Monday, May 14, 2018

திருமதி. ஔரங்கபாத்கர்



ஸோலாபூரைச் சேர்ந்த சகாராம் ஔரங்கபாத்கர் என்பாரின் மனைவிக்கு 27 ஆண்டு காலமாகக் குழந்தையேயில்லை.  கணக்கற்ற பிரார்த்தனைகளை அவள் பல்வேறு கடவுளர்களிடமும், அம்மன்களிடமும் செய்துகொண்டாள்.  ஆனால் வெற்றி பெறவில்லை.  இதனால் அவள் பெருமளவு நம்பிக்கை இழந்தவளாக ஆனாள்.  இவ்விஷயத்தில் இறுதியான முயற்சியாகத் தனது சகோதரியின் புதல்வனான விஸ்வநாத்துடன் ஷீர்டி வந்து பாபாவுக்குச் சேவை செய்துகொண்டு இரண்டு மாதங்கள் தங்கியிருந்தாள்.  மசூதிக்கு அவள் சென்ற போதெல்லாம் கூட்டத்தால் மசூதி நிரம்பி இருப்பதையும், பாபா பக்தர்களால் சூழப்பட்டிருப்பதையும் கண்டாள்.
அவள் அவரைத் தனியாகக்கண்டு வீழ்ந்து வணங்கித் தனது இதயத்தைத் திறந்து பிள்ளை வரம் வேண்ட விரும்பினாள்.   ஆனால் உரிய சந்தர்ப்பம் கிடைக்கவே இல்லை.  முடிவாக பாபா தனியாக இருக்கும் போது தனக்காகப் பேசும்படி ஷாமாவிடம் கேட்டுக்கொண்டாள்.  ஷாமா அவளிடம் பாபாவின் தர்பார் வெளிப்படையானது என்றும், எனினும் அவளுக்காகத் தான் முயற்சிப்பதாகவும், கடவுள் அவரை ஆசீர்வதிக்க வேண்டும் என்றும் கூறினார். 
தேங்காயுடனும், ஊதுபத்தியுடனும் முன்னிருக்கும் திறந்தவெளியில் பாபாவின் உணவு நேரத்தில் தயாராக இருக்கும்படியும், அவர் அவளுக்கு ஜாடை காண்பித்ததும் வரவேண்டும் என்றும் கூறினார்.  ஒருநாள் உணவுக்குப்பின் பாபாவின் ஈரக்கையை ஷாமா துண்டால் துடைத்துவிட்டுக் கொண்டிருந்தார்.  பாபா அப்போது அவர் கன்னத்தைக் கிள்ளிவிட்டார்.
ஷாமா: (பொய்க்கோபத்துடன்) தேவா இந்த மாதிரி என்னைக் கிள்ளுவது சரியா?  இந்த மாதிரி கிள்ளிக் குறும்பு செய்யும் கடவுள் எங்களுக்குத் தேவையில்லை.  நாங்கள் உங்களையே சார்ந்து இருப்போரல்லவா?  இதுதான் எங்களது நெருக்கமான உறவின் பலனா?
பாபா: ஓ! ஷாமா, கடந்த 72 தலைமுறைகளாக நீ என்னுடன் இருக்கிறாய்.  இதுவரை உன்னை நான் கிள்ளியதில்லை.  இப்போது நான் உன்னைத் தொட்டதைக் குற்றமாகக்கொண்டு கோபித்துக் கொள்கிறாயே?
ஷாமா:  எங்களுக்கு எப்போதும் முத்தங்களையும், உண்பதற்கு இனிப்புக்களையும் கொடுக்கும் ஒரு கடவுளையே நாங்கள் விரும்புகிறோம்.  தங்களிடமிருந்து எந்த மரியாதையையோ, மோக்ஷத்தையோ, புஷ்பக விமானம் முதலானவற்றையோ நாங்கள் வேண்டவில்லை. தங்கள் பாதாம்புயத்தின்பால் எங்களது நம்பிக்கை எப்போதும் மிக நன்றாக தெளிந்த விழிப்பு நிலையில் இருக்கவேண்டும், அதற்கு ஆசீர்வதியுங்கள்.  
பாபா:  ஆம் உண்மையில் அதற்காகவேதான் நான் வந்திருக்கிறேன்.  நான் உங்களுக்கு உணவூட்டிப் பேணி வளர்த்து வருகிறேன்.  உங்கள் மீது அன்பும், பாசமும் பூண்டிருக்கிறேன்.
