ஒரு மனிதன் பக்குவம் அடைவதற்கு முன் உள்ள நிலை என்ன? அடைந்த பின் காணும் நிலை என்ன?
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர், சில அற்புதமான உவமைகளைக் கூறுகிறார்.
ஒன்று…
குடத்தில் தண்ணீர் மொள்ளும் போது `பக்பக்’ கென்று சத்தம் உண்டாகிறது. குடம் நிரம்பியதும் அச்சத்தம் நின்று விடுகிறது.
இரண்டு….
ஒரு வீட்டில் விருந்துக்குப் பலரை அழைத்தால் முதல் முதலில் அவர்கள் போடும் சத்தம் அதிகமாக இருக்கும்.சாப்பிட உட்காரும் வரையில் அச்சத்தம் இருக்கும்.இலையில் அன்னம் பரிமாறி விருந்தினர்கள் சாப்பிடத் தொடங்கியதும், முக்கால்வாசிச் சத்தம் நின்றுவிடும். கடைசியாகத் தயிர் பரிமாறும்போது, அதை உண்ணும் `உஸ் உஸ்’ என்ற சத்தம்தான் கேட்கும்.
மூன்று…
தேனீயானது மலரில் உள்ளே இருக்கும் தேனையடையாமல், இதழ்களுக்கு வெளியே
இருக்கும் வரையில் ரீங்காரம் பண்ணிக்கொண்டு பூவைச் சுற்றிச் சுற்றி வரும். ஆனால், பூவுக்குள் நுழைந்து விட்டால் சத்தம் செய்யாமல் தேனைக் குடிக்கும்.
நான்கு…
புதிதாக வேறு மொழியைக் கற்றுக் கொள்பவன் தான் பேசும் போதெல்லாம்
அம்மொழியின் வார்த்தைகளை உபயோகித்துத் தனது புது ஈடுபாட்டைக் காட்டிக்
கொள்வான். அந்த மொழியில் விற்பன்னனோ, தன் தாய் மொழியில் பேசும்போது, அந்த மொழி வார்த்தைகளை உபயோகிப்பதில்லை.
ஐந்து…
ஒரு மனிதன் சந்தைக் கடைக்கு வெகு தூரத்தில் இருக்கும்போது, உருத் தெரியாத `ஓ’ என்ற சத்தத்தை மட்டும் கேட்கிறான். ஆனால், அவன் சந்தைக்குள் நுழைந்தவுடன் ஒருவன் உருளைக் கிழங்கிற்கும்,
மற்றொருவன் கத்திரிக்காய்க்கும் பேரம் பண்ணுவதைத் தெளிவாகக் கேட்கிறான்.
ஆறு…
சுடாத மாவுப் பலகாரம் ஒன்றைக் கொதித்துக் கொண்டிருக்கும் நெய்யில் போட்டால் முதலில் `பட்பட்’ என்ற சத்தம் உண்டாகும்.அந்தப் பலகாரம் வேக வேக அதன் சத்தம் குறையும்.முற்றிலும் வெந்தவுடன் சத்தமே கேட்காது.
பக்குவமற்ற நிலைக்கும், பக்குவ நிலைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் பகவான் எவ்வளவு அழகாகக் கூறியிருக்கிறார்.
No comments:
Post a Comment