ஆன்மிக போதனையை பெறுவதும் அளிப்பதுமாக கணக்கற்ற சிஷ்யர்களும் குருமார்களும் இவ்வுலகில்
இருக்கின்றனர். ஆனால், ஞானத்துடன் அனுபவத்தையும் சேர்த்து அளிக்கும் குரு அபூர்வமே!
(சத்சரித்திரம் 14 - 62)
கீரப்பாக்கம் பாபா ஆலயத்தில் எனது குருவை முதன் முதலாக தரிசித்தபோது உடல் நடுங்கியது, ரோமக்கால்களில் சிலிர்ப்பு ஏற்பட்டது.
தூரத்திலிருந்து பார்த்தபோது இவராக இருக்க மாட்டார் என நினைத்துக்கொண்டேன். அருகில்
நெருங்கி அந்த விழிகளைப் பார்த்தபோதுதான் என்னை அறியாமல் கண்களிலிருந்து நீர் கசிய
ஆரம்பித்தது.
எத்தனை ஆயிரம் பேர் வாழ்க்கையில் ஒளி ஏற்றுகிற வார்த்தைகள், மனதில் தன்னம்பிக்கை விதைத்து வாழச் செய்கிற வரிகள், ஆன்மிகப்போதனைகளை நடைமுறைக்கு ஏற்றார் போல் சொல்லிக்கொடுக்கிற
பாங்கு, வாழ்வியலில் அனுபவத்தைக் கற்பிக்கிற மனிதர்...
அவரா இவர்? அட்டைப் படத்தில் வந்த புகைப்படத்தில் பார்த்த கண்களை வைத்து
அடையாளம் கண்டுகொண்டு அவரது திருவடிகளில் விழ முயன்றேன்.
“வாருங்கள்,
நீங்கள் ஒரு வித சேவை செய்கிறீர்கள், நான் ஒருவித சேவை செய்கிறேன். எதற்காக எனது கால்களில் விழவேண்டும்
எனக் கேட்டபடி என்னைத் தொட்டுத் தூக்கினார்.
தொடு உணர்வின் ஸ்பரிசத்தை அம்மாவுக்கு அடுத்தபடியாக இவரிடம் அனுபவித்தேன். பல பக்தர்கள்
சொல்கிற அதே மின் அதிர்வுகள்.. உடனடியான ரசாயன மாற்றம்.. கண்களிலிருந்து கண்ணீரை வரவழைக்கிற
ஸ்பரிசம். நடமாடும் தெய்வீகம்.. இதுதான் சாயி வரதராஜன்.
எத்தனையோ முறை போனில் பேசியிருக்கிறேன்,
ஆலோசனைகள் கேட்டிருக்கிறேன்; நேரில் பார்த்தது கிடையாது.
போட்டோவில் சிவந்த மேனியுடைய சிவனைப் போலத் தெரிகிறார்.
நேரிலோ கார்வண்ணனைப் போன்ற நிறத்தில் இருக்கிறார். அந்தக் கண்கள் மட்டும்தான் அதே
கூரிய வேகத்தில் உடலில் பாய்ந்து மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
உங்களை தரிசிக்க எத்தனையோ நாட்கள் ஏங்கிக்கிடந்தேன்; பாபா இன்று அந்த வாய்ப்பை தந்தார் என்று சொன்னபோது, இல்லையில்லை..
நான் இங்கேதான் கிடக்கிறேன்,
தாங்கள் வந்து தரிசிக்கும் அளவுக்கு நான் பெரிய ஆளில்லை. தங்களைக்
காணும்போதுதான் பாபாவை நேரில் சந்திக்கிற உணர்வு ஏற்படுகிறது என்றார் அவர். எங்கள்
குடும்பத்துக்கும் என் அண்ணன் குடும்பத்திற்கும் நீண்ட காலமாகப் பிரச்சினை இருந்து
வந்தது. அதேபோல, என் மகன் வேலையில்லாமல் இருந்தான், பெண்ணுக்குத்திருமணம் நீண்ட காலமாக தடைபட்டுக் கொண்டு இருந்தது.
