சமீபத்தில் ஒருநாள், பாபாவுக்கு சேவை செய்கிற முகம்மது என்ற தம்பி என்னைப் பார்க்க வந்திருந்தார். பேச்சிடையே, ”உங்களைப் பற்றி சொன்னால் தவறாக நினைக்கக்கூடாது, நிறைய பக்தர்கள் பாபாவை விட உங்களையே சார்ந்திருப்பது போலத் தெரிந்ததால் உங்களை சுத்தமாகப் பிடிக்காது. இதனால் நான் கோயிலை விட்டே ஒதுங்கி யிருந்தேன். பிறகுதான் படிப்படியாக புரிய, இப்போது வாரா வாரம் வருகிறேன்” என்றார்.
”எல்லோரும் என்னை சார்ந்திருக்க விரும்பமாட்டார்கள். ஒரு சிலர் அப்படியிருப்பார்கள். இவர்களை இதற்காக நான் கடிந்துகொள்வதில்லை. மாறாக, என்னை சார்ந்திருப்பது அவர்களுக்கு நல்லது என நினைப்பேன்! ” என்றேன்.
”எதற்காக இப்படிச் செய்கிறீர்கள்?” என்றார் அவர்.
”இருபது வருடங்களாக, இப்படிப்பலரை அணுகி ஏமாந்திருக்கிறேன். அவர்களிடம் ஏதோ ஒரு சக்தியிருப்பதாக நினைத்து, என் வாழ்க்கை மாறும் எனச் செல்வேன். ஏமாந்த பிறகுதான் ஏமாற்றப்பட்டதை உணர்வேன். இவர்களை நான் புறக்கணித்தால் ஒருவேளை அவர்கள் என்னைப் போல் மற்ற இடங்களுக்குச் சென்று ஏமாந்து போவார்கள். எனது சாயி பக்தர்கள் இப்படி ஏமாறுவதை நான் விரும்பமாட்டேன். அவர்களை என்னிடம் வரவழைத்து தன்னம்பிக்கையை தரும் வழிகளை போதிப்பேன். அதனாலேயே, என்னைப்பின்பற்றி நடக்கிற மக்களை நான் அரவணைத்து அவர்களுக்கு எல்லாமாகத் தெரிகிறேன்!
உதாரணத்திற்கு, பாலாஜி ஓர் உதாரணம். வாழ்வில் சாதிக்க வேண்டிய அவர், சோகத்தோடு வாழ்வை முடித்துக்கொள்ள நினைத்து வந்தார். அவர் வேண்டியதை தருகிறேன் என்று கூறி, என் வசப்படுத்தி, வாழ்க்கையைப் புரிய வைத்து அனுப்பினேன். இன்றைக்கு சாதனையின் உச்சத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறார்.
நான் கடவுளல்ல, அக்கறையுள்ள தந்தை. சகோதரன்! “ என்றேன்.
”என் மனதில் இருந்ததைக் கேட்டதற்காக என் மீது வருத்தம் இல்லையே?” என்றார் அவர்.
”நிச்சயமாக இல்லை. புட்டபர்த்தி சாயி பாபாவை பேட்டி காண வந்த ஒரு பத்திரிகையாளர், திடீரென அவரது தலைமுடியைப் பிடித்து இழுத்துவிட்டார். இது உண்மையான தலைமுடிதானா என்பதை அறிந்து கொள்ளவே இப்படி செய்ததாகத் தனது செயலுக்குக் காரணம் கூறினார்.
அவர்மீது, புட்டபர்த்தி சாயிபாபா கோபித்துக்கொள்ளவில்லை. மாறாக, ”உங்களை எனக்குப்பிடித்திருக்கிறது. உண்மையை இப்படி சோதித்துப் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும்!” என்றார்.
அப்படித்தான் உங்களையும் நான் நினைக்கிறேன். பெரும்பாலான கோயில்களுக்கு பக்தர்கள் குறி கேட்கச் செல்கிறார்கள். இங்கு நான் கவுன்சிலிங் தருகிறேன். பாபாவை வணங்க ஆரம்பித்த பிறகு ஏற்பட்ட மாற்றங்களை, இந்த கவுன்சிலிங்கில் ஆதாரத்தோடு தருவதால், இதை ஏற்கிற பக்தர்களின் வாழ்வில் வெற்றி தொடருகிறது.
நான் கவுன்சிலிங் தொடர்பாக எழுதிய சில புத்தகங்களை வைத்துக்கொண்டு சிலர் கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள். அவர்களிடம் இந்த பாமர மக்கள் போக முடியாது. மாறாக, பத்துப் பைசா செலவு இல்லாமல் நல்ல ஆலோசனைகளைத்தந்தால் அவர்கள் வாழ்க்கை ஸ்திரப்படும்.
நான் பலதரப்பட்ட மக்களோடு ஒன்றிப் பழகி அவர்களின் பிரச்சினைகளை அறிந்தவன், அவர்கள் வெற்றி பெற்றதையும்,தோல்வியில் முடிந்து போனதையும் நேரடியாகப் பார்த்தவன்.
என் அனுபவ அறிவை பலருக்கு, இதற்கு முந்தைய வாழ்க்கையில் காசுக்காக விற்பனை செய்துவிட்டேன். இப்போது, தோற்று களைத்து வருவோரின் முகத்தைப் பார்க்கும்போது, அவர்கள் நலன் பெற வேண்டும் என்ற விருப்பத்தால் தொடர்கிறேன். இதனால்தான் சீரடியில் கால் வைக்கிற சிந்தனையாளர்கள் துக்கப்படுவதில்லை என்றார் பாபா! “ என்று கூறினேன்.
பேச்சினிடையே லலிதா மாமி தன் கணவரோடு வந்ததால், முகம்மது விடைபெற்றுக் கொண்டார்.
சாயி வரதராஜன்
தொடரும்…….
[…] நேற்றைய தொடர்ச்சி…… […]
ReplyDelete