Tuesday, July 5, 2016

புதுக்கோட்டையில் ஸ்ரீ சாயி வரத ராஜன்

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருவதாக சாயி தரிசனம் இதழில் எழுதியிருந்தேன். இந்த முறை சாயி ஸ்ரீதரனுடன் சென்றேன். பாத்தம்பட்டியில் பாபா ஆலயம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டிய பிறகு ஆவுடையார் கோயில் செல்லத் தீர்மானித்தோம்.
புதுக்கோட்டையில் குளித்து முடித்து ஆலங்குடிக்குச் சென்றோம். புதுக்கோட்டை கல்வியிற் சிறந்தது. நாட்டின் முதல் பெண் மருத்துவரான டாக்டர் முத்து லட்சுமி ரெட்டி இந்த ஊரைச் சேர்ந்தவர்.
ஆலங்குடியில் கலைச்செல்வன் என்ற கார் ஓட்டுநரிடம் நாள் வாடகைப் பேசிக்கொண்டு, மறமடக்கிச் செல்லவேண்டும் என்று கேட்டேன். அங்கு பூமி பூசை முடிந்தபிறகு ஆவுடையார் கோயில் போகவேண்டும் எனக் கூறினேன்.
பாத்தம்பட்டியைச் சேர்ந்த கங்கா என்ற சாயிபக்தை தனது இடத்தில் கோயில் கட்ட விருப்பம் தெரிவித்திருந்தார். கங்கா தனது வீட்டின் முன்பகுதியில் பூமி பூஜை போட்டு கோயில் ஆரம்பித்து, பிறகு பின் பக்கமாக கோயிலை வளர்த்துக்கொள்ளுங்கள் என ஆலோசனைக் கூறினேன். அவருடைய குடும்ப உறுப்பினர்கள், வேண்டியவர்கள் என சிலர் இருந்தார்கள். வைதீகரிடம் பூஜையைச்செய்யச் சொன்னோம். அற்புதமாகச் செய்தார்.
பூஜை முடிந்து ஆவுடையார் கோயில் சென்றோம். ஏற்கனவே இங்கு வந்து துவக்கிவைத்து விட்டுப் போன இடம் இப்போது நன்றாக வளர்ந்திருக்கிறது. அதன் ஸ்தாபகர் மணிமுத்து நன்றாக உழைத்திருக்கிறார் என்பது தெரிந்தது. தெருவுக்குத் தெரு போஸ்டர் ஒட்டி விளம்பரம் செய்திருந்தார்.
இதனால் சுற்றியுள்ள மக்கள் கூட்டம் ஆயிரக் கணக்கில் திரண்டு வந்திருந்தார்கள். காலை பத்தரை மணிமுதல் ஆறரை மணிவரை உதிப் பிரசாதம் வழங்கிக் கொண்டிருந்தேன். அந்தளவு கூட்டம் இருந்தது. அதன் பிறகும் தொடர்ந்தது, நேரமின்மை காரணமாக நான் விடைபெற்றுக்கொண்டு புதுக்கோட்டைக்குத் திரும்பினேன்.
இதுவரை நான் கலந்து கொண்ட விழாக்களில் இது மிகச் சிறப்பானது. வந்திருந்த மக்களில் பெரும்பாலானவர்கள் கிராமப்புறத்தினர். பாபாவின் பெருமையைப்பற்றி அவ்வளவாக அறிந்திராதவர்கள், பிரச்சினைகளோடு வாழ்ந்து வருகிறவர்கள். இவர்களுக்காகப்பிரார்த்தனை செய்து உதிப்பிரசாதம் வழங்கினேன்.
குழந்தையில்லாதவர்களை அழைத்து வந்திருந்தார்கள். நான் பொதுவாக அவர்களுக்கு சாயி பெயரால் ஆசிர்வதித்த ஆப்பிள் தருவேன்.
இங்கு பழங்கள் இல்லை என்பதால், பாபாவுக்கு நைவேத்தியம் செய்த அன்னப் பிரசாதத்தை குழந்தைப் பேற்றுக்கான பிரசாதமாக வழங்கி ஆசிர்வதித்தேன்.
