நேற்றைய தொடர்ச்சி……..
மறுநாள் காமாட்சி மருத்துவமனை சென்று மருத்துவரை சந்தித்தேன். திங்கள் காலை மருத்துவமனையில் அனுமதி, மதியம் ஒரு மணிக்கு ஆஞ்சியோகிராம். இதய வால்வில் உள்ள அடைப்பு கண்டுபிடிப்பு. மேலும் அடுத்த வாரம் உங்களுக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி ஆபரேக்ஷன். இது என்ன கனவா, நிஜமா? அதுவும் இலவச ஆபரேக்ஷன். கேகேடியில் அக்டோபர் 21 அனுமதி. 23ல் அறுவை, 25ல் டிஸ்சார்ஜ்.
மனம் பறந்தது. ஏதோ ஒன்று என்னை வழி நடத்துகிறது. என்ன அது? தேடினேன் தேடினேன்.. நான்தான் மந்திரவாதியாயிற்றே! மறுபடி மறுபடி தேடினேன். கண்டேன் சாயியை!
அந்த வாரம் குங்குமம் வாங்கிப் படித்தேன். தோல்வியைக் கண்டு துவண்டுவிடாதே, அதில் தான் அனுபவம் உள்ளது என்ற வார்த்தைகள்..
செவ்வாய், நவம்பர் 5ம் தேதி , ஸ்ரீ சாயி தரிசனம் புத்தகம் வாங்கினேன். படித்தேன்..படித்தேன்.. புரிந்தேன் வாழ்க்கையை. தனித்திருந்த காலத்திலேயே சிறிய அளவில் பாபாவுக்கு பிரார்த்தனை மையம் அமைக்க முடிந்தது. இப்போது என்னோடு நீங்களும் இருக்கிறீர்கள். நம்மோடு சாயியும் உறுதியாக இருக்கிறார் என சாயி வரதராஜன் எழுதியிருந்தது என் மனதிற்கு இனிமையாகவும் ஏதோ செய்யப்போகிறார் என்பது போலவும் இருந்தது. அதன்பிறகு சாயி தரிசனம் புத்தகமே என் தினசரி சுப்ரபாதமாக அமைந்தது.
சாயி தரிசனம் புத்தகம் வாங்கிய மறுநாள், என்னை வேலைக்கு வேண்டாம் என்றவர்களே, மீண்டும் அழைத்தார்கள். நவம்பர் 11ல் உண்மையாகவே சாயி தரிசனம்.. தலைகால் புரியவில்லை. சாயி வரதராஜனுக்கு எஸ்எம்எஸ் மூலமாக நன்றி தெரிவித்தேன்.
என்னை வேலையில் சேர்த்த பிறகு, நான் முன்பு வேலை பார்த்த அதே இடத்திற்கு மாற்றினார்கள். என்னை புரிய வைத்த துவாரகாமாயியான அந்த இடத்திலேயே வேலையில் அமர்ந்தேன்.
அங்கிருந்தபடியே, ஏன் பெருங்களத்தூர் பிரார்த்தனை மையம் போகக்கூடாது. போவோம்..பாபா சன்னதி என்ன? தியான மையம் பெரியதாக, இன்னும் கட்டப்படாமல் எவ்வளவோ பெரிய கோயில், எவ்வளவோ பக்தர்கள்.. ஆஹா! சாயி வரதராஜன் என்பவர் ஒரு சாமியாராகத்தான் இருக்க வேண்டும்.. அவரையும் சென்று பார்க்க வேண்டும். இப்படியெல்லாம் மனதில் கற்பனையாக ஓட..பெருங்களத்தூர் வந்து, கல்கி தெருவைத் தேடித் தேடி மாலை ஆறு மணி நேரமாகிவிட்டது. ஆரத்தி முடித்திருப்பார்களோ, கூட்டம் அதிகமாக இருக்குமோ, சரி போனதும் ஆரத்தி முடித்து, தியான மண்டபத்தில் உட்காருவோம்.
சாயி வரதராஜன் அவ்வளவு பெரிய கோயிலில் எங்கிருப்பாரோ..நம்மையும் பார்ப்பாரோ என்று உள்ளார எண்ணிக்கொண்டே அதிக கற்பனையில் கல்கித் தெருவை அடைந்தேன்.
