Tuesday, July 12, 2016

ஏகாதசி விரதம்



சாயி பக்தர்களுக்கு ஏகாதசி விரதம் பற்றி தெரியும். அன்று வெங்காயம் சாப்பிட மாட்டேன் என்று கூறிய பக்தரை பாபா சாப்பிட வைத்தார் என்பது வரை தெரியும். ஏன் அப்படி செய்தார்? விரதம் வேண்டா என்றா? இல்லை.. ஒரு விரதம் மேற்கொண்டால் அதை முழுமையாகக் கடைப்பிடிக்கவேண்டும்; அரைகுறையாகச் செய்தால் அதனால் எந்தப் பலனும் இல்லை.
முடியாத ஒன்றை மேற்கொள்வதைவிட வேறு வழிகளில் இறை அனுபூதியைப் பெறலாம் என்பது சாயி பாபாவின் கருத்து. இப்போது  இந்த ஏகாதசி விரதம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
தீர்த்தங்களில் கங்கையும், தெய்வங்களில் விஷ்ணுவையும், மந்திரங்களில் காயத்ரியையும் போன்று விரதங்களில் மேன்மையானது ஏகாதசி விரதம் என பத்ம புராணம் கூறுகிறது.
மாதத்தை திதிகளாகப் பிரித்தார்கள். மொத்தம் 15 திதிகள். அவை:
ஏகாதசி, துவாதசி, திரயோதசி, சதுர்த்தசி, பௌர்ணமி, பிரதமை, துவிதியை, திருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி.
தசமிக்கு அடுத்த நாள் ஏகாதசி. மாதத்தில் முன் வரும் ஏகாதசி கிருஷ்ண பக்ஷ  ஏகாதசி என்றும், பின்னால் வரும் ஏகாதசிக்கு சுக்ல பக்ஷ ஏகாதசி என்றும் பெயர்.
ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒரு காரணக் கதை உண்டு. ஒட்டு மொத்த ஏகாதசிக்கும் ஒரு கதை இருக்கிறது; அதை மட்டும் பார்க்கலாம்.
க்ருதாயுகத்தில் முரன் என்ற கொடிய அரக்கன் வாழ்ந்தான். அவனுடன் விஷ்ணு அயிரம் ஆண்டுகள் போரிட்டார். சேனைகள் அழிந்தனவே தவிர, அசுரன் பலம் குறைந்த பாடில்லை. இதைக்கண்டு வியந்த பரமாத்மா சோர்ந்தவர் போல போக்குக் காட்டி, பத்ரிகாசிரமம் என்ற இடத்திற்கு வந்து சிம்மாவதி என்ற குகைக்குள் நுழைந்தார்.
அங்கே நித்திரை மேற்கொண்டிருந்தபோது, அவரைப் பின்தொடர்ந்து வந்த முரன், பகவானை வெட்ட வாளை உருவினான். அந்த நேரத்தில் பரமாத்மாவின் உடலில் இருந்து அழகிய பெண்ஒருத்தி தோன்றி முரனை போருக்கு அழைத்தாள்.
அவன் ஆயுதம் ஏந்தும் முன்னே அவனைக்கொன்று அழித்தாள். பகவான் துயில் விழித்து, தன்னுடலில் இருந்து புறப்பட்ட சக்தியைப்பார்த்து வியந்து அவளைப் பாராட்டினார். அந்த சக்திக்கு ஏகாதசி என்று பெயரிட்டார்.
அவள் பிறந்த தினத்தில் உபவாசம் இருந்து தன்னை வழிபட்டால் எல்லாவித சுகத்தையும்தருவதாக பகவான் வாக்களித்தார். அது முதல் ஏகாதசி பண்டிகை ஆரம்பமானது.
பகவான் கிருஷ்ணர் தருமருக்கு இந்த விரதம் பற்றி போதித்தார். சிவபிரான் நாரதருக்கு இதை போதித்தார். அப்படியே மக்களிடம் பரவியது. இன்று வெங்காயம், பூண்டு சாப்பிட மாட்டேன் என்பார்கள்.. ஆனால் ஏகாதசி அன்று எதையுமே சாப்பிடக்கூடாது என்று சாஸ்திரம் விதித்துள்ளது
(பத்ம புராணம்).
