Friday, May 11, 2018

சாயியின் அருள்



ஸாயீயினுடைய அருள், பல ஜன்மங்களில் நாம் முன் செய்த தவத்தால் கிடைத்த பயன். தாகத்தால் தவிக்கும் பயணி, தண்ணீர்ப்பந்தலைக் கண்டவுடன் மகிழ்ச்சியடைவது போல் நாம் மகிழ்ச்சியடைகிறோம்.
சுவையுணர்வு பலவித ருசிகளையும் வாசனைகளையும் விரும்பியதுபோல் பார்வையாளர்களுக்குத் தெரிந்தபோதிலும், அவருடைய நாக்கு, சுவையே அறியாததால், அவருக்கு அந்த உணர்வே கிடையாது.
புலன்களுக்கு ஆசையே இல்லாதபோது அவற்றிடமிருந்து வரும் இன்பங்களை அவர் எவ்வாறு அனுபவிக்க முடியும்? அவ்வின்பங்களுக்குப் புலன்களை உசுப்பிவிடக் கூடிய சக்தியே இல்லாதபோது அவர் எப்படி அத்தளைகளில் மாட்டிக்கொள்வார்?
கண்கள் எதிரில் வந்ததைப் பார்த்தன; ஆனால், அவருக்கு எதையும் பார்த்த உணர்வு ஏற்படவில்லை. ஏனெனில், அவருக்கு எதையும் பார்த்து என்னவென்று தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆசை இல்லை.
ஹனுமார் லங்கோடுடன் பிறந்தார் என்பதும் (பிரம்மசரியத்தின் அடையாளம்) அவருடைய தாயாரையும் ஸ்ரீராமரையும் தவிர வேறு எவருமே அதைப் பார்த்ததில்லை என்பதும் புராண வரலாறு. பிரம்மசரியத்தில் ஹனுமாருக்கு ஈடாக வேறெவரைச் சொல்லமுடியும்?
தாயே பிறவி உறுப்புகளைப் பார்த்ததில்லை என்று சொல்லும்போது மற்றவர்களைப்பற்றி என் சொல்வது? பாபாவினுடைய பிரம்மசரியமும் அவ்வாறானதே; பூர்ணமானது; அபூர்வமானது.
அவர் எப்பொழுதும் இடுப்பில் ஒரு லங்கோடு உடுத்திக்கொண் டிருந்தார். சிறுநீர் கழிப்பதைத் தவிர பிறவி உறுப்புக்கு வேறு வேலையே இல்லை. ஆடுகளின் தொண்டைக்கருகில் தொங்கும் இரண்டு சதைக்கோளங்களைப் போல, இருக்கவேண்டும் என்பதற்காகவே இருக்கும் உறுப்பைப் போன்ற நிலைமை.
பாபாவினுடைய பௌதிக உடலைப் பொறுத்தவரை இதுதான் நிலைமை. உடல் உறுப்புகள் அனைத்தும் அவற்றின் வேலைகளைச் செய்தாலும், புலனின்பங்களை நாடும் எந்தவிதமான ஆசையும் இல்லை; ஆசைகள்பற்றிய விழிப்புணர்வே இல்லை.
ஸத்துவம், இராஜஸம், தாமஸம், ஆகிய மூன்று குணங்களும் அவருடைய உடலுறுப்புகளில் இருப்பதுபோல் வெளிப்பார்வைக்குத் தெரிந்தது; செயல் புரிபவரைப்பற்றற்றவராகவும், தூயஞானத்தின் உருவமாகவும், தம்மிலேயே லயித்தவராகவும் இருந்தார். காமமும் குரோதமும் அவருடைய காலடிகளில் ஓய்வெடுத்தன. அவர் ஆசையற்றவராகவும் எல்லா விருப்பங்களும் பூரணமாக நிறைவேறியவராகவும் இருந்தார்.
உலக விவகாரங்களே பிரம்மமாகத் தெரியும் முக்திநிலையில் அவர் இருந்தார். பாவ புண்ணியங்களுக்கு அப்பாற்பட்ட, பூரணமான நிவிர்த்தி நிலை அது.  தேஹாபிமானமே இல்லாத பாபா, மக்களுக்குள்ளே வித்தியாசம் பாராட்டுவதைக் கனவிலும் கருதவில்லை.
நானாவல்லீ ஆசனத்திலிருந்து எழுந்திருக்கச் சொன்னபோது, உடனே அவருக்கு இடம் கொடுத்துவிட்டு நகர்ந்துவிட்டார். இவ்வுலகத்தில் அவருக்கு அடைய வேண்டியது ஏதுமில்லை; பரவுலகத்தில் அடைய வேண்டியதும் மீதி ஏதும் இல்லை. பக்தர்களுக்கு அருள் புரிவதற்கென்றே அவதாரம் செய்த இந்த ஞானியின் மஹிமை இவ்வாறே.
ஸ்ரீ சாயி சத்சரித்திலிருந்து

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...