நீங்கள் தாமாக முன்வந்து பாபாவை வணங்குவதாக நினைக்கிறீரா? உண்மை அதுவல்ல. யாருடைய பாவங்கள் ஒழிந்தனவோ, யாருக்கு புண்ணிய காலம் பலன் தர ஆரம்பித்து உள்ளதோ அவர்கள் மட்டுமே பாபாவை வணங்குகிறார்கள் என சத்சரித்திரம் தெளிவாகக்கூறுகிறது.
சாயி தரிசனம் நம்முடைய பாவங்களையெல்லாம் நிவிர்த்தி செய்து, இவ்வுலக சுகங்களையும் மேல் உலக சுகங்களையும் அபரிமிதமாக அளிக்கும் சக்தி வாய்ந்தது என்று சத்சரித்திரம் 12வது அத்தியாயம் கூறுகிறது.
முலே சாஸ்திரி என்ற பக்தர் பாபாவை தரிசனம் செய்ய வந்தபோது, அவரை பாபாவுக்கு அறிமுகம் செய்து வைத்த காகா சாகேப் தீட்சிதர், பின்வருமாறு பாபாவிடம் கூறினார்.
”பாபா இவர் புண்ணிய ஷேத்திரமாகிய நாசிக்கில் வசிக்கும் முலே சாஸ்திரி. புண்ணிய பலத்தால் உம்முடைய திருவடிகளைத் தொழுவதற்கு இங்கு வந்திருக்கிறார்.”
பாபாவை எல்லோரும் வணங்க முடியாது என்பதற்கு இதைவிட சான்று இருக்கமுடியாது. புண்ணிய பலம் இருந்தால் மட்டுமே அவரை வணங்க முடியும். நீங்களும் நானும் புண்ணிய பலத்தைப் பெற்று இருக்கிறோம். ஆகவே பாபாவை வணங்குகிறோம்.
எவ்வளவோ திட்டங்கள் தீட்டியிருக்கிறோம், ஆனால் வெற்றி பெறத்தான் முடியவில்லை. பாபாவை வணங்கியும் நமது கஷ்டங்கள் இன்னும் தொலையவில்லை என அங்கலாய்க்கிறோம்.
சத்சரித்திரம் என்ன சொல்கிறது என்றால், யார் கெஞ்சினாலும் கெஞ்சாவிட்டாலும், தமக்கு விருப்பமில்லை என்றால் பாபா யாருக்கும் எதுவும் தரமாட்டார். அது மட்டுமல்ல, நாமெல்லாருமே திட்டங்கள் தீட்டுகிறோம், ஆனால் நமக்கு ஆதியும் தெரிவதில்லை, அந்தமும் தெரிவதில்லை. நமக்கு எது நன்மை, எது தீமை என்பது ஞானிகளுக்கே தெரியும். அவர்களுக்குத் தெரியாதது எதுவுமே இல்லை.
நடந்தது, நடப்பது நடக்கப் போவது அனைத்தும் அவர்களுக்கு உள்ளங்கை நெல்லிக் கனி போல் தெரியும். அவர்களுடைய விருப்பத்திற்குக் கீழ்ப்படிந்து நடந்துகொண்டால் பக்தர்கள் சுகத்தையும் சாந்தியையும் பெறுவார்கள். (அத்:12)
இதுவரை நாம் வேண்டியது கிடைக்கவில்லை என்றால், நாம் அவரது எதிர்பார்ப்புக்கு, விருப்பத்திற்கு நடக்கவில்லை என்று பொருள். அவரது எதிர்பார்ப்புதான் என்ன?
நீங்கள் எப்போதும் சலனமற்ற மனம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். எது விதிக்கப்பட்டிருக்கிறதோ அதை தயங்காமலும், முணுமுணுக்காமலும் நீ அனுபவிக்க வேண்டும்.
இன்ப துன்பமும், சுக துக்கமும் நிலையற்றவை. இன்றிருப்பது நாளை மாறிப்போகும். எனவே, மாற்றத்திற்குரிய ஒன்றுக்காக மனம் கலங்காமல் இருக்க வேண்டும்.
மனதை எதன் பாலும் திருப்பாமல், அவர் பாதங்களின் மீது திருப்பி எப்போதும் சாதாரணமாக சாயி சாயி என்றோ சாயி ராம், சாயிராம் என்றோ சொல்லிக்கொண்டிருக்கவேண்டும் .
எதைச் செய்தாலும் அவரிடம் சொல்லி விட்டுச் செய்வதும், சொல் செயல் சிந்தனை என எதிலும் அவரைப் பொறுப்பாளியாக்கி, நீங்கள் வெறும் கருவியாக மட்டும் இருக்க வேண்டும் என்பது அவரது எதிர்பார்ப்பு.
