Sunday, June 15, 2014

தரிசனம் தருவேன்!

sai-guide-us



21-1 -14



     சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து சற்குருவை தரிசிக்க மூன்றாம் முறையாகச் சென்று கொண்டிருந்தேன்.  ஸ்ரீ  சாயி நாதனின் தவப் புதல்வன் _சாயி வரதராஜனோடு இரண்டாவது முறைப் பயணம்.



     வீட்டுப் பிரச்சினை, அலுவலகப் பிரச்சினைகள் என எந்த சிந்தனையும் இல்லாமல் சாயி நாதரின் புகழைப் பாடியபடி சென்று கொண்டிருந்தோம்.



     எத்தனை வித சகோதர சகோதரிகள்!  தாய்கள், பெரியவர்கள், குழந்தைகள்! பலவித தாய்மார்களின் வயிற்றில் பிறந்து வளர்ந்த அனைவரும் ஒருவருக்கு ஒருவர் அன்பு காட்டி, அவரவர் வீட்டிலிருந்து எடுத்து வந்த காலைச் சிற்றுண்டியை பகிர்ந்து கொண்டு உண்ணத் தொடங்கினோம். போதும் என்ற போதும், அன்புக் கட்டளையிட்டு பலவித உணவுகளை பகிர்ந்து அளித்து உண்ண வைக்கும் தாய்மார்களின் அன்பு மனம் தான் என்னே என நெகிழ வைத்தது.



     ஓ!  சாயி ராயா!  நீங்கள் எங்களுக்கு அளித்த வழிமுறைகள் அல்லவா இது? சாதிப் பாகுபாடு இல்லை, சமயப் பிரிவு இல்லை, உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பேதமில்லை. எங்கும் மனித நேயம், விவரித்துச் சொல்ல முடியாத அன்பு. ஒவ்வொருவரும் அடுத்தவரை சாய் ராம் என்று அன்புடன் அழைத்த பாங்கு, மனம் நிறைகிறது என்ற புளகாங்கிதத்துடன் சீரடியை அடைந்தோம்.



     சீரடியில் வழக்கமாகத் தங்கும் இடத்தில் தங்கியவர்கள் போக, மற்றவர்களுக்கு வேறு ஒரு தங்குமிடத்தை ரமேஷ் ஏற்பாடு செய்திருந்தார். ரமேஷ் ஏற்பாடு செய்திருந்த விடுதியில் உடைமைகளை வைத்துவிட்டு, குளித்து முடித்துக் கொண்டு, பாபாவை தரிசிக்க என்னுடைய மனைவி மற்றும் வயதான மூன்று தாய்மார்களோடு சாலையில் நடக்கத் தொடங்கினேன்.



     கடும் பனியும், தூறலும் சாலையை சகதியாக்கியிருந்தன. சாலை ஓரத்திலேயே மனிதக்கழிவுகள். அவர்களை பார்த்து நடக்குமாறு கூறி விட்டு, அங்கே ஒரு விபரீதம் நடக்கப் போவதை அறியாமல் பத்தடி தூரம் முன்னே நடந்து கொண்டிருந்தேன்.



     வாழ்க்கையில் மறக்கமுடியாத கொடுமையைச்செய்ய, இரண்டு மனிதப் பதர்கள். மோட்டார் சைக்கிளில் மிக வேகமாக வந்து, சாலையைப் பார்த்து நடந்து வந்த எனது மனைவியின் கழுத்திலிருந்து சுமார் 12 சவரன் தாலிச் சரடைப் பற்றி இழுத்தார்கள்.



     பல காலம் உழைத்து சம்பாதித்த சொத்தை ஒருவன் பற்றியிழுத்த அந்த நிலையிலும் என் மனைவி சாய்ராம் சாய்ராம் என்று கூக்குரலிட்டுக் கொண்டு இருந்தாள்.



     நான் திரும்பிப் பார்த்த போது, என் மனைவி தாலிச்சரடை கெட்டியாகப் டித்தபடி, போராடிக் கொண்டிருந்தாள். மோட்டார் சைக்கிளை அவர்கள் வேகமாக ஓட்டியதால், சரடோடு கீழே விழுந்து உடல் தேயத் தேய இழுத்துச்செல்லப்பட்டாள். இதைக்கண்டு நான் ஓடிவருவதற்குள், அந்தக் கயவர்கள் மோட்டார் சைக்கிளில் சரடைப் பறித்துக் கொண்டு சென்றுவிட்டார்கள்.



