Friday, June 13, 2014

மனித நேயமிருந்தால் மனிதனும் தெய்வமாகலாம்! பகுதி 2

DSC_0005



நேற்றைய தொடர்ச்சி……



     கமர்சியலுக்கும், பொழுதுபோக்கிற்கும் பல பத்திரிகை உண்டு. வாழ்க்கையை மாற்ற, பத்திரிகைகள் கிடையாது. எவ்வளவு இழந்தாலும் இதைச் செய்வேன் என்று நண்பர் வீரமணியிடம் கூறிவிட்டுத்தான் நடத்த ஆரம்பித்தேன்.



     லட்சங்கள் மீதல்ல, லட்சியத்தின் மீதுள்ள நாட்டம் என்னை மனித நிலையைத் தாண்டிய மனிதனாக உயர்த்தியிருக்கிறது.



     நம்பிக்கை -  பொறுமை. இந்த இரண்டுதான் வாழ்க்கையில் அடிப்படையாகத் தேவைப்படுகிற விக்ஷயங்கள். நம்பிக்கையில் வாழ்க்கை இருக்கிறது.



     பொறுமையில் வாழ்க்கையில் ஜெயிப்பதற்கான வழிமுறைகள் உள்ளன. பொறுமையை  ‘சகித்தல்’ , தாங்குதல், அனுபவித்தல், அகிம்சை என்றெல்லாம் சொல்கிறோம். இன்னும் பல பெயர்களில்கூட அழைக்கிறோம். எப்படி அழைத்தாலும் அடிப்படை என்னவோ பொறுமைதான்.



     இந்த இரண்டு சாராம்சங்களையும் சாயி தனது பக்தர்களுக்கு சொல்லித் தந்தார். அதை மறுபடி நான் ஆதாரங்களோடு சொல்லித் தருகிறேன். சத்சரித்திரம் என்பது பாபாவின் வாழ்க்கை வரலாறு அல்ல, ஒவ்வொருவரும் எப்படி வாழ வேண்டும் என்பதைக் கூறுகிற வாழ்வியல் சித்திரம் அது. இதை பலர் மேம்போக்காகப் படிப்பதால்தான் அப்பாவி பக்தர்களாக, தோல்வியிலேயே தொடர்கிறவர்களாக இருக்கிறார்கள்.



     அதை ஊன்றிப் படித்தால்தான் விக்ஷயம் தெரியும், ஜெயிக்க முடியும். இந்தப் புத்தகத்தை தாபோல்கர் மேம்போக்காக எழுதவில்லை, மிகவும் சிந்தித்து எழுதி வைத்திருக்கிறார். அதை சுருக்கமாகப் படிப்பதால் யாருக்கும் பிரயோசனம் இல்லை.



     விரிவான விக்ஷயங்களோடு, மைலாப்பூர் சாயி சமாஜம், ஸ்ரீ சாயி ராமாயணம் என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளது. இதனை அழகாக தமிழில் மொழி பெயர்த்து மக்களுக்கு, மணி அவர்கள் தந்திருக்கிறார்.



     அவர் மக்கள் மீது கரிசனமும், அக்கறையும் உள்ள எழுத்தாளராகத்தான் இருக்கவேண்டும்.  இல்லாவிட்டால், இவ்வளவு எளிமையாக அவரால் இந்த நூலைத் தந்திருக்கமுடியாது. தபோல்கருக்கு சாயி பக்தர்கள் கடமைப்பட்டிருப்பதைப் போல, தமிழ் தெரிந்த சாயி பக்தர்கள், _ சாயி ராமாயணத்தை மொழி பெயர்த்த மணிக்கும் கடமைப்பட்டவர்களாக இருக்கவேண்டும்.



     நான் எழுதுபவை வெறும் கவுன்சிலிங்காக இருக்கும் என்று நானே நினைத்துக் கொண்டிருந்தேன். அதையும் பாபா அப்படியில்லை என்று பலமுறை நிரூபித்துவிட்டார். வெறுமனே கூறும் போதுதான் அது கவுன்சிலிங். பாபாவிடம் வந்துபோகும்போது அது அவரது வாக்குகள். அவரது எச்சரிக்கை.



     பிறருக்கு எழுதுவதாக நினைத்து நான் எழுதிய எத்தனையோ விக்ஷயங்கள் எனக்கே நடந்திருக்கின்றன. நானும் என் மனைவியும்தான் சாயி தரிசனத்தின் முதல் வாசகர்கள். புத்தகமாக வந்த பிறகு எங்களுக்கு பாபா என்ன சொல்லியிருக்கிறார் எனப் படிப்போம்.



     இதற்கும் மேலாக, நீண்ட நேரத்து நாம ஜெபம் செய்வதன் பலன், மனித சக்திக்கு அப்பாற்பட்ட புரிதல்களைத் தருவதை மறுக்கவோ, மறக்கவோ முடியவில்லை. ஹோமங்கள், யாகங்கள் செய்வதால் கிடைக்கிற தெய்வீக சக்திகளையும் புறம்தள்ளவோ, பொய் என ஒதுக்கவோ முடிவதில்லை.



     இவற்றை நான் எனக்காகப் பயன்படுத்தாமல், எனது சாயி பக்தர்களுக்காக பயன்படுத்துகிறேன். எனது பாத்திரத்தைப் பார்க்கிறார். அதில் சுயநலம் குறைவாக இருப்பதைக் கண்டு பொதுநலத்திற்குத்தேவையானதை இதிலிருந்து எடுத்துத் தருகிறார். எனது நோக்கத்தைக் கண்காணிக்கிறார்.



