Monday, July 4, 2016

ஆழ்வாருக்குக் கிட்டாத வாய்ப்பு

பெருமாள் கோயிலில் மூலஸ்தானத்திற்கு முன்னுள்ள படிக்கு குலசேகரன் படி என்று பெயர். ஆழ்வாராகிய இவர், பெருமாள் மீது பக்தி கொண்டு எந்த வேலையும் இல்லாமல் படிபோன்று கிடந்தாவது உனது காட்சியை எப்போதும் பெறவேண்டும் என வேண்டினார்.
செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியோனே! வேங்கடவா! நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே!
என்று பாடினார். ஆனால் கோயிலில் படியாய் இருந்து பார்த்திருப்பாரா என்றால் இருந்திருக்க முடியாது. இந்த வாய்ப்பு அடியேனுக்குக்கிடைத்தது.
கீரப்பாக்கத்தில் பெருமாள் எழுந்தருளிய பிறகு அவருக்குக் கோயில் அமைந்துவருகிறது என்பது உங்களுக்குத் தெரியும்.
கோயில் அமைப்பதும் ஸ்ரீ கிருஷ்ணனை வளர்ப்பதும் ஒன்றுதான். யசோதை கண்ணனின் சேட்டைகளைப் பொறுத்து நொடி நொடியாய் அவனது திருமேனி தீண்டி பார்த்துப் பார்த்து வளர்த்தாள்.
அவனுக்காகப் பத்தியமிருந்து, பைத்தியம் போல அவன் பின் திரிந்து வளர்த்தாள். வளர்ந்த பிறகு அவனை உலகம் சொந்தம் கொண்டாடியது,
அதன் பிறகு யசோதையின் நிலை எப்படியோ அப்படியே எனது நிலையும் இருக்கப் போகிறது என்ற உணர்வு தோன்றியது.
14-3-2016 அன்று கோயில் திருப்பணி நடைபெற்றது. தூண்கள் நிறுவும் பணியில் பணியாட்களுடன் நண்பர் ஆறுமுகமும் அடியேனும் சேர்ந்து வேலை செய்தோம். அவர் தொடர்ந்து செய்தார். எனக்கோ களைப்பு ஏற்பட்டது. இந்த மலையில் எங்கும் நிழல் கிடையாது, பெருமாள் ஆலயம் எழும்பும் இடத்தில்தான் பெருமாளின் நிழலும் கர்ப்பக் கிருக நிழலும் உள்ளது.
சூரியன் உச்சியைத் தாண்டிவிட்டதால் கோயில் நிழல் கிழக்கு நோக்கிப் பரவியிருந்தது. அந்த நிழலில் அமர நினைத்து மூலஸ்தான படி அமையவுள்ள இடத்தில் அமர்ந்தேன். முதுகு வலிப்பது போலிருந்தால், கற்களை விலக்கி, பெருமாளுக்கு குறுக்கே மல்லாக்கப்படுத்தேன்.
இதமான காற்று ஓங்கி வீசி உடலை ஆசுவாசப்படுத்தியது. பெருமாளின் கருணையை நினைத்து அவர் திருமுகத்தைப் பார்த்தபோது, குல சேகர ஆழ்வார் பாடிய அந்த நினைவுகள் வந்துவிட்டன.
இறைவா, குலசேகர ஆழ்வார் படியாய் இருக்கும் நிலை கேட்டார், எனக்கோ அந்த நிலையையே தந்து விட்டாய். படியாய் இருந்து உனது பவள வாயைப் பார்க்கிறேன் எனஉருகினேன்.
இந்த வாய் மண்ணை தின்ற அறியாமையுள்ள மழலை வாயா? வேதங்களையும் கீதையையும் போதித்த ஞான வாயா? நாராயணா என்று அழைத்தால் இதோ அபயமளித்தேன் என உடனே கூறுகிற அன்பு வாயா? எந்த வாய் உனது? என எண்ணியபடியே யோசித்தேன். பெருமாளே, உனது வாய் என்ன வாய் என எண்ணினேன், நாவாய் என்பதை உணர்ந்தேன் எனக் கூறிக்கொண்டு படுத்திருந்தேன். நீரைக்கடக்க உதவும் தோணிக்கு நாவாய் என்று பெயர். பிறவிக்கடலை கடக்க உதவும் திருவாய் பரமனின் வாய் ஆகும்.

சாயியின் கிருபை!

    உருவமில்லாத இறைவன் பக்தர்களின்மேல் கொண்ட கிருபையினால் , ஸாயீயினுடைய உருவத்தில் சிரடீயில் தோன்றினான். அவனை அறிந்துகொள்வதற்கு , முத...