Monday, July 17, 2017

பாபா பற்றி ஒரு சில.....பாபாவின் பக்தர்களில் ஒருவரான கோவிந்தராவ் ரகுநாத தாபோல்கர் என்பவர்தான் பாபாவின் சரித்திரத்தை முதன்முதலில் தொகுத்து எழுதினார். அதைத் தொடர்ந்து பாபா பற்றி பல நூல்கள் வெளியானது.
சமீப ஆண்டுகளில் சீரடி பாபா பற்றி புற்றீசல் போல ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வெளிவந்துகொண்டுள்ளன. பாபாவின் அவதார வரலாற்றையும், அற்புதங்களையும் இந்த புத்தகங்கள் வெளிக்கொண்டு வந்துள்ளன. ஆனால் பாபாவின் பிறப்பு பற்றிய ரகசியத்தை, இது வரை யாராலும் துல்லியமாகக் கூற முடியவில்லை. அது இன்னமும் புரியாத புதிராகவே உள்ளது.
இதன் காரணமாக சீரடி பாபாவின் தோற்றம் பற்றியும், இளமைக்காலம் பற்றியும் சில மாறுபட்ட குறிப்புகள் உள்ளன. என்றாலும் பாபா 1838-ம் ஆண்டு பிறந்திருக்கலாம் என்பதை பொதுவாக எல்லாரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். பாபாவிடமே கேட்டு அறிந்த தகவல்களின் அடிப்படையில் அவரது அவதாரம் பற்றி கூறப்படும் சரித்திரம் ஒன்று உள்ளது....
நிஜாம் மன்னரின் ஆட்சிக்குட்பட்ட பாத்ரி என்ற ஊரில் ஹரிசாடே, லட்சுமிபாய் என்ற தம்பதியருக்கு மகனாக பாபா பிறந்தார். ஒரு நாள் அவர்கள் கனவில் இறைவன் தோன்றி, “உங்கள் குழந்தைக்கு 6 மாதம் ஆனவுடன் முஸ்லீம் பக்கீர் ஒருவர் வருவார். அவரிடம் உங்கள் குழந்தையை தத்து கொடுத்து விடுங்கள்என்றார். அதன்படி பக்கீர் வந்தார். அவரிடம் குழந்தையை ஒப்படைத்தனர்.
அந்த குழந்தையை மன்வாத் நகருக்கு எடுத்துச் சென்ற முஸ்லீம் பக்கீர், அங்கு தன் மனைவியுடன் அந்த குழந்தையை வளர்த்தார். இந்துக் குடும்பத்தில் பிறந்த குழந்தை, முஸ்லீம் குழந்தையாக வளர்ந்தது. 1838-ம் ஆண்டு முதல் 1842-ம் ஆண்டு வரை மன்வாத் நகரில் வளர்ந்த அந்த குழந்தை சிறுவனாக மாறி இருந்தான். அவனை ‘‘பாபு’’ என்றழைத்து பக்கீர் சீராட்டி செல்லமாக வளர்த்தார்.
அந்த சிறுவனுக்கு 5 வயது நடந்து கொண்டிருக்கும் போது ஒரு நாள்... முஸ்லீம் பக்கீர் தனது இறுதிக்காலம் நெருங்கி விட்டதை உணர்ந்தார். மனைவியை அழைத்தார்.
நான் இன்னும் சில தினங்களில் இறந்து விடுவேன். அதன் பிறகு நீ இவனை அழைத்துக் கொண்டு, 10 மைல் தொலைவில் உள்ள சேலுவாடி எனப்படும் சைலு கிராமத்துக்கு செல். அங்கு வேங்குசா என்று ஒரு மகான் உள்ளார். அவரிடம் நம் மகனை சேர்த்து விடு. அவர் உங்கள் இருவரையும் பார்த்துக் கொள்வார்என்றார்.
சொன்னது போல அந்த பக்கீர் சில தினங்களில் மரணம் அடைந்தார். அவர் கூறியபடி 5 வயது சிறுவனை வேங்குசாவிடம் பக்கீர் மனைவி அழைத்துச் சென்றார். அதற்கு முந்தைய நாள் இரவு வேங்குசா கனவில் சிவபெருமான் வந்தார். ‘‘நாளை பகல் 11 மணிக்கு நான் உன்னிடம் வருவேன். தயாராக இரு’’ என்று கூறி மறைந்தார்.
