Wednesday, February 26, 2014

எங்கே தீர்வு உடனே கிடைக்கும் எனத் தேடி ஓடாதே!

குரோம்பேட்டை ரமா அம்மையார் என்னிடம் அடிக்கடி கேட்கிற ஒரு கேள்வி!
     ‘உங்களிடம் எல்லா இறை சக்தியும் இருக்கும் போது பக்தர்களை எதற்காக அங்கே செல்லுங்கள், இங்கே செல்லுங்கள் என அலைக்கழிக்கிறீர்கள்? இது சரியா? அதை விட நீங்களே இதை குணப்படுத்திவிடலாமே! என்பார்.
     வேதங்கள், சாத்திரம், உபநிக்ஷத்துக்கள் மற்றும் உள்ள சாஸ்திரங்களில் புலமையுள்ள நீங்கள் என்னைத் தவிர வேறு யாரையும் பார்க்கப் போவது இல்லை, அப்படி யிருந்தும் உங்கள் பிரச்சினை ஏன் சரியாவது இல்லை?
     நமது கர்மாவை நாம் அனுபவித்தே தீரவேண்டும்! அதிலிருந்து தப்பிக்க முயற்சிக்கக் கூடாது. என்னிடம் வருவோர், தங்கள் லவுகீகத்தின் நலன் கருதியே வருகிறார்கள். என்னையும் அதிலேயே தங்கவைத்துவிடுகிறார்கள். என்னை உணராதவர்கள் என்னிடம் வருகிறார்கள், நான் விரும்பாததை என்னிடம் கேட்கிறார்கள் என அடிக்கடி நினைத்துக் கொள்வேன். ஆனாலும், இவர்களை தாண்டி என்னால் போக முடியவில்லை.
     பயந்தோடவும் முடியாமல், மேலே நடக்கவும் முடியாமல் வழுக்கு மரத்தில் சறுக்கிக் கொண்டிருக்கும் நிலையில் இருக்கிறேன். ஆனால், ஒரு நாள் நிச்சயம் ஆன்ம அனுபூதியை அடைந்தே தீருவேன்.
     என்னையே நம்பி என்பால் லயமாகிற பக்தனின் தேவைகளை நான் கவனித்துக் கொள்கிறேன் என்று பாபா கூறுவாரே, அதுபோல, என் மனதில் உள்ள பக்தனுக்காக நான் இரவு பகலாக பிரார்த்தனை செய்துகொள்வேன்!’’ என்று கூறுவேன். யாரையும் அலைக் கழிப்பது கிடையாது. நான் சொல்வதை அவர்கள் ஏற்கப் போவதுமில்லை. பகட்டாகவும், உணர்வு அல்லாமல் உடையிலும், உடலிலும் ஆன்மீகச் சின்னங்களை தரித்தவர்கள் யாராக இருந்தாலும் அவர் களை நம்பி ஏமாறுவதே இந்த மக்களின் வாடிக்கை.
     அவர்களிடம், ‘பாபாவை நம்பி காத்திரு, அவர் உங்கள் பிரச்சினையைத் தீர்ப்பார் என்றால், கேட்பது இல்லை. அதனாலேயே அவர்களை அனுப்புகிறேன். கர்மாவை அனுபவித்துதான் தீர வேண்டும் என்றால் கடவுளும் குருவும் எதற்காக?
     கர்மா என்பது கடந்த காலத்தில் பயன்கள். போன ஜென்மத்தில் நாம் செய்தவற்றின் விளைவுகளை இந்த ஜென்மத்தில் அனுபவிக்கிறோம். பள்ளியில் நன்றாகப் படித்தவன் கலெக்டர் உத்தியோகம் பார்க்கிறான்.
     அவனோடு பள்ளிக்கு வந்த இன்னொருவன் ரோட்டில் இளநீர் விற்கிறான். காரணம் என்ன? இருவரும் பள்ளிக்கு வந்தார்கள், ஒருவன் படித்தான், இன்னொருவன் வந்து போனான்.. அவ்வளவுதான். அன்று படித்த பலனை இன்று அவன் அனுபவிக்கிறான், படிக்காததன் பலனை இவன் இன்று அனுபவிக்கிறான். இதுதான் கர்ம பலன்.
     விவரம் தெரியாமல் விட்டுவிட்டேன், மன்னித்து என்னை கலெக்டர் ஆக்கு கடவுளே என்றால், கடவுள் என்ன செய்ய முடியும்? மகனே! உனக்கு தகுதியில்லை. வயதுமில்லை.. அதையெல்லாம் கடந்துவிட்டாய்.. வேண்டுமானால், உனக்கு வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்து உன்னை பாதுகாக்கிறேன்.. உன் பிள்ளைகளை உருவாக்கு.. அவர்களை கலெக்டர் ஆக்கி, உன்னை கலெக்டரின் தந்தையாராக ஆக்குகிறேன்.. என்பான். இதுதானே நியாயமானது.
