Monday, June 23, 2014

நம்பிக்கை இருந்தால் தரிசனம் தருவேன்!

sai-guide-us



நான் சமாதியடைந்துவிட்ட போதிலும் என்னை நம்புங்கள் என்று பாபா சொன்னார். ஆனால், சாயி பக்தர் என சொல்லிக் கொள்ளும் நம்மில் பலருடைய நிலையைப் பாருங்கள்..இன்ப நேரத்தில் பாபா இருக்கிறார் என்றும், துன்ப நேரத்தில் பாபா என்னை கைவிட்டார்.. அவர் இல்லை என்றும் நினைத்துக்கொள்கிறார்கள்.



பாபா இருப்பது உண்மை என்பதில் உறுதியாக இருந்தால், எந்த நிலையிலும் அவர்கள் நம்பிக்கை இழக்கமாட்டார்கள். நம்பிக்கை இழந்தவர்களுக்கு பாபா உயிரோடு இல்லை என்பது உண்மைதான்.



ஏனெனில், அவர்கள் பாபாவை தங்கள் மனதிலிருந்து கொன்று விடுகிறார்கள். நம்பிக்கை உள்ளவர்களோ, தங்கள் துயரத்திலும் திடமாக இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அவரையே சரணடைகிறார்கள்.



நம்பிக்கை இழக்கிற நிலை எதற்காக வருகிறது? என்பதை ஆராய்ந்து பார்த்தால், பாபாவின் உபதேசங்களை கடைப்பிடிப்பதில்லை. அவற்றை அசட்டை செய்கிறோம். மந்தமாக, உற்சாகமின்றி சோம்பியிருக்கிறோம். குருத்துரோகம் செய்கிறோம்.



சீரடிக்குப் போனாலும், பாபா ஆலயத்திற்குப் போனாலும் அது புனிதத் தலம் என்பதை நினைக்காமல் வெட்டிப் பேச்சுப் பேசி, பிறர் மீது குறை காண்கிறோம். பாபா நடமாடும் தெய்வம் என்பதை உணரத் தவறுகிறோம்.



பாபா அளித்த சலுகைகளைப் பெற நாம் ஒருவரை ஒருவர் முந்துவதற்கு முயற்சிக்கிறோம். யாரையும் துன்புறுத்துவது தகாத செயல். அது என்னை நோயுறச் செய்கிறது என்ற பாபாவின் இந்த அறிவுரையை நாம் பின்பற்றவில்லை.



நம் கடமைகளை மறந்துபோய் ஷேம லாபம் அடையாது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம். பக்தர்களையும் பக்தர் அல்லாதவர்களையும் இரு சாராரையுமே உபத்திரவம் செய்தோம். அதன் விளைவாக சாயி நாதரை இழந்தோம்.



சத்சரித்திரம் 43வது அத்தியாயத்தில், நம்பிக்கை இல்லாதவர்களுக்கு அவர் தெரிவது இல்லை. நம்பிக்கை உள்ளவர்களுக்கு அவர்கள் எங்கிருந்தாலும் தரிசனம் தருவார். மக்களுடைய மனச்சாய்வு எப்படியோ அப்படியே நேரிடை அனுபவம் ஏற்படுகிறது.



சாவடியில் ஒளிந்த ரூபம், மசூதியில் பிரம்ம ரூபம்., சமாதியில் சமாதி ரூபம், மற்றெல்லா இடங்களிலும் சுக சொரூபம்.



ஆயினும், தற்சமயத்தில், சமர்த்த சாயி இங்கு வாசம் செய்வதற்கு பங்கம் ஏதும் நேரவில்லை என்பதிலும் அவர் இங்கு என்றும் அழிவின்றி அகண்டமாக நிலைத்திருப்பார் என்பதிலும் பக்தர்கள் அசைக்கமுடியாத நம்பிக்கையும் விசுவாசமும் வைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.



பாபா சமாதியடைந்த நிகழ்ச்சியைப் பற்றி தபோல்கர் விவரிக்கும்போது:



”ஓ, சாயி நாதரே! ஆனந்தத்தின் மூலமே! ஆனந்த தெய்வத் திருமேனியே! பக்தர்களுக்கு அருள் புரிவதற்காக உருவம் ஏற்றீர். அந்த செல்வத்தை சம்பாதித்த பிறகு ஐயகோ, சீரடியிலேயே உடலை உகுத்தீர்.



புத்தி தடுமாறிப் போன எங்களுக்கு சோர்வேதும் இல்லாமல், இரவு பகல் பாராமல் இருபத்து நான்கு மணி நேரமும் எங்கள் நன்மை கருதி உபதேசங்களை அளித்தீர்.



எங்களுக்கு அளிக்கப்பட்ட அத்தனை உபதேசங்களும் கவிழ்த்து வைக்கப்பட்ட பானையின் மேல் ஊற்றப்பட்ட நீரைப் போல வீணாகிப் போயின. ஒரு துளி நீர்கூட நிலைக்கவில்லை.



