எங்கள் குடும்பம் பெரியது. மூத்த அக்காவுக்கு 76 வயதாகிறது. கடந்த ஐந்து வருடங்களாக உடல் பருமன் உபாதையால் கஷ்டப்பட்டு, அதற்குரிய மருத்துவ சிகிச்சையும் பெற்று வருகிறார். பத்தடி தூரம் நடந்தாலே மூச்சு இரைக்கும்.
2013 நவம்பரில் திடீரென ஒருநாள் மூச்சு விடுவதில் மிகவும் சிரமம் ஏற்பட்டதால், கோவையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
நான்கு நாட்கள் அக்காவின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் எங்கள் குடும்பத்தினருக்கு ஏற்பட்ட மன வலியையும், நாங்கள் அடைந்த துயரத்தையும் வெறும் வார்த்தைகளால் சொல்லமுடியாது.
கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியிலுள்ள சாயி மந்திருக்கு அவ்வப்போது சென்று அங்கு நடைபெறும் நாம சங்கீர்த்தனங்களில் கலந்துகொள்வது உண்டு. வட கோவையில் பாபா கோயிலுக்கும் சென்று தரிசனம் செய்துவருவதுண்டு.
எனது அக்கா அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு அருகிலிருந்த ஒருபெட்டிக்கடையில், பல வார இதழ்கள் வரிசையாகத் தொங்கிக்கொண்டிருந்தன. அதில் சாயி தரிசனம் இதழும் இருந்தது.
இதற்கு முன்பு சீரடி பாபாவைப் பற்றி அதிகமாக எதுவும் எனக்குத் தெரியாது. 2013 நவம்பர் மாதத்திய அந்த இதழை வாங்கிப் புரட்டினேன். அதில் முதலில் என் கண்களில் பட்டது, ”எதைப்பற்றியும் கவலைப்படாதே” என்ற மனதைக் குளிர வைத்த வாசகமும், அடுத்த பக்கத்தைப் புரட்டியதும் பரிச்சிட்ட, தைரியத்தை இழந்துவிடாதே! சுகமாகிவிடும்! என்ற வாசகமும்தான்.
மிகவும் மோசமான சூழ்நிலையில் எனது அக்கா தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்ததால், பெரும் மன உளைச்சலுக்கு ஆட்பட்டிருந்த எனக்கு, மேற்கண்ட அருள் வார்த்தைகளைப் பார்த்தவுடன், அக்கா பூரண நலம் பெற்று மகிழ்ச்சியுடன் வீடு திரும்புவோம் என எனக்குள் மின்னலடித்தது போன்ற நம்பிக்கை ஏற்பட்டது.
ரேஸ்கோர்ஸ் ஆலயத்திற்குச் சென்று அக்கா நலம் பெற வேண்டும் என பாபாவிடம் மனமுருக வேண்டினேன். வேண்டியபடியே அக்கா பூரண நலம் அடைந்து வீடு திரும்பினார். இந்த தெய்வீக அற்புதம்தான் என்னை _ சாயி பாபாவின் திருவடிகளை நோக்கி ஈர்த்தது.
அடுத்ததாக டிசம்பர் 2013 இதழை வாங்கினேன். புதுப்பெருங்களத்தூருக்கு வா என்ற மங்கள கரமான வார்த்தையிருந்தது. பாபா அழைக்கிறார் என்பதை உணர்ந்தேன்.
வயது முதிர்ச்சியின் காரணமாகவும், எனக்குள்ள சூழ் நிலை காரணமாகவும் அவ்வளவு சீக்கிரம் புதுப்பெருங்களத்தூர் செல்வது சாத்தியப்படாதே என எண்ணி வருந்தினேன்.
ஆனால், என்ன அற்புதம்! அடுத்த நாளே, சென்னைக்கு அருகிலுள்ள மேல் மருவத்தூர் கல்லு}ரியில் படித்துவரும் எனது மகளிடமிருந்து, ”மாணவர்களின் பெற்றோர்கள் கல்லூரிக்கு நேரில் வந்து கையெழுத்திட வேண்டியுள்ளதால் நீங்கள் உடனே புறப்பட்டு வரவும்” எனத் தொலைபேசித்தகவல் வந்தது.
நான் இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இதற்கு என்ன அர்த்தம்? கவலைப்படாதே! நான் இருக்கிறேன், நீ புறப்பட்டு வா என்று அப்பா, சீரடி பகவானே என்னை கூப்பிட்டுள்ளார் என்பதை உணர்ந்து நான்அடைந்த மகிழ்ச்சி மிகப் பெரியது.
அடுத்தநாளே மேல்மருவத்தூர் சென்று, வேலை முடிந்த பிறகு பெருங்களத்தூர் வந்தேன். அங்கு கல்கி தெருவிலுள்ள சீரடி சாயி பாபா பிரார்த்தனை மையத்தில் ஞான குரு சீரடி பகவானை மனம் குளிர தரிசித்து விட்டு கோவை திரும்பினேன்.