தண்ணீர் அருந்தாமல் இருக்கலாம். அது முடியாவிட்டால் தண்ணீரை மட்டும் அருந்தலாம். அதுவும் முடியாவிட்டால் பழங்களை நைவேத்தியம் செய்து புசிக்கலாம்.
சமைத்த உணவை ஒருவேளை புசிப்பது அதமம். சர்க்கரை நோயாளியால் பட்டினி கிடக்க முடியாது என்றால், ஒருவேளை உணவுக்காக அரிசியை வறுத்து அன்னமாக உட்கொண்டு இரவு உபவாசம் இருக்கலாம். இது அதமாதமம். ஆனாலும் வழியின்றி மேற்கொள்ளலாம்.
ஏகாதசி விரதத்திற்கு முன்தினமான தசமி திதியன்று ஒரே வேளை உணவு உட்கொள்ள வேண்டும். ஏகாதசி முடிந்த மறுநாள் துவாதசி தினத்திலும் ஒருவேளைதான் புசிக்க வேண்டும்.
அதிதிக்கு அன்னம் அளித்தபிறகே புசிக்க வேண்டும். அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய்  இவற்றை கண்டிப்பாக சாப்பிட வேண்டும். இது
ஏகாதசி விரதத்தின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய உணவு முறை.
அன்று அதிகாலையிலேயே எழுந்து நீராடி விஷ்ணுவுக்கு பூஜை செய்ய வேண்டும். ஏகாதசி தினத்தில் துளசியைப் பறிக்க தடையுள்ளதால் முன்தினமே துளசி தளத்தைப் பறித்து வைத்துக்கொள்ள வேண்டும். அன்று முழுவதும் நேரத்தை வேறு விஷயங்களில் செலவிடாமல் பகவத் நாமாவை ஜெபித்தல், புண்ணிய கதைகளை கேட்டல் போன்றவற்றில் செலவிட வேண்டும்.
பகலில் உறங்குவது, கோபம் கொள்ளுதல், நிந்தனை செய்தல், கெட்ட வார்த்தை பேசுதல், கலகம் செய்தல், தாம்பூலம் தரித்தல், சந்தனம் பூசுதல், மாலை அணிதல், கண்ணாடி பார்த்தல், தாம்பத்ய சுகம் தேடல் ஆகியவற்றை விலக்க வேண்டும்.
ஏகாதசி அன்று சாப்பிடக்கூடாது, பிறருக்கும் அன்னதானம் செய்யக்கூடாது. இரவு முழுவதும் கண் விழித்து பகவான் சரிதத்தைக் கேட்கவோ, படிக்கவோ செய்யவேண்டும்.
விரதத்தை இந்த நியமத்தின்படி செய்து வந்தால் தேக ஆரோக்கியம், புத்திர சந்தானம், செல்வம், புண்ணியம் பெருகும். மனம் சுத்தமாவதால் சுவர்க்கம் கிட்டும். ஞானம் பிறக்கும்.
ஏகாதசி பலன்கள்:
ஏகாதசி முதலில் மார்கழியில் தோன்றியது. இதனால் இது உற்பத்தி ஏகாதசி எனப்படுகிறது. இரண்டாவதாக வருவது சுக்லபக்ஷ ஏகாதசி பெரிய ஏகாதசி. அதுதான் வைகுண்ட ஏகாதசி.
இன்றைய தினத்தில் விரதம் இருந்து வழிபட்டால் நமக்கு சுவர்க்கம் நிச்சயம் என்பது ஒரு பக்கம்; அந்த விரதத்தை பித்ருக்களுக்கு அர்ப்பணித்தால் பித்ருக்கள் பரமபதம் அடைவார்கள் என்பதால் மோட்ச ஏகாதசி என்று பெயர் வந்தது.
தை மாத கிருஷ்ண பக்ஷ ஏகாதசி சபலா ஏகாதசி எனப்படுகிறது. கனிகளால் இறைவனுக்கு நிவேதனம் செய்து, தீப தானம் செய்து இரவு கண்விழித்து பகவத் நாமாவை தியானித்தால் சகல பாவங்களும் நீங்கும்.