     சாலையில் காயங்களோடு என் மனைவி விழுந்து கிடந்தாள். வெள்ளிக்கிழமையதுவும் என் தாலி பறிபோய் விட்டதே, சாயி ராயா என அழுது புலம்பினாள்.



     எத்தனையோ மகிழ்ச்சியுடன் பாபாவை தரிசிக்க வந்த எங்களுக்கு ஐந்து நிமிடத்திற்குள் எப்படிப்பட்ட கொடுமை நடந்துவிட்டது. அதுவும் யாருக்கும் தீங்கிழைக்காத, வீட்டிற்கு வருபவர்களை அன்பு ததும்ப உபசரித்து, உணவளித்து அனுப்பும் என் மனைவிக்கா இப்படிப்பட்ட கொடிய செயல் நிகழ்ந்து விட்டது? என மனம் கொதித்தது.



     ”சாயிராம் என்று என் மனைவி கதறியபோது எங்கே போனாய்? உன்னால் காப்பாற்ற முடியாமல் போய் விட்டதா?  பக்தர் நினைத்தவுடன் ஓடிவந்து காப்பேன் என்ற உன் வாக்கு பொய்த்து விட்டதா?



     தாலியைப் பற்றியவுடன் அந்தக் கயவர்களின் கண்கள் ஏன் குருடாகவில்லை? எங்களை கை விட்டு விட்டாயே!”  என ஆவேசப்பட்டேன்.



     சாயி வரதராஜன் இதைக் கேள்விப்பட்ட அதிர்ச்சியிலேயே உடல் நலம் பாதிக்கப்பட்டுவிட்டது. காவல் துறையை அணுகியபோது, அவர்கள் பல கேள்விகளைக் கேட்டார்களே தவிர, புகார்களை பதிவு செய்யவில்லை. மேல் முயற்சி செய்வது வீண் என்பது புரிந்துகொண்டு, பாபாவை தரிசிக்கச் சென்றேhம்.



     பாபா முன்னிலையில் வேறு தாலி கட்டிக்கொள்ளுங்கள், நடப்பதெல்லாம் நன்மைக்கே என சாயி வரதராஜன் கூறி அனுப்பினார்.



     பாபா முன் நின்று அவரது முகத்தைப் பார்த்து எவ்வளவு தூஷிக்க முடியுமோ அவ்வளவு தூஷித்தேன். என் மனைவி கண்ணீருடன் நின்றிருந்தாள். அவளுக்கு சமாதியிலிருந்து சிவப்புத் துண்டையும்,     நிறைய மலர்களையும் அங்குள்ள குருக்கள் தந்தார். அதை பெற்றுக் காண்டு வந்தோம்.



     குரு ஸ்தானத்தில் எங்களுடன் வந்திருந்த ஒரு மூதாட்டியும் அவரது கணவரும் ஒரு மஞ்சள் கயிற்றில் மலரைப் பிணைத்து என் மனைவி கழுத்தில் கட்டுமாறு கூறினர். மன வேதனையுடன் கட்டினேன்.



     அப்போது யாரோ ஒருவர் குரு ஸ்தானத்தில் வைக்கப்பட்ட இனிப்பை எடுத்து என்னிடம் கொடுத்து, என் மனைவிக்கு ஊட்டச்சொன்னார். நானும் ஊட்டினேன். கனத்த இதயத்துடன் அறைக்குத் திரும்பினேன். விக்ஷயத்தைக் கேள்விப்பட்ட கோவை சகோதரிகள் என் மனைவிக்கு ஆறுதல் கூறினார்கள். ஏதோ பெரிய அபாயத்திலிருந்து பாபா உங்களைக் காப்பாற்றியிருக்கிறார். போய் விட்ட பொருளைப்போல பலமடங்கு தருவார் என பலப்பட ஆறுதல் கூறிச் சென்றார்கள்.



     விடுதிக்குச்சென்ற நாங்கள் மீண்டும் வெளியே வரவேயில்லை. பாபா மீதிருந்த நம்பிக்கை போய் விட்டது. கழுத்திலிருந்த சாயி டாலரை கழற்றி வீசினேன். வீட்டிற்குச் சென்றதும், அங்குள்ள பாபா சிலை, போட்டோ என அனைத்தையும் எடுத்து உடைத்து எறிந்துவிடுகிறேன் என பாபாவை கண்டபடி திட்டினேன். அந்த நிலையிலும், ”ஏதோ போறாத காலம், அதற்காக பாபாவை திட்டாதீர்கள்” என என் மனைவி கண்ணீர் விட்டாள்.



