குரு தனது இரு சீடர்களிடம் பிரசாதம் கொடுத்து, ”இதை தானம் செய்து புண்ணியத்தைத் தேடிக்கொள்ளுங்கள்!” என்று சொன்னார்.
ஒருவன் பிரசாதத்தை ஓர் ஏழை பிராமணருக்குத் தந்தான். மற்றவன் இறைத்துக் கொண்டும், நீர் நிலைகளில் வீசி விட்டான்.
குரு பிரசாத மகத்துவம் தெரியாமல் அலட்சியப்படுத்தியவன் மேல் கோபம் கொண்ட இன்னொரு சீடன் அவனை கடுமையாகக் கண்டித்தான்.
சில நாட்களுக்குப் பிறகு குரு தனது சீடர்களில் ஒருவரை தன் இடத்தில் நியமிக்க தீர்மானித்தார்.
நியமிக்கப்படாதவன், நியமிக்கப்பட்டவனுக்கு சீடனாக இருக்க வேண்டும். குருவுக்கான தகுதி உங்களில் யார் அதிகம் புண்ணியம் செய்தவரோ, அவரிடம்தான் இருக்கும்.. அவரே குருவாக இருக்கத்தகுதி பெற்றவர்!” என்றார்.
குரு வார்த்தையை மீறாத சீடன், ”தாங்களே எங்களில் தகுதி உள்ளவரை நியமிக்கலாமே!” என்றான்.
”இருவரையும் ஒரே மாதிரியாக நேசித்து அறிவு போதித்தேன். இப்போது ஒருவரை குருவாக்குவது எனக்கு சங்கடமாக இருக்கும். எனவே, தர்ம தேவதையை அழைக்கிறேன்” என்றார் குரு.
குரு தர்ம தேவதையை அழைத்தார். ”அம்மா! யார் யாருக்கு எவ்வளவு புண்ணிய பலன் இருக்கிறது என்பதைத் தெளிவாகக் கூறு!” எனக் கேட்டார்.
”குரு தேவா! இந்த இருவரில் தன்னை உத்தம சீடன் என்றும், எப்போதும் குரு வார்த்தையை மீறாதவன் என்றும் எண்ணுகிற இவனிடம் புண்ணிய பலன் ஏதுமில்லை. ஒரே ஒரு பிராமணனுக்குச் செய்த புண்ணியத்தையும் தனது கோபம், கோள் சொல்லல், தன்னைப் பற்றிய பெருமிதம், தான் குருவாக வேண்டும் என்ற ஆசை ஆகியவற்றால் இழந்து, பாபியாகிவிட்டான்.
இதோ இவனோ, உங்களது பிரசாதத்தை பல உயிர்களுக்குப் பகிர்ந்து கொடுத்தான். எல்லா உயிர்களிலும் வாசமாக இருக்கிற ஸ்ரீ ஹரி இதனால் மகிழ்ந்திருக்கிறார். பல உயிர்களைக் காத்து, மிகுதியான புண்ணியத்தைச் சேமித்துள்ளான். இவன் மீது இருந்த பாவங்கள் யாவும், சக சீடன் குறை கூறியதன் மூலம் நீங்கிவிட்டதால், இவனே மகா புண்ணியசாலி. எனவே, இவனை உங்கள் இடத்தில் நியமிக்கலாம்!” என்றது தர்ம தேவதை.
உத்தமனாக இருப்பதாக நினைப்பது மட்டும் நமது தகுதியை உயர்த்திவிடாது. தர்மப் பலன் அதிகரிக்க பல்லுயிர்களைப் போஷிக்க வேண்டும். குறைகூறாது, பொறாமை கொள்ளாது வாழக்கற்றுக்கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment