நரசிம்ம சுவாமி பிறப்பும் இளம் பருவமும்
தமிழ்நாட்டில் ஈரோட்டில் உள்ள
பவானி என்ற இடம் வெகு காலமாகவே புனிதத்தலம் என கருதப் பட்டு வந்த இடம் ஆகும்.
அங்குள்ள சங்கமேஷ்வர் மற்றும் பவானி தேவியை வணங்கி துதிப்பதற்கு நாடு முழுவதும்
இருந்தும் பல பக்தர்கள் ஆண்டு முழுவதும் வருவதுண்டு. அவர்களின் எண்ணிக்கையோ சொல்லி
மாள முடியாது. காவேரி, பவானி
மற்றும் குப்தா காமினி என்ற மூன்று நதிகளும் சங்கமிக்கும் அந்த இடத்தை திருவேணி
சங்கம் என்று கூறுவார்கள்.
ஸ்ரீவத்ச கோத்திரத்தை சேர்ந்த
வெங்கடகிரி ஐயர் மற்றும் அவருடைய மனைவியான அங்கச்சி அம்மாள் என்ற பிராமணத்
தம்பதியர் சங்கமேச்வரர் மற்றும் பவானி தேவியை வணங்கி தங்களுக்கு ஒரு ஆண் குழந்தை
வேண்டும் என வேண்டி வந்தனர். ஒருமுறை அவர்களைச் சந்தித்த சாது ஒருவர் அவர்களை
அங்குள்ள ஷோலங்கர் நகருக்கு சென்று நரசிம்மரை தரிசித்தால் அவர்களது வேண்டுகோள்
நிறைவேறும் என்று கூற, அவர்களும் ஷோலங்கருக்குச்
சென்று அங்கு நரசிம்மரைத் துதித்தனர்.
அவர்களுடைய வேண்டுகோள்
பலித்தது. அங்கச்சியம்மாள் கருத்தரித்தாள். 1874 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இருபத்தி ஒன்றாம் தேதியன்று,
சிராவண பஞ்சமி தினத்தன்று மாலை வீட்டில்
இருந்த மாடுகள் வெளியில் சுற்றித் திரிந்தபின் வீடு வந்து சேர்ந்த கோதுலி
முகூர்த்த வேளையின் பொழுது, அவர்களுக்கு
ஒரு ஆண் குழந்தை விசித்திரமான சூழ்நிலையில் பிறந்தது.
கருத்தரித்து இருந்த
அங்கச்சியம்மாள், வீட்டின் பின் புறத்தில்
இருந்த மாட்டுக் கொட்டகையை நோக்கி நடந்து கொண்டு இருந்தபோது, எந்த விதமான பிரசவ வலியும் இன்றி, எவருடைய துணையும் இன்றி, வீட்டின் முற்றத்திலேயே நரசிம்மசுவாமி என
பிற்காலத்தில் அழைக்கப்பட்ட அந்தக் குழந்தை பிறந்தது.
தான் பிறக்கும் இடம் வீட்டிற்கு
உள்ளே இல்லாமல் அனைவருக்கும் பொதுவான இடத்தில் , பரந்த வெளியில், ஆகாயத்தின் கீழே பிறக்க எண்ணியதின் விளைவே அது. மெல்லிய
காற்று இதமாக வீச, பவானி ஆற்றில் சலசலத்து ஓடிக்கொண்டு இருந்த தண்ணீர் அற்புதமான
ஒலி ஓசை எழுப்ப, அந்த இடமே ஒரு
அமைதியான சூழ்நிலையை தந்து கொண்டு இருந்தது.
பிறந்த குழந்தை நரசிம்மர் தந்த
பரிசு என எண்ணிய பெற்றோர், அதன் எடைக்கு
எடை தங்கமும் வெள்ளியுமாக ஷோலங்கர் ஆலயத்துக்குக் கொடுத்தனர். குழந்தை ராம
பிரானின் நட்சத்திரமான கடக ராசி, புனர்வசுவின்
நான்காம் பாதத்தில் பிறந்ததினால், அதனுடைய தந்தை அதற்கு ராமநாதன் எனப் பெயர்
இட்டார். ஆனால் அங்கச்சி அம்மாள் கேட்டுக்கொண்டதினால் நரசிம்ம பெருமாளின் நினைவாக
இருக்கட்டும் என நரசிம்மர் எனப் பெயர் வைத்தார்.
அப்படிப்பட்ட புனிதமான நட்சத்திரத்தில்
பிறந்தவர்கள் ஆதி சங்கரர், ரமண
மகரிஷி, போன்றவர்கள். அந்த
குழந்தையின் ஜாதகத்தை கணித்தவர்கள் அது பிற் காலத்தில் பெரிய மகானாக இருக்கும்
என்றனர்.
