Thursday, October 17, 2013

மஹால்ஸாபதி என்ற பக்தர்

           சதா ஸாயீபாதங்களிலேயே மூழ்கியிருந்த மஹால்ஸாபதி என்ற பக்தர் சங்கடத்தில் உழன்றவாறே வறுமையில் காலந்தள்ளினார். ஸாயீ அவரைச் சிறிதளவும் செல்வம் சேர்க்க விடவில்லை. தமக்கு தக்ஷிணை ரூபத்தில் வந்த பணத்தை ஸாயீ பல பேர்களுக்கு விநியோகம் செய்தார். ஆனால், வறுமையில் வாடிக்கொண்டிருந்த மஹால்ஸாபதிக்கு ஒருநாளும் ஒருபைசாவும் கொடுத்தாரில்லை. 
      ஸாயீ இவ்வளவு உதாரகுணமுள்ளவராக இருந்தபோதிலும், மஹால்ஸாபதி ஒருநாளும் அவர்முன் கெஞ்சிக் கையை நீட்டினாரில்லை. அவருடைய தன்மான உணர்வு போற்றுதற்குரியது. 
     அவருடைய செல்வநிலை எவ்வளவு தாழ்ந்திருந்ததோ, அவ்வளவு உயர்ந்திருந்தது அவருடைய துறவு மனப்பான்மை. சொற்ப வருமானத்திலேயே திருப்தி கண்டு அவர் வறுமையின் கஷ்டங்களை தைரியமாக வாழ்க்கையில் எதிர்கொண்டார். 
     ஒருசமயம், ஹம்ஸராஜ் என்னும் பெயர்கொண்ட தயாளகுணமுள்ள வியாபாரி ஒருவர் மஹால்ஸாபதிக்கு ஏதாவது உதவி செய்யவேண்டுமென்று எண்ணம் கொண்டார்.
     அவருடைய கொடிய வறுமையைக் கண்டு தம்மால் முடிந்த உதவியைச் செய்யவேண்டுமென்ற எண்ணம் ஹம்ஸராஜின் மனத்தில் உதித்தது.  மஹால்ஸாபதியின் வறுமை நன்கு தெரிந்திருந்தும் அவர் வேறு யாரிடமிருந்தும் உதவி பெறுவதை ஸாயீ அனுமதிக்கவில்லை. அவர் திரவியத்தை உதாசீனம் செய்வதையே ஸாயீநாதர் ஊக்குவித்தார். 
     ஆகவே அந்த வியாபாரி என்ன செய்தாரென்றால், இந்த பக்தருக்காக மனம் இளகி, பாபாவின் தர்பார் நடந்துகொண் டிருந்தபோது, அனைவருடைய கண்களுக்கும் தெரியும்படி மஹால்ஸாபதியின் கைகளில் கொஞ்சம் பணத்தைக் கொடுத்தார்.
 
     ''ஸாயீயின் அனுமதியின்றி நான் இதை ஏற்றுக்கொள்ளமுடியாதுஎன்று சொல்லி­ மிகப் பணிவாக மஹால்ஸாபதி பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டார். 
     சுயநலமில்லாத, செல்வத்தை நாடாத, ஆன்மீக ஏற்றத்தையே நாடிய, உடலாலும் உள்ளத்தாலும் ஸாயீபாதங்களை சரணடைந்துவிட்ட, பிரேமை மிகுந்த பக்தரை இங்கு நாம் பார்க்கிறோம்.
  ஆகவே ஹம்ஸராஜ் ஸாயீயை அனுமதி வேண்டிக் கெஞ்சினார். ஆனால், மஹால்ஸாபதியை ஒரு பைசாவைக்கூடத் தொட ஸாயீ அனுமதிக்கவில்லை. ஸாயீ சொன்னார், ''என்னுடைய பக்தர் திரவியத்தைத் தேடமாட்டார். அவர் ஒருபொழுதும் செல்வத்தின் வைபவத்தில் மாட்டிக்கொள்ளமாட்டார்.

ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும். 
சுபம் உண்டாகட்டும்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...