Friday, May 16, 2014

மகான்களுடன் தொடர்பு கொள்!

Image





நாம் நம் வயது ஒத்தவர்களுடன் பேசுவதை வெட்டிப் பேச்சு, அரட்டை என்கிறோம். தொழில் ரீதியாகவோ, திரளான மக்களுடன் பேசுவதையோ கூட்டம் என்கிறோம். கலந்து பேசி விவாதிப்பதை விவாதம் என்கிறோம்.
மகான்கள் அல்லது பக்தர்களுடன் இருப்பதையும், இறைவனைப் பற்றிப் பேசுவதையும் சத்சங்கம் என்கிறோம். ஒருவர் வாழ்க்கை மேம்படுவதற்கு சத்சங்கம் மிகவும் அவசியமாகும்.
தெரிந்து நாடினாலும், தெரியாமல் தற்செயலாக வாய்த்தாலும், அதன் நற்பயன் நிச்சயமாகக் கிடைத்து விடும். தெரிந்து நாடும்போது, வலிமையோடு விரைந்து பலன் கிடைக்கும். தெரியாமல் நாடும் போது, காலம் பழுத்தால் பலன் கிடைக்கும்.
சத்சங்கத்தை விரும்பினாலும், விரும்பாமல் போனாலும் அதனுடைய பலன் நிச்சயமாகக் கிடைத்துவிடும்.
இதனால்தான் மகான்களை தரிசிக்கவும், அவர்கள் வாய் வார்த்தைகளை கேட்கவும் முற்காலத்து மக்கள் ஆர்வம் காட்டினார்கள்.
நல்லவரோ, கெட்டவரோ அனைவரின் இதயத்தினுள்ளும் இறைவன் வாழ்கிறான். ஆனால், சாதுக்களிடம் மட்டும் அவன் செயல்படுகிறான். பிரகாசமாக ஜொலிக்கிறான். அந்த பிரகாசத்தில் நாம் நனையும்போது, நாமும் பிரகாசிப்போம். வெளிச்சத்தில் இருக்கிறவன் தடுமாறமாட்டான். இருட்டோ தடுமாறச் செய்து இடற வைக்கும்.
ஒருவன் எல்லாவற்றையும் அடைய முடியும். ஆனால் சாதுக்களின் தொடர்பை எளிதில் பெற்று விட முடியாது. அது பகவானின் கிருபை இருந்தால் மட்டுமே முடியும்.அதனுடைய பலன் ஒருகாலும் வீணாகாமல் நிகழக்கூடியது என்கிறது நாரத பக்தி சூத்திரம். எல்லாவற்றிலும் மேலானது பெரியார்களாகிய சாதுக்களை சார்ந்து வாழுதல் என்கிறது திருக்குறள்.
கங்கை பாவத்தைப் போக்கும், முழு நிலவு உஷ்ணத்தைப் போக்கும், கற்பகத் தரு வறுமையைப் போக்கும். ஆனால் சாதுக்களின் சேர்க்கை பாவம், தாபம், வறுமை மூன்றையும் போக்கும். இதனால் தான் இறைவனுக்கு சேவை செய்ய முடியாது என நினைப்பவர்கள் அவரது அடியாருக்கு சேவை செய்வதை பாக்கியமாகக் கருதினார்கள்.
பாபாவின் தர்பார் சத்சங்கம் மிகுந்த இடம். இதனால் மக்கள் பெரிய முயற்சி இல்லாமலேயே பரமார்த்திகத்தை அடைந்தார்கள். அதேபோல, சத்சங்கம் நடக்கிற இடங்களில் மக்கள் பிரச்சினை நீங்கியவர்களாக இருக்கிறார்கள்.
இப்போது சத்சங்கம் என்பது ஏதோ ஒரு ஆன்மீக சொற்பொழிவு என்பது போலாகிவிட்டது. இதனால் பலன் கிடைப்பது மிகவும் குறைவு. ஒரு குழந்தைக்கு தாய் எப்படி சின்னச் சின்ன விஷயங்களையும் தெளிவு படுத்திச் சொல்வாளோ அப்படி சிறுசிறு விஷயத்தையும் தெளிவுபடுத்திக் கூறுவதுதான் உண்மையான சத்சங்கம்.
