதற்றத்துடன் உட்கார்ந்திருந்தேன். அந்த டிரைவர் உங்களைத்துரத்த ஆரம்பித்ததும், நான் நிலைமையை உணர்ந்து கொண்டு காரிலிருந்து தப்பித்து ஓடி செடிகள் மறைவில் பதுங்கிக் கொண்டேன்.
உங்களைத் துரத்திய அவன், தூரத்தில் ஆட்கள் இருப்பதைப் பார்த்துவிட்டு, காருக்குத் திரும்பி என்னைத் தேடிப் பார்த்தான். நான் இல்லை என்பதை தெரிந்துகொண்டு காரை எடுத்துக் கொண்டு போய் விட்டான்.. உங்களை பார்க்க முடியாததால் நான் தப்பித்து வீட்டுக்கு வந்துவிட்டேன்என்றான்.
இன்றுவரை அந்த நிகழ்ச்சியை என்னால் மறக்க முடியாது. ஆள் நடமாட்டமற்ற அந்த இடத்தில் எப்படி ஒரு ஆள் வந்தார்?  ப்ளை மவுத் கார் எங்கு இருந்து வந்தது? நான் எப்படி காப்பாற்றப்பட்டேன் என்பது ஆச்சரியமாகவே இருக்கிறது.
நான் இடையறாது வணங்குகிற எனது பாபா, என்னை அற்புதமாகக் காப்பாற்றினார் என நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.
எத்தகைய பிரச்சினைகள் வந்தாலும் எந்த வடிவிலாவது வந்து தன் பக்தனைக் காப்பதை பரம தியானமாக வைத்துள்ள அந்த பகவானுக்கு
நமஸ்காரம்.



       ஜெகஜோதி கோவை

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...