Monday, May 14, 2018

பாபா சர்வ வியாபி!



ஒருநாள் மாலை பாபா, தாத்யாவுடன் மசூதியில் அமர்ந்து கொண்டிருக்கும் போது, லஷ்மிபாய் வந்து வணங்கினாள்.  பாபா அவளிடம், "ஓ! லக்ஷ்மி, நான் மிகவும் பசியாய் இருக்கிறேன்" என்றார்.  அதற்கு அவள், "பாபா சிறிது நேரம் பொறுங்கள்.  நான் ரொட்டியுடன் வருகிறேன்" என்று கூறிக் கொண்டு சென்றாள்.  பிறகு ரொட்டி,  காய்கறிகளுடன் அவள் திரும்பினாள்.  அவற்றை பாபாவின் முன் வைத்தாள்.  அவர் அதை எடுத்து நாய்க்குக் கொடுத்தார்.
அதற்கு லக்ஷ்மி, "பாபா! இது என்ன?  உங்களுக்காக நான் அவசரமாக ஓடி எனது சொந்தக் கைகளால் ரொட்டி தயாரித்தேன்.  நீங்கள் அதில் சிறிதேனும் எடுத்துகொள்ளாமல் நாயிடம் தூக்கி எறிகிறீர்களே!  வீணாக எனக்குத் தொல்லை கொடுத்தீர்கள்?" என்றாள். 
அதற்கு பாபா, "ஒன்றுமில்லாததற்காக ஏன் கவலைப்படுகிறாய்.  நாயின் பசியைத் தணிப்பது என் பசியைத் தணிப்பது போன்றதேயாம்.  நாய்க்கும் ஒரு ஆத்மா இருக்கிறது.  ஜந்துக்கள் வெவ்வேறாயிருப்பினும், சில பேசினும், சில ஊமையாயிருப்பினும் அவைகள் யாவற்றுமுடைய பசியும் ஒன்றேயாம்.  பசியாய் இருப்போர்க்கு உணவு அளிப்பவன் உண்மையிலேயே எனக்கு உணவைப் பரிமாறுகிறான் என்று நிச்சயமாக அறிந்துகொள்வாயாக.  இதை ஒரு ஆதார நீதியாகக் கருது" என்று பதிலளித்தார். 
இது ஒரு சாதாரண சிறிய நிகழ்ச்சிதான்.  ஆனால், ஒரு மிகப்பெரும் ஆன்மிக உண்மையை பாபா அதன்மூலம் முன்னிலைக்குக் கொணர்ந்து காட்டினார்.  தினசரி வாழ்வில் அதை நடைமுறைக்குக் கொண்டுவருதலை, எவருடைய உணர்ச்சியும் துன்புறாதமுறையில் எடுத்துக்காட்டினார்.
இத்தருணத்திலிருந்து லக்ஷ்மிபாய் அவருக்குத் தினந்தோறும் பாலையும், ரொட்டியையும் அன்புடனும் பக்தியுடனும் அளித்து வந்தாள்.  பாபா அதை ஏற்றுக்கொண்டு பசி தணியும் வரை உண்டார்.  இதில் ஒரு பகுதியை அவர் ராதாகிருஷ்ணமாயிக்கு லக்ஷ்மிபாயிடமே கொடுத்தனுப்புவார்.  அவளும் பாபாவின் மீதியான பிரசாதத்தை உவப்புடனும், மகிழ்ச்சியுடனும் உண்டாள்.
இந்த ரொட்டிக்கதையை ஒரு சம்பந்தமில்லாத விஷயமாகக் கருதக்கூடாது.  அது எங்ஙனம் சாயிபாபா எல்லா ஜீவராசிகளிடமும் வியாபித்து ஊடுருவி இருக்கிறார் என்றும், அவைகளைக் கடந்தும் இருக்கிறார் என்றும் காட்டுகிறது.  அவர் சர்வவியாபி, பிறப்பற்றவர், இறப்பற்றவர், அழிவற்றவர்.
சாயி சத்சரிதம் அத்தியாயம்-42

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...