சஞ்சல புத்தி
எப்போது ஏற்படுகிறது?
எல்லாம் இருக்கும் போதும்
ஏற்படும், எதுவும் இல்லாத போதும் ஏற்படும். பொறுப்பில்லாமல்
வாழ்க்கையை ஆரம்பித்து நடத்தும் போதும், பொறுப்புடன் நடந்தும்
தோல்வியின் பாதையில் போகும்போதும் ஏற்படும். மனசாட்சியுடன்
நடந்து கொள்ளும்போதும் ஏற்படும். ஏதோ ஓர் எதிர்பார்ப்பு
மனதில் இருக்கும்போதும் ஏற்படும்.
அப்படியானால் எல்லா நிலைகளிலுமே சஞ்சல புத்தி ஏற்படுமா? என்றால்
நிச்சயமாக ஏற்படும்.
வாழ்க்கையில் நிறைய சாதிக்கவேண்டும் என்ற எண்ணம் இல்லாவிட்டாலும்
தன்னிறைவோடு வாழவேண்டும் என்ற எண்ணத்திலாவது ஒருவர் வாழவேண்டும். இதற்காகத் தொழில்
செய்கிறோம். வேலைக்கு செல்கிறோம். நமக்கென கடமைகள் இருக்கின்றன. அது தனது
திருமணமாக இருக்கலாம், வீடு கட்டுவதாக இருக்கலாம், பிள்ளையின்
படிப்பாக இருக்கலாம், தொழிலை பெருக்கும் ஒரு முயற்சியாக இருக்கலாம்
அல்லது வாழ்வில் முன்னேற ஏதோ ஒரு வழியாகவும் இருக்கலாம்.
அவற்றை சரியாகச் செய்ய வேண்டும் என்று முனையும் போது பிரச்சனையை
சந்திக்கிறோம்.
எந்த பிரச்சனையாக இருந்தாலும் அது கொதிக்கிற எண்ணைய் போன்றது.
இளச்சூடாக இருக்கும் வரை இதமாக இருக்கும். கொதிக்க
கொதிக்கத்தான் உடல் வெந்து போகும்.
ஆமை இருக்கிறதே, அதைக்
கொல்வதற்காக ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி கொதிக்க வைப்பார்கள். நீர் இளஞ்சூடாக
இருக்கும் வரை, இதமாக இந்தத் தண்ணீர் போல எங்கும் தண்ணீர்
இருக்காது என நினைத்து ஆமை கால்களை அகல விரித்து நீந்தத் தொடங்கும். சில நிமிடங்களில்
நீர் கொதிக்க ஆரம்பித்ததும் அதிலேயே இறந்து போகும்.
இப்படித்தான்
பிரச்சனைகளும்.
துவக்கத்தில்
பிரச்சனை தெரியாமலேயே காலை விடுவோம். பிறகு சமாளித்துவிடலாம்
என அடி எடுத்து வைப்போம். இறுதியில் அதிலேயே மாட்டிக் கொள்வோம். அதுவரை
நிம்மதியாக போகும் நமது நிலைமை மோசமாகி, உதவிக்கு வேண்டியவர்களை
கூப்பிடுவோம். ஒரு கட்டத்தில் அவர்களும் ஒளிந்துக்கொள்ளுவார்கள். பிறகு கடவுளைக்
கூப்பிடுவோம். நமது கர்மா தீரும் வரை அவரிடம் உதவி பெறமுடியாது. ஏனெனில் கடவுள்
தருவதை கர்மா தடுத்துவிடும். அதன்பிறகு தற்கொலையா? ஊரை விட்டு
ஓடுவதா? என சிந்திக்க வைக்கும். இதுதான்
பிரச்சனையின் இயல்பு.
எப்படியும்
திருப்பித் தந்துவிடலாம் என்ற எண்ணத்தில்தான் அனைவருமே கடன் படுகிறோம். நேரம் சரியில்லாத காலத்தில்தான்
கடன் தொல்லை என்ற ஒன்று நமக்குள் ஊடுருவி விடுகிறது என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும், இதனால்
மேற்கொண்டு புதிய முயற்சி எதிலும் ஈடுபடாமலும், மேலும் கடன் பெற
முயற்சிக்காமல், இருப்பதை வைத்து காலத்தை ஓட்டும் முயற்சியிலும்
இருந்தால் நாம் நிச்சயம்
தப்பித்துக்கொள்ளலாம். ஆனால் அது நம்மால் முடியாத ஒன்றாகி நமது நேரம் நம்மை வேறு
திசையில் தள்ளிவிடும். அதனால் வட்டிக்கு மேல் வட்டிக்கு வாங்கி, வட்டியைக்கட்ட
தனிக்கடன் வாங்குகிற கதையாக மாறும்போது மனம் சஞ்சலப்பட ஆரம்பிக்கும்.
கடன் மட்டுமல்ல, நமது குழந்தைகள்
நலமாக இருப்பார்களோ மாட்டார்களோ என நினைக்கும்போதே மனம் சஞ்சலப்படுகிறது. அவர்கள்
நம்மை மதிக்காத போதும் கூட மனம் சஞ்சலப்படுகிறது.
நமது செயல்கள்
நமக்கு எதிராக திரும்பிவிடும் போதும், நல்லதைச் செய்து தீமையாக
முடியும் போதும், நாம் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பதை உணர்ந்த
பிறகும் மனம் சஞ்சலப்படுகிறது. இப்படி நம்மை மீறிய
செயல்கள் நம் வாழ்வில் குறுக்கிடும்போதும் மனம் இயல்பாகச் சஞ்சலப்படுகிறது.
இந்நிலையில்
இருப்புக்கொள்ளாமல் தவித்து புலம்புகிறோம். இத்தகைய நிலையை
மனதிற்க்குள் வைத்துக்கொண்டு அலைபவனைத்தான் சஞ்சல புத்தியுள்ளவன் என்கிறோம்.
No comments:
Post a Comment