இந்த எதிர்பார்ப்பை நீங்கள் கடைப்பிடித்தால் போதும், அவர் தனது விருப்பத்தை உங்கள் வாழ்க்கையில் நிறைவேற்றுவார். அவரது விருப்பம்தான் என்ன?
தனது பக்தனுடைய ஷேம நலனே சாயியின் விருப்பம்! நீங்கள் அவரை நினைக்கிறீர்களோ இல்லையோ, அவர் எப்போதும் உங்களை நினைத்து, உங்கள் பெயரையே எப்போதும் உச்சரித்துக் கொண்டு இருக்கிறார். இதை சத்சரித்திரம் உறுதி செய்கிறது. நம் போன்று அனுபவங்களைப் பெற்றவர்கள் உறுதி செய்கிறார்கள்.
நமது நலனை விரும்புகிற நமது கடவுள் நமக்கு நன்மையை மட்டும்தான் செய்வார் என்பதில் உறுதியான நம்பிக்கை இருக்க வேண்டும்.
சில அடியார்கள் கூட சமயத்தில் தவறி விடுகிறார்கள், தடுமாறுகிறார்கள். காரணம், தங்களுக்குப் பிரச்சினை என வந்துவிட்டால் அவர்கள் குழம்பிவிடுவதுதான்.
தங்களை அறியாது ஒருவித பயம் அவர்கள் மனதில் ஏற்படுவதால், இது நடக்குமோ, நடக்காதோ என்று சந்தேகப்பட்டுவிடுவார்கள். இதனால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் துன்பப்பட வேண்டியிருக்கும்.
விசுவாசம் இல்லாமல் நான் தன்னை அறிந்தவன், ஆத்ம நிஷ்டன் என்று சொல்லிக்கொள்பவர்கள்கூட வாழ்நாள் முழுவதும் கஷ்டத்தையே அனுபவிக்கிறார்கள்.
இப்படித்தான், பாபாவை வணங்குகிறேன் என்று சொல்லிக் கொண்டு, அவர் என்னை கண்டுகொள்ளவில்லை எனப் புலம்புகிறவர்கள் யாராவது இருந்தால், நீங்கள் உண்மையாக அவரை வணங்கவில்லை என்று பொருள்.
இதனால் உங்கள் மனதில் ஒரு கணமும் நிம்மதியோ, சாந்தியோ இன்றி சஞ்சலங்களிலும் கவலைகளிலும் ஜன்மம் முழுவதும் மூழ்கிவிடுவீர்கள். இப்படி மூழ்குகிறவர்கள் தாங்கள் பகவான் அருளைப் பெற்றுவருவதாக தம்பட்டம் அடித்துக்கொள்வார்கள். அந்த வரிசையில் நீங்கள் இடம் பிடிக்கக் கூடாது.
இன்றும் கொஞ்ச நாள் பொறுமையோடு இருங்கள். உங்கள் வேண்டுதல் பலிக்கும். பக்தி என்பது மாயா ஜால வித்தையல்ல. பக்தி செய்தவுடனே வேண்டியது கிடைப்பதற்கு. பக்தி என்பது, இறையருளையும் புண்ணியத்தையும் பெறுவதற்கான ஒரு நுழைவுச் சீட்டு. இறைவனின் அன்பைப் பெறுவதற்கான ஓர் அங்கீகாரம். இதைச் செய்துவிட்டுக் காத்திருக்க வேண்டும். உங்கள் பக்தி சோதிக்கப்படும், பிறகே உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான வழிமுறைகள் அனைத்தும் வேகவேகமாக செய்யப் படும்.
உங்கள் பக்தி பரிபூரணமானது என்பதை எப்படி உணரலாம் தெரியுமா?
ஒரு ஹோட்டல் நடத்த விரும்புகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள்.. இடம் வாங்கி, கட்டி அதில் இன்டீரியர் டெகரேஷன் செய்து, பொருட்களை எல்லாம் வாங்கி வைத்து கால விரையத்தை செய்து கொண்டிருப்பது அல்ல.
எல்லாவற்றையும் செய்து முடித்துவிட்டு.. இந்தா..இதை வைத்துக்கொள்.. உன்னிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டேன்.. நீ பார்த்து ஏதேனும் செய்.. என ஒருவரை உருவாக்கி உன்னிடம் அனுப்பி வைப்பது!
பக்தியில் உண்மையாயிருங்கள்.
உண்மையாக பக்தி செய்யுங்கள்..
உயர்வு தானாக வரும்!
ஜெய் சாய்ராம்!
அன்புடன்
சாயி வரதராஜன்
No comments:
Post a Comment