எல்லோரும் பெருங்களத்தூருக்குச்சென்றால் பிரச்சினை தீரும் என எனக்கு வேண்டியவர் சொன்னதன்
பேரில் எத்தனையோ முறை அங்கு செல்ல முயற்சி செய்தும் முடியாத நிலையே ஏற்பட்டது.
போன் எடுக்கமாட்டார் எனக்கூறியிருந்தார்கள். என் நல்ல நேரம், போன் போட்டவுடன் எடுத்து விட்டார். விஷயத்தை போனில் சொன்னபோது
பிரார்த்தனை செய்வதாகச் சொன்னார். அவர் சொன்ன முதல் வார்த்தை குடும்பத்தில் பித்ரு
தோஷம் இருக்கும், இதை சரி செய்துகொள்ளுங்கள் எனக் கூறி அதற்கான வழிமுறைகளையும்
கூறினார்.
குடும்பத்தில் யாருடனாவது பிரச்சினையிருக்கிறதா எனக் கேட்டபோது, என் அண்ணன் வீட்டாருடன் பிரச்சினையிருப்பது பற்றி கூறினேன்.
முதலில் அதை சரி செய்துகொள்ளுங்கள். அண்ணனிடம் பேசுங்கள்; இவ்வளவு காலமாக அவரைத் தவற விட்டுவிட்டதாகக் கூறுங்கள். அதன்
பிறகு குடும்பத்தில் மாற்றம் வருவதை பார்க்கலாம்” என்றார்.
எனக்கு இது தயக்கமாக இருந்தது. அப்பா அம்மா இறந்தபிறகு எங்களுக்குச் சேரவேண்டிய
சொத்துக்களையும் அண்ணன் மட்டுமே அனுபவித்தான். எங்களை
கண்டபடி பேசி துரத்தாத குறையாக வெளியே அனுப்பினான். பத்தாண்டுகள் தாண்டிவிட்ட நிலையில்கூட
அவனுடன் தொடர்பு இல்லை.. எப்படி பேசுவது எனத் தயங்கினேன்.
உங்கள் அண்ணன் அப்பா ஆவார். அவர் மனம் புண்படும்படி நடக்கக்கூடாது. அவர் எதை பிடுங்கிக்
கொண்டிருந்தாலும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல்,
அவர் செய்த தவறுகளை உடனே மறந்து போய் பேசுங்கள்” என்றார்.
குரு வார்த்தையைத் தட்டக்கூடாது என்பதால் என் அண்ணனின் போன் நெம்பரைத் தெரிந்தவர்
மூலம் வாங்கி பேசினேன். குரு சொன்னதைப் போலவே சொன்னபோது அண்ணன் துக்கம் தாளாமல் அழுதான்.
என் மீதுதான் தவறு என்று திரும்பத் திரும்பச்சொன்னான். உன்னைத் தவறவிட்டது நம்முடைய
அம்மாவை தவறவிட்டது போலிருக்கிறது எனக்கூறினான். என் அண்ணியும் அழுதார்கள்.
உன் சொத்துக்கள் என்னிடம் பத்திரமாகத்தான் உள்ளது. அதை அப்போது தந்திருந்தால் வீணாகியிருக்கும்
என்பதால், தட்டிக் கழித்தேன்.
உனக்கு என்ன சேரவேண்டுமோ எடுத்துக் கொள். இன்னும் என்ன வேண்டுமானாலும் கேள். நீ
எனது குழந்தை”
என்றான்.
நம்பவே முடியவில்லை. உள்ளபடியே உறவின் பிணைப்பை அப்போதுதான் உணர்ந்தேன். அது முதல்
எங்கள் குடும்பமும் அண்ணன் குடும்பமும்போக்குவரத்து ஏற்பட்டு, என் மகளுக்கு அவர் மூலமாகத் திருமணமும் நடைபெற்றது.
இது பற்றி குருவிடம் போனில் கேட்டபோது,
“பித்ரு தோஷம்
என்றேனே அது தீரும் வழி இது தான். எல்லா பெற்றோரும் பிள்ளைகளிடம் பிரிவினைகளை விரும்பமாட்டார்கள்.
