Friday, June 27, 2014

நமக்கு சாயி நாமத்தின் மகிமை எப்போது புரியும்?

 sairam



நமக்கு சாயி நாமத்தின் மகிமை எப்போது புரியும்? ஏற்கனவே அதை ஜெபித்து, உருவேற்றி அதன் பலனை அனுபவத்தில் அடைந்தவர்கள் கூறும் போது, அல்லது அவர்கள் அனுபவத்தைக் கேள்விப்படும்போது, நாமே உணரும்போது புரியும்.



மற்றவர்கள் அனுபவத்தை நமது அனுபவமாக மாற்றவேண்டும் என்ற எண்ணமும், துடிப்பும் நமக்கு இருந்தால்தான் இந்த விக்ஷயம் நமக்குச் சித்தியாகும். இல்லாவிட்டால் விரையம்தான்.



ஒரு சொல் மந்திரச் சொல்லாக மாறவேண்டுமானால், அந்த சொல்லின் முக்கியத்துவத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும். சாயி பாபாவை வணங்க ஆரம்பித்த பக்தர்கள், அவரது நாமத்தை ஜெபிக்க ஆரம்பித்துள்ள பக்தர்கள் ஆகியோர், பாபா பற்றிய வரலாறு, பக்தர் அனுபவம் ஆகியவற்றைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். பிறர் படித்துச்சொன்னதைக் கேட்கலாம், நாமே படிக்கலாம். எது சுலபமோ அதைப் பின்பற்றுவது நல்லது.



உங்கள் கோரிக்கை நிறைவேற சப்தாகம் செய்யுங்கள், அதாவது சாயி பாபா வரலாற்றை ஏழு நாட்களுக்குள் படித்து முடித்துவிடுங்கள் என்று பிறர் கூறக் கேட்டிருப்பீர்கள்.



ஏதோ ஒரு நாவலை படிப்பது போலவோ, கடமைக்கு படிக்க வேண்டும் என்றோ படிக்காமல் சத் சரித்திரத்தில் என்ன எழுதியிருக்கிறது, அதில் பக்தர்கள் நலனுக்காக பாபாவால் தரப்பட்ட உறுதி மொழிகள் என்ன, பக்தர் அனுபவம் என்ன என்பன போன்ற விக்ஷயங்களைத் தரம் பிரித்துப் படிக்கவேண்டும். தெரிந்து கொண்ட விக்ஷயத்தை நமக்கு அவர் தந்த உறுதி மொழியாக, நாம் பெறப்போகும் நன்மைக்கு அடையாளமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.



சொக்கலிங்கம் சுப்பிரமணியம் போன்றவர்கள் மொழி பெயர்த்துள்ள சத்சரித்திரம் கைக்கு அடக்கமாக, பாபாவின் வரலாற்றைச் சுருக்கமாகக் கூறுவதாக, ஏழு நாட்களுக்குள் படிக்கும் வகையில் இருக்கின்றன.



இவற்றை அத்தியாயம் அத்தியாயமாக வேகமாகப்படித்துவிட்டு, மீண்டும் ஒருமுறை படிக்க வேண்டும். இரண்டாவது முறை படிக்கும் போது முதல் முறை படிக்கையில் நமக்குப் புரியாமல் போன விக்ஷயங்கள் கூடுதலாகப் புரியும். இப்படி புரிந்துகொள்ளப் படிப்பதுதான் சப்தாகத்தின் நோக்கம்.



படிக்கும்போது கலங்கிய மனம் தெளிவடைந்து, பாபா அருளை நிச்சயமாகப் பெறும் என்கிற உறுதிப்பாட்டில் தான் இதை சப்தாகம் செய்யச்சொல்கிறார்கள். எனவே, படிக்கும்போது பொருள் உணர்ந்து படிக்கவேண்டும்.



படிக்கும்போது பாபாவின் நேரடி வார்த்தைகள், அதை அவர் பயன்படுத்திய விதம், சூழ்நிலை, அதை அவர் சொன்னதற்கான காரணங்கள் போன்றவற்றை நம்முடைய வாழ்க்கையோடு தொடர்பு படுத்தி, ஒப்பிட்டுப் பார்த்து, அந்த உறுதி மொழிகள், அறிவுரைகள் ஆகியவற்றை நமதாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.



இப்படியே ஒவ்வொரு அத்தியாயமாக படிக்கும் போது, நீங்கள் பாபாவின் வாழ்க்கை மற்றும் போதனைகளை அறிந்தவராவதோடு, அவரது அருளுக்கும் பூரண பாத்திரமாகிவிடுவீர்கள்.



அதேபோல, பாபா பற்றி வருகிற புத்தகங்களை வாசிப்பது நல்ல பலனைத் தரும். அவரது பிறப்பு, அவர் இந்துவா முஸ்லிமா, பிராமணரா, பிராமணர் அல்லாதவரா, அவர் யார்? எங்கிருந்து வந்தார்? என்பன போன்ற குதர்க்கமான விக்ஷயங்களை ஆராய்ச்சி செய்யவேண்டாம். அது தேவையற்ற ஆராய்ச்சி.



சோகாமேளா என்ற ஞானி ஜாதியில் ஆதி திராவிடர், ரோகிதாஸ் என்ற ஞானி செருப்பு தைக்கும் தொழிலாளி. ஸஜன் கசாயி என்ற ஞானி பிழைப்புக்காக கசாப்புக் கடை நடத்தியவர். ஆனால் யார் இந்த ஞானிகளின் ஜாதியைப் பற்றி சிந்திக்கின்றனர்.



உலக ஷேமத்திற்காகவும் பக்தர்களை ஜனன மரணச் சுழலில் இருந்து விடுவிப்பதற்காகவுமே உருவமும் குணங்களும் அற்ற தங்களுடைய நிலையை விடுத்து, ஞானிகள் இவ்வுலகிற்கு வருகிறார்கள்.



இந்த சாயி பிரத்யட்சமான கற்பக விருட்சமாகும். நாம் விரும்பியதைத் தரும் தேவலோக மரம். இந்த கணத்தில் அவர் சாயியாக இருக்கிறார். அடுத்த கணமே அவர் ஸ்ரீ ராமராக மாறிவிடுகிறார்.. இப்படி சத்சரித்திரம் கூறுகிறது.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...