Tuesday, June 3, 2014

மாறாத நம்பிக்கை வை! முழுமையாக நம்பிக்கை வை!

20144



சத்சரித்திரம் 13 வது அத்தியாயத்தில், பாபா,  ‘நன்றியுள்ள நினைப்பு, மாறாத நம்பிக்கை, பக்தி இவற்றைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை!’  என்று எழுதப்பட்டிருக்கிறது.



அப்படியானால் பாபா  நன்றியுள்ள நினைப்பை, மாறாத நம்பிக்கையை, பக்தியை நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார் என்று அர்த்தம் அல்லவா?



இந்த மூன்று விஷயங்களில்தான் ஒருவரது வாழ்க்கையே அடங்கியிருக்கிறது. இதை உங்களில் எத்தனை பேர் சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்கள்? இப்போது பார்க்கலாம்.



நன்றியுள்ளநினைப்பு



காலத்தால் செய்த நன்றி சிறிது எனினும், செய்யப்பட்ட காலத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த உலகத்தை விட பெரியது. அதனால், வேறு எந்த வித நன்றியை மறந்தாலும் தப்பித்துக் கொள்ளலாம், செய்நன்றியை மறந்தவர்களுக்கு கதி மோட்சமே கிடையாது என்கிறது திருக்குறள்.



பாபா நம்மிடம் நன்றியுள்ள நினைப்பை எதிர்பார்க்கிறார் என்றால், ஏற்கனவே ஏதாவது நமக்கு செய்திருக்க வேண்டும் அல்லவா? எதையும் செய்யாமல் எப்படி நன்றியை நம்மிடமிருந்து அவர் எதிர்பார்க்க முடியும்?



பீமாஜி பாடீல் என்ற பக்தர் காசநோய் முற்றி, இரத்த வாந்தி எடுத்தார். அவரை, மருத்துவர்கள் கைவிட்டார்கள். மந்திர தந்திரங்கள் கைவிட்டன. குலதெய்வம், இஷ்டதெய்வம் உட்பட அவர் வணங்கிய தெய்வங்கள் அனைத்தும் கைவிட்டன. வேறு வழியின்றி மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தார்.



உயிரை விடும் போது கூட, இன்னொரு நாள் வாழக்கூடிய வாய்ப்பு கிடைக்காதா என்றுதான் நாம் அனைவருமே நினைப்போம். பீமாஜி பாடீலுக்கும் இந்த நினைப்பு இருந்தது. அதனால்தான் அவரும் எத்தனையோ வழிகளில் முயன்று கொண்டிருந்தார்.



யாரோ சொன்னார்கள்: ’சீரடியில் பாபாவிடம் சென்றால், உடனடியாக குணமடைந்து விடுவாய் என்று!’  உடனடியாக, பாபாவின் பக்தரான சாமா நினைவு வந்து, அவருக்குக் கடிதம் எழுதி, அவர் மூலமாகவே சாயிதரிசனம் செய்தார் பீமாஜி.



பாபாவின் தரிசனமும், அவரிடம் பீமாஜி வைத்த வேண்டுதலும் உடனே பலித்தன. மரணத்திலிருந்து விடுபெற்றார். நலமடைந்தார். பாபா செய்த இந்த நன்மையை நன்றியோடு நினைத்து, அடிக்கடி சீரடிக்கு வந்து சென்றார். அவர்தான் கொடி ஊர்வலம், சாயி சத்ய விரத பூஜை  போன்றவற்றை பாபாவுக்காகச் செய்தவர்.



பீமாஜிக்கு செய்தது போல நமக்கு ஏதாவது பாபா செய்திருந்தால், நாமும் நன்றியோடு பாபாவை நினைக்கலாம். அவர்தான் நமக்கு எதையும் செய்யவில்லையே!  பிறகு எப்படி நினைப்பது? என நீங்கள் நினைக்கலாம்.



