Friday, July 28, 2017

ஸ்ரீ சுவாமி சமர்த்தர்


ஸ்ரீ தத்தாத்ரேயரின் அவதாரமான சுவாமி சமர்த்தர் (அக்கல்கோட் மகராஜ்) என்று பிரபலமாக அழைக்கப்படும் இவரது பெயர் மகாராஷ்டிரா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் எல்லா வீடுகளிலும் அறியப்படும் பிரபலமான பெயராகும். 
அக்கல்கோட்  என்னும் இடத்தை 22 வருடங்களாகத் தம் வசிப்பிடமாக இந்தச் சத்குரு தேர்ந்தெடுத்துக் கொண்டதனாலும், 1878-இல் அங்கேயே அவர் மகாசமாதியும் அடைந்ததனாலும், அவர் ' அக்கல்கோட் மகராஜ் ' என்றும் அழைக்கப்பட்டார். மகாராஷ்ட்ராவிலுள்ள சோலாப்பூர் மாவட்டத்தில் அக்கல்கோட் அமைந்துள்ளது.
 ஸ்ரீ ஷிர்டி சாயிபாபாவின் பக்தர்களுக்கு சுவாமி சமர்த்தரின் வாழ்வும், அவரது செயல்களும் பற்றி அறிந்துகொள்வது மிகுந்த ஊக்கத்தை அளிக்கும். ஸ்ரீ சுவாமி சமர்த்தர், ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா இருவரின் வாழ்வையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அவர்கள் வாழ்விலும், செயல்களிலும் வியக்கத்தக்க அளவு ஒற்றுமை இருப்பது தெரியவரும். அவர்கள் போதனா முறைகள், உலக அளவிலான அவர்களின் அணுகுமுறை, அவர்கள் நிகழ்த்திய அற்புதங்கள் இவை யாவற்றிலும் அந்த ஒற்றுமை உண்டு. 
உண்மை என்னவெனில், சுவாமி சமர்த்தரும், ஸ்ரீ ஷிர்டி சாய்பாபாவும், இரு வெவ்வேறு ஸ்தூல சரீரங்களில், ஒரே தெய்வீக சக்தியின் வெளிப்பாடு ஆவர்கள். தம்முடைய மகாசமாதிக்கு முன்னர், சுவாமி சமர்த்தர், அவருடைய சீடர் ஒருவரிடம், ஷிர்டியில் உள்ள ஸ்ரீ சாயியை வணங்கும்படியும், எதிர்காலத்தில் தாம் ( சுவாமி சமர்த்தர் ) ஷிர்டியில் இருக்கப்போவதாகவும் அறிவுறுத்தினார்.
 சுவாமி சமர்த்தரின் இளமைக் கால வாழ்க்கையும் கூட ஸ்ரீ ஷிர்டி சாய்பாபாவின் வாழ்க்கையைப் போலவே, யாரும் அறியாத புதிராகவே உள்ளது. குருச்சரித்திரத்தில் ஸ்ரீ தத்த  அவதாரம் ஸ்ரீ  நரசிம்ம சரஸ்வதி அவர்கள் 1458 ம் ஆண்டு கர்தாளிவனத்தில் மஹாசமாதி அடைந்ததாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. 300 ஆண்டுகள் தவ நிலையில் இருந்தபோது அவர்மேல் ஒரு பெரிய எறும்பு புற்று வளர்ந்து வெளியுலகத்திலிருந்து அவரை மறைத்தது. ஒருநாள் ஒரு மரம்வெட்டியின் கோடாரி மரம் வெட்டும்பொழுது தவநிலையில் இருந்த ஸ்ரீ  நரசிம்ம  சரஸ்வதி ஸ்வாமிகள் மேல் தவறுதலாக விழுந்தது.  கோடாரியின் வெட்டும் பாகத்தில் இரத்தக்கறை படிந்திருப்பதைக் கண்டு அவன் அதிர்ச்சியுற்றான். அந்தப் புற்றை சுத்தம் செய்து பார்த்தபோது, ஆ! அங்கு அவன் கண்டதென்ன? அவன் அங்கு ஒரு யோகி, மெதுவாகக் கண்திறந்து, வாயடைத்து நின்ற விறகு வெட்டியைச் சமாதானப்படுத்தி, அவருடைய குறிக்கோளைத் திரும்பவும் நிறைவேற்ற, அவர் மறுபடியும் இவ்வுலகில் தோன்ற வேண்டும் என்பது தெய்வ விருப்பம் என்றும் கூறினார். இந்த யோகி, இந்த புதிய அவதாரத்தில், ' சுவாமி சமர்த்தர்' என்று அழைக்கப்பட்டார்.
 சுவாமி சமர்த்தர், அக்கல்கோட்டில் வந்து குடியேறும் வரை பல இடங்களில் சுற்றித் திரிந்தார். இமயமலைப் பகுதிகளில் அலைந்தபோது, அவர் சீனாவிற்க்குச் சென்றார். அதன்பின்பு, பூரி, பனாரஸ், ஹரித்வார், கிர்னஸ், கத்தியவாட், இராமேஸ்வரம்  போன்ற பல இடங்களுக்கும் சென்றார். மகாராஷ்டிரத்தில், சோலாப்பூர் மாவட்டத்தில் பண்டர்பூருக்கு அருகிலுள்ள நகரமான மங்கல்வேதாவிலும் தங்கியிருந்தார். 1856-ஆம் ஆண்டு அக்கல்கோட்டுக்கு வந்து, அங்கு அவர் பூத உடலில் 22 வருடகாலம் தொடர்ந்து இருந்தார். அவர் அக்கல்கோட்டுக்கு, சின்டோ பண்ட்டோல் என்ற ஒருவரின் அழைப்பின் பேரில் வந்து அந்நகரின் வெளிப்புறத்தில் ஓரிடத்தில் தங்கினார்.