இந்த தரிசனம் பலவிதக் கவலைகளிலும், மன உளைச்சலிலும் இருந்த எனக்கு விவரிக்க முடியாத புதுத் தெம்பையும் வாழ்க்கையில் அசைக்க முடியாத நம்பிக்கையையும் வாரி வழங்கியுள்ளது.
நான் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கிளை ஒன்றில் கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேல் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளேன். அங்கே என்னைப் போன்ற அரசு ஊழியர்களுக்கு தனி நபர்க்கடன் தருவது அரசு ஆணைப்படி வாடிக்கை.
நான்கு மாதங்களுக்கு முன்பு அந்த வங்கியின் லோன் பிரிவு மேனேஜரை தனி நபர் கடனுக்காக அணுகிக் கேட்டபொழுது இன்னும் பத்து மாதம் கழித்தே லோன் பெற முடியும் எனக் கூறிவிட்டார். இந்த விஷயத்தை அத்துடன் மறந்துவிட்டேன்.
கடந்த மாதம் சில எதிர்பாராத நிகழ்வுகளால், திடீரென பொருளாதாரத் தேவை ஏற்பட்டது. நான் துயரப்பட்டுக் கொண்டிருந்தபோது, எனக்கு மிக வேண்டிய நண்பர் ஒருவர், பணத்திற்காக ஏற்பாடு செய்து நாளை தருவதாக வாக்களித்தார். ஆனால், மறுநாள், பணம் கிடைக்க இரண்டு நாட்கள் ஆகும் எனக் கூறிவிட்டார்.
அதே நாளில், நான் வழக்கம்போல் பூஜையை முடித்து விட்டு, பெருங்களத்தூரிலிருந்து எடுத்து வந்திருந்த சீரடி பகவானின் தெய்வீகமான உதியைக்கொஞ்சம் எடுத்து நீரில் கலந்து குடித்து விட்டு, எனது வீட்டிலிருந்து கிளம்பி, வங்கிக்கு வேறு வேலை விஷயமாகச் சென்றேன்.
சென்ற வேலை சிறிது நேரத்தில் முடிந்து விடவே, கிளம்புவதற்காக வெளியே வந்தேன். அப்போதுதான் நான் கற்பனையில் கூட நினைத்துப் பார்க்காத அந்த அதிசயம் நடந்தது.
எங்கிருந்தோ வேகமாக ஓடிவந்த வங்கியின் லோன் பிரிவு மேலாளர், என்னிடம், ”நீங்கள் தானே நான்கு மாதங்களுக்கு முன்பு லோன் கேட்டு வந்தவர்?” எனக் கேட்டார். பதில் சொல்வதற்குள், ”நாளை வந்து பணத்தை வாங்கிக்கொள்ளுங்கள்” என மடமடவெனக் கூறி மறைந்தார். எனக்கு ஏற்பட்ட பிரமிப்புக்கு அளவேயில்லை. இன்ப அதிர்ச்சி. என்ன அதிசயம் கொஞ்ச நேரத்தில் நடந்தது என்றே தெரியவில்லை. அப்பொழுதுதான் புரிந்தது, வந்தவர் வங்கி அதிகாரியல்ல, என் அப்பா,
அந்தக் கருணை வள்ளல் பாபா என்பது ஏனெனில், நண்பர் மூலமாக உறுதியளிக்கப்பட்டது அன்று நடக்கவில்லை. ஆனால் சிறிதும் எதிர் பார்க்காத அந்த வங்கிப் பணம் கிடைக்க அருள் பாலித்துவிட்டார் அந்த சாயி பகவான்.
அடுத்த நாள் வங்கிக்குச் சென்று அரை மணி நேரத்தில் பணம் கிடைக்கப் பெற்றேன். எத்தகைய இக்கட்டான நிலையில் அந்தப் பணத்தைப் பெற்றேன் என்பது எனக்குத்தான் தெரியும்.
நவம்பர் 2013ல்தான் அப்பா சீரடி சாயி பாபாவின் அருட் கடாட்சம் நிறைந்த அறிமுகம் எனக்குக்கிட்டியது. அன்றிலிருந்து இன்று வரை எனது அன்றாட வாழ்க்கையில் அந்த தெய்வம் அளித்து வரும் அருட் கொடைகளின் மகிமையையும், மகத்துவத்தையும் வார்த்தைகளால் இயம்ப இயலாது.
சாயி வரதராஜன் கூறியதுபோல, ”அப்பா பகவானே! என்னைக் கரி மண்ணாகத் தங்கள் திருவடிகளில் ஒப்படைத்துவிட்டேன். அந்த கரிமண்ணுக்கு இறுதி வரை அருளாசியைத் தாங்கள்தான் வழங்கி அருள வேண்டும்!” என முற்றும் சரணாகதி அடைந்துவிட்டேன்.
சா.நடராஜன்,
சிட்கோ, கோவை
No comments:
Post a Comment