இதன் பின்னர் பாபா தமது இருக்கையில் போய் அமர்ந்தார்.  ஷாமா அப்பெண்மணிக்கு ஜாடை செய்தார்.  அவள் மேலே வந்து வணங்கி தேங்காய், ஊதுபத்தி இவைகளை பாபாவிடம் அளித்தாள்.  பாபா அந்த முற்றல் தேங்காயை ஆட்டினார்.  அதனுள்ளிருந்த பருப்பு உருண்டு சப்தம் செய்தது. 
பாபா: ஷாமா இது உருளுகிறதே, என்னசொல்கிறதென்பதைக் கவனி. 
ஷாமா:  இப்பெண்மணி, அம்மாதிரியாகவே ஒரு குழந்தையும் தனது வயிற்றில் உருண்டு உயிர்ப்புற வேண்டுமென்று வேண்டுகிறாள்.  எனவே அத்தேங்காயைத் தங்களது ஆசீர்வாதத்துடன் கொடுங்கள். 
பாபா: இத்தேங்காய் அவளுக்கு மதலையளிக்குமா?  இம்மாதிரி விஷயங்களில் எல்லாம் ஜனங்கள் எவ்வளவு முட்டாள்தனமாகவும், போலி நம்பிக்கையுடனும் இருக்கிறார்கள்.
ஷாமா:  தங்களது மொழி, ஆசி இவைகளின் சக்தியை நானறிவேன்.  தங்களது சொல் அவளுக்கு குழந்தைகளின் தொடரையே அளிக்கும்.  நீங்கள் விவாதித்துக்கொண்டிருக்கிறீர்களே தவிர உண்மையான ஆசியை அளிக்கவில்லை.
விவாதம் கொஞ்சநேரம் நடந்துகொண்டு இருந்தது.  பாபா தேங்காயை உடைக்கும்படி மீண்டும் மீண்டும் ஆணையிட்டுக்கொண்டிருதார்.  ஷாமாவோ முழுத் தேங்காயையும் அப்பெண்மணிக்கே அளிக்கும்படி விவாதித்துக்கொண்டிருந்தார்.  முடிவாக பாபா சம்மதித்தார். 
பாபா: அவளுக்கு ஒரு குழந்தை பிறக்கும்
ஷாமா:  எப்போது?
பாபா:  12 மாதங்களில்
இதன்பேரில் தேங்காய் இரண்டாக உடைக்கப்பட்டு ஒரு பகுதியை இருவரும் உண்டனர்.  மறுபகுதி அவளிடம் அளிக்கப்பட்டது.  பின்னர் ஷாமா அப்பெண்மணியின் பக்கம் திரும்பி "அன்புள்ள அம்மையே! நீ எனது மொழிகளுக்கு ஒரு சாட்சி.  பன்னிரண்டு மாதங்களுக்குள் உனக்குக் குழந்தை ஏதும் பிறக்காவிட்டால் ஒரு தேங்காயை இந்த தெய்வத்தின் (சாயிபாபாவின்) தலையின் மீது அடித்து அவரை மசூதியிலிருந்து வெளியே விரட்டி விடுவேன்.  இதை நான் செய்யத் தவறுவேனாயின் என்னை மாதவ் என்று நானே அழைத்துக்கொள்ள மாட்டேன்.  நான் கூறுவதை நீ விரைவில் உணர்வாய்" என்று சூளுரைத்தார்.

அவள் ஓராண்டுக்குள் ஒரு புதல்வனைப் பெற்றெடுத்தாள்.  புதல்வனது ஐந்தாவது மாதத்தில் அவனை மசூதிக்கு எடுத்துவந்தாள்.  கணவன், மனைவி இருவரும் பாபாவின் முன்னால் வீழ்ந்து வணங்கினார்கள்.  நன்றியுள்ள அத்தகப்பனார் ரூ.500ஐ அன்பளிப்பாகச் சமர்ப்பித்தார்.  ஷ்யாம் கர்ணா என்ற பாபாவின் குதிரைக்கு ஒரு கொட்டகை கட்டுவதற்காக அத்தொகை செலவிடப்பட்டது.                    
                                                                                              சாயி சத்சரிதம் அத்தியாயம்-36

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...