பாபாவின் மீதான நம்பிக்கை வளரும் வழி
"வேதனை சூழும் நிலையிலும், நெருக்கடியான வேளைகளிலும், ஒருவர் முழுமனதுடனும், நம்பிக்கையுடனும், ஸ்ரீ சாயி சத்சரித்திரத்தில் தீர்வுகளைத் தேடினால், அவ்வடியாருக்குத் தீர்வு கிடைப்பது மட்டுமல்லாது மன அமைதியும் கிட்டும். பாபாவின் மீதான அவரது நம்பிக்கையும் மேலும் வளரும் ".
ஒரு சாயி பக்தரின் தலையாய கடமை என்னவென்றால், ஸ்ரீ சாயி சத்சரித்திராவைப் படித்து அதை முழுமையாகத் தன்னுள் வாங்கிக் கொள்வதே. எவ்வளவுக்கெவ்வளவு இதை பக்தர் ஒருவர் மனமொன்றிப் படிக்கிறாரோ, அவ்வளவுக்கு அவ்வளவு, அவர் பாபாவுக்கு நெருக்கமாகிறார் என்பது மட்டுமல்லாமல், அவருள் எழும் அச்ச உணர்வும், ஐயஉணர்வும் விலகிப் போகும்.
ஒரு சிக்கலான சமயத்தில் அடியவர் ஒருவருக்கு விளக்கம் / தெளிவு / பதில் ஒன்று தேவைப்பட்டால், பாபாவை முழுமனதுடனும், நம்பிக்கையுடனும் நினைத்து வணங்கி, எதேச்சையாகப் புத்தகத்தைப் பிரித்துப்பார்த்தால், பிரித்த பக்கத்தில், அடியவர் கோரும் பதில் / விளக்கம் கிடைக்கும் என்பதைப் பலரும் அனுபவித்திருக்கின்றனர். பலரும் ஒருவார காலம் அதைப் பாராயணம் செய்து, தாங்கள் விரும்பிய நன்மைகளைப் பெற்று இருக்கின்றனர்.  எனவே, சாயி பக்தர்கள் அனைவரும் சாயி சத்சரித்திராவைக் கீழ்க்கண்ட விதமாகப் பயன்படுத்திக் கொள்வது நலம் ;
1 ஸ்ரீ சாயி சத்சரித்திரா அதிக விலையுள்ள புத்தகம் அன்று. புத்தகத்தை வாங்கி, அதை ஒரு புதிய துணியில் நன்கு சுற்றி, வீட்டின் பூஜையறையில் பாபாவின் படம் அல்லது உருவச்சிலை முன்பு பக்தியுடன் சாக்ஷாத் சாயியின் ஸ்வரூபமாகவே எண்ணி வழிபட்டு வரவும். தினமும் ஒரு அத்யாயமாவது படிக்கப்படவேண்டும்.
2  வீட்டிலிருந்தாலும், வெளியிலிருந்தாலும் ஒவ்வொரு நாளும் உறங்கப் போகுமுன், தவறாமல் சில பக்கங்கள் படிக்கப்பட வேண்டும். பாபாவை தன் சிந்தனையில் நிறுத்திய வண்ணமே, கண் இமைகளை மூடி உறங்க ஆரம்பிக்க வேண்டும்.
3  ஸ்ரீ சாயி சத்சரித்திராவில் சொல்லி உள்ளபடி, சிக்கலான நேரங்களில் பக்தி சிரத்தையுடன் ஒருவாரம் இதைப் படிக்க வேண்டும். முடிந்தால் பாராயணத்தினை, வியாழன் அல்லது முக்கிய நாட்களான ராமநவமி, தசரா, குருபூர்ணிமா, ஜன்மாஷ்டமி, மகாசிவராத்திரி ஆகிய நாட்களில் தொடங்கினால் நன்று. ஏழாவது நாள் பாராயணம் முடிந்தவுடன் ஏழைகள், ஆதரவற்றவர்கள் ஆகியோர்களுக்குக் கோயிலிலோ தத்தம் இல்லங்களிலோ அன்னதானம் செய்ய வேண்டும்.
Powered by Blogger.