     எத்தனையோ அற்புதத்தை செய்கிற கடவுள் இதை செய்யக்கூடாதா எனக் கேட்கலாம்..நமக்கு அவர் நிறைய வாய்ப்புகளைக் கொடுத்தார். நாம் அவற்றைப் பயன்படுத்திக்கொள்வதைப் பொறுத்து நம் கர்மா தீர்மானிக்கப்படுகிறது. நன்மையும் தீமையும், நல்லதும் கெட்டதும் நம்மிடம்தான் இருக்கிறதே தவிர, கடவுளுக்கும் இதற்கும் சிறிதும் தொடர்பேயில்லை.
     உனக்கு இன்றைக்கு லீவு தருகிறேன். உன் லீவு நாளில் வந்து வேலையைச் செய்துகொடு என்று அலுவலகத்தில் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள்.
     அப்படித்தான்.. இன்றைக்கு குருவருளால் உங்கள் கர்மா தள்ளிப்போடப்படலாம். ஆனால் ஒரு நாள் அதை நீங்கள் அனுபவித்தே ஆகவேண்டும். குருவும் கடவுளும் உங்கள் சுமைகளைச் சுமக்க உதவி செய்து இளைப்பாற்றுவார்கள். சுமை தெரியாமல் உங்களை நடக்கவைப்பார்கள். அடுத்தஜென்மத்திற்காக உங்களை தயார் செய்வார்கள்.
     அப்படியானால், என்னைப் பார்க்க வந்தாலும், யாரைப் பார்க்க வேண்டும் என்றாலும், உடனடியாக மாயா ஜாலத்தை எதிர்பார்க்கக்கூடாது. நம்மில் ஏற்படுகிற மாற்றம் நமக்கு மாற்றத்தை உண்டாக்கும் என்பதை உணர்ந்து மாற்றத்தை முதலில் உங்கள் மனதில் கொண்டு வரவேண்டும்.
     சென்னை கொளத்தூரிலிருந்து ஒரு சாயி பக்தை என்னை நம்பி வந்தார். அவரது இரு வயது குழந்தையைக் கூட ஒருநாளும் அவர் கொஞ்சியதே கிடையாது, கணவருடன் அன்பாக இருந்ததில்லை. ஐந்து வருடங்களாக குடும்பத்தில் நிம்மதி என்பது சிறிதும் இல்லை.. என்று வந்தார். ஏதோ பூர்வ கடன் என்பதைப் போல, அவர்களுக்காகப் பிரார்த்தித்து அவர்களுக்கு உதியைக் கொடுத்து அனுப்பினேன்.
     ஐந்து வருடங்களுக்குப் பிறகு அவர்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள்.. அந்தப் பிரச்சினைகளின் பாதிப்புகள் ஒரே மாதத்திற்குள் என்னை ஆட்டி வைத்தது. அந்த மகளின் கடந்த கால அறிகுறிகள் அனைத்தும் என் உடலில் ஏற்றப்பட்டது. இது கடவுளால் மாற்றப்பட்ட விக்ஷயம். அவர் என்னை குருவாக முழு மனத்தோடு மதிப்பதால் அவருக்குக் கிடைத்த நன்மை.
     எல்லாருக்கும் இப்படி நடக்குமா என்றால், அது எனக்குத் தெரியாது. அவர்களின் நம்பிக்கையைப் பொறுத்தது அது. வின்னி சிட்லூரி அம்மையார் எழுதிய பாபாவின் ருணானுபந்தம் என்ற புத்தகத்தில் ஒரு தகவலை குறிப்பிட்டிருக்கிறார்.
     பாபா தேகத்தோடு வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த ஒருவர் பாலகிருஷ்ண கேசவ் வைத்யா. ரத்னகிரி மாவட்டத்தில் ராஜபூர் நகரத்திற்கு அருகேயுள்ள பாட்காவோன் என்ற கிராமத்தில் வசித்தவர். ஏழை மற்றும் பின்தங்கிய மக்களுக்கு ஆன்மீகத்தை போதித்த இவரை, அந்தப் பகுதி மக்கள் மிகவும் மதித்துப் போற்றினார்கள். பல மக்கள் இவரை பேய் ஓட்டுபவர் என்றே சொன்னார்கள். இவரும் பாபாவும் சம காலத்தவர்கள் என்றாலும், ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டதே கிடையாது.
     இந்தக் காலக்கட்டத்தில் மும்பையைச் சேர்ந்த ஒருவருக்கு பேய் பிடித்து மிகவும் தொந்தரவு செய்து கொண்டிருந்தது. என்னென்னவோ செய்தும் ஒன்றும் முடியவில்லை. பாதிக்கப்பட்டவரை கயிற்றால் கட்டிவைக்கவேண்டிய நிலை. இந்த நிலையுடன் அவரை சீரடிக்கு அழைத்து வந்தார்கள். அவரைப் பார்த்ததும், அரே.. மிகவும் சக்தி வாய்ந்த பேய் இவரைப் பிடித்திருக்கிறது. என்னால் இதை ஒன்றும் செய்யமுடியாது. பாட்காவோனில் உள்ள தாதா மகராஜீடம் அழைத்துச் சென்று, நான் அனுப்பியதாகச் சொல்லுங்கள் என்றார்.