 ஆன்மீகத்தில் உயர்ந்த நிலையை அடைந்தவர் என்பதை விரைவிலேயே அப்பகுதி மக்கள் உணர்ந்தனர். சோலப்பா என்பவரின் வீட்டில் அவர் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்து கொடுத்தார். இந்த சிறிய வீட்டில்தான் இறுதிவரை சுவாமி சமர்த்தர் வசித்துவந்தார்.
 விரைவிலேயே, ஓர் ஆன்மீக குரு என்ற முறையில் சுவாமி சமர்த்தரின் பெயர் எல்லா இடங்களிலும் பரவியது. பக்தர்கள், அவர் ஆசிகளைப் பெறத் தேடிவந்தனர். அவர் ஹிந்து, முஸ்லிம்கள், கிறித்துவர்கள் மற்றும் பார்சிகள் அனைவரையும் சமமாகப் பாவித்தார். ஏழைகள், தேவையுள்ளவர்கள் மற்றும் சமுதாயத்தில் அடிமட்டத்தில் உள்ளவர்கள்- இவர்கள்பால் அவர் எப்போதும் கருணை புரிந்தார். ஷீரடியைப் போல, அக்கல்கோட்டிலும் வியாழக்கிழமை கொண்டாட்டத்திற்குரிய  சிறப்பு நாளாயிற்று.
 பல வருடங்கள், ஏழை எளியவர்க்குத் தொண்டு செய்து, நோயுற்றவர்களைக் குணப்படுத்தி, எண்ணற்ற லீலைகளை புரிந்தபின்னர்,சுவாமி சமர்த்தர் ஒருநாள் திடீரென தம் பூதஉடலை விடுத்துச் செல்லும் காலம் வந்துவிட்டது என்று அறிவித்தார். அது ஷாக்கா 1800, சைத்ர சுதா திரியோதசி - அதாவது கி.பி. 1878- ஆம் வருடத்தில், ஒரு செவ்வாய்க்கிழமை, மாலை 4 மணி. அந்நேரத்தில் அவர் பத்மாசனத்தில் அமர்ந்துகொண்டு அவருடைய இறுதி மொழிகளைக் கூறினார். ' யாரும் அழக் கூடாது ' நான் எப்பொழுதும் எல்லா இடங்களிலும் இருப்பேன். பக்தர்களின் ஒவ்வோர் அழைப்பிற்கும் பதிலளிப்பேன். ஸ்ரீ சாயிபாபாவும் மகாசமாதி அடைவதற்கு முன் இதையேதான்  கூறினார்.
 சுவாமி சமர்த்தர் தம் உடலை விட்டு நீங்குவதற்கு முன், கேசவ் நாயக் என்ற பக்தர் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டு ' மகாராஜ், நீங்கள் செல்வதால் எங்களுக்கு யார் பாதுகாப்பு அளிப்பார்கள்? ' எனக் கேட்டார். சுவாமி சமர்த்தர் தம் பாதுகைகள் ஒரு ஜோடியை வணங்குவதற்காக அவருக்கு அளித்தார். ' இனிவருங்காலங்களில், அஹமது நகர் மாவட்டத்திலுள்ள ஷிர்டியில்  நான் தங்கியிருப்பேன் ' எனக் கூறினார். இன்னொரு பக்தரான கிருஷ்ணா அலி பாக்கர், அக்கல்கோட்டுக்குச்  சென்று சுவாமி சமர்த்தரின் பாதுகைகளை வழிபடத் தீர்மானித்தார். அப்போது சுவாமி சமர்த்தர் அவர் கனவில் தோன்றி ' நான் இப்போது ஷிர்டியில்  தங்கியுள்ளேன் ' அங்குச் சென்று என்னை வழிபடு. எனக்கூறினார். பாக்கர் சீரடி சென்று ஆறு மாதம் அங்குத் தங்கினார். பின்னர், அவர் ஸ்ரீ சாயியிடம் விடைபெற்றுக்கொண்டு மீண்டும் அக்கல்கோட் செல்ல விரும்பியபோது, ஸ்ரீ சாயி, ' அக்கல்கோட்டில் என்ன இருக்கிறது ? அக்கல்கோட் மஹராஜ் இங்கு வசித்துக் கொண்டிருக்கிறார்' என்று கூறினார்.
 சுவாமி சமர்த்தரின் தெய்வீக லீலைகளை அவர் மகாசமாதி அடைந்ததும் நின்றுவிடவில்லை. இன்றும் கூட அவரது பக்தர்கள், கண்ணுக்குப் புலப்படும் மற்றும் கண்ணுக்குப் புலப்படாத உதவிகள் என அவருடைய அற்புங்களை அனுபவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...