பாபா கோயில் எங்கே? என கேட்க, ஒருவர், இதோ இதுதான் என சொல்ல.. என்னுள் இருந்த கற்பனை குதிரை ஒடிந்து - கால் ஒடிந்து - கீழே விழ.. நான் உள்ளுக்குள்ளே உடைய, போராட்டமா அது ஏமாற்றமா? இதுவா கோயில்? இதுவா நம் பாபா கோயில்? பாபா எப்படி இப்படி தெருவில் உங்களை உட்கார வைத்து...? உண்மையாகவே நான் உள்ளூர அழுதேன்.
மனம் இறுகியது. அதிக எதிர்பார்ப்புகளோடு வந்த என்னை இப்படியா ஏமாற்றம் சூழும்? சரி உள்ளே போவோம் என வரிசையில் நின்றேன். பத்துக்கு பத்து இருக்குமா? இதுவா பாபா கோயில்? என எண்ணிய மனம் சற்றே தணிந்து, பாபா காலில் விழுந்து நமஸ்கரித்து மேலே படி வழியாகச் சென்றேன்.
இடதுபுறம் ஏதோ வேலை பாதியில் நின்றது. இதுதான் பிரார்த்தனை மையமா? என நினைத்தவாறு உள்ளே சென்றேன். அந்த சிறிய அறையில் அஞ்சனை மைந்தன், அதனருகில் பாபா சிலை.
ஒரு மூலையில் மனமில்லாது அமர்ந்து, பிரார்த்தனை செய்தேன். மூட்டை மூட்டையாய் பணம் வைத்திருப்பவர்களுக்கு மனமில்லை. எங்கே சிறிய இடம் பார்த்தாலும் அங்கே பாபாவுக்கு ஒரு கோயில் கட்டவேண்டும் என மனம் ஆசைப் படுகிறது என அவர் எழுதியதைப் படித்திருந்தேன். அவருக்காகப் பிரார்த்தனை செய்தேன்.
மறுவாரம் பெருங்களத்தூர் வந்தேன். அதே பிரார்த்தனை. எனக்கான வேண்டுதலை மறந்தேன். சாயி வரதராஜனுக்காகப் பிரார்த்தனை.
மலை ஆறு மணியிருக்கும். சாதாரணமாக ஒருவர் பேண்ட் சர்ட்டுடன் வந்தார். மேலே போனார். எல்லோருக்கம் உதி தந்தார். நான் மேலே உட்கார்ந்து பிரார்த்தனை முடித்துவிட்டு, கீழே வந்தேன். அப்போதும் அவர் அங்கே எல்லோர் நெற்றியிலும் உதிப் பிரசாதம் இட்டுக்கொண்டு இருந்தார். இவர்தான் சாயி வரதராஜனா? மனம் போ போ.. போய் பேசு என்றது. நான் என் நெற்றியை மட்டும் காண்பித்தேன். உதி இடப்பட்டது. வீடு திரும்பினேன்.
பாபா என் பிரார்த்தனையைக் கேட்டார். ஸ்ரீ சாயி வரதராஜன் என்னும் மகா பாக்கியவானால் கண்டிகையின் உள்ளே மூன்று கி.மீ. தூரத்தில் கீரப்பாக்கத்தில் ஆலயம் துவக்கம் என்னும் மகா மகா மகிழ்ச்சிச் செய்தியை சாயி தரிசனத்தில் படித்தவுடன் என் மனம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.
மகா பாக்யசாலி, மகா புண்ணியசாலி அவர். அவர் அமைக்கும் இடத்தைப் போய் பார்க்கலாம் என தனியே கீரப்பாக்கம் சென்றேன். வெங்கட்ராமன் என்பவரையும் சந்தித்துவந்தேன். இருந்தும் உள்ளூர உறுத்தல். இந்த ஊரில் பாபா கோயிலா? சாயி பந்துக்கள் எப்படி வருவார்கள்?
சரி, அது போகட்டும். இவ்வளவு பெரிய கோயில் கட்ட சாயி வரதராஜன் எவ்வளவு கஷ்டப்பட வேண்டும்? நானும் அணில் மாதிரி உதவலாமா?
எப்படி முடியும் என்னால்? என்னைச் சுற்றிதான் அவ்வளவு கடனிருக்கிறது? அதுவே முடியவில்லை.. எனக்கு உதவிட யார் இருக்கிறார்கள் என அழுகிறேன்.. அறுவை சிகிச்சைக்கு வாங்கிய கடனே முடியவில்லை.. என புலம்பினேன்.
