சீரடி வாழ்கின்ற சீலனே சின்மயனே
காலடி தேடிவரும் பக்தர்க்கு அருள்பவனே
மூவடி அளந்திட்ட நாராயணன் அவதாரமே
திருப்பள்ளி எழுந்தருள்வாய் சீரடி சாயிநாதனே
விழிமலர்வாய் விழிமலர்வாய்
விடியலுக்கு விடைகொடுப்பாய்
விழிமலர்வாய் துவாரகமாயியில் அருள் பொழிவாய்
விழிமலர்வாய் திரு அருட்பார்வையுடன் விழிமலர்வாய்
திருப்பள்ளி எழுந்தருள்வாய் சீரடி சாயிநாதனே
ராம நவமியில் உதித்தவனே ஸ்ரீரகுநாதனே
காமக் குரோதங்களை வென்றவனே கமலாக்ஷனே
நியம நிஷ்டையுடன் பாடிடுவேன் உன் திருநாமமே
திருப்பள்ளி எழுந்தருள்வாய் சீரடி சாயிநாதனே
அருள் உதியால் அரும் பிணி போக்கிடும் ஆனந்த ரூபணே
வரும் பகையை விரட்டிடும் ஸ்ரீசக்ர
ராஜனே
வரம்தரும் திருப்பாதம் சீரடி மண்ணிலே
திருப்பள்ளி எழுந்தருள்வாய் சீரடி சாயிநாதனே
அணுவிலும் அணுவாய் அண்டமெலாம் நிறைந்தாய்
கனவிலும் நனவிலும் நினைவிலும் நீ நிறைந்தாய்
கனிந்திடும் அனலும்குளிர்ந்ததே துனியாய்
திருப்பள்ளி எழுந்தருள்வாய் சீரடி சாயிநாதனே
பரமேஸ்வரா பரந்தாமா பராத்பரா பரமாத்மா
குருபரா குருநாதா குறைதீர்க்கும் கோவிந்தா
அருளோடு அற்புத அனுபவம் தந்தவா
திருப்பள்ளி எழுந்தருள்வாய் சீரடி சாயிநாதனே
தத்தாத்ரேயர் அவதாரம் தரணியில் நீயன்றோ
சத்யரூபனே சித்தேஸ்வரனே ஸ்ரீசாயி நாதனே
நித்ய நிரஞ்சன நிர்மலனே சாந்த ஸ்வரூபனே
திருப்பள்ளி எழுந்தருள்வாய் சீரடி சாயிநாதனே
ஆலடி அமர்ந்த தென்முகனே சாயிநாதனே
எளியோர்க்கு இறங்கிடும் ஏகாந்தனே ஏற்றம் தருபவனே
அழிவற்ற ஆத்மஞானம் அருளிடும் வள்ளலே சாயிநாதனே
திருப்பள்ளி எழுந்தருள்வாய் சீரடி சாயிநாதனே
வேம்பில் அமர்ந்த வித்தகனே வேதநாயகனே
நாவில் நடமிடும் ஓம்காரம் உன் நாமமே
சீரடியில் உன்னடியை தினம் காணும் வரம் வேண்டுமே
திருப்பள்ளி எழுந்தருள்வாய் சீரடி சாயிநாதனே
விதியிலும் வழிமாற்றும் என் தாயும் நீயே
கதியென வந்தோர்க்கு குருநாதனும் நீயே
உதியாலே மெய் காத்த உத்தமனும் நீயே
திருப்பள்ளி எழுந்தருள்வாய் சீரடி சாயிநாதனே
நானிருக்க பயமேன் என்று நானிலத்தைக் காத்தவனே
காற்றாய் கனலாய் மழையாய் ஆனவனே
அற்புதங்கள் அனுதினமும் செய்தவனே யோகிரானே
திருப்பள்ளி எழுந்தருள்வாய் சீரடி சாயிநாதனே
கந்தலே ஆடையாய் பிக்ஷையே அன்னமாய் கொண்டவனே
தந்தையாய் தாயாய் ஞானகுருவுமாய் ஆன சுடர்விளக்கே
விந்தையே வடிவமாய் இமயமே குணமாய் கொண்டவனே
திருப்பள்ளி எழுந்தருள்வாய் சீரடி சாயிநாதனே
விஷ்ணுவின் நாமம் ஆயிரத்தை ஜீவனில் கரைத்தவனே
அஷ்ட ஐஸ்வர்யம் தந்திடும் ஸ்ரீதேவி நாதனின் அவதாரமே
இஷ்ட காரியங்கள் கஷ்டமில்லாமல் நடத்திடும் சங்கரனே
திருப்பள்ளி எழுந்தருள்வாய் சீரடி சாயிநாதனே
உன்னருளால் அகிலத்தில் ஆனந்த மழை பொழிவாய்
அழைத்ததும் வருவாய் ஆயுள் ஆரோக்கியம் அருள்வாய்
சீரடி வருவோர்க்கு இருள் நீக்கி வழிகாட்டிடுவாய்
திருப்பள்ளி எழுந்தருள்வாய் சீரடி சாயிநாதனே
அன்பே வடிவமாய் ஆருயிர் காத்த
சாயிபகவான் சுப்ரபாதம்தனை
பாடுவோர்க்கும் கேட்பவர்க்கும்
சர்வமங்களம் கைகூடும்
சீரடி வாசனை தேடி வரும் அடியார் அருள்பெறவே
திருப்பள்ளி எழுந்தருள்வாய் சீரடி சாயிநாதனே
No comments:
Post a Comment