இப்படிப்பட்ட சாதுக்களை அணுகும்போது பணிவாலும், பரிவு மிகுந்த கேள்வியாலும், சேவையாலும் சேவித்து ஞானத்தை அடையவேண்டும் என்பார்கள் பெரியோர்கள்.
நாங்கள் பெருங்களத்தூர் பிரார்த்தனை மையத்தைப் பற்றி கேள்விப்பட்டு சென்றபோது, பிரார்த்தனை மட்டுமே நடக்கும் என நினைத்தோம். ஆனால், அங்கே, சத்சரித விளக்கம், மக்களுடன் கலந்து பேசுகிற சத்சங்கம் போன்றவை நடப்பதைக்கண்டு ஆச்சரியப்பட்டோம்.
வெறும் பிரார்த்தனை என்பது உணர்ச்சி இல்லாத நிகழ்வு. இதனால் பலன் கிடைக்காது. மனங்களை இணைத்து நடத்துகிற பிரார்த்தனைக்கு நிச்சயமான பலன்கள் உண்டு. இதை உணர்ந்து, சாயி வரதராஜன் பிரார்த்தனைகளை அற்புதமாகச் செய்கிறார்.
பல ஆண்டுகள் முடியாத பிரச்சினைகள் கூட முடிவுக்கு வந்ததாக, வேண்டுதல் நிறைவேறியதாக மக்கள் கூறுவதும், இறைவனை எப்படியெல்லாம் அணுகலாம் எனக் கேட்டுத் தெளிவு பெறுவதும் அற்புதமான நிகழ்வுகள். இந்த நிகழ்வுகள் அங்கு நடப்பதால்தான், அந்த இடம் மிகப்பெரிய அளவுக்குப் புகழ்பெற்றிருக்கிறது என்பது தெரியவந்தது.
நாங்கள் சாயி வரதராஜனிடம் பேசும்போது, அவருக்கு ஜோதிடம், ஆன்மீகம் போன்றவற்றில் முழுமையான ஞானம் கிடையாது என்பது தெரிய வந்தது. ஆனால், எப்படி இவருக்கு இந்த அருள் சித்தியானது? எனக் கேட்டால், பகவான் மீது வைக்கிற நம்பிக்கையும், தனது உள்ளத்திலிருந்து எழுந்து வருகிற நாமஸ்மரணையுமே இதற்குக்காரணம் என்றார் அவர்.
மிகப்பெரிய அடியார்கள் என்று சொல்லிக்கொள்கிறவர்களிடம் கூட காணமுடியாத அற்புத ஆற்றல் அவருடைய உடலில் இருந்து இடம் பெயர்வதை உணர முடிந்தது. அவரது கைகளை பிடித்தபோது, அதிலிருந்து வெளிப்பட்டு என் உடலில் ஏறிய அதிர்வலைகள் சற்று திகைக்க வைத்தது.
இதனால்தான் அவர் கைகளைத் தொட்டு ஆசி கூறி தருகிற உதியும், அவர் கை வைத்து ஆசீர்வதிக்கிறவர்களின் நிலையும் நல்ல பலன் தருகிறது என்பது புரிந்தது. இந்த நிலை சாதாரணமாக வராது.
வித்யா போன்ற உபாசனைகள் முடித்தவர்களும், ரெய்கி போன்ற கலைகளில் தேர்ச்சி பெற்றவர்களும் பெற்ற அரிதான சக்தி, ஒரு பாமரனிடம் இருக்கிறது என்பது பெரிய விக்ஷயம்.
இதை அறிந்தோ, அறியாமலோ, எப்படியோ அங்கு சென்று பலன் பெறுகிறார்கள் மக்கள். இதற்கெல்லாம் பாபாவின் பேரருளே காரணம். இவர் போன்று இன்னும் பலர் ஆன்மீகத்தில் இருக்கலாம். அவர்களை அடையாளம் கண்டு பலன்பெற வேண்டும். இதற்கு அவர்களோடு சத்சங்கம் செய்வது அவசியம். சத்சங்கத்தின் பலன் பற்றி ஒரு கதை உண்டு.