     ”இந்த நிலையிலும் அவர் மீது உனக்கு மாறாத பற்றா?”  எனக் கேட்டேன்.



     மறுநாள் காலையில் சாயி வரதராஜனை சந்தித்த போது, சென்னை சென்றதும், நான் ஐம்பதாயிரம் ரூபாய் தருகிறேன், உடனடியாக தாலி வாங்கிப் போட்டுக் கொள்ளுங்கள் என்றார். நாங்கள் உறுதியாக மறுத்துவிட்டோம். சென்னை திரும்பி விடைபெற்றபோதும், கவலைப்படாதீர்கள், பல மடங்கு உங்களுக்குத் தருவார் என்றார்.



     நடந்த துயர நிகழ்ச்சியை வீட்டில் மகன், மருமகள் உட்பட யாரிடமும் கூறக்கூடாது என மனைவி வாக்குறுதி பெற்றுக்கொண்டாள். நடந்த நிகழ்ச்சிகளால் மனம் சோர்வடைந்து, உடல் நிலை பாதிக்கப்பட்டது.



27 – 1 - 14



     அன்று மாலையில் என் கம்பெனி பையனிடம் சொல்லிவிட்டு, மருத்துவரை பார்க்கச்சென்றேன். அவர் இன்று வரமாட்டார் என்ற செய்தியைக் கேட்டு, சோர்வுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தேன்.



     வரும் வழியில் மசூதி உள்ளது. அதிலிருந்து, நெடிய,  சிவந்த நிறமுடைய ஒரு இஸ்லாமியப்பெரியவர் என்னை நோக்கி வந்து, வழிமறித்து நின்றார். நான் நின்றுவிட்டேன்.



     ”பத்து ரூபாய் கொடு”  என கை நீட்டினார்.



     இவர் யாரென்று தெரியவில்லை. புதிதாக இருக்கிறார். நான் பிறந்து வளர்ந்து வாழ்கிற பகுதி இது. முன் பின் தெரியாத இவருக்கு நாம் ஏன் தர வேண்டும் என்ற எண்ணத்தில் அவரை  நிமிர்ந்து பார்த்தேன்.



     மீண்டும் கையை நீட்டி,  “எனக்குப் பசிக்கிறது, பத்து ரூபாய் கொடு” என்றார். பசிக்கிறது என்ற சொல்லைக் கேட்டதும் அவரிடம் பத்து ரூபாய் கொடுத்தேன்.



     காசைப் பெற்றுக்கொண்ட அவர்,  “நான் உன் உயிரையே காப்பாற்றியிருக்கிறேன், காசு கேட்டால் தயங்கிக்கொண்டே கொடுக்கிறாயே! “  என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. தயங்கியபடி நின்றிருந்தேன்.



     ”என்ன திகைக்கிறாயா? நகை தானே போனது? உனது உயிரை நான் போகவிடவில்லையே உன்னையும் உன் மனைவியையும் காப்பாற்றி விட்டேனே.. ஆனால் நீ என்னை எப்படியெல்லாம் மனதில் திட்டினாய்? என் இருப்பிடத்தில் என்னை வணங்காமல் கூறத்தகாத வார்த்தைகளால் ஏசினாயே!” என்று சீரடியில் நடந்த விவகாரங்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினார். எப்படி இவருக்கு இதெல்லாம் தெரிந்தது என அதிர்ந்தேன்.



     என் மகள், நகை பறிக்கப்படும்போது என்னைத்தானே கூப்பிட்டாள். உன்னைக் கூப்பிட்டிருந்தால், ஓடிவந்து கயவர்களை பிடிக்க முயற்சித்திருப்பாய்.



     அப்போது அவர்களும் அவர்களைச் சுற்றியிருந்த கயவர்களும் உங்கள் இருவர் உடலிலும் கத்தியைப்பாய்ச்சியிருப்பார்கள். அது நடக்காமல் காத்தது நான்தானே! ”  என்றவர்,  “இங்கே கலவரத்தை ஏற்படுத்த சில சக்திகள் உருவாகியிருக்கிறார்கள். ஆனால் அப்படி நடக்காது. நான் இருக்கிறேன் போ..



