Monday, June 30, 2014

ஆயிரம் காரணங்கள் இருக்கும்!

tvmalai



திருவண்ணாமலை அகஸ்தியர் ஆஸ்ரமம் நிறுவிய வேங்கடராம சுவாமிகள் சத்குருவாக வணங்கப்படுகிறவர். அவரை வாத்யாரே என்று அழைப்பார்கள். அவர் தொப்பி பற்றி கூறிய ஒரு விக்ஷயத்தை மட்டும் தெரிந்துகொள்ளுங்கள்..



திருப்பணிகள் நடக்கும்போது கைங்கர்யம் செய்வதால் புண்ணியம் உண்டு என்று தெரிந்தவர்கள், பொருள்களோடு உடலுழைப்பையும் தருவார்கள். இப்படித்தான் அகத்தியர் ஆசிரமம் கட்டப்பட்ட காலத்தில், அரசு நிறுவனங்கள், வங்கிகள், எஞ்சினியரிங், மருத்துவம் என பல துறைகளிலும் பணிபுரிபவர்கள், கடுமையான உடல் உழைப்பிற்கு பழக்கமில்லாதவர்கள் ஆகியோர் பங்கு பெற்று சேவை செய்து கொண்டிருந்தார்கள்.



அப்போது வெயில் கடுமையாக இருந்தது. ஒரு சேவையாள் வந்து, குருவிடம், வாத்யாரே, வெயில் மிக கடுமையாக இருக்கிறது. ஒரு தொப்பி கொடுத்தால் வெயிலின் கடுமை தெரியாமல் இருக்கும் என்று கேட்டார்.



hat



அப்படியா, ஒன்றிரண்டு தொப்பிகள் இருந்தன. அதை மற்ற அடியார்கள் வாங்கிப் போய்விட்டனர். நம்மிடம் நிறைய தொப்பிகள் இருந்தாலும், அவற்றை எங்கு வைத்தேன் என நினைவில்லை. முடிந்தால் அப்புறம் தேடித் தருகிறேன். களைப்பாக இருந்தால் போய் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். வெயில் தாழ, வேலையைத் தொடரலாம் என்றார் வேங்கடராமன் குரு.



மளிகை சாமான், கட்டுமானப் பொருட்கள், தொப்பி போன்றவற்றை பொறுப்பில் வைத்துள்ளவர், குருவின் பக்கத்தில் இருந்தார். அவர், வாத்யாரே, அடியேனுக்குத் தொப்பியிருக்கும் இடம் தெரியும். எடுத்து வந்து தரட்டுமா? எனக் கேட்டார். அப்படியா, ரொம்ப சந்தோக்ஷம். எங்காவது ஒரு தொப்பியிருந்தால், போய் கொண்டு வந்து நண்பரிடம் கொடு என குருதேவர் கூறினார்.



தொப்பியைப் பெற்றுக்கொண்டு அடியார் வேலைக்குச் சென்றுவிட்டார். அவர் சென்றதும், தொப்பியைக் கொடுத்தவரிடம், ”ரொம்ப புத்திசாலித்தனமாக ஒரு காரியம் செய்து விட்டாயோ!” என்று குரு கேட்டதும், தொப்பி கொடுத்தவர், தான் ஏதோ தவறு செய்து விட்டதை உணர்ந்து தலைகுனிந்து நின்றார்.



குரு சொன்னார், “ ஏம்ப்பா, நாங்க ஒன்னு சொன்னா அதில் ஆயிரம் அர்த்தம் இருக்கும். நாங்கள் எதையும் எப்போதும் மறப்பது கிடையாது. அவ்வப்போது மறப்பது போல சில காரணங்களுக்காக நாடகமாட வேண்டியிருக்கும். அந்த அடியார் இன்றைக்கு இரண்டு மணி நேரம் வேலை செய்தால் அதனால் கிடைக்கும் புண்ணியம் அவருடைய குடும்பத்திற்குப் போதும் என்ற தெய்வீகக் கணக்கை நாங்கள் அறிந்திருப்ப தால், அவருக்குத் தொப்பி தராமல் அதைக் காரணம் காட்டி அவரை ஓய்வெடுத்துக்கொள்ளச் சொல்லுகிறோம். ஆனால் உன்னுடைய புத்திசாலித்தனத்தினால், அவர் தொப்பியைப் போட்டுக்கொண்டு இன்னும் இரண்டு மணி நேரம் வேலை செய்து மேற்கொண்டு புண்ணியத்தைச் சேர்த்துக்கொள்ளக் கூடிய நிலை உருவாகி விட்டது. இந்த அதிகப்படியான புண்ணிய சக்தி அவர் தன்னுடைய தொழிலில் செய்யும் தவறுகளில் இருந்து காப்பாற்றுவதால், மேலும் விபரீதமான பல தவறுகளைச் செய்ய முயற்சிப்பார். அதனால் வரும் தண்டனைகளுக்கு யார் பொறுப்பேற்பது?” என்று கூறி தொப்பி கொடுத்த அடியாரைப் பார்க்க, அடியார் தலை குனிந்தார்.



