Wednesday, February 12, 2014

நான் உனக்குள் இருக்கிறேன்! நீ எங்கே இருக்கிறாய்?


சென்னை தியாகராய நகரிலிருந்து நண்பர் சுரேஷ், பகவத் கீதையில் பகவான், நான் உன்னோடு இருக்கிறேன், ஆனால் நீ என்னோடு இல்லை என்பது போல கூறியிருக்கிறாரே! இதன் பொருள் என்ன?எனக் கேட்டார்.
     அன்றாட வாழ்க்கையில் ஆயிரத்தெட்டு விஷயங்கள் உள்ளன. அவற்றில் கவனம் செலுத்தவே நமக்கு நேரம் போதவில்லை என்ற நிலையில் இருக்கும் நாம், கடவுளை நினைக்க மறந்துவிடுகிறோம்.
     உலக சுகத்தில் மாட்டிக் கொண்டுள்ள ஜீவன்கள், இந்த உலக விஷயங்கள் மீது மட்டுமே கவனம் செலுத்துகிறார்களே தவிர, கடவுளை நினைக்க மாட்டார்கள். ஒருவேளை கடவுளைப் பார்க்கப் போவதுகூட, தன் கஷ்ட நிவர்த்திக்கும், இஷ்டங்கள் நிறைவேறுவதற்கும் தானே தவிர, கடவுளை மனதார நினைத்து அவன் நினைவிலேயே வாழ்வதற்காக கிடையாது.
     நமக்கு ஆயிரத்தெட்டு விஷயங்கள் உள்ளன. அதில் கவனம் செலுத்தச்செல்வதால் மனதால் கடவுளை விட்டு ஒதுங்கியிருக்கிறோம். இதை பைபிள் அழகாகக் கூறுகிறது.
     இந்த ஜனங்கள் உதடுகளால் என் நாமத்தை உச்சரிக்கிறார்கள். ஆனால் உள்ளத்தால் என்னை விட்டு தூர ஒதுங்கியிருக்கிறார்கள் என்று.
     ஆனால், பகவான் அப்படியில்லை. அவருக்கு ஒரே ஒரு நினைவுதான். அவரது படைப்பான நம்மை நினைப்பது.  தான் அதிகம் விரும்புகிற, தான் அதிகம் நேசிக்கிற தனது படைப்பான தன் பிள்ளைகள் நினைவாகவே இருப்பதால் எப்போதும் அவர்களோடு இருக்கிறான்.
     பாபா தன்னை தன் பக்தனின் அடிமை என்று சொல்கிறார்.  நாம் அவரோடு இருந்தால், அவரைப் போல இருப்போம். அல்லது அவரைப் போல மாற முயற்சிப்போம்.
     அவர் எப்படிப்பட்டவர்? அவர் பிரகாசிக்கிற எந்த வெளிச்சத்தைக் காட்டிலும் தூய்மையானவர். அவரிடத்தில் சிறிதும் மன மாசு இல்லை. அவரது அன்பு உண்மையானது.
     அதனால்தான் சாயீ எனக் கூப்பிட்டால் ஓடி வந்து விடுகிறார். நான் உன் மலத்திலுள்ள புழு.. உனக்காக என் உயிரையும் கொடுப்பேன் என்று கூறுகிறார். அவர் களங்கம் இல்லாதவர், பொய்மை இல்லாதவர், புறம் சொல்லாதவர், பொறாமை கொள்ளாதவர், வஞ்சனையற்றவர், வாய்மை மாறாதவர், துரோகம் செய்யாதவர், பொறுமை உள்ளவர்.. நம்பிக்கை மிக்கவர், களவு செய்யாதவர், தயவு தாட்சண்யம் உள்ளவர், நற்குணங்கள் உள்ளவர், எதன் மீதும் ஆசைப்படாதவர், எப்போதும் சாந்தமுள்ளவர். இன்னும் என்னவெல்லாம் நல்ல விஷயங்கள் உள்ளனவோ அனைத்துக்கும் அவர் தான் சொந்தக்காரார்.
     ஆனால் நாம் அப்படியா? நிச்சயமாக இல்லை. பிறகு எப்படியிருக்கிறோம்? அவருக்கு நேர் மாறானவர்களாக இருக்கிறோம். அசுத்தமான சிந்தனை, விரோதம், பகைத்தல், கோப தாபங்கள், சண்டைகள், பிரிவினைகள், பொறாமை, வெறி, உள்ளத்தில் ஒன்று, உதட்டில் ஒன்று என இரட்டை வேடம் போடுகிறவர்களாக இருக்கிறோம்.