உள்மனம், இந்த ஐந்து மாத காலமாக எப்படி வாழ்கிறாய்? குடிகார சாமியாராக இருந்த உன்னை மாற்றியது _ சாயி வரதராஜன் என்னும் மகா சித்தர். அவர்தானே.. நீதான் இப்ப குடிக்கறதே இல்லையே மூன்று வேளை பிரார்த்தனை செய்கிறாய்..வீட்டை விட்டால் வேலை, வேலையை விட்டால் வீடு என்று.. உன்னை இப்படி மாற்றியது யார்? அவர்தானே?
அவர்கிட்டே உன் பிரச்சினையைச் சொல்லு.. அவர் மூலமாகத்தான், அவருடைய புத்தகம் மூலமாகத்தான் என் வாழ்க்கை மாறியது, அவர்தான் என் குரு.. அவர்தான் என் குரு என பாபாவிடம் சொல்கிறாயே- அவர் கட்டும் கோயிலுக்கு நீ என்ன பண்ணப் போகிறாய்? நன்றி இல்லாதவனே.. தற்கொலை தற்கொலைன்னு அலையுறயே...கடன் கடன்னு புலம்புறியே.. நல்லா யோசிச்சுப் பாரு.. முன்பு இருந்த இருப்பு என்ன? இப்ப எப்படி இருக்க? அதற்காகவாவது அவர் கட்டும் கோயிலுக்கு உதவி பண்ணலாம்ல.. இப்படி என் மனம் தினமும் என்னை அழவைக்கிறது.
என்ன செய்வது? பாபா சொல்வது போல கர்ம வினைகளை அனுபவித்துதான் ஆகவேண்டும். என் பாதங்களை பத்திரமாகப் பிடித்துக்கொள். உனது காரியங்களையும், மற்றவைகளையும் நான் பார்த்துக் கொள்கிறேன்.. என்னும்அவரது தேன் மொழிகள்..
குரு ஸ்ரீ சாயி வரதராஜனின் பிரார்த்தனையும், வழிகாட்டுதலில் உள்ள நம்பிக்கையிலும், அவரது எழுத்து நடையிலுள்ள நேர்த்தியிலும் பாபா என்றால் சாயி வரதராஜன், சாயி வரதராஜன் என்றால் பாபா என்ற எண்ணங்களிலும் அடிக்கடி பிரச்சினை என்னும் பேய்கள் வந்து ஆட்டிவிட்டுச் செல்லும் நேரங்களில்.. இவர்கள் இருவரும் இருக்க உனக்கென்ன பயம்? நீ வருவாய் மீண்டும் வாழ்வாய் என்ற நம்பிக்கை எனக்குள் இருக்கும்.
இவற்றை நான் இவ்வளவு விரிவாக எழுதியதற்குக் காரணம், என்றைக்கு சாயி தரிசனம் என்ற புத்தகத்தை வாங்கிப் படித்தேனோ, அன்றிலிருந்தே எனக்குள் நிறைய மாற்றங்கள்.
இன்றைக்கு அனாதையாக இருக்கும் எனக்கு சாயி தரிசனம் புத்தகமும், சாயி பாபாவும், சாயி வரதராஜன் என்பவருடைய சூட்சும வரிகள் மட்டுமே துணை. மற்றபடி கொடுக்க என்னால் முடியவில்லை. அவர் சொன்னதுபோல, முடிந்தவர்கள் உதவுங்கள், முடியாதவர்கள் பிரார்த்தனை செய்யுங்கள் என்று..
பாபாவின் ஆசியால் கீரப்பாக்கம் ஆலயம் சீக்கிரம் வளர என் பிரார்த்தனை. அதேபோல, யுகங்கள் மாறினாலும் ஸ்ரீ சாயி வரதராஜன் ஐயா புகழும், தொண்டும் பாபாவின் புகழ் போலவே தொடர வேண்டும் என்பதே என் உளம் நிறைந்த எதிர்பார்ப்பு.
பாபாவும் ஸ்ரீ சாயி வரதராஜனும் இந்த உலகம் உள்ளவரை வாழ்வார்கள். நான்மட்டும் சாதாரண மனிதனாய் மரணம் வந்தால் மண்ணில் மறைந்து விடுவேன். நித்திய புண்ணியவான்கள் என்றென்றும் வாழ்வார்கள். என்றும் வாழட்டும் என்ற ஆசையில்..
பி. கவுரி சங்கர்
No comments:
Post a Comment