Thursday, June 19, 2014

வாழ்வை மாற்றிய ஸ்ரீ சாயி தரிசனம்! பகுதி 1

hanuman



1992 ல் எனக்கு ஒரு குருநாதர் இருந்தார்.  ஆவடி காமராஜர் நகரில்..அவர் ஒரு ஸ்ரீ நரசிம்ம மற்றும் ஆஞ்சநேய உபாசகர். அடையாறிலிருந்து ஆவடி வரை சைக்கிளில் செல்வேன். காலை எட்டு மணி முதல் ஆறு மணி வரை அவருடன் இருப்பேன். எதுவும் சொல்ல மாட்டார். மாலை ஏமாற்றத்துடன் ஆவடியிலிருந்து அடையாறு வரை சைக்கிளில் திரும்பி வருவேன்.



ஒருநாள் தனக்குப் பின்னால் மாட்டப்பட்டிருந்த ஒரு படத்தைக் காண்பித்து, இவர் யார் தெரியுமா? பாம்பன் சுவாமிகள். இவரது ஜீவ சமாதி உங்கள் ஏரியாவில்தான் உள்ளது என்றார். அவர் சொன்னது போல, பெசன்ட் நகரிலுள்ள ஸ்ரீ பாம்பன் சுவாமி கோயிலுக்குச் சென்றேன். நானும் அவரைப் போல ஆக விரும்பி 36 நாட்கள் விரதமிருந்தேன். அப்போது என் வயது 26.  விரத நாட்களுக்குள் எண்களால் மனித வாழ்வில் ஏற்படும் நல்லவை கெட்டவை, கிடைக்கும் கிடைக்காது என்ற மாபெரும் விக்ஷயங்களை கற்றேன். இப்படி ஓடிற்று காலம்.



pamban



1993ல் என் வாழ்வில் திருமணம் நடந்தது. பாம்பன் சுவாமியை மறந்தேன். இல்வாழ்க்கை சுகமாக ஆரம்பித்தது. 1995 எனக்கு அழகான ஒருபெண் குழந்தை பிறந்தது. தமிழ்ச்செல்வி என பெயர் வைத்தேன். அதன் பிறகு வாழ்வில் அலைவீச ஆரம்பித்தது.



1996 ல் என் வாழ்வில் என்னுடன் வேலை பார்த்த பெண்ணின் நட்பு ஆறுதலாய் கிடைத்தது. அவளால் என் மனைவியை இழந்தேன் – மதிப்பை இழந்தேன். எல்லாம் இழந்து -  அவள் வேறு ஒருவனுடன் ஓடிப் போக, 1997 ஜனவரி மாதம் 100 தூக்க மாத்திரை எடுத்து தற்கொலைக்கு முயன்று பிறகு மீண்டு வந்தேன்.



அவள் தந்த சோகம் தாளாமல் சென்னையில் ஒரு மதுரைவீரன் சுவாமி கோயிலுக்கு குறி கேட்கச்சென்றேன். அங்கு அவருக்கு பூஜைக்கு வைக்கும் மதுவைக் கண்டு, நானும் இப்படி மது குடித்தால் இவரைப் போல ஆகலாம் என நினைத்து, குடித்து குறி சொல்ல ஆரம்பித்தேன். காலை முதல் இரவு வரை ஓயாமல் ஓம் நமச்சிவாய சொல்வேன்.



எனக்குள் அப்படியொரு நம்பிக்கை ஈஸ்வரன் மேல். குடித்து குடித்து குறி சொன்னேன். பேய் ஓட்டினேன்.. சூன்யம் எடுத்தேன். ஏதேதோ செய்தேன். காசில்லாமல் எல்லோர்க்கும் ஓசியில்..கட்டிங் சாமியார் என அழைக்கப்பட்டேன். அப்படியும் ஓடிப் போனவள் வரவேயில்லை.



2007. என் தாயின் பி.எப் பணம் மூலமாக மேடவாக்கம் ஜல்லடியன் பேட்டையில் கால் கிரவுண்ட் வீடு வாங்கினோம். பிடித்தது சனியன். ஐந்து மாதத்திலேயே என் தாய் மரணம். இரண்டு வருடத்தில் என் 21 வருட வேலை போயிற்று. வீட்டில் ஒவ்வொரு பொருளாகப் போனது.