தை மாதம் சுக்ல பக்ஷ ஏகாதசியை அனுஷ்டித்தால் புத்திரப் பேறு வாய்க்கும் என்பதால் இதற்கு புத்ரதா ஏகாதசி எனப் பெயர். பிறர் பொருளை அபகரித்த பாவம், பசுவை கொன்ற பாவம், பிரம்மஹத்தி தோஷம் போன்ற வற்றை நீக்குவது மாசி மாதம் வருகிற ஏகாதசி.
மாசி மாதம் பிறந்தவுடன் பசு சாணமிடும்போது தரையில் விழாமல் பிடித்து அதில் பருத்திக்கொட்டை ஒன்றை வைக்க வேண்டும், பவுர்ணமி வரை அது ஈரமாக இருந்தால் பாவம் அகன்று விட்டது என்று பொருள்.
அன்று எள்ளை அரைத்து உடலில் பூசிக்குளிக்கவேண்டும். எள் தானம் செய்தல், எள்ளால் ஹோமம் செய்தல், எள் சாதம் தானமளித்தல், எள் சாதம் உண்ணல், எள்ளுடன் நீரையும் தானம் தருதல் என ஆறுவகையில் எள்ளைப் பயன்படுத்த வேண்டும். இதற்கு ஷட்திலா ஏகாதசி என அழைக்கப்படுகிறது. (திலம்- & எள்). பிராமணருக்கு தானம் செய்வதை கடமையாகக்கருதவேண்டும்.
மாசி மாத சுக்ல ஏகாதசி ஜயா ஏகாதசி. இறந்தவர் ஏற்றுள்ள பிசாச ஜன்மாவை மாற்றி பரம பதம் அருள உதவும் விரதம் இது. பங்குனி மாதம் முதலில் வரும் ஏகாதசிக்கு விஜயா என்று பெயர். அனுமனைப் போல கடல் கடந்து செல்ல, ராவணனை வென்று சீதையை மீட்க ராமர் இந்த ஏகாதசி விரதத்தை மேற்கொண்டார். துன்ப நிவர்த்தி ஏற்பட இவ்விரதத்தை மேற்கொள்ளலாம். ஏழு வகை தானியங்களை சேகரித்துப் பரப்பி அதன் மேல் கலசம் வைத்து. அருகில் நாராயணர் படம் வைத்து பூஜிக்க வேண்டும், மறுநாள் கலசத்தை ஒரு சாதுவுக்கு தானம் தந்து உணவு அளிக்க வேண்டும்.
பங்குனியில் இரண்டாவதாக வரும் ஏகாதசிக்கு ஆலமகீ என்று பெயர். நெல்லி மரத்தருகே கலசத்தை வைத்து அதன் மீது பரசுராமரின் பிம்பத்தை வைத்து விதிப்படி பூஜிக்கவேண்டும்.
நெல்லி மரத்தை வலம் வந்து மரத்தடியில் பூஜை செய்வது புண்ய நதிகளில் நீராடிய பலனைத்தரும். அதனடியில்இரவு கண் விழிப்பது ஆயிரம் பசு தானம் செய்வதற்குச் சமம்.
சித்திரை மாத கிருஷ்ண பக்ஷ ஏகாதசி பாவத்தைப் போக்கும்; இதற்கு பாபமோசனிகா என்று பெயர். சுக்ல பக்ஷ ஏகாதசி எந்த ஆசையாக இருந்தாலும் அதைப் பூர்த்தியாக்கும். இதற்கு காமதா என்று பெயர்.
வைகாசி மாத கிருஷ்ண பக்ஷ ஏகாதசி பாவங்களை நீக்கி சவுபாக்கியத்தைத் தரும். பிரம்மனின் தலையை அறுத்த பாவத்தை நீக்க சிவபெருமான் இந்த ஏகாதசி விரதம் இருந்தார். இதற்கு வரூதிநீ ஏகாதசி என்று பெயர். வைகாசி சுக்ல பக்ஷ ஏகாதசிக்கு மோஹினி ஏகாதசி. வசிஷ்டர் இதன் பெருமையை ஸ்ரீ ராமருக்கு விளக்க, ஸ்ரீராமர் இன்றைய நாளில் விரதமிருந்து மோகத்தை வென்றார்.