இதேபோல, கிரிவலம் வந்த ஓர் அடியார், குருவிடம் வந்து, வாத்யாரே, வெயில் அதிகமாக இருக்கிறது. அடியேனுக்கு ஒரு தொப்பி கொடுத்தால், அதை கிரிவலம் முடிந்து திருப்பித்தந்துவிடுகிறேன் என்றார். பக்கத்திலிருந்தவரிடம், தொப்பி ஏதேனும் இருக்கிறதா? எனக் கேட்டார் குருதேவர்.



hat3தெரியவில்லையே குருதேவா! நீங்கள் சொன்னால் தேடிப் பார்க்கிறேன் என்றார் அவர். அவர்தான் தொப்பி கொடுத்து குட்டுப்பட்டவர்.



இந்த முறை, குரு தேவர் சொன்னார், “ இவர் என்னோடு பல ஆலயத் திருப்பணிகளில் ஈடுபட்டவர். ரொம்ப சீனியர் அடியார். இவர் கேட்கும்போது இல்லை என்று சொல்லமுடியாது.. எங்காவது தேடி நாலு தொப்பி எடுத்துக் கொடு என்றார்.”



அடியாருக்கு தொப்பியிருக்கும் இடம் தெரியுமாதலால், விரைந்து சென்று தொப்பிகளை எடுத்து வந்து கொடுத்தார். சத்குரு அதை தன் கைகளால் அவர்களுக்குக் கொடுத்து, ”நல்ல படியாக கிரிவலம் சென்று வாருங்கள். சென்று வந்தபிறகு, அதை இவரிடம் திருப்பிக் கொடுத்து விடுங்கள். அடுத்தமுறை ஆசிரமம் வரும்போது, இதுபோல நாலு டஜன் தொப்பி வாங்கி வாருங்கள், மற்றவர்களுக்கு பிரயோசனமாக இருக்கும்!” என்று கூறி அனுப்பிவைத்தார்.



கிரிவலம் முடிந்து மாலையில் வந்த அந்த குடும்பத்தார், தொப்பிகளை திருப்பிக் கொடுத்தனர். பிறகு, ஊருக்குக் கிளம்பிவிட்டார்கள்.



குருதேவர், அடியாரைக் கூப்பிட்டு, ”தொப்பிகளை எங்கு வைத்திருக்கிறாய்?” எனக் கேட்டார்.



அவைகளை மற்ற தொப்பிகளுடன் வைத்திருப்பதாகக் கூறினார் அடியார். இதைக் கேட்டு குருவுக்குக்கோபம் வந்துவிட்டது. அதை ஏன் மற்ற தொப்பிகளுடன் வைத்தாய்? அதை எடுத்து நெருப்பில் போட்டுவிடு என்று கூறினார். அடியாரும் அப்படியே செய்தார்.



அவர் வந்த பிறகு குருதேவர் கூறினார், “அந்தத் தொப்பிகளைப் பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது. இங்கு வந்த அடியார், பலரிடம் ’தொப்பி’ போட்டே பலரிடம் தனது காரியத்தை சாதித்துக்கொண்டவன். பல லட்சக் கணக்கான ரூபாயை லஞ்சமாக சம்பாதித்தவன். கடுமையான கர்ம பாக்கியை சேர்த்து வைத்துக் கொண்டு இருக்கிறான். இருப்பினும் அவன் அடியேனிடம் வந்துவிட்டதால், முடிந்த மட்டும் அவன் முற்பிறவிகளில் சேர்த்து வைத்த சஞ்சித கர்மாவை நாங்கள் குறைக்க முயற்சி செய்கிறோம். அதனால்தான் இந்த கொளுத்தும் வெயிலில் திரு அண்ணாமலையை வலம் வரச் செய்து, புனிதமான இந்த ஆசிரமத்தில் சில மணி நேரம் தங்க வைத்து, கர்ம வினைகளின் வேகத்தை ஓரளவுக்கு குறைத்து அனுப்புகிறோம். அதே சமயம், நல்ல உள்ளம் படைத்த பல அடியார்களைக் காப்பாற்ற வேண்டிய கடமையும் எங்களுக்கு இருப்பதால் கடுமையான கர்ம வினைப்படிவுகள் தோய்ந்த அந்தத் தொப்பிகளை நெருப்பில் இட்டுப் பொசுக்கிவிடுகிறோம். அவனிடம் பல புதிய தொப்பிகளை வாங்கி அதைப் பல அடியார்கள் பயன்படுத்தும் போது இன்னும் கணிசமான அளவில் அவனுடைய கர்ம வினைகள் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது!” என்றார்.



மகான்களின் செயல்களுக்கான காரணம் அவர்களுக்கு மட்டுமே தெரியும். அதில் நாம் தலையிடவே கூடாது.



ஆதாரம்: கடவுள் தவறு செய்தால்? என்ற புத்தகம்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...