அதேசமயம் பிள்ளையை விட்டு வெளியே வரவும் மாட்டார்கள். உனது அண்ணனிடம் ஒப்புரவு ஆகிவிட்டால்
உனது பிரச்சினைகள் தீரும் அதாவது பித்ருக்கள் சந்தோஷப்பட்டு உன் பிரச்சினைத் தீரவும்
உனது அண்ணன் பிரச்சினை தீரவும் வழி காட்டுவார்கள் என்பதற்காக இந்த வழியைக்கூறினேன்” என்றார்.
என் பையனுக்கு வேலை கிடைத்தால் மகிழ்ச்சி என்றேன். பையன் பெயரைக் கேட்டுவிட்டு
அவன் அயல்நாட்டுக்குப் போய்விடுவான் என்றார். இதெல்லாம் நடந்தது.
அப்படியும் அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு மட்டும் இல்லாமல் போனது. அந்த வாய்ப்பு
கீரப்பாக்கம் பாபா ஆலயத்திற்கு ஏதேச்சையாகப் போயிருந்தபோது ஏற்பட்டது.
அவர் வந்தாலும் போய்விடுவார் என்று சொன்னார்கள். ஆனால் அவர் போகவில்லை. என்னோடு
நடந்தார், பேசினார். பாபாவின் அன்பைப் பற்றி எடுத்துச் சொன்னார். விட்டுக்கொடுக்க
வேண்டிய விஷயங்கள் எதுவும் நம்மிடமிருந்துதான் ஆரம்பிக்கவேண்டும் என்றார்.
அவருடன் நடந்த அந்த இரண்டு மணி நேரம் வாழ்க்கையில் பாபாவுடன் நடந்த நேரம் போன்று
இதமாக இருந்தது. என் அன்பு மகளே என எழுதும் அவருடன் நடக்கும்போது தந்தையுடன் நடக்கிற
உணர்வு ஏற்பட்டது.
யாரையும் எளிதில் பக்கத்தில் சேர்க்கமாட்டார், கிறுக்கன் போல சுற்றிக்கொண்டிருப்பார்
என்று சொன்னவர்கள், அவருடைய மனதில் இடம் பிடிப்பது விசேஷம் என்றார்கள். எனக்கு எல்லாமே
சாதகமாக அமைந்தது.
போகும்போது அவர் என் தலையில் கை வைத்து ஆசீர்வதித்தார். உதியை நெற்றியில் பூசினார்.
அந்த உணர்வுப்பூர்வமான நாட்கள் இனி எப்போது கிடைக்கும் என்று ஏங்க வைத்த நிமிடங்கள்
அவை.
ஏன் இவ்வளவு தூரம் உணர்ச்சி வசப்படு கிறேன் என்றால், அவருடைய புத்தகம் ஒவ்வொன்றையும் பலமுறை வாசித்திருக்கிறேன்.
மாத இதழைப்படித்திருக்கிறேன்,
பக்தர்களுக்கு அவருடன் ஏற்பட்ட அனுபவங்களைப் பிறர் சொல்லக்கேட்டிருக்கிறேன்.
அதை அனுபவிக்கும் வாய்ப்பை அன்றுதான் பெற்றேன். ஆன்மிக போதனையை பெறுவதும் அளிப்பதுமாக
கணக்கற்ற சிஷ்யர்களும் குருமார்களும் இவ்வுலகில் இருக்கின்றனர். ஆனால், ஞானத்துடன் அனுபவத்தையும் சேர்த்து அளிக்கும் குரு அபூர்வமே!
(சத்சரித்திரம் 14 -62)
என்று சத்சரித்திரம் கூறுகிறது.
தன்னுடைய அனுபவத்தை ஆன்மிக போதனையுடன் இணைத்து நம்மையும் அனுபவ ரீதியாக பாபாவிடம்
அழைத்துச் செல்லும் இவர் போன்று யாரேனும் இருக்கிறார்களா? என்றால் மிகச்சிலர் இருக்கலாம். மற்றவர்கள் அனைவரும் புத்தக
ஞானத்தைக் கொண்டு கடவுளை காட்ட முயற்சி செய்வார்கள். இவர் மட்டுமே அனுபவத்துடன் கடவுளைக்
காட்டுகிறார். சாயி தரிசனம் வாசக அன்பர்கள் கொடுத்து வைத்தவர்கள்.
மாலதி சொக்கலிங்கம்,
மதுரை - 2
No comments:
Post a Comment