நீங்கள் யாரையாவது அவமரியாதையாகப்பேசினால் உடனே எனக்கு வலிக்கிறது என்று ஒவ்வொரு படியிலும் எங்களுக்கு அறிவுறுத்தினீர். ஆயினும் நாங்கள் தங்களுடைய வார்த்தைகளை மதிக்கவில்லை. உங்களுடைய நல்லுபதேசங்களைக் கடைப்பிடிக்காத நாங்கள் அபராதிகள். அவ்வாறு நாங்கள் ஆக்ஞைக்கு பங்கம் விளைவித்த பாவத்திற்குப்பிராயச் சித்தமாகவோ இவ்வாறு செய்து விட்டீர்?



தேவரீர் தொண்டை வறண்டுபோகும் வரை செய்த உபதேசங்கள் எங்களுடைய உதாசீனத்தால் பிரயோஜனமில்லாமல் போனது கண்டு மனம் உடைந்து, காதுகளின் வழியாகக் கபாலத்திற்கு போதனை ஏற்றும் முயற்சியைக் கைவிட்டீரோ?



நாங்கள் செய்த அசட்டையால் எங்கள் மீது முன்பிருந்த பிரேமையை மறந்துவிட்டீரோ? அல்லது பூர்வ ஜன்ம சம்பந்தம் இன்றோடு முடிந்து விட்டதோ? ஒருவேளை உமது அன்பெனும் தெய்வீக ஊற்று வறண்டு போய்விட்டதா என்ன?



தேவரீர் இவ்வளவு சீக்கிரமாக மறைவீர்கள் என்பது முன்பாகவே தெரிந்திருந்தால் எவ்வளவோ சிறப்பாக இருந்திருக்கும். மக்கள் ஆரம்பத்திலிருந்தே உஷாராக இருந்திருப்பார்கள்.



ஆனால், நாங்கள் அனைவரும் சோம்பியிருந்தோம். மந்தத்திலும் உற்சாகமின்மையிலும் மூழ்கி வெறுமனே உட்கார்ந்திருந்தோம். கடைசியில் ஏமாந்து போனோம். குருத் துரோகிகளாகிய நாங்கள் எந்தச் செயலையும் நேரத்தோடு செய்யவில்லை. அமைதியாக அமர்ந்திருந்தா லும் ஏதாவது பலன் கிடைத்து இருக்கும். நாங்கள் அதையும் செய்யவில்லை.



நெடுந்தூரம் பயணம் செய்து சீரடிக்குப் போய் அங்கு வெட்டிப்பேச்சு பேசிக்கொண்டு உட்கார்ந்திருந்தோம். ஒரு புனிதத் தலத்தில் இருக்கிறோம் என்பதை அடியோடு மறந்து அங்கும் இஷ்டப்படி நடந்துகொண்டோம்.



பக்தர்கள் பலவகை,  புத்திமான், பற்றுடையோன், விசுவாசமுள்ள அடியவன், தர்க்கவாதி என்று நானாவிதமாக இருந்தனர். அனைவருடைய குணங்களும் தெரிந்திருந்தும் பாபா எல்லாரையும் ஒன்றாகவே பாவித்தார். அதிகம் குறைவு என்னும் பேதமே அவரிடம் இருந்ததில்லை.



உலகத்தில் கடவுளைத் தவிர வேறு எதையும் அவர் காணவில்லை. கண்ணோட்டம் அவ்வாறு இருந்ததால், அவர் தம்மை தனிமைப் படுத்தியோ, வேறுபடுத்தியோ இரண்டாவதாகக் கருதவில்லை.



அறிவாளியோ, மூடனோ, தம்மை அண்டியவர் அனைவரிடமும் பாபா அத்தியந்த அன்பு செலுத்தினார். தம் உயிரை விட அவர்களை அதிகமாக நேசித்தார். அவர்களுக்குள் சிறிதளவும் பேதம் பார்க்கவில்லை.



அவர் மனித உருவத்தில் நடமாடிய தெய்வம். அதை மக்களுக்கு நேரிடை அனுபவமாக அளித்தார். ஆயினும் அனைவரும் அதை உணரத் தவறினர்.



இதற்குக் காரணம், பாபா அவர்களிடம் காட்டிய இளகிய மனமும் பாசமும்தான். சிலருக்கு அவர் செல்வச் செழிப்பை அளித்தார்.



சிலருக்கு சந்ததியையும் சம்சார சுகங்களையும் அளித்தார். இவற்றால் பெரும் பிரமை அடைந்த மக்கள், ஞானத்தைப் பெறும் வாய்ப்பை கோட்டை விட்டனர்.