     உன்னை கூட்டிக்கொண்டு வந்தானே, எனது மகன் சாயி வரதராஜன், அவனிடம் போய்ச்சொல்லு, நான் எங்கும் இருக்கிறேன் என்று!  அல்லா மாலிக் ” என்ற படி, மசூதிக்குத் திரும்பிச் சென்று படியில் காலை வைத்து ஏறியவரை அதன் பிறகு காணவில்லை.



     எனக்கு வியர்த்துக்கொட்டியது. ஐயோ, பாபா அல்லவா நேரில் வந்து பேசிக்கொண்டிருந்தார். எனக்கு அப்போது புரியவில்லையே!  ஏதோ மயக்கத்தில் இருந்தது போல இருந்து விட்டேனே அவரது கரங்களைப் பற்றி கும்பிட்டிருப்பேனே, பிரயாகைக் காட்டிய கால்களில் விழுந்து வணங்கியிருப்பேனே!  வாய்ப்பை தவறவிட்டுவிட்டேனே! ” என புலம்பினேன்.



     ஓ சாயி ராயா!  தர்மப்பிரபுவே! அனாதைகளின் ரட்சகனே! நீயா என்னைத் தேடிவந்தாய்? நீயா எங்கள் உயிரைக் காப்பாற்றினாய். கொடுஞ் சொற்களால் வசை பாடியும் என்னை நாடிவந்தாயே எனது மகன் சாயி வரதராஜனிடம் போய்ச் சொல் என்றாயே!  நான் அவ்வளவு பாக்கியம் செய்தவனா? இல்லையில்லை.. இது என் பெற்றோர் செய்த பாக்கியம்.



     வீட்டிற்கு வருபவரை உபசரித்து உணவளித்து அனுப்பும் அன்னலட்சுமி என் மனைவி செய்த பாக்கியம். அவளது புண்ணியம், பொருள் போனது, உனது அருள்நாடி வ்நதது. என்னே சாயி ராமின் கருணை என விழிகளில் நீர் நிறைய வீடு திரும்பினேன்.



     வீட்டிற்குள் நுழைந்ததும், என் மனைவி சீரடியில் நடந்த நிகழ்ச்சிகளை மகனிடமும் மருமகளிடமும் சொல்லிக்கொண்டிருந்ததை கவனித்தேன். அவர்களிடம் இந்த நிகழ்ச்சியையும் கூறினேன். சாயி வரதராஜனையும் ஒரு கணம் நினைத்தேன்.



     ”கருணை நிறைந்த சற்குருவின் புதல்வனே!  பிறர் துயர் தீர்க்க பிரார்த்தனைக் கூடம் நிறுவியவனே.. பாபா இங்கிருக்கிறார்.. பெருங்களத்தூரில் முழுமையாக உள்ளார். நடப்பவைகளை கவனித்துக்கொள்கிறார். உங்களின் கனவான கீரப்பாக்கம் சாயிஆலயம் சீக்கிரம் எழும். கனவு  நனவாகும். மக்கள் நன்மை பெறுவார்கள்.



     என்றுமே உன்னோடு சேர்ந்து சாயியைத்தொழுவோம். உனது தலைமையில் சீரடி சென்று சமாதி மந்திரில் தொழுது வணங்குவோம். ஆலயப் பணிக்கு உன்னோடு எங்களையும் அர்ப்பணித்துக்கொள்வோம்.. என மனதோடு சொன்னபடி, சற்குரு சாயிநாதனுக்கு வணக்கம், அவரது மகன் சாயி வரதராஜனுக்கு வணக்கம். பெருங்களத்தூர் பிரார்த்தனை மையமே.. நீயே எங்கள் துவாரகாமாயி.. உனக்கும் வணக்கம்.. என மனதிற்குள் சொல்லி துதித்துக் கொண்டிருந்தேன். மனம் உருகிக் கொண்டிருந்தது.



     அதே நேரத்தில் என் பிள்ளையும் மருமகளும்,மகளும் மருமகனும் எங்களுக்குப் புதிய சரடு வாங்கித் தருவதற்காகப் புறப்பட்டார்கள். பாபா எனக்குத் தந்திருப்பதைக் கொண்டு வாங்கிக்கொள்கிறேன் என மறுத்துவிட்டேன். பாபாவை நேரில் தரிசித்தபிறகு இவையெல்லாம் எதற்கு?



கே. கோதண்டபாணி,



சென்னை – 79

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...