Monday, June 30, 2014

குருவிடம் பெற்ற அனுபவம்!

devotees



பாபா தன் குருவிடம் பெற்ற அனுபவத்தைக் கூறும்போது,



”குரு மகாபலம் படைத்தவராக இருக்கலாம். ஆயினும், ஆழமாகப் பாயும் நுண்ணறிவையும் தம்மிடம் அசையாத நம்பிக்கையையும் சகிப்புத்தன்மையின் துணிவான பலத்தையும் தம் சிஷ்யனிடமிருந்து எதிர்பார்க்கிறார். வெறும் கல், மணி இவையிரண்டுமே மெருகு ஏற்றுவதற்காகத் தேய்க்கப்படலாம். எவ்வளவு தேய்த்தாலும் கல் கல்லாகத்தான் இருக்கும். மணியோ ஒளிவிடும். இரண்டுமே மெருகேற்றுவதற்காக ஒரே செய்முறையில் தேய்க்கப்படலாம். ஆயினும் வெறும் கல், மணி போன்று ஒளிவிட முடியுமா என்ன?



ஆகவே, நான் குரு பாதங்களில் பன்னிரண்டு வருடங்கள் இருந்தேன். நான் வளரும் வரை அவர் என்னை ஒரு குழந்தை போல் பாவித்தார். உணவுக்கும் உடைக்கும் எவ்விதமான பற்றாக்குறையும் இல்லை. அவருடைய இதயம் என் மீது அன்பால் பொங்கி வழிந்தது.



அவர் பக்தியும் பிரேமையுமே உருவானவர். சிஷ்யனிடம் நிஜமான அன்பு கொண்டவர். என் குருவைப் போல குரு கிடைப்பது அரிது. அவரது சங்கத்தில் நான் அனுபவித்த சந்தோக்ஷத்தை விவரிக்கவே முடியாது.



ஓ! அந்த அன்பை என்னால் எவ்வாறு விவரிக்க முடியும்! அவருடைய முகத்தைப் பார்த்தவுடனே என்னுடைய கண்கள் தியானத்தில் மூழ்கிவிடும். இருவருமே ஆனந்த மயமாகிவிடுவோம். வேறு எதையும் எனக்குப் பார்க்கத் தோன்றாது.



இரவு பகலாக அவரது முகத்தை உற்றுப்பார்க்கவே விரும்பினேன். எனக்குப் பசியோ தாகமோ தெரியவில்லை. அவர் இல்லாவிட்டால் மனம் அவஸ்தைப் பட்டது.



அவரைத் தவிர வேறு எதன் மேலும் என்னால் தியானம் செய்ய முடியவில்லை. அவரைத் தவிர எனக்கு லட்சியம் ஏதும் இல்லை. அவரே நான் எப்பொழுதும் கடைப்பிடிக்க வேண்டிய குறிக்கோள். குருவினுடைய திறமை அதியற்புதமானது.



என் குருவும் இதையே எதிர்பார்த்தார். இதற்கு மேல் எதையும் எதிர்பார்க்கவில்லை. அவர் என்னை எப்பொழுதும் அலட்சியம் செய்தது இல்லை. கவனிக்காமல் விட்டதும் இல்லை. சங்கடங்களில் அவர் என்னை எப்பொழுதும் ரட்சித்தார்.



சில சமயங்களில் அவருடைய காலடிகளில் இருக்க அனுமதிக்கப்பட்டேன், சில சமயங்களில் கடல் கடந்து இருந்தேன். ஆயினும் எப்பொழுதும் அவருடைய கூடுகை சுகத்தை அனுபவித்தேன். அவர் என்னைக் கிருபையுடன் கவனித்துக்கொண்டார்.



தாய் ஆமை தன் குட்டிகளுக்கு எப்படி அன்பான பார்வையாலேயே உணவூட்டுகிறதோ, அவ்வழி தான் என் குருவினுடையதும். அன்பான பார்வையாலேயே தம் குழந்தைகளைப் பாதுகாத்தார். தாயே, இம்மசூதியில் உட்கார்ந்துகொண்டு நான் சொல்வதைப் பிரமாணமாக எடுத்துக் கொள்ளுங்கள். குரு என்னுடைய காதுகளில் மந்திரம் ஏதும் ஓதவில்லை.



அப்படியிருக்க, நான் எப்படி உங்களுடைய காதுகளில் எதையும் ஓதமுடியும்?



தாய் ஆமையின் அன்பான கடைக்கண் பார்வையே குட்டி ஆமைகளுக்குத் திருப்தியும் சந்தோக்ஷமும் கொடுக்கும். அம்மா! ஏன் உங்களை நீங்களே வருத்திக் கொள்கிறீர்கள்? எனக்கு வாஸ்தவமாகவே வேறு எந்த உபதேசமும் செய்யத்தெரியாது.