நாரதர் ஒருமுறை கிருஷ்ணனிடம் சத்சங்கத்தின் மேன்மை என்ன எனக் கேட்டார். அதற்கு பகவான், கிழக்கு திசையை நோக்கிச் சென்றால், ஒரு குப்பை மேடு உள்ளது. அங்கேயுள்ள சாணிப் புழுவிடம் உங்கள் கேள்வியைக் கேளுங்கள் என்றார்.
நாரதர், அந்த இடத்தைஅடைந்து, புழுவைக்கண்டு, கேள்வியைக் கேட்டதும், புழு துடிதுடித்து இறந்துபோனது. அதிர்ந்துபோன நாரதர் விக்ஷயத்தை பகவானிடம் கூறினார். வடக்கு திசையில் பாழடைந்த கோயில் ஒன்றுள்ளது. அங்குள்ள புறாவிடம் இந்தக் கேள்வியைக் கேளுங்கள் என்றார்.
புறாவிடம் சத்சங்க மேன்மை பற்றி கேள்வி கேட்டார். புறாவும் இறந்தது. மீண்டும் பகவானிடம் வந்தார் நாரதர். இந்த முறை மேற்கு திசைக்கு அனுப்பி, ஒரு கன்று பிறந்திருக்கிறது. அதனிடம் இந்தக் கேள்வியைக் கேளுங்கள் என்றார்.
நாரதர் சென்று கன்றிடம் இந்தக் கேள்வியைக் கேட்டதும், கன்றுஇறந்துபோனது. நாரதர் வருத்தத்துடன் பகவானிடம் வந்தார்.
பகவான், நாரதரே வருத்தப்படாதீர்கள். தெற்கு திசையில் ஓர் அரசன் இருக்கிறான், அவனுக்கு இன்று ஒரு குழந்தை பிறந்திருக்கிறது. அதனிடம் கேட்டால் சந்தேகம் தீரும் என்றார்.
நாரதர் பயந்துபோனார். குழந்தையும் இறந்து போனால், அரச தண்டனைக்கு ஆளாக நேரிடும் என வருந்தினார். பகவான், அவரைத்தேற்றி இந்த முறை அப்படி எதுவும் நடக்காது என அனுப்பி வைத்தார்.
நாரதர், அந்தக் குழந்தையிடம் வந்து, “குழந்தாய்! சத்சங்கத்தால் எப்படிப்பட்ட பயன் ஏற்படுகிறது?” எனக் கேட்டார்.
குழந்தை தொட்டிலை விட்டு அனைவரும் ஆச்சரியப்படும் படி இறங்கியது. ”பிரபோ, நான்தான் குப்பை மேட்டில் இருந்த சாணிப் புழு. தங்கள் தரிசன பாக்கியத்தால் புறாவாகி, மீண்டும் தங்கள் தரிசனத்தால் கன்றாகி, அங்கும் தங்கள் தரிசனம் கிடைக்கப்பெற்று, இப்போது அரச குமாரனாகப் பிறந்திருக்கிறேன். உங்கள் தரிசனம் இப்போது கிடைத்ததால் நான் தேவருக்கு இணையாகிவிட்டேன். இதுவே தங்கள் சத்சங்கம் விளைவித்த அற்புதம்” என்று கூறியது.
பார்த்தீர்களா? சான்றோர்களின் தொடர்பு ஒருவரை எந்த உயர்நிலைக்கும் மாற்றும். ஆகவே, சான்றோர் தொடர்பை எந்த சூழலிலும் அற்பமாக நினைத்து விட்டுவிடாதீர்கள். உண்மையான சத்சங்கம் பாவிகளை புனிதனாக்கும். புனிதனை தெய்வமாக்கும்.
நீங்கள் தெய்வமாக வேண்டாம், தொல்லைகள் நீங்கி நன்றாக வாழ்ந்தாலே போதும்! அதற்காக மகான்களின் சத்சங்கத்தை நாடி இறையருளைப்பெறுங்கள்.



கட்டுரை பகிர்வு



கோ.வி. ரமணன்,
ரெய்கி மாஸ்டர், கோவை





சாயிதரிசனம் இதழில் வெளிவந்தது



 

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...