பாபா எவரிடமாவது கேலியும் சிரிப்புமாகப் பேசினால், வேறு எவரிடமும் காட்டாத அற்புதமான அன்பைத் தம்மிடம் மட்டும்தான் பாபா காட்டுகிறார் என்று எண்ணி அந்த நபர் தலைக்கனம் கொள்வார் பாபா எவரிடமாவது கோபமாகப் பேசினால், பாபாவுக்கு இவரைப் பிடிக்கவில்லை, பாபா நம்மையே அதிகமாக மதிக்கிறார். மற்றவர்களுக்கு அவ்வளவு மதிப்பு கொடுப்பதில்லை என்று மக்கள் பேசிக் கொண்டனர்.



பாபா அளித்த சலுகைகளைப் பெற ஒருவரை ஒருவர் முந்துவதற்கு முயன்றபோதிலும், பாபா அந்த ரீதியில் கனவிலும் நினைக்கவில்லை. இவ்வாறாக, நம் கடமைகளை மறந்து ஷேம லாபம் அடையாது நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டோம்.



பரப்பிரம்மமே மனித உருவம் ஏற்று நம்மருகில் வந்துநின்றது. ஆயினும் நாமோ, செய்யவேண்டிய காரியங்களை மறந்து அவர் செய்த வேடிக்கைகளிலும் தமாஷிலும் பிரியம் காட்டினோம். வந்தவுடனே பாபாவை தரிசனம் செய்வோம், மலர்களையும் பழங்களையும் சமர்ப்பணம் செய்வோம். தட்சணை கேட்டால் தடுமாறுவோம். அவ்விடத்திலிருந்து நழுவி விடுவோம்.



யாரையும் துன்புறுத்துவது தகாத செயல். அது என்னை நோயுறச் செய்கிறது. பாபாவின் இந்த அறிவுரையை நாம் பின்பற்றவில்லை. நம் இஷ்டம் போலச் சண்டையும் சச்சரவும் செய்தோம்.



பக்தர்களையும் பக்தர் அல்லாதவர்களையும் இரு சாராரையுமே உபத்திரவம் செய்தோம். அதன் விளைவாக சாயி நாதரை இழந்தோம். அவருடைய வார்த்தைகள் இப்பொழுது ஞாபகத்திற்கு வரும் போது நம்முள் ஒரு அனுதாப அலை எழுகிறது..”



இப்படி சத்சரித்திரம் கூறுகிறது.



நீங்கள் பாபாவை தரிசிக்க வேண்டும் என்றால், அவர் மீது நம்பிக்கை உள்ளவர்களாக மாறுங்கள். அவருடைய பாதங்களைப் பிடித்துக் கொண்டு, பாபா என்னை மன்னித்து விடுங்கள். இனி உங்கள் வழி காட்டுதலை மீறமாட்டேன் எனக் கூறுங்கள்.



எந்த நேரத்திலும் என்னை விட்டு நீங்காமல் இருங்கள்.. இந்த மனமே உங்கள் சீரடியாக இருக்கட்டும் என வேண்டுங்கள்.



எப்போதும் சாயி நாம ஜபம் செய்து, மனதை சக்தி மிகுந்த ஷேத்திரமாக மாற்றுங்கள். அவரைப்பற்றிய நினைவும், அவர் நாம தியானமும் உங்கள் மனதில் மீண்டும் அவரை உயிர் பிழைக்க வைக்கும். இதை உடனடியாகச் செய்யுங்கள். எதிலும் நம்பிக்கை வைத்து வாழ்க்கையை ஆரம்பியுங்கள். ஒருவர் மீது ஒருவர் அன்பு காட்டுங்கள். இதை பாபா அதிகமாக விரும்பினார். யாரையும் குறை சொல்வதை அவர் பொறுத்துக்கொள்ளவில்லை. குறை கூறுவோருக்கும், புறம் பேசுவோருக்கும் அவர் தண்டனைத்தர தயங்கியதில்லை.



தம்பதியருக்குள்ளோ, பெற்றோர் பிள்ளைகளுக்கு உள்ளோ, மாமியார் மருமகளுக்கு உள்ளோ, மற்றவர்களுடனோ பிணக்குகளை வளர்த்துக் கொள்ளாமல், கசப்புகளை நீக்கும் வழிகளை ஆலோசித்து செயல்படுத்துங்கள். அனைவரையும் நேசித்து அன்பு காட்டுங்கள்.



அதற்கு முன்னதாக, ஒருவர் செய்த தவறை மன்னித்து விடுங்கள். நட்புக்கு நீள்வது உங்கள் கரமாக இருக்கட்டும். இப்படிச் செய்து, பொறுமையோடு அவருக்குக்காத்திருந்தால் வாழ்க்கையில் இன்பம் பெருகும். அவரது தரிசனம் தடையின்றி கிடைக்கும்.



 



சாயியின் திருவடிகளைத் தொழுவோம்



ஜெய் சாய்ராம்!

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...