     ஒருவன் தாழ்ந்து போனால், நீ பாபாவைக்கும்பிடு, அவர் உன்னை உயர்த்துவார் என்போம்.  அவன் உயர்ந்துவிட்டால் அவன் மீது பொறாமைப்படும் முதல் ஆளாக நாம்தான் இருப்போம்.
     ஒருவன் மாற வேண்டும் என நினைத்து போதிப்போம், அவன் மாறிவிட்டால்,  “நேரத்தைப் பார்த்தாயா? என்ன சிலாக்கியம்? என்று பின்னால் சொல்வோம்.
     எல்லாம் இவரால் நடந்தது என அவர் முகத்துக்கு நேராக சொல்வோம். பின்னால் புறம் பேசுவோம். நான் இல்லாவிட்டால் இவர் வந்திருக்க முடியுமா என தற்பெருமை பேசுவோம்.
     பாபாவை வணங்குகிற ஒருவர், திடீரென சறுக்கி விழுந்தாலோ, நோயில் விழுந்தாலோ அவர் ஏதோ பாவம் செய்துவிட்டார், அதனால்தான் இப்படி சிக்கிக்கொண்டு அவஸ்தைப் படுகிறார் என நா கூசாமல் சொல்வோம். ஆனால் நாம் எப்படி என்பதை நினைத்துக்கூட பார்க்கமாட்டோம்.
     ஒருவர் ஒரு தொழில் செய்ய ஆரம்பிக்கும் போது, இது தேறாது என்போம் அல்லது தேறுவதற்காகப் பிரார்த்தனை செய்வதாகச் சொல்வோம். அவர் அந்தத் தொழிலில் சறுக்கிவிட்டால், நான் அப்போதே சொன்னேன்.. என் பேச்சைக் கேட்கவில்லை என உபதேசம் செய்வோம். அவர் முன்னேறிவிட்டால், நேர்மையாகவா முன்னேறினார்.. அடுத்தவரை அடித்துப் பிடுங்கித்தானே முன்னேறினார் என விமர்சனம் செய்வோம்.
     கோயில் கட்டுவதாக இருந்தால்கூட,  பாபா உங்களோடு இருக்கிறார் என்போம். கோயில் கட்டி அது நட்டப்படாமல் நடக்க திட்டங்கள் போட்டால், கோயில் கோயிலாக நடக்கவில்லை, கமர்சியல் சென்ட்டராக நடக்கிறது என்போம்.
     இப்படி எந்த ஒன்றையும் முதலில் புகழ்ந்து பிறகு இகழ்வது என்பதெல்லாம் மனதின் மாறுபட்ட நிலைகள். இருப்பவன் மீது எந்தப் புகழையும் ஏற்றி வைக்க, மனிதன் மனம் ஒப்புக்கொள்ளாது.
     ஆகவேதான் செத்தவன் மீதே அனைத்துப் புகழையும் சுமத்துவார்கள் என்று சான்றோர் கூறுவார்கள். இப்படிப்பட்ட நிலையில் நாம் கடவுளை விட்டு தூர விலகிப்போகிறோம்.
     எப்போதும் பகவானுடன் நாம் இருக்க வேண்டும் என்றால், சதா அவனது திருநாமத்தை மனதால் தியானித்துக் கொண்டிருக்க வேண்டும். சகல ஜீவ ராசிகளையும் அவனாகப் பார்க்க வேண்டும், ஜீவ ராசிகளில் அவனைப் பார்க்க வேண்டும். தன்னை அவனாக நினைத்து பிறருக்கு உதவி செய்ய வேண்டும்.. வாழ வேண்டும். நம் வேலை என்னவோ அதைப் பார்த்துக்கொண்டு இறைவனை நம்பி வாழ வேண்டும்.

     அடுத்தவர் மீது பொறாமைக் கொள்வதையும், புறம் கூறுவதையும் தவிர்த்துவிட வேண்டும். கூடுமானவரை நல்லவர்களாக வாழவேண்டும். இப்படி நல்லவராக வாழ நினைக்கும்போது, நிச்சயம் நமக்கு கடவுள் நினைவு எப்போதும் இருக்கும். நாமும் கடவுளோடு இருப்போம்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...