உங்களுக்கு கஷ்டகாலம் முடிந்துவிட்டது, புண்ணியம் சேர்ந்திருக்கிறது, பாவம் விலக்கப்பட்டுள்ளது. அதனால் நீங்கள் சாயி வழிபாட்டை செய்கிறீர்கள். இதைத் தெரிவிப்பதே நன்மையான விஷயம். கஷ்டகாலம் முடிந்த பிறகும் கஷ்டப்படுவானேன்? புண்ணியம் சேர்ந்த பிறகு அனைத்தும் நன்மையாகவே நடக்கப்போகிறது..நடக்கும் முன் வருத்தப்படுவானேன்..



நீங்கள் நினைக்கும் போது தரிசனம் தருகிறார்..கேட்டதை கொடுத்து, தான் உங்களோடு இருப்பதை உறுதி செய்கிறார்.. சீரடிக்குக் கூப்பிடுகிறார்..பக்கத்தில் அவர் எழுந்தருளியிருக்கிற கோயிலுக்கு அழைக்கிறார்.. இதனாலெல்லாம் அவரை நன்றியோடு நினைக்க வேண்டும். இதை அவர் எதிர்பார்க்கிறார்.



பெருங்களத்தூர் பிரார்த்தனை மையம் வந்து கோரிக்கை நிறைவேறிச் சென்றவர்களை அதன் பின்னர் பல ஆண்டுகளாக  பார்க்க முடியாது.. அடுத்த கஷ்டம் வரும் போது தானாக வருவார்கள்.. தங்களை அறிமுகப்படுத்திக் கொள்வார்கள்.. இப்படியிருக்கக்கூடாது..உனக்கு நன்மை நடந்த இடத்தை மறக்கலாமா? மறக்காமல் நினைக்க வேண்டும் என பாபா எதிர்பார்க்கிறார்.



மாறாதநம்பிக்கை



நம்பிக்கை இல்லாதவர்களுக்கு கடவுள் அற்புதத்தைச் செய்வதே இல்லை. நம்பிக்கையில்லாதவர்கள் கடவுளிடமிருந்து அற்புதத்தைப் பெற இயலுவதில்லை என்றும் கூறலாம். எவ்வளவு பெரிய கஷ்டமாக இருந்தாலும் கடவுள் மீது நம்பிக்கை வைக்கும் போது, அவர் நமக்கு மிகப் பெரிய தன்னம்பிக்கையைத் தருகிறார்.



’பொறு, உன்னுடைய கவலைகளை தூர எறி, உன்னுடைய துன்பங்கள் ஒரு முடிவுக்கு வந்து விட்டன. ஒருவன் எவ்வளவுதான் நசுக்கப்பட்டவனாக இருந்தாலும், இம்மசூதியில் கால் வைத்தவுடனே மகிழ்ச்சியின் பாதையில் செல்கிறான்.



இங்கேயுள்ள பக்கிரி மிகவும் அன்பானவர். இவர் இவ்வியாதியைக் குணப்படுத்துவார். அன்புடனும், ஆசையுடனும் எல்லோரையும் பாதுகாப்பார்..என்று, பக்தனுக்கு பாபா தன்னம்பிக்கை தருவார்.



பல வேளைகளில் நமது நம்பிக்கை ஆட்டம் காணும் அளவுக்குப் பிரச்சினைகள் அதிகமாகும்.



நம்பிக்கையே போய் விடும். வேறு எங்காவது போய் பார்க்கலாமா? என எண்ணத் தோன்றும். இப்படி அடிக்கடி மனம் மாறுகிறாயா? தன்னம்பிக்கை இழக்கிறாயா? அல்லது வருவது வரட்டும், பாபா தான் என்னோடு இருக்கிறாரே! என தைரியமாக இருக்கிறாயா? என்பதை அவர் கவனிப்பார். என்ன செய்யப்போகிறாய் என வேடிக்கைப் பார்ப்பார்.



ஒரு முறை உன்னை காப்பதாகச் சொல்லி விட்டு, பிறகு மறுப்பதற்கு அவர் மனிதன் அல்ல, கடவுள். அவர் சொன்னால் நடக்கும்.. சொன்னதை மாற்றமாட்டார்.



