தாசகணு மகராஜ் கீர்த்தனைகள் பாடுவதில் வல்லவர். பாபாவைப் பற்றி கீர்த்தனைகள் இயற்றி, அதை வடமாநிலங்களில் பரப்பிய பெருமை இவரைத்தான் சாரும். இவர் கீர்த்தனைகள் செய்தால் கட்டுக்கடங்காத கூட்டம் சேரும்.
ஒரு சமயம் சீரடியில் கதா கீர்த்தனம் செய்ய நீளமான கோட்டு, மேலே அங்க வஸ்திரம், தலைப்பாகையும் கட்டிக்கொண்டு அலங்காரமாக வந்தார்.
பாபாவுக்கு நமஸ்காரம் செய்வதற்காக வந்த போது, ஆஹா, மணமகனைப் போன்று அலங்காரம் செய்துகொண்டு வந்திருக்கிறீர். இவ்வளவு அலங்காரத்துடன் எங்கே செல்லப்போகிறீர்? என்று பாபா கேட்டார். தாசகணு, தாம் கதா கீர்த்தனம் செய்ய புறப்படுவதாகச் சொன்னார்.
“எதற்காக இந்த நீளமான கோட்டு? எதற்காக இந்த அங்க வஸ்திரமும் தலைப்பாகையும்? எதற்காக இந்த வீண் முயற்சியெல்லாம்? நமக்கு இதெல்லாம் தேவையில்லை. இவை அனைத்தையும் இப்பொழுதே, என் முன்னிலையிலேயே கழற்றிவிடும். இந்த சுமையை எதற்காக உம் உடம்பின் மேல் ஏற்றிக் கொள்ள விரும்புகிறீர்?” என்று பாபா கேட்டார்.
தாசகணு மகராஜ், பாபாவின் கட்டளைக்குக்கீழ்ப்படிந்து உடனடியாக அவர் முன்னிலையிலேயே எல்லா அலங்கார ஆடைகளையும் கழற்றி, பாபாவின் பாதங்களில் வைத்துவிட்டார். அன்று முதல் திறந்த மார்பும், கழுத்தில் மாலையும், கையில் சப்ளாக்கட்டையுமாக கதா கீர்த்தனம் செய்தார்.
நாராயணனுக்கு நாரதர் மாதிரி, சாயிக்கு தாசகணு நமது வீண் ஆடம்பரங்களை மக்கள் பார்ப்பதால் நமக்கு என்ன நன்மை? நமது இதயத்தை இறைவன் பார்க்க வேண்டும். அதை நல்ல குணங்களாலும், பண்புகளாலும் அலங்கரிக்க வேண்டும். அப்போது மேலும் மேலும் நலன் விளையும்.
No comments:
Post a Comment