     அதனால், பொதுநோக்கத்தை வளர்க்கிறார். நான் அமானுஷ்ய சக்தி பெற்ற மகான் கிடையாது, ஆனால், சராசரி மனிதனையும் வாழவைக்க வேண்டும் என்ற வேட்கை உள்ளவன். இதனால் தான் பெருங்களத்தூர் பிரார்த்தனை மையம் வேகமான வளர்ச்சியைப் பெற்று, பிறரது பொறாமையைக் கூட சம்பாதித்திருக்கிறது.



 



     கூட்டுப் பிரார்த்தனை முறையை முஸ்லிம்கள் கடைப்பிடிக்கிறார்கள். விளைவு? வறண்ட பிரதேசம் கூட, வளமான பூமியாகி அவர்களை செல்வந்தர்களாக வைத்திருக்கிறது.



     கிறித்தவர்கள் கடைப்பிடிக்கிறார்கள். விளைவு, உலகம் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து விளையாடுகிறார்கள்.



     நாம் இதைக் கடைப்பிடித்தால் நிச்சயம் நமக்கும் முன்னேற்றம் தானாக வரும். அதனால் இதை விரிவுபடுத்தி செயல்படுத்துகிறேன்.



     அது இருக்கட்டும். முகம்மது சென்ற பிறகு லலிதா மாமி வந்தார்கள் என்றேன் அல்லவா?



     லலிதா மாமிக்கு நீண்ட காலமாகக் குழந்தைப்பேறு இல்லை. விடாப்பிடியாக பாபாவை பிடித்துக்கொண்டு, எந்த சிகிச்சையும் பெறாமல் குழந்தை பெற்றார்கள். மாமிக்கு வளைகாப்பு நமது பாபா பிரார்த்தனை மையத்தில்தான் நடந்தது, அதே குழந்தைக்கு உணவூட்டும் வைபவத்து அனுமதி கேட்டு வந்திருந்தார்கள்.



     மாமி சென்ற பிறகு, மதிப்பிற்குரிய சுதாகர் ரெட்டியார் பொன்னேரியிலிருந்து போன் செய்து, அமெரிக்கா செல்கிறேன், பாபாவின் ஆசியும், தங்கள் ஆசியும் எனக்குத் தேவை என்றார்.



     என் அப்பா வயதுள்ளவர். ஆன்மீகத்தில் பழுத்த பழம்.. எத்தனையோ மகான்களை நேரில் பேட்டி கண்ட அனுபவஸ்தர். தியானத்தில் அமர்ந்தால் உடனடியாக சமாதி நிலைக்குச் சென்று விடுபவர். அப்படிப்பட்ட மகானுக்கு, ஆசி வழங்க நான் யார்?  ஆனால் ஆசி கேட்கிறார்.



     அவர் தியானத்தால் பாதிக்கப்பட்டபோது, அதை சரி செய்யச் சென்றிருந்தேன். என்னிடம் எதுவும் இல்லை. சரியானது. எப்படிப்பட்ட உணவாக இருந்தாலும் அதை ஜீரணிக்கும் ஆற்றல் நமக்கு இருப்பதைப் போல, எப்படிப்பட்ட எதிர்மறை சக்தியாக இருந்தாலும் அதை அடக்கவும், உள் வாங்கவும் நமக்கு சக்தியிருக்கவேண்டும். இந்த சக்தி பாபாவால் அனைவருக்கும் இயல்பாகத் தரப்பட்டு இருக்கிறது.



     அதை யாரும் பயன்படுத்துவதில்லை. நான் பயன்படுத்துகிறேன். பலன் கிடைக்கிறது.  நூற்றுக்கணக்கான மக்கள் நன்மை அடைவதும், அதே அளவில் நன்மை பெறாமல் போவதும் என்னைப்பொறுத்தவரை சகஜம். இதனால்தான் பாபா மாமரத்தை சுட்டிக்காட்டி கதை சொன்னார்.



     எந்த நிலையில் இருந்தாலும் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். பொறுமையைக்கடைப்பிடிக்க வேண்டும். எல்லாம் அவனது செயல், நானும் அவனது செயல் என்பதை உணரவேண்டும். வருவது வரட்டும் என வருவதை எதிர்நோக்கிக் காத்திருக்க வேண்டும். அப்படிச்செய்தால் ஜெயிப்போம்.. ஜெயித்தேன். மற்றபடி, என்னைத் தாங்கிப் பிடிக்கவோ, எனக்குக் கொடி பிடிக்கவோ யாரும் தேவையில்லை.



     மூன்று வேளை உண்ணக் கிடைத்திருக்கிறது, அது போதும். வயிற்றுப் பசியோடு, துன்பச் சுமை சுமக்கிறவர்கள் இளைப்பாற வேண்டும். அதற்கு இதோ சாயி என்ற கனி தரும் நிழல் மரம் இருக்கிறது என வழி காட்ட வேண்டும். இதுதான் எனது கொள்கை, கோட்பாடு எல்லாம்.



     சமூக அக்கறை இல்லாத மனிதன் மிருகத்திற்கு சமமானவன். அவன் இருந்தாலும் யாருக்கும் பயன் கிடையாது. ஒரே ஒரு தனிமனிதனின் வாழ்க்கை மாறுவதற்காகத் தன் வாழ்க்கையைப் பயன்படுத்துகிறவனே, தெய்வத்திற்கு ஒப்பானவன்.



     நான் மிருகமாக வாழ விரும்பவில்லை. சாயி வழியில் உனது வாழ்வு மாற நான் வாழ விரும்புகிறேன், காத்திருக்கிறேன்.



ஜெய் சாய்ராம்



 சாயி வரதராஜன்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...