ஆனி மாத கிருஷ்ண பக்ஷ ஏகாதசிக்கு அபரா என்று பெயர். திரிவிக்ரமராக பெருமாளை எழுந்தருளச் செய்து பூஜிக்க வேண்டும். குரு நிந்தை செய்த பாவம், பொய் சாட்சி சொன்ன பாவம், பிரம்மஹத்தி ஆகியவை நீங்கும்.
காசியில் சிவராத்ரி விரதமிருந்து பூசித்த பலனும், பிரயாகையில் நீராடிய பலனும், கயாவில் பிண்டமளித்த பலனும் கிடைக்கும். ஆனி சுக்லத்தில் வரும் நிர்ஜலா ஏகாதசி விரதமிருந்து பெருமாளை வணங்க கலி தோஷம் நீங்கும். பீமன் இந்த விரதம் மேற்கொண்டதால் பீம ஏகாதசி என்றும் வழங்கப்படுகிறது.
ஆடி கிருஷ்ண பக்ஷ ஏகாதசிக்கு யோகிநீ என்று பெயர். இந்த நாளில் விரதம் மேற்கொண்டால் நோய் நிவர்த்தியாகும். ஆடி சுக்லபக்ஷ ஏகாதசிக்கு சயிநீ என்று பெயர். தீபதானம் செய்தால் லக்ஷ்மி அருள் கிடைக்கும்.
ஆவணி கிருஷ்ணபக்ஷ ஏகாதசிக்கு காமிகா என்று பெயர். துளசியால் பகவானை அர்ச்சித்து தீபதானம் செய்து, நெய் தீபமேற்றி செய்தால் புண்ணியம் மிகும். மோட்சம் கிட்டும்.
ஆவணி சுக்ல பக்ஷ ஏகாதசி புத்ரதா ஏகாதசி ஆகும். இன்று விரதமிருக்க புத்ரபாக்யம் உண்டாகும். புரட்டாசியில் முதலில் வரும் ஏகாதசி அஜா ஏகாதசி. நாட்டை, மனைவி, மகனை இழந்த அரிச்சந்திரன் கவுதம முனிவரின் உபதேசப்படி இந்த விரதம் இருந்து நாட்டைத் திரும்பப்பெற்றான். இழந்த பொருள் கிடைக்க இந்த விரதம் மேற்கொள்ளலாம்.
புரட்டாசி இரண்டாவது ஏகாதசிக்கு பத்மநாபா ஏகாதசி என்று பெயர். இயற்கை வளம் பெருக இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. ஐப்பசி முதல் ஏகாதசி இந்திரா ஏகாதசி என்றுபெயர். இந்திரசேனன் என்ற மன்னன் தனது தந்தையை நரகத்திலிருந்து மீட்க இன்றைய விரதத்தை மேற்கொண்டான். விரதமிருந்து சிரார்த்தம் செய்தால் முழு பலன் கிடைக்கும்.
ஐப்பசி இரண்டாம் ஏகாதசி பாபாங்குசா. எல்லா பாவத்தையும் நீக்கக்கூடியது. கார்த்திகை மாதம் முதல் ஏகாதசிக்கு ரமா ஏகாதசி என்று பெயர். பெரிய அளவுக்கு உயர  இந்த ஏகாதசியை கடைப்பிடிக்கவேண்டும். கார்த்திகை இரண்டாம் ஏகாதசிக்கு ப்ரபோதினீ என்று பெயர். பெருமாள் நித்திரை நீங்கும் காலம் இது. சகல புஷ்பங்கள். கனிகளால் நிவேதனம் செய்து துளசியால் அர்ச்சித்து பூசித்தால் விஷ்ணு அருள் பெறுவர்.
இது தவிர கமலா என்ற ஏகாதசியும் உண்டு. கூடுதலாக வரும் ஏகாதசி. இன்றைய தினத்தில் விரதம் இருந்தால் செல்வம் பெருகும். ஏகாதசி விரதத்தை வெறும் சடங்காகச் செய்வதைத் தவிர்த்து முழுமையாகப் பின்பற்றினால் வெற்றி நிச்சயம்.
ஆதாரம்: ஏகாதசி மஹாத்மியம் நூல்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...