தாய் ஆமை ஆற்றின் ஒரு கரையில் இருக்கிறது. குட்டிகளோ மறுகரையில் மணற்பரப்பில் இருக்கின்றன. அவை பார்வையாலேயே போஷிக்கப்பட்டு வளர்க்கப் படுகின்றன. ஆகவே, நான் கேட்கிறேன், மந்திரத்துக்காக வியர்த்தமாக எதற்குப்பிடிவாதம் பிடிக்க வேண்டும்.



நீங்கள் இப்பொழுது போய் ஏதாவது ஆகாரம் சாப்பிடுங்கள். உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திக்கொள்ளாதீர்கள். என்னிடம் உறுதியான விசுவாசம் வைத்தால் ஆன்மீக முன்னேற்றம் தானே கைக்கு எட்டும். நீங்கள் வேறு ஒன்றிலும் நாட்டமில்லாத அன்பை என்னிடம் காட்டுங்கள். நானும் உங்களை அவ்வாறே பாதுகாக்கிறேன். என் குரு எனக்கு வேறு எதையும் கற்றுத் தரவில்லை.



யோக சாதனைகள் ஏதும் தேவையில்லை. ஆறு சாஸ்திரங்களை அறிய வேண்டிய அவசியமும் இல்லை. காப்பவரும் அழிப்பவரும் குருவே என்னும் ஒரே உறுதியான நம்பிக்கையும் விசுவாசமும் இருந்தால் போதும். இதுவே குருவின் மகத்தான பெருமை. அவரே பிரம்மாவும் விஷ்ணுவும் மகேஸ்வரனும் ஆவார். குருவின் முக்கியமான ஸ்தானத்தை உணர்ந்துகொண்டவன் மூவுலகங்களிலும் பேறு பெற்றவன் ஆவான்.”



இவ்வாறு பாபா மூதாட்டிக்கு போதனையளித்ததாக சத்சரித்திரத்தில் எழுதப் பட்டிருக்கிறது. குருவின் திருநாமத்தை தியானித்தாலே போதும். அந்த நாமத்தை எப்போதும் நினைத்தாலே போதும், அவனுக்கு அனைத்தும் கிடைத்துவிடும். இதை விட வேறு மந்திர தீட்சை தேவையில்லை என்பதே பாபா கூறியவற்றின் உட்பொருள். இதை உணராமல் நான் மந்திர தீட்சை பெற விரும்பு கிறேன் என்பது மடமை.



பாபா, பாமரர்களும் நன்மை பெறவேண்டும் என விரும்பிய இறைவன். அதனால்தான் அவர் தீட்சையை யாருக்கும் கூறாமல் எப்போதும் என்னை நினைத்துக்கொள் என்றார்.



எப்போதும் அவர் மீது மாறாத நினைவை வைத்திருக்க வேண்டும். வேறு ஒன்றிலும் நாட்டமில்லாத அன்பை தன் மீது வைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அந்த அன்பு எப்போது, எப்படி வரும் என்றால், சதாநேரமும் அவரது நாமத்தை உச்சரித்துக் கொண்டு இருக்கும் போதுதான் வரும். அவரது லீலைகளை எப்போதும் தியானித்தால்தான் வரும்.



எப்போதும் சாயி சாயி என்று சொல்வீர்களானால் உங்களை ஏழு கடலுக்கு அப்பாலும் கொண்டு சென்று சேர்ப்பேன் என்றிருக்கிறார். சிலரிடம் ராஜாராம் ராஜாராம் என்று சொல்லுங்கள் என்றிருக்கிறார். இவையெல்லாம் மந்திர தீட்சைகள்தாம். இந்த தீட்சையின் நோக்கம் நமது நல்வாழ்வு.



அவர் பூரண பிரம்மம். அந்த பிரம்மம் நமது நன்மைக்காக மண்ணில் இறங்கிவந்தது.. நம்மோடு இருந்தது, இப்போது இருக்கிறது.. இனி வரும் சந்ததியோடும் இருக்கும் என்ற உறுதியில் நின்றால் மட்டும் போதும். அவர் என்ன நமக்காக சொல்லியிருக்கிறார் என்பதில் சிந்தையைச்செலுத்தினால் மேலான நன்மைகள் கிட்டும்.



எப்படி ஒரு ஊருக்கு நாலு வழியிருக்குமோ அப்படி, நமது ஆன்மாவை கடைத்தேற்றுவதற்கான வழிகள் இவை என்று நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன. லவுகீக வெற்றி, ஆன்ம ஈடேற்றம். இதுவே மந்திர தீட்சையின் நோக்கம்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...