வேங்குசாவுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. மறுநாள் காலை பூஜைகளை முடித்து விட்டு ஈசனின் வருகையை எதிர்பார்த்து தயாராக இருந்தார். 11 மணி ஆன போது பரபரப்பின் உச்சத்தில் தவித்துப் போனார். அப்போது வேலைக்காரன் வந்து, உங்களை பார்க்க ஒரு பெண்ணும், பையனும் வந்திருக்கிறார்கள் என்றான். உடனே அவர்களை அழைத்து வர வேங்குசா உத்தரவிட்டார்.
சிறுவன் உள்ளே வந்தான். அவனைப்பார்த்ததும் இவன் தெய்வீகக் குழந்தை ஈசனே அந்த சிறுவன் வடிவில் வந்து இருப்பதாக வேங்குசாவுக்கு புரிந்தது. இந்த வேங்குசாதான் சீரடி பாபாவுக்கு குருவாகத் திகழ்ந்தவர்.
பாலபாபா வாழ்வோடு 12 ஆண்டுகள் இருந்து மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியவர். எனவே வேங்குசா பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
மராட்டிய மாநிலம் ஜாம்பவாவி எனும் ஊரைச் சேர்ந்தவர் கேசவராவ். இவரது மகன் கோபால்ராவ் தேஷ்முக். இவரை அவ்வூர் மக்கள் வேங்குசா என்று அழைத்தனர். கடும் வறட்சி, பஞ்சம் காரணமாக ஜாம்பவாவி ஊரைக் காலி செய்த வேங்குசா சேலு வாடிக்கு சென்று நிரந்தரமாக தங்கி விட்டார்.
வேங்குசா திருப்பதி ஏழுமலையான் மீது மிகுந்த பக்தி கொண்டவர். அவரிடம் துக்கோஜி, கஜானன், மாதவன் உள்பட ஏராளமான சீடர்கள் இருந்தனர். அவர்களுடன் பாபாவும் ஒரு சீடனாக இருந்தார். ஆனால் முஸ்லீம் பக்கீர்கள் அணியும் சல்லாடையை அணிந்து முஸ்லீம் சிறுவன் போல பாபா காணப்பட்டார். இதனால் மற்ற சீடர்கள் அவருடன் சேரவில்லை.
வேங்குசாவோ பாபாவிடம் மட்டும்தான் நெருங்கிப் பழகினார். ஒருநாள் பாலபாபாவை கயிற்றில் கட்டி கிணற்றுக்குள் தலைகீழாக தொங்க விட்டார். சில மணி நேரம் கழித்து ‘‘எப்படி இருந்தது’’ என்று வேங்குசா கேட்டார். அதற்கு பாலபாபா ஆனந்தமாக இருந்தது என்றார். அதன் பிறகே பாலபாபாவை தன் ஆத்மார்த்த சீடனாக வேங்குசா ஏற்றார். பாபா தன் சக்தியால் இந்த உலகை ஆளப்போகிறார் என்பதை வேங்குசா தன் மனக்கண்ணால் உணர்ந்தார்.
பாபாவை பார்க்கும் போதெல்லாம் வேங்குசாவிடம் அன்பும், பாசமும் பொங்கியது. வேத சாஸ்திரங்கள் அனைத்தையும் பாபாவுக்கு அவர் கற்றுக் கொடுத்தார். நாளடைவில் வேங்குசாவும் பாபாவும் பிரிக்க முடியாதவர்களாக மாறினார்கள். ஒரு கட்டத்தில் சீடன் என்ற நிலை மாறி வேங்குசாவின் வளர்ப்பு மகனாகவே பாபா மாறினார்.
அது கண்டு வேங்குசா பூரித்துப்போனார். பாபாவுக்கு அவர் எல்லா உரிமைகளையும் வழங்கி கவுரவித்தார். இந்த சிறப்புகளால் பாபா மனம் கர்வம் கொள்ளவில்லை. மாறாக வேங்குசாவுக்கு நாளுக்கு நாள் அதிகமான பணிவிடைகள் செய்தார். இதன் காரணமாக வேங்குசாவின் ஆசிரம பொறுப்புகள் அனைத்தும் பாபா வசம் வந்தன. இது அந்த ஆசிரமத்தில் இருந்த வேங்குசாவின் மற்ற சீடர்களான துக்கோஜி, கஜானன், மாதவன் ஆகிய மூவருக்கும் பிடிக்கவில்லை. பாபா மீது அவர்களுக்கு பொறாமை ஏற்பட்டது.