சூன்யம் மொத்தமாக என்னை குத்தகைக்கு எடுத்துக்கொண்டது. குறி சொல்லும் எனக்கேவா இப்படி-? என நொந்தேன். இரவு பகலாக யோசித்தேன். ஒரு நாள் கனவில் உருவமில்லாது ஒருவர் வந்து,  “உன் மனைவி உன்னை வெறுத்து ஒதுக்குவாள், அப்போது நீ உன் உயிரை விட யோசிப்பாய்.. அந்த நேரத்தில் உனக்கு அபயம் அளிப்பேன்.”  என்றார்.



நான் வணங்கிய அத்தனை சுவாமிகளும் என்னைக் கை விட்டன. கதறினேன். அழுதேன்,  புரண்டேன். ஆதரவு அற்றுப்போனேன். தற்காலிக வேலை ஒன்று கிடைத்தது. வாரா வாரம் குங்குமம் பத்திரிகை வாங்கிப் படிப்பேன். அதில் ஸ்ரீ  சாயி பாபா தொடர் வரும் என்பதால்!



அதில் ஓர் இதழில், ”யோக்கியதை இருப்பவர்க்கு மட்டுமே என் ஆசி பெறுவர்” என்று இருப்பதைப் படித்துப் பார்த்து, எனக்கு அது உள்ளதா என யோசித்தேன். இல்லவேயில்லை. விட்டுவிட்டேன்.



2013. மார்ச் எட்டாம் நாள் அதிகாலை எனக்கு மாரடைப்பு. அடையாரில் ஏற்கனவே வேலை செய்த மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டேன். மருத்துவர்கள் சோதித்து ஆஞ்சியோகிராம் மற்றும் அவசர அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றார்கள்.



பணம் வேண்டுமே, நானோர் ஆண்டியாயிற்றே உறவுகள் யாரும் உதவ முன்வரவில்லை. யாருமற்ற அனாதையானேன். ஐந்தாம் நாளில் ஏதோ மருந்து மாத்திரையோடு டிஸ்சார்ஜ் ஆனேன். இப்படியே மாதங்கள் ஓடின.



காசிருக்கும்போது கட்டிங். இல்லாவிட்டால் தூக்க மாத்திரை போட்டு தூங்குவேன். என்ன செய்வது? ஏது செய்வது என்று புரியவில்லை.



2013. அக்டோபர் மாதம் எட்டாம் தேதி, வேலை செய்யும் இடத்தில் உங்கள் உடம்பைத் தேற்றிக்கொண்டு வந்தால்தான் வேலை என்றார்கள். கையிலிருந்த குங்குமம் புத்தகத்தை பிரித்தேன். அதிலிருந்த சாயி தாத்தாவைப் பார்த்து, முடிந்தால் வாழ வை இல்லையேல் முடித்துக் கொள்கிறேன். உம்மேல் நம்பிக்கை வைத்து நாளை என் மனைவியிடம் என் இதய வைத்தியத்திற்கு தற்போதுள்ள வீட்டை விற்று பணம் கொடு எனக்கேட்கப் போகிறேன். அவள் சம்மதித்தால் சிகிச்சை இல்லையேல் தற்கொலை என வேண்டியபடி, கண்ணீருடன் அவர் படத்தை கண்களில் ஒற்றிக்கொண்டேன்.



மறுநாள் புதன். காலை பத்து மணி. மனைவியிடம் கேட்டேன். அவள் மறுத்துவிட்டாள். இருப்பதா சாவதா? என சிந்தித்து சாக முடிவு செய்தேன். மறுநாள் நேரம் குறித்த அதே நேரத்தில் என் செல்லுக்கு ஓர் அழைப்பு. தெரிந்தவர் பேசி, இன்று குரு வாரம் கோவளம் தர்காவுக்குச் சென்று வாருங்கள் என்றார். சென்றேன், தங்கினேன். காலை அவரிடம் அழுதேன்.



மறுநாள் காமாட்சி மருத்துவமனை சென்று மருத்துவரை சந்தித்தேன். திங்கள் காலை மருத்துவமனையில் அனுமதி, மதியம் ஒரு மணிக்கு ஆஞ்சியோகிராம். இதய வால்வில் உள்ள அடைப்பு கண்டுபிடிப்பு. மேலும் அடுத்த வாரம் உங்களுக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி ஆபரேக்ஷன். இது என்ன கனவா, நிஜமா?



 



தொடரும்……

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...