நம்பிக்கை, பொறுமை


என்அன்புகுழந்தாய்!
 உனக்கு ஒரு கதை சொல்கிறேன்.  கவனமுடன் கேள். என்னையே உயிர்மூச்சாகக் கொண்ட, ஒரு பக்தன் இருந்தான். எது ஒன்றையும் என்னிடம் அனுமதி கேட்காமல் செய்யமாட்டான். அவனை எனக்கு மிகவும் பிடிக்கும். அவன் வாழ்க்கையில் மிகவும் கஷ்டநிலையில் இருந்தான்.

என்னுடன் எனது சாயி அப்பா இருக்கும் போது எனக்கென்ன கவலை என்று இருந்த நிலையில் அவனது கர்மவினை அவனைப் பாடாய்ப் படுத்தியது. கஷ்டங்களுக்கு மேல் கஷ்டங்கள். ஆனாலும் அவன் என்னை நிந்திக்கவில்லை.

ஆனால் அவனுடைய உறவினர்கள் உன்னுடைய கஷ்டகாலத்தில் எந்த உதவியும், கருணையும் காட்டாத இந்த குரு எதற்கு , எல்லாம் பொய் என்று சொல்லி கோபத்தில்  சிலா ரூபத்தில் இருந்த என்னையும் வெளியில் போட்டு உடைத்தனர்.

இனிமேல் இந்த வீட்டிற்குள் சாமி , குரு என்று சொல்லிக்கொண்டு யாருடைய சிலையையும், படத்தையும் வைக்கக்கூடாது என்றனர். அந்த மாதிரியான இக்கட்டான சூழலில் மற்றவர்கள் என்ன செய்திருப்பார்கள் என்பது இருக்கட்டும். என் பக்தன் என்ன செய்தான் தெரியுமா?

இது வரை தான்  வழிபட்ட என்னுடைய சிலாரூபம் அவன் இல்லத்தில் இல்லையென்றாலும் , நான் அங்கு இருக்கிறேன் என்பதாக நம்பினான். அதே நம்பிக்கையுடன் அவனுடைய கஷ்டங்களை எல்லாம் நான் தீர்த்து விடுவேன் என்ற முழு நம்பிக்கையில் பொறுமையுடன் இருந்தான்.

மனதிற்குள்ளேயே  என்னுடைய நாமத்தை எந்த நேரமும் ஜபித்தான். அந்த நிலையில் அவன் கர்மவினைகளின் தளையினால் கட்டப்பட்டிருந்தாலும், எனது கருணையினால் அவனை விடுவிக்க இரவும் பகலும் ஸ்ரீஹரியிடம் மன்றாடி அவனது கஷ்டங்களைத் தீர்த்து நல்ல நிலைக்கு கொண்டு வந்தேன்.

இதற்கு மூல காரணமாக இருந்த விஷயம் என்ன? அவனது நம்பிக்கை, பொறுமை, குருவிடத்தில் மாறாத , திடமான பக்தி. குரு கைவிடமாட்டார் என்ற ஆழமான நம்பிக்கை.

Powered by Blogger.