அந்த பொறாமை நாளடைவில் கொலை வெறியாக மாறியது. பாலபாபாவை கொலை செய்ய அவர்கள் சரியான நேரம் பார்த்து காத்திருந்தனர். ஒருநாள் வேங்குசாவும், சிறுவனாக இருந்த பாபாவும் சைலு கிராமத்துக்கு அருகில் உள்ள ஒரு தோட்டத்துக்கு சென்றனர். அங்கு இருவரும் ஆன்மீகம் மற்றும் துறவற வாழ்க்கைப் பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது புதரில் மறைந்திருந்த துக்கோஜி எனும் சீடன் ஒரு செங்கலை எடுத்து குறி பார்த்து பாபா மீது வீசினான். செங்கல் சுழன்று வருவதை வேங்குசா தனது ஆத்ம சக்தியால் உணர்ந்தார். மறுவினாடி அவர் கையைத் தூக்கி நில் என்று சொல்ல அந்த செங்கல் அப்படியே அந்தரத்தில் நின்றது. பாபா அதை பார்த்து புன்னகைத்தார்.
அடுத்த நிமிடம் துக்கோஜி இன்னொரு கல்லை எடுத்து வீசினான். அந்த கல் வேங்குசா தலையைத் தூக்கியது. அவர் தலையில் இருந்து ரத்தம் பீறிட்டு வழிந்தது.
அதைக்கண்டதும் பாபா துடித்துப்போனார். தன் துண்டை எடுத்து வேங்குசா தலையில் கட்டி விட்டார்.
பிறகு அழுது கொண்டே, “அய்யா நீங்கள் என் குரு. எல்லா வசதியும் உள்ள உங்களுக்கு ஆத்ம பலமும் நிரம்ப உள்ளது. நீங்கள் என்னிடம் காட்டும் பரிவு மற்றவர்களுக்கு பிடிக்கவில்லை.
என் மீதுள்ள கோபத்தில் உங்களை கொல்ல முயற்சி செய்கிறார்கள். ஏற்கனவே நான் பெற்ற தந்தையையும், வளர்த்த தந்தையையும் இழந்தவன். எனக்கு ஆதரவு தரும் ஒரே ஒரு காரணத்துக்காக உங்களை இழக்க நான் விரும்பவில்லை. எனக்கு இன்றே விடை கொடுங்கள். நான் உங்களை விட்டு பிரிந்து சென்றுவிடுகிறேன். நான் ஒருபோதும் உங்களை மறக்க மாட்டேன். நான் போய் வருகிறேன்என்றார்.
பாலபாபாவை வேங்குசா தடுத்து நிறுத்தினார். தலையில் வழிந்த ரத்தத்தை துடைத்தப்படி பாபாவை பார்த்து சிரித்தார்.
பிறகு அவர், “செல்ல மகனே... உண்மையில் நீ என்னை விட்டு பிரிந்து செல்லும் நேரம் வந்து விட்டது. நான் உனக்கு ராஜாவாக, குருவாக இருக்கலாம். ஆனால் இந்த உலகுக்கே நீ ராஜாதி ராஜாவாக போகிறாய்.
நீ சாதி, மதம், இனம் கடந்து கோடான கோடி மக்களுக்கு கண்கண்ட தெய்வமாக திகழப் போகிறாய். ஏழை-எளியவர்களுக்கு அருள் வழங்கும் வள்ளலாக நீ இருப்பாய்.  உன்னைத்தேடி கோடிக்கணக்கான மக்கள் வருவார்கள். உன் அருள் பெற அவர்கள் தவம் கிடப்பார்கள். உன்புகழ் இந்த உலகம் முழுவதும் பரவப் போகிறதுஎன்றார்.
                   

சாயியின் கிருபை!

    உருவமில்லாத இறைவன் பக்தர்களின்மேல் கொண்ட கிருபையினால் , ஸாயீயினுடைய உருவத்தில் சிரடீயில் தோன்றினான். அவனை அறிந்துகொள்வதற்கு , முத...