எனக்கு அப்போதுதான் ஒரு விஷயம் நினைவு வந்தது. ஆவுடையார் கோயிலில் ஆத்மநாதரான சிவபெருமானுக்கு சாதத்தைத்தான் பிரசாதமாக வழங்குவார்கள். நானும் அவ்விதமே வழங்கியது எனக்கே ஆச்சரியமாக இருந்தது.
இந்த ஆலயத்தில் அன்ன தானத்தை வாரம் ஒருவர் ஏற்றுக்கொள்கிறார் என்பதும், வருகிற பக்தர்கள் தாங்களாகவே சேவை சாதிக்கிறார்கள் என்பதும் உயர்வான ஒன்று.
கிராமப்புறங்களில் இன்னும் சாதி சமய பேதம் நிலவுகிற சூழலில் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து வழிபாடு செய்கிற இந்த அற்புதம் நிச்சயமாக பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்று.
ராஜசேகர், தர்மலிங்கம், பரிவீரமங்களம் பாண்டியன் மற்றும் வேலுச்சாமி குடும்பத்தார், முன்னாள் கிராம அதிகாரி நாகராஜன், மீமிசல் எம்டன் வீரமுத்து, மணிகண்டன், மீனாட்சி ஆச்சி, எஸ்கேஆர் குடும்பத்தார் போன்ற பெருமக்கள் இந்த ஆலய வளர்ச்சிக்கு உதவியாக இருந்து சேவையும் சாதித்தார்கள்.
பத்மநாதன், பாலு என்ற தம்பியர்கள் கடைசி வரை இருந்து எல்லாவகையிலும் உதவினார்கள். அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது. எத்தனை ஆயிரம் பேர் வந்தார்களோ அவர்கள் அனைவருக்கும் முழு விருந்து சாப்பாடு அளிக்கப்பட்டது.
ஒரு கிராமப்பகுதியில் இவ்வளவு அற்புதமான விழாவை, கூட்டுப் பிரார்த்தனையை நடத்திட வழி செய்த மணிமுத்துவை எவ்வளவு பாராட்டிப்பேசினாலும் தகும்.
எங்கள் குருஜி வந்துவிட்டார், உங்களுடையபிரச்சினைகள் எதுவாயினும் அவரிடம் தெரிவித்த உடனே சரியாகிவிடும் என்பதை சாயியின் மீது சத்தியமாகச் சொல்கிறேன் என்று அவர் கூறிய போது எனக்குத் திகைப்பாக இருந்தது.
ஆத்மார்த்தமாக அனைவருக்காகவும் சாயி பாபாவிடம் வேண்டிக்கொண்டேன். ஆவுடையார் கோயில் என்றென்றும் வளரவும், மக்கள் சுக வாசிகளாக வாழவும் பிரார்த்திக்கிறேன்.
எங்களை புதுக்கோட்டை வரை அழைத்து வந்து விட்ட கார் ஓட்டுநர் கலைச்செல்வம், சுவாமி காரில் ஏறும்போது மிகச் சாதாரணமாகத் தெரிந்த நீங்கள் இவ்வளவு பெரிய மகானாக இருப்பீர் என நினைத்துக்கூட பார்க்கவில்லை என்றார்.
உங்களுக்கு என்ன வேண்டும் எனக் கேட்டபோது, எத்தனை முறை புதுக்கோட்டை வந்தாலும் அத்தனை முறையும் எனது காரில்தான் வர வேண்டும்.  இந்த வாய்ப்பை மட்டும் தந்தால் போதும் என்றார்.  அவரை வாழ்த்தி விட்டு புதுக்கோட்டையில் இறங்கிக்கொண்டோம்.
வித்தியாசமான பயணம்.  நல்ல அனுபவங்கள். இந்த ஊர் மக்கள் நல்வாழ்வு வாழ இறைவனை வேண்டுகிறோம்.
ஸ்ரீ சாயி வரதராஜன்.

சாயியின் கிருபை!

    உருவமில்லாத இறைவன் பக்தர்களின்மேல் கொண்ட கிருபையினால் , ஸாயீயினுடைய உருவத்தில் சிரடீயில் தோன்றினான். அவனை அறிந்துகொள்வதற்கு , முத...