     அந்தக் குடும்பத்தார் பதினைந்து நாட்கள் பயணம் செய்து பாட்காவோனை அடைந்து பாபா குறிப்பிட்ட நபரைப் பற்றி விசாரித்தார்கள். அவரைப் பார்த்ததும் ஆச்சரியம்!
     அவர் சந்நியாசிக்கு உரிய எந்த வித உடையும் உடுத்தாமல் சாதாரணமாக இருந்தார். பாபா அனுப்பிய விவரத்தைச் சொன்னார்கள். அந்த நோயாளியை எட்டு நாட்கள் தங்கவைத்து பேயை ஓட்டினார் பால கிருஷ்ணா.
     ஒரு சமயம் சில பக்தர்கள் பாட்காவோனுக்கு சென்று பால கிருஷ்ணா மகராiஜ தரிசித்த பிறகு சீரடிக்குச் செல்வதாக முடிவு செய்திருந்தார்கள். இதை அறிந்த பால கிருஷ்ணா, வெள்ளிச் சரிகை போட்ட ஒரு துணியைக் கொடுத்து, இதை பாபாவிடம் சேர்த்துவிடுங்கள். நமஸ்காரம் செய்யுங்கள். ஆனால் எதைப் பற்றியும் சொல்ல வேண்டாம் எனக் கூறி அனுப்பினார்.
     அந்த பக்தர்கள் பாபாவை தரிசித்த பிறகு, இந்தத் துணியை பாபாவின் கைகளில் வைத்தார்கள். இதைப்பெற்றுக்கொண்ட பாபா, மகிழ்ச்சியால் நடனமாடத்தொடங்கினார். மசூதியில் இருந்தவர்களிடம், என் பாலா எனக்காக வெள்ளிச் சரிகை போட்ட தோதியை அனுப்பியிருக்கிறான் என்று மகிழ்ச்சியோடு கூவியபடியே அதை தலையில் கட்டிக் கொண்டார்.’’
     இந்த விக்ஷயத்தை கவனியுங்கள். பாபா மிகவும் சக்தி வாய்ந்தவர். எல்லா தேவர்களும் கைவிட்ட போதிலும் கைவிடாதவர் பாபா. அவர் எதற்காக இன்னொருவரிடம் அனுப்பவேண்டும்? இவரே பேய் ஓடச்செய்திருக்கலாம் அல்லவா? நாம் சில விக்ஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். எல்லாமே பாபா.. எல்லோருமே பாபா. இதில் பேதம் கூடாது. அடுத்து, யாருக்கு எங்கு நடக்கவேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறதோ அங்கு கண்டிப்பாக நடக்கும்.
     நரசிம்ம சுவாமிஜீ பகவான் ரமணரிடமோ, உபாசினி மகராஜீயிடமோ இருந்திருக்கலாம். பாபாவிடம் போகக் காரணம் ஒன்று இருந்ததல்லவா? அப்படித்தான் மக்கள் போவதற்கும், அனுப்பப்படுவதற்கும் காரணம் நிச்சயமாக இருக்கும்.
     எனக்குத் தெரிந்த ஒரு பிரமுகர் பிரார்த்தனை மையத்திற்கு வந்திருந்தார். அதைப் பற்றி ஒருவர் குறிப்பிடும்பொழுது, எங்கெல்லாம் இப்படி அற்புதம் நடக்கிறது எனக் கேள்விப்படுகிறாரோ அங்கெல்லாம் ஓடுவதிலே இவருக்கு நிகர் யாரும் கிடையாது என்றார். இவரைப் போல, பலர் இப்பொழுதெல்லாம் நிறைய பிரச்சினைகளில் சிக்கிக்கொள்கிறார்கள்.
     அவர்கள் தீர்வு எங்கே உடனே கிடைக்கும் எனத் தேடுவதி லேயே குறியாக இருக்கிறார்கள். இதனால் அவர்கள் ஓடிக்கொண்டே இருப்பார்கள். என்னிடம் வந்தார்கள், சரியானார்கள் என்று சொல்வதற்கு எனக்கு உரிமையில்லை. ஏனெனில், நான் மாயை வசப்பட்ட மனிதன். என் எதிர்காலம் என்னவென்றே தெரியாதவன். எனக்கு எப்போது நல்லது நடக்கும் என்பதில் நிச்சயம் தெரியாதபோது, பிறருக்கு என்னால்தான் எல்லாம் நடந்தது எனக்கூறக்கூடாது.
     ஒருவருக்கு எப்போது அனுகூலமான நேரம் அமைகிறதோ, பகவான் அருள் பூரணமாகக்கிடைக்கிறதோ, அப்பொழுது அவர்கள் ஒருவரிடம் செல்வார்கள். எனவே, அவரை விடுவிப்பது இறையருளே தவிர, நமது தெய்வீக சக்தியல்ல.

     இதைப் புரியாத சிலர், எல்லாம் என்னால் நடக்கிறது என சொல்லிக்கொள்வார்கள். நமது கடன் பணி செய்வது, இறைவன் வேலை நமக்கு அருள் செய்வது. அது போதும்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...