பின்னர் ஏன் எனக்கு நடக்க மாட்டேன் என்கிறது? என்றால், இறுதி வரை நம்பிக்கையில் நிலைத்து நிற்பவனுக்குத்தான் வெற்றியைத் தருவார். நான் நம்புகிறேன் என்று நீ சொல்லலாம், ஆனால், கடைசி வரை நீ நம்பமாட்டாய் என்பது கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றை நன்றாக அறிந்த பாபாவுக்குத் தெரியாதா?



கிணற்றில் போட்ட கல் மாதிரி.. அவர் மீது பாரத்தைப் போட்டுவிட்டு, பாதத்தைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து விட்டால் போதும்.. நாம் கேட்பதை அப்படியே செய்யாமல், நமக்கு எது நன்மையோ அதைச் செய்வார்.. இதைச் செய்யும் முன்பு நீ அவரை முழுமையாக நம்பவேண்டும் என எதிர்பார்க்கிறார்.



இதற்கு உன்னிடம் தைரியம் இருக்க வேண்டும்.. சோதனை வரும் போது வேதனைப்பட்டாலும், நம்பிக்கையை இழக்காமல் சகிக்கவேண்டும்.



முழுமையானபக்தி



நிறைய பேர், நான் பாபாவின் பக்தன் என்று சொல்லிக்கொள்வார்கள். பக்தனுக்கு உ ரிய இலக்கணம், அன்புடனும், ஆசையுடனும் அவரை நேசிக்க வேண்டும். இதுதான் பிரேமை எனப்படுகிறது. எல்லாவற்றையும் நேசிக்கிறேன்,



உன்னையும் நேசிக்கிறேன் என்றால், அவர் ஒப்புக்கொள்ளமாட்டார்.. நீ என்னை நேசி, நான் உனக்குள்ள அனைத்தையும் நேசிக்கிறேன் என்பார்.



baba



அன்பு என்பது எதையும் எதிர்பாராமல் வருவது, தன்னைத் தியாகம் செய்வது, தனக்குக் கிடைப்பதை ஒளிக்காமல் தருவது, எப்போதும் தன் அன்புக்குரியவர் நினைவாகவே இருப்பது.. அவரை நினைத்தவுடனே கண்களில் நீர் வைப்பது..சுயநலமில்லாமல் இருப்பது..இதெல்லாம் தான் அன்பு எனப்படுகிறது..



பாபா மீது இப்படியாஅன்பு செலுத்துகிறோம்?



பாபா எனக்கு அதைக் கொடு.. இதைக் கொடு எனக் கேட்டு, அதைப் பெறுவதற்காகஅவர் மீது நம்பிக்கை வைக்கிறோம்.. நம்பிக்கை வைத்து தனக்கு கிடைக்கும் எனக்காத்திருக்கிறவன் விசுவாசி.. அவன் பக்தன் கிடையாது. நாமெல்லோரும் விசுவாசியாக இருக்கிறோமே தவிர, பக்தராக இருப்பதில்லை.



ஆனால், நம்மை பக்தராக மாற்றுவதற்கு பாபா சொன்ன உபாயம், ”நீ எப்போதும் சாயி சாயி என்று சொல்லிக் கொண்டிரு. எனக்கு பல விதமான வழிபாடுகள் கூட வேண்டாம், முழுமையான பக்தி மட்டும் செய்.. நான் உன்னோடு இருந்து, உனது துன்பம் எத்தகையதாக இருந்தாலும் சரி..அதிலிருந்து உன்னை தூக்கிக்கொண்டு போய் காப்பாற்றுவேன்..”



இதுவரை விசுவாசியாக ! அவரை நம்புகிறவராக இருக்கிற நீங்கள், எல்லாம் அவரால் நடக்கிறது என்கிற போது, எனக்கும் அவரால் நல்லதாகவே எல்லாம் நடக்கும் என்பதைத் தெளிவாக அறிந்து, கவலைப்படாமல், தைரியமாக சாயி சாயி என்று சொல்லிக் கொண்டு பக்தி செய்யுங்கள். உங்கள் வாழ்க்கையில் ஏற்படுகிற மாற்றத்தை நீங்கள் வெகு விரைவில் உணர்வீர்கள்.



 



ஜெய் சாய்ராம்…..சரணம் சாய்ராம்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...