பவானி ஆற்றின் பக்கத்தில் பெரிய
நிலப் பரப்பில் தேங்காய், மாங்காய்
என்று பல மரங்கள் இருந்த தோப்புடன் கூடிய இடத்தில் அவருடைய தந்தையின் வீடு
இருந்தது. அவர் பெரிய வழக்கறிஞ்ஞர்.
காலம் ஓடியது. மிகவும் குறும்புக்காரராகவும்,
புத்திசாலியுமாகவே நரசிம்மர் வளர்ந்து
வந்தார். வீட்டிற்கே ஆசிரியர் வரவழைக்கப்பட்டு பாடங்கள் போதிக்கப்பட்டன. நரசிம்மர்
தனது நண்பர்களை அழைத்து வந்து கலகலப்பாக பேசிக்கொண்டு இருப்பார். மற்ற
சிறுவர்களிடம் வேலையும் வாங்குவார்.
நரசிம்மர் இயற்கையிலேயே
தலைவரைப் போலவே இருந்தார். மற்றவர்களை அடக்கி ஆண்டார். ஆனால் அவர் எவருக்கும் அடங்க
மாட்டார். எவருடனும் சண்டைக்குப் போக மாட்டார், ஆனால் வந்த சண்டையை விடவும் மாட்டார். நீதி
மறுக்கப்பட்டால் அவரால் அதை ஏற்க முடியாது. அதனாலேயே பல சமயங்களில் அவர் உணர்ச்சி
வசப்படுவார். தன்மானமும் தனித்தன்மையையும் கொண்டவராக இருந்ததினால்தான் அவரை
எவராலும் ஏமாற்ற முடியவில்லை. அதனால்தானோ என்னவோ அவர் மற்றவர்களுடன் அதிகம்
பழகியதும் இல்லை.
அவருடைய தாயார் அவருக்கு அதிக
செல்லம் கொடுத்து வளர்த்ததாலும், அவருக்கு தலைக்கனம் ஏற்படவில்லை. எத்தனை வேலை
செய்தாலும் முகம் அதே பொலிவுடன் இருந்தது அவருக்கு இயற்க்கை தந்திருந்த பரிசு.
சிறுவராக இருந்தாலும் முதிர்ந்த அறிவு கொண்டு இருந்தார்.
நரசிம்மருக்கு மூன்று வயதான
பொழுது அவருடைய தாயாருக்கு இன்னொரு மகன் பிறந்தார். அதற்கு லஷ்மணா எனப்
பெயரிட்டனர். ஆனால் விதி விளையாடியது. அந்தக் குழந்தைக்கு மூன்று வயதான பொழுது
அவனை எவரோ கடத்திச் சென்று, அதன்
உடம்பில் இருந்த நகைகளை பறித்துக் கொண்டு அதை கொன்று போட்டுவிட்டுச் சென்று
விட்டனர். அது குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
லஷ்மணாவின் மரணத்துக்குப் பின்
பவானி நதிக்கரையில் விளையாடிக்கொண்டு இருந்த குழந்தை நரசிம்மர் கால் தவறி பவானி
நதியில் விழுந்துவிட , அதை வயலில்
வேலைப் பார்த்து வந்த ஒருவர் காப்பாற்றினார்.
அந்தக் குழந்தையின் ஜாதகத்தை
ஆராய்ந்த ஜோதிடர், அந்தக் குழந்தை ஒரு
கண்டத்தில் இருந்து தப்பி விட்டதினால், எண்பது வயது வரை உயிருடன் இருக்கும் எனவும், ஆனால் அவர்கள் இருக்கும் இடத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்
எனவும் அறிவுரை தந்தார். அது மட்டும் அல்ல, அந்தக் குழந்தை பிற்காலத்தில் பலரது
வாழ்வை நிர்ணயிக்கப் போகும் மனிதராக இருப்பார் என்றும் அதனால் ஒருவேளை அவர்
குடும்பத்தை விட்டு விலகி இருக்கவும் கூடும் என்றும் கூறினார். ஏற்கனவே ஒரு
குழந்தையை பறி கொடுத்து விட்டதினால் அவர்களால் அதை ஏற்க முடியவில்லை.
அவருடைய தாயாருக்கு அப்போது
வயது முப்பத்தி எட்டு ஆயிற்று. அவருடைய பெற்றோர்கள் சங்கமேஷ்வரரிடமும், பவானி தேவியிடமும் தம்முடைய மகன் சன்னியாசியாக
மாறிவிடக்கூடாது என வேண்டிக்கொண்டு,
அதற்காக இனி தாம் இருவரும் சன்னியாச வாழ்க்கை வாழ்வதாக சபதம் ஏற்றுக் கொண்டனர்.
அதே நேரம் வெங்கடகிரி ஐயர் ஜோதிடரின் ஆலோசனைப்படி வீட்டை விற்றுவிட்டு அந்த
ஊரின் அருகில் இருந்த சேலத்தில் சென்று வசிக்கலானார். அங்கு சென்று தன்னுடைய
வக்கீல் தொழிலை தொடர்ந்தார்.
.........தொடரும்